அதிகளவிலான மாணவர்களை உள்வாங்கும் பொறிமுறையொன்று பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

இலங்கை பல்கலைக்கழகங்கள் அன்று ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் காணப்பட்டன. அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,70,000 மாணவர்கள் உயர்கல்விக்கு தகுதி பெறுகின்றனர். அவர்களில் சுமார் 40,000 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறுகின்றனர். மேலும், 30,000 முதல் 40,000 பேர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார்கள். ஆனால், பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் 40,000 பேருக்கு மேலதிகமாக மேலும் 25,000-/ 30,000 பேரை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக கட்டமைப்பொன்று எம்மிடம் உள்ளது. அதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கீழ் உள்வாங்கப்படாத பல்கலைக்கழகங்களும் உள்ளன. மேலும், இலாபம் ஈட்டும் மற்றும் இலாப நோக்கற்ற பல்கலைக்கழக கட்டமைப்பும் உள்ளது. எனவே, இந்த மூன்று முறைகளையும் நடைமுறைப்படுத்துவதா அல்லது ஒரு முறையை உருவாக்கி பல்கலைக்கழக கட்டமைப்பை மீட்டெடுப்பதா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கல்வியை வழங்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அன்று, ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நம் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் முதன்மை இடத்தில் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. எமது பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை மீண்டும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நமது பல்கலைக்கழகங்களின் தரம் மற்றும் நற்பெயரை உலகுக்கு எவ்வாறு மீண்டும் உறுதிப்படுத்துவது என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதன் மூலம் உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை நமது பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும். நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு இது நல்லதொரு நிலை என்றே கூற வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்காத பல்கலைக்கழகங்கள் தொழில் சந்தையை இலக்கு வைத்து செயற்படுவதால் பெருமளவிலான மாணவர்கள் அதன் பக்கம் திரும்பியுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமன்றி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே, இது தொடர்பில் ஏனையவர்கள் தீர்வுகளை வழங்குவார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக, நாம், நமக்கு ஏற்ற தீர்வுகளை காண வேண்டும்.

தற்போதுள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பை அப்படியே தொடர்வதா அல்லது தேவையான மாற்றங்கள் செய்வதா என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்நாட்டின் முதல் வதிவிடப் பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகம், ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், தற்போதுள்ள நவீன பல்கலைக்கழகங்களில் அத்தகைய அமைப்பு காணப்படவில்லை. நாம் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி தொடர்பான அமைச்சரவைக் குழுவொன்றையும் அமைத்துள்ளோம் என்றார்