அத்திப்பட்டியை போல மன்னார் தீவும் மாயமாகும் – வினோ எம்.பி

 

நடிகர் அஜித் நடித்த ”சிட்டிசன்” என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமத்துக்கு நேர்ந்த கதியே இன்னும் 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவுக்கும் ஏற்படும்.

மன்னார் தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் பணிகளை  அவுஸ்திரேலியாவின்  நிறுவனமும் ,அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுக்கிறது.

மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்    பாராளுமன்ற உறுப்பினர்  வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை  (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  சுற்றாடற்றுறை மற்றும் வனஜீவராசிகள், வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு அல்லது கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் அங்கு அகழ்வுப்பணிகளை  முன்னெக்கிறது.

மன்னார் தீவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களின் எதிர்ப்பையும் மீறி  மன்னார் மாவட்டம் ஒரு காலத்தில் முற்றாக கடலுக்குள் மூழ்கக் கூடியவாறு இந்த கனிய  மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் அரசின், அரச நிறுவனங்களின்  ஆதரவோடு டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களோடு  சேர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த அகழ்வாராய்ச்சி பணியை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அல்லது அங்கே  கனிய மணல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக  இந்த  ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றது.

இதனூடாக அங்குள்ள சாதாரண மக்களை ஏமாற்றி சுமார் 2000 முதல் 3000 ஏக்கர் வரையான  காணிகளை அந்த மக்களின் வறுமைஇ அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் விலை பேசி ஏறக்குறைய மன்னார் தீவில் மட்டும் 2600 மில்லியன் ரூபாவுக்கு காணிகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆழ்துளை கிணறுகள் மூலமாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டாலும் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

சுமார் 40 அடி   ஆழத்தில் இந்த அகழ்வாராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒருகட்டத்தில் நிச்சயமாக நன்னீரும் கடல் நீரும் கலந்து குடிநீர் பிரச்சினை ஏற்படுவதற்கான நிலையை உருவாக்குகின்றது.

இதனால் மன்னார் தீவு மக்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அரசு எந்த வகையில் இதற்கான அனுமதியை வழங்கியது என்பதுவே எமது கேள்வி.

தென்னிந்திய நடிகர் அஜித் நடித்த  ”சிட்டிசன்”என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமமே காணாமல் போகும்.  அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆகியோரின் ஊழல் மோசடியால் இந்த கிராமம் அழிந்தது.

கிராமத்திலிருந்து மக்களை வெளியேற்றி தமது சொந்த நலன்களுக்காக  அரசியல்வாதிகள் அந்தக் கிராமத்தை முற்றாக்கக்கடலுக்குள் அமிழ்த்தி விட்டு செய்த ஒரு காரியம்தான் தற்போது மன்னார் தீவிலும் நடக்கின்றது.

இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது .அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்கின்ற திட்டத்திற்கு   இந்த சுற்று சூழல் அமைச்சும் அரசும் உடந்தையாக இருக்கின்றன.

அரச அதிகாரிகளும் அது அரசின் உத்தரவு, மேலிட உத்தரவு எனக்கூறிக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.இந்த திட்டங்களை மன்னார் தீவு மக்கள் விரும்பவில்லை. மீன் வளம் இல்லாது போகும் என மீனவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.மன்னார் தீவு காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.