ஆடைத் தொழிற்சாலையை மூடாவிட்டால் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் – ரெலோ மன்னார் நகர முதல்வர் எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மன்னார் ஆடைத் தொழிற்சாலையினை உடனடியாக மூடி, நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மைக்காலமாக மன்னாரிலுள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆடைத் தொழிற்சாலையினை தற்காலிகமாக மூடி, கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஆகவே ‘வரும் முன் காப்போம்’ என்பதற்கு அமைய மன்னாரிலுள்ள ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடி, மாவட்டத்தில் ஏற்படவுள்ள பாரிய அபாயத்தை தடுப்பதற்கு அரச உயர் அதிகாரிகள், சுகாதார துறையினர் ஆகியோர் துரித நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.