இலங்கையின் துறைமுக நகரம் (Port City) தோற்றுவித்திருக்கும் பிரச்சனைகள், நாடு தாக்குப்பிடிக்குமா? ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உத்தியோக பூர்வ பேச்சாளர் குருசுவாமி- சுரேந்திரன் கேள்வி எழுப்புகிறார். வீரகேசரியில் அவருடனான நேர்காணல்(Part-1) கீழே தரப்படுகிறது.  எஸ். எஸ்.தவபாலன் தாமரைக்கேணி நிருபர்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உத்தியோக பூர்வ பேச்சாளர் சுரேந்திரன் பொதுவாக கூறுகையில்.

இலங்கை 65 ஆயிரம் ச.கிலோ மீற்றர் பரப்பனவையும், 21.8 மில்லியன் சனத்தொகையையும் கொண்ட ஒரு சிறிய நாடு. இதனுடைய தொழிலற்றோர் விகிதம் 4.18% ஆக இருக்கிறது. இதனிடையே பொருளாதார வளர்ச்சி 2.2% ஆக இருக்கிறது. இதுஒரு புறமிருக்க எமது நாட்டைப் பொறுத்தவரை ஆடைத்தொழிற்சாலை அபிவிருத்திக்குப் பிற்பாடு ஒரு பொருளாதார அபிவிருத்திக்கான செயற்பாட்டை ஆண்ட அரசுகளோ அல்லது தற்போது ஆளும் அரசோ செய்யவில்லை. வழக்கமாக ஆளும் அரசோ அல்லது அதன் அமைச்சரவை அந்தஸ்த்திலுள்ள அமைச்சர்களோ தேசிய பிரச்சனைகளை முன்வைத்து சில அபிவிருத்தித் திட்டங்களை தேசிய ரீதியில் நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். தேசிய ரீதியில் செற்பட்ட சில திட்டங்களை உதாரணத்திற்கு எடுக்கலாம். பண்டாரநாயக்கா தோற்றுவித்த இ.போ.சபை, கன்னங்கரா உருவாக்கிய இலவச கல்வி முறைமை, அதுலத் முதலி தோற்றுவித்த உயர்கல்விக்கான மகாபொல புலமைப் பரிசில், காமினி திசநாயக்கா உருவாக்கிய மகாவலிகங்கை திசை திருப்புத்திட்டம மற்றும் விக்ரோறியா அணைக்கட்டு, ரந்தெனிகல மின்உற்பத்தி நிலையம், பிரேமதாஸாவின் ஆடைத் தொழிற்சாலைகள் என கூறலாம். அது இன்னும் நீளும். இந்த அரசுகள் எதனையும் குறிப்பிடத்தக்களவு செய்யவில்லை. அதனால் பொருளாதார அபிவிருத்தி நாட்டில் ஏற்படவில்லை. அதனையே புள்ளி விபரங்கள் காட்டி நிற்கின்றன.
இந்த அரசு உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. ஆயினும், அது ஏற்படுத்திய வடுக்களுக்கு மருந்து போடத் தவறிவிட்டது. இப் போர் எதற்காக தோற்றம் பெற்றதோ அதன் தேவையை போதிய அளவிலோ அல்லது முடிந்த அளவிலோ நிவர்த்தி செய்ய ஆளும் அரசு தவறிவிட்டது.
நமது நாடு ஆரம்பத்திலிருந்தே உலக நாடுகள் மத்தியில் அணிசேராக் கொள்கையை பின்பற்றி வந்திருக்கிறது. அந்தக் கொள்கை காற்றில் பறந்து காணாமலாகிவிட்டது. இதனால் உலக நாடுகள் சிலவற்றின் வெறுப்பையும் விருப்பையும் வலிந்து பெற்றிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் சீனாவும்,இந்தியாவும்.
இது இலங்கைக்கு, அது எதிர்பாராத சிக்கல்களை தோற்றுவித்திருக்கிறது .

கேள்வி:இலங்கை அரசு கொழும்புத் துறை முகத்தின் ஒரு பகுதியை சீன அரசுக்கு அதனுடைய தேவைக்கு வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சீன அரசிற்கும், இலங்கை அரசுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இப்பகுதியை சீன அரசாங்கம் என்ன நோகத்திற்குப் பாவிக்கலாம் என்பதைப்பற்றி அதனது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது? அதன் காலவரையறையென்ன? அவ் ஒப்பந்தம்பற்றி முழுமையாக விளக்குவீர்களா?

பதில்:இந்தத் துறைமுக நகரம் 530 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. கடலிலிருந்து மீட்டெடுக்கும் பணிக்காக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சீன நிறுவனத்தினால் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அபிவிருத்தியின் பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் கையளிக்கப்பட்டுள்ளது. 310 ஏக்கர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்துக்கும் 220 ஏக்கர் பரப்பு சீன நிறுவனத்திற்கு 99 வருட குத்தகை அடிப்படையில் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 49 ஏக்கர் சீன நிறுவனத்திற்கு குத்தகை அற்ற அறுதியாக வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒட்டுமொத்தமான எதிர்கால அபிவிருத்தியில் 23 வீதமான காணி இலங்கை அரசாலும் 43 வீதமான காணி சீன நிறுவனத்தினாலும் விற்பனை செய்ய முடியும். மீதி 34 வீதமான காணி பொதுவான பகுதிகளாக இருக்க வேண்டும். இதுவே ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய தற்போதைய ஏற்பாடு.
இலங்கை அரசும் சீன நிறுவனமும் அபிவிருத்திக்காக இணைந்துகொள்ளும் நிறுவனங்களுக்கு தனியார்களுக்கும் 99 வருட குத்தகை அடிப்படையில் தங்கள் காணி உரிமங்களை விற்க அல்லது மாற்ற முடியும்.
அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டிருக்கும் ஒப்பந்தம் வியாபார நோக்கமாகவே கருதலாம். ஆனால் அறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நிலப்பரப்பின் எதிர்காலம் எப்படி அமைந்திருக்கும் என்பது கேள்விக்குறியே.
மேலும் தொடரவிருக்கின்ற அபிவிருத்திகள் சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமாக இருந்தால் காணி உரிமைகள் சீன நிறுவனங்கள் கையகப்படுத்தும் சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகிறது.

கேள்வி:இந்த ஒப்பந்தத்தினால் இலங்கை அரசுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேறுவதற்காக கணக்கிலடங்காத சன்மானங்கள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. இதில் உண்மையிருக்கிறதா?

பதில்:வழக்கமாக அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக ஒரு நாட்டுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அரசாங்கங்கள் நியாயப் பாடுகளை முன்வைக்கின்றனவோ அதேபோன்ற ஐந்து முக்கிய நோக்கங்களை இலங்கை அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

• அபிவிருத்தி கட்டத்திலும் அதற்கு பின்னான முற்றுமுழுதான செயல்பாட்டு கட்டத்திலும் ஏற்படக்கூடிய வேலைவாய்ப்பு

• நேரடியான வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு கிட்டத்தட்ட 15 பில்லியன் அமெரிக்க டொலர்

• வழக்கத்துக்கு மாறாக பன்னாட்டு நிறுவனங்களின் புதிய அபிவிருத்தித் திட்டங்களை உள்வாங்குவதன் மூலம் பெறுமதி சேர் நகர அபிவிருத்தியை முன்னெடுத்தல்

• நாட்டின் வரவு செலவுக் கணக்கில் ஏற்படக்கூடிய இடைவெளியை சமநிலைப்படுத்ததலும் வருவாயை அதிகரித்தலும்

• வரி அறவிடுதல் ஊடாகவும் நீண்டகால நில குத்தகைகளின் வருமானத்தின் ஊடாகவும் அபிவிருத்தியின் பின் மேற்கொள்ளப்படும் விற்பனையின் ஊடாக அரசுக்கு வருமானம் ஈட்டுதல்

ஆனால் நீங்கள் சொல்வது போல இந்த விடயங்களை ஏற்கனவே இருக்கக்கூடிய முதலீட்டு அதிகார சபையின் ஊடாக தருவிக்கப்படுகின்ற முதலீடுகளின் வாயிலாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

அத்தோடு அபிவிருத்திக்காக செலவிடப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை நீண்டகால கடன் கொடுப்பனவு முறை மூலமாக பெற்றுக் கொண்டிருக்க முடியும்.
அபிவிருத்தி என்ற போர்வையில் நாட்டினுடைய நிலப்பரப்பினை வெளிநாட்டிற்கு தாரைவார்த்துக் கொடுத்து அவ்விடத்தில் வருமானத்தின் பெரும் பங்கினையும் அவர்களே முதலீடாகவும் வருமான லாபமாகவும் பெற்றுக் கொள்ள வடிவமைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை.

இலங்கை அரசுக்கு நிகராக முதலீடுகளையும் வருமானங்களையும் வெளிநாட்டு அரசாங்கமும் பெற்றுக்கொண்டு வளம்பெறும் சூழ்நிலைதான் இந்த ஒப்பந்தத்தின் மூலம் காணப்படுகிறது.

கேள்வி:இந்த போர்ட் சிற்றி பிரதேசத்தை நிர்வகிப்பதற்காக ஒரு ”தனியான அதிகார சபை” தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்டின் ஒரு பகுதியை நிர்வகிப்பதற்கு அப்படி தனியானதொரு அதிகாரசபையை தோற்றுவிப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருப்பதுபற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்:நான் முதல் கூறியதுபோல முதலீட்டு அதிகாரசபையின் ஊடாக இவற்றை முன்னெடுத்து இருக்க முடியும்.

ஆனால் முதலீட்டு அதிகார சபையினால் கொண்டுவரப்பட்ட அல்லது அவர்களுடன் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பல நீண்ட நாட்களாக நடைமுறைப்படுத்தப்படாத சூழ்நிலை காணப்படுகிறது.

ஒன்று அதிகார சபைகளுக்கு இடையிலான சிவப்பு நாடா என்கின்ற அனுமதி வழங்குவதற்கான கால தாமதங்கள் ஏற்படுத்தப்படுவது.

இரண்டாவது பல்வேறுவிதமான அமைச்சுகளின் வகிபாகம் இருப்பதனாலே அதற்குள் இருக்கக்கூடிய குழப்ப சூழ்நிலை.

மூன்றாவது காலத்துக்கு காலம் ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்களினால் பல அபிவிருத்தித் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

நான்காவது வெவ்வேறு அதிகார தளங்களில் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் அதிகார தலையீடுகளும் குழப்பங்களும். உதாரணமாக மத்திய அரசாங்கம் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கு இடையில் ஏற்படுத்தக்கூடிய அதிகார சிக்கல்கள்.

இதனாலேயே துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்படலாம் என்பதனாலே முதலீட்டாளர்களுக்கு பட்டுப்பாதை ஒன்றை ஏற்படுத்துவதற்கு இந்த அதிகார சபை அவசியம் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால் இவ்விடயங்களை நிர்வாக ரீதியாக நிவரத்தி செய்திருக்கலாம்.

இந்த சட்டமூலத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட முகாமைத்துவ ஆணைக்குழு துரித அபிவிருத்தி முன்னெடுப்புக்களின் அனுமதிகளை வழங்குவதில் தாமதப்படுத்தாமல் எந்த தலையீடுகளையும் தாண்டி செயல்பட அல்லது செயற்படுவதற்கான நோக்கங்களை கொண்டதாக இருக்கிறது.
இம் முகாமைத்துவ ஆணைக்குழு எதிர்காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கு மாகாணசபைகளுக்கு அல்லது அமையவிருக்கும் புதிய அரசாங்கங்களுக்கு கூட கட்டுப்படாமல் தனித்துவமாக செயல்படக்கூடிய அதிகாரங்களை கொண்டிருக்கும் ஆபத்து நிலைமை காணப்படுகிறது.

கேள்வி:வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்து வருகின்ற தமது பூர்வீக நிலப்பகுதியை தாங்கள் நிர்வகிப்பதற்கு ஒரு நிர்வாக அலகைத்தானே கேட்டார்கள். அதற்கு மறுப்புத் தெரிவித்த இலங்கை அரசு, தனது நாட்டுக்கு அப்பாலுள்ள சீன தேசத்திற்கு எவ்வாறு போர்ட் சிற்றியை கையீந்து கொடுக்க முடியும். இதன் மர்மம் என்ன?

பதில்:தமிழ் தேசிய இனமான நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக எங்களுக்கான அதிகாரங்களைப் பகிர, இது எமக்கான தீர்வாக நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஆகக்குறைந்தது மாகாணசபை அதிகாரங்களை பகிர, ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள 13ம் திருத்தத்தை முற்றுமுழுதாக நிறைவேற்ற கோரிக்கை விடுத்தும் அது மறுக்கப்படுகிறது. ஒரு தேசிய இனத்தின் கோரிக்கையை நிராகரிக்கும் அரசு, வெளிநாடு ஒன்றுக்கு அதே அதிகாரங்களை வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்ற எமது நிலைப்பாட்டை துறைமுக முகாமைத்துவ ஆணைக்குழுவிற்கான வர்த்தமானி அறிவித்தல் வந்த உடனேயே தெரிவித்திருந்தோம்.

ஆதிக்குடிகளாக, தேசிய இனமாக எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் எமது மக்களை சிறப்பாக நிர்வாகிக்கும் அதிகாரப் பரவலாக்கலாக சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பல வருடங்களாக ஜனநாயக வழியிலும் ஆயுதப் போராட்ட மூலமும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துள்ளோம். எமது போராட்டங்கள் பிரிவினை வாதமாக, பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு அரச படைகளால் கொடூரமாக அடக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. எமது பாரம்பரிய மண்ணில் இரத்த ஆறு ஓடியது. அதே வேளையில் வெளிநாடு ஒன்றுக்கு தாம்பாளத்தில் வைத்து அதே அதிகாரங்களை அரசு கொடுக்க முற்படுவது எதற்காக?

வியாபார ரீதியாக அந்த துறைமுக நகரம் நாட்டுக்கு நிதி சேர்த்துக் கொடுக்கும் என்றால் நாம் கோரும் அதிகாரங்களை எங்களுக்கும் தாருங்கள். இதைவிட சிறந்த முறையிலே நாங்கள் பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைந்து இந்த நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் அதிக அளவு வருமானத்தை ஈட்டித் தரும் தேசமாக மாற்றி அமைத்து காட்டுகிறோம்.

தனது நாட்டில் தேசிய இனத்துக்கு பல்வேறு காரணங்களை கூறி மறுக்கும் உரிமையை, வெளிநாட்டுக்கு வருமானம் என்ற நியாப்படுத்தலோடு வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என எமது மக்கள் பிரதிநிதிகளாக பல மட்டங்களிலும் பாராளுமன்றத்திலும் குரல் கொடுத்து வருகிறோம்.

நிதிசார் வருமானத்தில் இந்த ஒப்பந்த ஏற்பாட்டாளர்களுக்கும் பங்குள்ளது என்பது தான் அந்த மர்மம் என கருத இடமுண்டு.

கேள்வி:ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. விஜேதாஸ ராஜபக்ஸ மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாரானுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன் ஆகியோர் போர்ட் சிற்றி தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவித்திருக்கின்றனர். இப்படியான செயற்பாடு இலங்கையின் இறையாண்மைக்கு முரணானது, சர்வஜன வாக்குரியொன்று அவசியமானது என அவர்கள் கருதுவதின் அர்த்தம் என்ன?

பதில்:அரசியல் யாப்பை மீறுகின்ற விடயங்களை ஆராய்வதற்கான அல்லது அனுமதியைப் பெறுவதற்காக உயர்நீதிமன்றத்தில் இந்த சட்டமூலம் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சட்ட மூலத்திற்கு எதிரான தரப்புக்களும் மிகச்சிறந்த சட்டத்தரணிகளை நிறுத்தி தமது வாதங்களை முன்வைத்தனர். பல்வேறு வாத பிரதிவாதங்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் 35 க்கும் மேற்பட்ட திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான விதிமுறைகளையும் அறிவுறுத்தியது.

இருப்பினும் துறைமுக முகாமைத்துவ ஆணைக்குழு விசேட சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பினை வழங்கியிருப்பது அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இந்த சட்டமூலத்தின், சில சரத்துக்கள் அரசியல் சாசனத்தை மீறுவதாக வைத்த விவாதங்களுக்கு உயர் நீதிமன்றமே அந்த சரத்துக்கள் அரசியல் யாப்பினை மீறவில்லை என்று கருத்து தெரிவித்து முற்றுப் புள்ளி வைத்தது.