குருந்தூர் மலை விவகாரம்: மூவருக்கு பிணை

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலையாகியுள்ளனர்.

அதேவேளை குறித்த வழக்கானது எதிர்வரும் 02.03.2023 ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சிக்கப்பட்டன.

பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து இதனை முன்னெடுத்திருந்தனர்.

இந் நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் மக்கள் பிரதிநிதிகளாக இணைந்து ஜனநாயகவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்தரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் தேரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர்.

​பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022 அன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.

இவ்வாறு வாக்குமூலங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தனர்.

அந்தவகையில் பௌத்த துறவிகளுக்கும், அவர்களுடன் வழிபாடுகளுக்காக வந்த குழுவினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தமை, அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள், 10.11.2022இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளதும், பொலிஸாரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஜூட் நிக்சன் ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், குறித்த வழக்கினை எதிர்வரும் 02.03.2023ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காகத் திகதியிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.