கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு –ரெலோ தலைவர் செல்வம்

சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும் அரசியல் கைதிகளுக்காகவும் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக செயற்பட்டு வந்திருந்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா.

இவரின் இழப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நம்பி இருந்தவர்களுக்கு பாரிய இழப்பாகவே அமைந்துள்ளது.

ஆட்கடத்தல், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் பேசப்பட்ட ஒரு பிரபல சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா ஆவர்.

என்னை அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்தபோது எனது விடுதலைக்காக நீதிமன்றத்தில் வாதாடி என்னை பிணையில் செல்ல அனுமதி பெற்றுத்தந்தவர். அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம்.

அவரை இழந்து நிற்கும் கணவர் கே.வி.தவராசா மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.