தமிழர்களின் அரசியல் பேச்சுக்கான கதவுகளை பூட்டினார் ஐனாதிபதி – சபா குகதாஸ்

தமிழர்களின் அரசியல் பேச்சுக்கான கதவுகளை பூட்டினார் ஐனாதிபதி என்று தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதியின் இன்றைய பாராளுமன்ற கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தெதாடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரின் தொடக்கத்தில் ஐனாதிபதி கோட்டாபய அவர்களின் உரை இடம் பெற்றது. இந்த உரை நிகழ்த்தப்படுவதற்கு முன்னபாக ஊடகங்களில் பல ஊகங்கள் வெளிவந்தன. அவற்றில் தமிழர் தரப்புடன் அரசியல் பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டது. ஆனால் ஐனாதிபதியின் உரை எதிர்பார்ப்புக்கு எதிராகவே அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐனாதிபதி கூறியது, உங்கள் அரசியல் நிலைப்பாட்டை கைவிட்டு வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு ஒத்துழையுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளாது மறைத்து தமிழ் மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினைதான் முதன்மையானது என்ற தோற்றப்பாட்டை ஐனாதிபதி காட்ட முனைகிறார். இதனையே இந்தியப் பயணத்தின் போதும் ஐனாதிபதி கூறினார் ஆகவே கோட்டாபய அரசாங்கம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.