தமிழர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான, உறுதியான தலைமை அற்ற நிலைமையில் இருக்கின்றோம் – ஜனா எம்.பி தெரிவிப்பு

தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் சிதைந்து சின்னாபின்னமாகி இன்று தமிழர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான, உறுதியான தலைமை அற்ற நிலைமையில் இருக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சி இன்று ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது தமிழ் மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு இவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக செயல்படுவது மாத்திரமல்ல அவர்களது கட்சிக்குள்ளே தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இவர்கள் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 37 வது ஆண்டு நினைவு தினம் (28) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வருடா வருடம் இந்த பகுதியிலே மரணித்தவர்களுக்காக நாங்கள் அஞ்சலி செலுத்துவது வளமை ஆனால் ஒரு வருடம் அஞ்சலி செலுத்துவதற்கு பாதுகாப்பு படையின் அச்சுறுத்தல் தடைகள் இருக்காது சில நேரங்களில் தடைகள் காணப்படும் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு பெரியதொரு தடை இருந்தது அனைவருக்கும் நீதிமன்ற கட்டளைகள் வழங்கப்பட்டது இங்கே எதுவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்று.

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அதையும் மீறி நான் அஞ்சலி செலுத்தியிருந்தேன் ஆனாலும் எனக்கு நீதிமன்ற கட்டளை வழங்கப்படவில்லை நீதிமன்ற கட்டளைகள் வழங்கப்பட்டவர்கள் இங்கு அஞ்சலி செலுத்த வரவில்லை எனக்கு நீதிமன்ற கட்டளை வழங்காததன் நிமித்தம் நான் அஞ்சலி செலுத்தியிருந்தேன். இருந்தும் எனக்கு எதிராக கொக்கட்டிச்சோலை போலீசார் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள் எதிர்வரும் 31 ஆம் தேதி அந்த வழக்குக்கான ஆரம்பம் நடைபெற இருக்கின்றது மட்டக்களப்பு நீதிமன்றத்தில் அதனை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இந்த அரசாங்கம் ஒன்றை நினைத்துக் கொள்ள வேண்டும் வடக்கிழக்கிலே பல ஆயிரக்கணக்கான போராளிகள் இலட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தின் மூலமாக கொல்லப்பட்டிருக்கின்றார்கள் நாங்கள் அவர்களை எந்த காலத்திலும் மறக்க முடியாது நாங்கள் எங்களது எதிர்கால சந்ததியினருக்கு இந்த வடுக்களை கொண்டு செல்வதற்காகவே இந்த நினைவஞ்சலிகளை ஒவ்வொரு வருடமும் எங்கெங்கு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ அங்கெல்லாம் நாங்கள் செய்து கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் எங்களது தலைமுறை இல்லாவிட்டாலும் எதிர்வரும் தலைமுறையாவது இவைகளை நினைத்துப் பார்க்க வேண்டும் நினைத்துப் பார்ப்பதன் மூலமாக எங்களுக்கு எதிராக இடம் பெற்ற அநியாயங்கள், அட்டூழியங்கள், அடக்குமுறைகள், படுகொலைகள் ஞாபகத்தில் அவைகளை வைத்துக்கொண்டு தமிழர்கள் அனைவரும் ஒன்று இணைந்து எமது மக்களின் விடுதலையை வேண்டி போராடினோமோ அந்த விடுதலை கிடைப்பதற்காக தொடர்ச்சியாக நாங்கள் போராட வேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றோம்.

உண்மையில் 2009 ஆம் ஆண்டு எங்களுடைய ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது 2009 வரைக்கும் தமிழ் தேசிய இனம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற அரசியல் சக்தியின் ஊடாக எமது ஒற்றுமையை இந்த நாட்டிற்கு மாத்திரமல்ல சர்வதேசத்திற்கு கூட வலுப்படுத்தி இருந்தோம் அந்த காலகட்டங்களிலே 2004 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வடகிழக்கில் இருந்து தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையை வாக்கு உரிமைகள் மூலமாக நிரூபித்திருந்தார்கள் ஆனால் 2009 பிற்பாடு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு தமிழீல விடுதலை புலிகள் இயங்கு நிலை அற்றதன் பிற்பாடு இன்று வரை எங்களுடைய தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் சிதைந்து சின்னாபின்னமாகி இன்று தமிழர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான, உறுதியான தலைமை அற்ற நிலைமையில் இருக்கின்றோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அன்று உருவாக்கப்பட்டது தமிழ் மக்களின் அரசியல் சக்தியை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கும் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்குமாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிரிவடைந்து இருக்கின்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்கின்ற ரீதியிலே நாங்கள் ஐந்து கட்சிகள் இருக்கின்றோம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே பெரிய கட்சியாக கடந்த காலங்களிலே இருந்து கொண்டு வந்த இலங்கை தமிழரசு கட்சி இன்று ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது தமிழ் மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு இவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் ஒற்றுமையாக செயல்படுவது மாத்திரமல்ல அவர்களது கட்சிக்குள்ளே தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இவர்கள் பலப்படுத்த வேண்டும்.

2009 க்கு பின்னர் சிங்கள பெரும் தேசியவாதம் தமிழ் தேசியக் கட்சிகளை பிரித்தாலும் தந்திரத்தைக் கொண்டு பிரித்து எங்களுக்குள்ளே பிரித்து கையாள்வதற்கு முயற்சிக்கின்றார்கள் அதற்காக ஒன்று இரண்டு முகவர்கள் கூட தமிழ் தேசியத்துக்குள்ளே வந்திருப்பதாக தான் நாங்கள் அறிகின்றோம் ஏனென்றால் சிங்கள பெரும் தேசிய வாதம் என்ன நினைத்ததோ அதை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2023 ஆம் ஆண்டு இடம்பெற இருந்த உள்ளூராட்சி தேர்தலில் பலவீனம் அடைந்தது இன்று தமிழரசு கட்சி கூட ஏனையவர்கள் கூறும் அளவிற்கு அவர்களது நடவடிக்கைகள் இருக்கின்றது.

அதை விடுத்து நாங்கள் ஒற்றுமையாக தமிழ் மக்களது உரிமைகளை பெறுவதற்காக பதவி ஆசைகள் தங்களது கட்சிகளை தாங்களே தலைமை தாங்க வேண்டும் என்கின்ற அந்த ஆசைகளை விடுத்து உண்மையிலேயே விடுதலை போராட்டத்திற்கு சென்ற இளைஞர்கள் நான் உட்பட இந்த பதவிகளுக்காக சென்றவர்கள் அல்ல நான் உயிருடன் இருந்தாலும் என்னைப் போன்று எத்தனையோ போராளிகள் இந்த வடகிழக்கிலே போராட்டத்திற்காக மரணித்திருக்கின்றார்கள் அவர்களின் ஆசை நிறைவேற வேண்டும் அவர்களது ஆத்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்றால் நாங்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் அந்த ஒற்றுமையினை ஒவ்வொரு கட்சியும் நிலை நிறுத்த வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட ஒன்றாக இருக்க வேண்டும்.

இன்று நாடு பொருளாதார ரீதியாக மிகவும் அதள பாதாளத்தில் இருக்கின்றது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கின்றார் இந்த வருட இறுதியிலே ஜனாதிபதி தேர்தல் வர இருக்கின்றது ஜனாதிபதி கூட இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுகின்றேன் என்று சொல்லிக்கொண்டு அரசியல் நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றார் வடகிழக்கிலே ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றது அத்தனை பிரச்சினைகளையும் நான் தீர்க்கின்றேன் என்று கூறுகின்றாரே தவிர எந்த ஒரு பிரச்சனையும் தீர்வதாக தெரியவில்லை.

ஐக்கியமாக அனைத்து கட்சிகளும் இலங்கையிலே செயற்பட வேண்டும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்துபணத்தைப் பெற்று இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்கின்ற ரீதியில் அவர் செயல்படுகின்றார் அதே நேரத்தில் இலங்கையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிரான சட்டங்களை 79 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை தமிழர்களுக்கு எதிராக கொண்டு வந்தார்கள் இன்று நிகழ்நிலை காப்புச் சட்டத்தை ஒட்டுமொத்த மக்களது குரல்வளயை, குரலை நசுக்குவதற்காகவும் ஊடகங்களை அடக்குவதற்காகவும் தனக்குத் தேவையான சட்டங்களை அவர் கொண்டு வருகின்றார் அதே நேரத்தில் மறுபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்கின்றார்.

இதை எல்லாவற்றையும் பார்க்கின்ற போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெல்வதற்கான ஒரு சூழ்ச்சியை, தந்திரத்தை தான் செய்து கொண்டிருக்கின்றாரே தவிர இந்த நாட்டிலே இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்லது வடகிழக்கிலே புரையோடிப் போய் உள்ள இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அல்லது மயிலத்தமடு மாதவனை போன்ற தமிழ் மக்களது காணிகளை அபகரிக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இவர் நினைக்கின்றார் இல்லை.

உண்மையிலேயே நாங்கள் இதேபோன்று ஒவ்வொரு பிரதேசத்திலும் உயிரிழந்தவர்களை என்றும் நாங்கள் தொடர்ச்சியாக நினைவில் வைத்துக்கொண்டு அவர்களுக்கான நினைவேந்தலை நாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம் ஏனென்றால் வடகிழக்கு மக்களுக்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் இதனை ஒற்றுமையாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. என்கிறார்.