‘தமிழ் கட்சிகளின் ஒற்றுமைக்கு பொருத்தமானவரை தலைவராக்குங்கள்’: தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களிற்கு ஜனா எம்.பி அழைப்பு!

கடந்த காலத்தை போன்று தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் யார் தலைவராக வரவேண்டும் என்பதை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரன்(ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு திக்கோடையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்-

தமிழரசுக் கட்சி தலைவருக்காக மூன்று பேர் போட்டியிடும் நிலை உருவாகி இரண்டு பேராக் மாறியுள்ளது. அதற்கான வாக்களிப்பு நாளையாகும். உண்மையில் தமிழரசுக் கட்சி என்பது தனியொரு அரசியல் கட்சி. அதற்கு நீண்ட நெடியதொரு வரலாறு இருக்கின்றது. கட்சி தலைவர் பிரச்சினை என்பது அவர்களது உள் வீட்டு பிரச்சினை. அதில் நாங்கள் கருத்து கூறமுடியாது. இருந்தாலும் நானும் தமிழன் என்ற வகையிலும் தமிழ் மக்களின் போராட்டங்களோடு பின்னி பிணைந்து நின்று தற்போது அரசியலில் இருப்பவன் என்ற வகையில் கருத்து கூறாமல் இருக்க முடியாது.

அந்த வகையில் தமிழ் தேசியம் என்பது தமிழரின் இரத்தத்தில் ஊறிய விடயமொன்றாகும். காரணம் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கப்பட்டதன் காரணத்தால் எங்களது மூத்த அரசியல் தலைவர்கள் அகிம்சை வழியில் போராடி அந்த உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் ஆயுத போராட்டத்தின் ஊடாக வென்றெடுக்க போராடினார்கள். அந்த போராட்டத்தில் பங்குபற்றி வடுக்களை சுமந்தவன் என்ற வகையிலே எப்பொழுதும் தேசியம் என்பது வெல்ல வேண்டும் என்று நான் நினைப்பவன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டம் மௌனிக்க பட்டதன் பின்னர் அதற்கு முன்னர் இருந்த ஒற்றுமையில் இருந்து விலகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இன்று சிதறுண்டு போய் இருக்கிறது. இந்த ஒற்றுமை இன்மையை பயன்பாடுத்தி இலங்கை அரசு பிரித்தாள நினைக்கின்றது. இந் நிலமை தொடருமாக இருந்தால் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாமல் போகலாம்.

எனவே கடந்த காலத்தை போன்று தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் யார் தலைவராக வரவேண்டும் என்பதை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சிந்தித்து நாளைய தினம் வாக்களிக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.