தேவைப்படும் போது தமிழர்களுடன் ஒப்பந்தம் செய்வதிலும், தேவை முடிந்ததும் கிழித்தெறிவதிலும் சிங்களவர்கள் வல்லவர்கள்: ஜனா எம்.பி

இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றை நன்கு கற்றுணர்ந்த எமக்குத் தெரியும் சிங்கள அரசாங்கமும் பௌத்த சிங்கள பேரினவாதிகளும் தமக்குத் தேவையெனில் இரு தரப்பு ஒப்பந்தங்களைச் செய்வதில் வல்லவர்கள். அதே போல அந்த ஒப்பந்தங்களைச் செயற்படுத்தாமல் பின்வாங்குவதில் அதனைக் கிழித்தெறிவதில் அதைவிட வல்லவர்கள் என்பதை நான் மட்டுமல்ல, இந்த நாடு மட்டுமல்ல, சர்வதேசமும் நன்கு அறியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்று (8) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேர்களை மீட்டு உரிமையை வென்றிட என்ற மலையக எழுச்சிப் பயணம் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களது வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அதே போல ஏறாவூர் 5ஆம் குறிச்சியில் நகர சபையிலே தொழிற்செய்யும் 15 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்களும் அதே போன்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அந்தப் பிரதேசத்தின் ஞானசேகரம் கஜேந்திரன் என்பவரின் முயற்சியினால் நான் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்திருந்தேன் இருந்தும் அந்த நிலமை இப்போது கிழக்கு மாகாண ஆளுநரின் கைகளுக்குச் சென்றிருக்கின்றது. ஆவர்களுக்கும் ஒரு நல்ல வாழ்வு கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

இலங்கை அரசியலமைப்பில் ஒரு அங்கமாக இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக சில வார்த்தைகள் பேசலாம் என்று நினைக்கின்றேன்.

13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதில் இத்தனை வருடகாலமாக அரசாங்கம் ஏன் முழுமையான அக்கறையைச் செலுத்தவில்லை என்பதனை இச் சபையில் கேள்வியாக முன்வைக்க விரும்புகிறேன்.

இலங்கை அரசாங்கத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும் இந்திய நாட்டின் பிரதமரான ராஜீவ் காந்திக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்குத் தீர்வாக இந்த மாகாண சபை முறைமை அமையும் என்ற நம்பிக்கை அன்றைய நிலையில் முழுமையாக இருக்கவில்லை என்பது உண்மை.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளான மொழி, பல்கலைக்கழக அனுமதி, இனக்கலவரம், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் உள்ளிட்டவைகள் பின்னரான காலத்தில் தமிழ், சிங்கள மக்கள் இடையே மோதல்களை உருவாக்கியது.

1956ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த டட்லி சேனாநாயக்க பதவி விலகியதையடுத்து ஆட்சி பீடம் ஏறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, பிரதமராக பதவியேற்று சிங்கள பண்பாட்டின் பாதுகாவலன் என தன்னை அடையாளப்படுத்தி சிங்கள மொழிச் சட்டத்தைக் கொண்டுவந்தார்.

தமிழர்களின் மொழி மற்றும் பண்பாட்டிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் சட்டமாக இது பார்க்கப்பட்டது. இதற்கெதிராக தமிழர்கள் அறவழிப் போராட்டங்;களை நடத்தினர். இதையடுத்து, அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிற்கும், தந்தை செல்வநாயகத்திற்கும் இடையில் பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள், எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதனால் அவ் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.

தமிழ் – சிங்கள மக்களிடையே இனப் பிரச்சினை ஏற்படுவதற்கு முதலாவது காரணியாக தனிச் சிங்கள சட்டம் அமைந்தது.

அடக்குமுறைகள், சிங்களக்குடியேற்றங்கள், பல்கலைக்கழக தரப்படுத்தல், 83 கலவரம் எனத் தொடர்ந்த நெருக்கடிகளுக்கிடையில் தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் இடையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் கைச்சாத்திடப்பட்டது.

காணி, பொலீஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கும் வகையில் வடக்கு, கிழக்கை இணைத்து 8 மாகாணங்கள் உருவாக்கப்பட்டன.

மாகாண சபை முறையின் ஊடாக, காணி, நிதி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசாங்கமானது இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்கவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து வடக்கு கிழக்கு இணைப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்து உத்தரவு பிறப்பித்தது.

வடக்குக் கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் அதன் முழுமையான நடைமுறைப்படுத்தலின்மை காரணமாகவே அன்றைய முதலமைச்சர் வரதராஜபெருமாள் அவர்கள் தமிழீழத்தினைப் பிரகடனப்படுத்திவிட்டு இந்தியாவுக்குச் சென்றார்.

13ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாது போனாலும், பல குறைபாடுகளுடன் வடக்கு கிழக்கு தனித் தனியாகப் பிரிக்கப்பட்டு 2008ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபை இயங்கச் செய்யப்பட்டது. அதன் பின்னர் வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபை இயங்கச் செய்யப்பட்டது. இரு சபைகளும் கலைக்கப்பட்டு பல வருடங்கள் கடந்த பின்னரும் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால், ஆளுனர்களின் அதிகாரத்தின் கீழே இச் சபைகள் இரண்டும் இப்போது இயங்கி வருகின்றன.

2009ஆம் ஆண்டில் தமிழர்களின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டது. அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி அவர்கள் 13 பிளஸ், பிளஸ் வழங்கப்போவதாக இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் வாக்குறுதியளித்தார். ஆனால் அதுவும் நடைபெற்றிருக்கவில்லை. இப்போதும் காலங் கடத்தல்களுக்கான முயற்சிகளே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் வேரூன்றிய சட்டவிதிக் கூறுகளைக் கொண்டுள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஸ்ரியைக் கோரும் தமிழர்கள் 13யேனும் அரசாங்கம் வழங்கும், அதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில், ஒற்றையாட்சி முறையின் கீழுள்ள இலங்கை அரசாங்கமானது மாகாண அரசின் நிரல் ஊடாகவோ அன்றேல் மத்தியும் மாகாணமும் ஒத்துப்போகவேண்டிய நிரல் ஊடாகவோ அமுலாக்கப்படக்கூடிய எந்த அதிகாரப்பரவலாக்கல் மூலமாகவும் வடக்குக் கிழக்குக்கான தீர்வு வழங்கப்படாது என்ற சிந்தனையுடன் தமிழர்களின் ஒருதரப்பினர் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் இருக்கும் நீதி மற்றும் மக்களாட்சி முறைகள் ஒரு போதும் தமிழர்கள் சிறிதளவேனும் அதிகாரத்தினைப் பெற்றுவிடக் கூடாது என்ற சிந்தனையுடன் இருக்கின்ற பெரும்பான்மைச் சமூகத்தினருடன் உடன்பாட்டுக்கு வரப்போவதில்லை.

அரசியல் யாப்புத் தொடர்பான கள யதார்த்தங்களுக்கு மத்தியிலும் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத் தரப்புகளிடம் உச்சபட்சக் கோரிக்கைக்கான தீர்வாக எதனைக் கோருவது என்ற கேள்விக்குப் பதிலாக 13ஆம் திருத்தத்தையேனும் உடனடித் தீர்வாக வழங்குவதற்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று நாங்கள் இப்போதும் நம்புகிறோம்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற போர்வையிலும் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையிலும் வடக்கு-கிழக்கு மீதான நெருக்கடிகளும் அத்துமீறல்களும் நடந்து வருகின்றன.

இன்றைய ஜனாதிபதி 13வது திருத்தத்தினை தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக அமுல்படுத்துவதற்கான செயற்பாட்டை மேற்கொள்ளாது தன்னுடைய தந்திரத் தனத்தினைப் பயன்படுத்தி காலங்கடத்துவதற்கான செயற்பாடுகளை சர்வகட்சிச் சந்திப்பென்றும், நிபுணர் குழு அமைத்தலென்றும் மேற்கொண்டு வருகிறார். இதுவும் கடந்த காலத்தில் நாம் அடைந்த ஏமாற்றங்களில் ஒன்றாக மாறும் என்று நாங்கள் அச்சம் கொண்டிருக்கிறோம். அதனை இல்லாமல் செய்வது ஜனாதிபதி அவர்களின் கைகளிலேயே இருக்கிறது.

ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்களின் இணைபிரியா வடக்கு-கிழக்குத் தாயகம் என்ற சிந்தனையை தவிடு பொடியாக்கும் செயற்பாடான சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது இப்போது வடக்கு கிழக்கில் தமிழர்களின் பெரும்பான்மையை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது,

சிங்கள தேரவாத பௌத்த மேலாண்மையின் மஹாவம்ச மனநிலையோடு முன்னெடுக்கப்படும் ஒற்றையாட்சிச் சட்டக்கூறுகளுக்குள் புரையோடிப் போயுள்ள இலங்கை அரசியலமைப்பினது அதன் ஒரு அங்கமாக இருக்கின்ற 13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் ஜனாதிபதி பாராளுமன்றத்தினை நாடுகிறார் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. அதே நேரத்தில், 2009 இற்குப் பின்னரான கடந்த 14 வருடங்களிலும், நாடு கண்டிருக்கின்ற பல்வேறு சவால்களையும் அது சீர்தூக்கிப் பார்க்கவில்லை என்பதனையே இது காட்டுகிறது.

அரசியற் கோரிக்கைக்காக அரம்பிக்கப்பட்ட போராட்டமானது கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதைக்கொப்பாக மாறிவிட்டது,
பூட்டானின் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையால் உருவான திம்புத் தீர்மானம் முதல் அதன் பின்பு வந்த ஒப்பந்தங்கள். பேச்சுக்களின் முடிவுகள், தீர்மானங்கள் எல்லாமே இலங்கைத் தமிழர்களின் முரண்பாட்டைத் தீர்த்து வைக்கவில்லை. இவ்வாறிருக்கையில் இப்போதும் 13 கோரப்படுகிறது. அதற்கும் தமிழ்த் தரப்பின் சிலரும் கடும் போக்குச் சிங்கள அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தே வருகின்றனர்.

அபிவிருத்தி அரசியலும் நல்லிணக்க மாயையும் பூசப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பூசி மெழுகலை நாம் எவ்வாறு நம்பமுடியும்.

அரசியலமைப்பிலுள்ள மாகாண சபை முறைமையை அமல்படுத்துமாறு தமிழர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், இன்று வரை அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசாங்கம் தவிர்த்து வருகின்றது.

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி கொண்டாடப்பட்ட 75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கினார். ஆனால் அது நடைபெறவில்லை. இப்போது 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி கேட்கிறார். இது பெரும் நகைப்புக்கானது என்றே கூறிக் கொள்ளவும் முடியும்.

இந்த உயரிய சபையில் இதுவரை நான் உரையாற்றியதற்கும் இன்று உரையாற்றுவதற்குமிடையிலே பாரிய வித்தியாசத்தை உணர்கின்றேன். இதுவரை நான் உரையாற்றிய வேளை ஏற்படாத துயரம், கவலை, சோகம் இன்று இந்த உரையினையாற்றும்போது ஏற்படுகிறது.

எனது அரசியல் பயணம் பற்றி இங்கு இருப்பவர்கள் பலருக்குப் புரியாது. ஒரு சிலர் அறிந்திருக்கக் கூடும். இந்த நாட்டில் தமிழர்கள் தமிழர் தம் பிரதேசங்களில் தமது மண்ணை, தமது மொழியை, தமது பிராந்தியத்தை, தமது கலாசார பாரம்பரிய தொன்மங்களைப் பாதுகாத்து பெருமையுடன் வாழமுடியாது அதற்கு உங்கள் பௌத்த சிங்கள மகாவம்ச மேலாதிக்கம் இடம்தராது என்பதை கற்றுத்தந்த உங்களது ஆட்சி காரணமாக எமது மண்ணை, எமது மக்களை, எமது மொழியை, எமது பண்பாட்டுப் பாரம்பரியத் தொன்மங்களைப் பாதுகாக்க, ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய முன்னாள் ஆயுதப் போராளி.

எனது அரசியல் வாழ்வொன்றும் இங்குள்ள பலரைப் போல அப்பன், பாட்டன், முப்பாட்டன் வழிவந்ததல்ல. அவர்கள் சேர்த்த பெயர், சொத்து, சுகம் வழி வந்ததுமல்ல. எம் மண், என் நிலம், என் மொழி, என் மக்கள், அவர் தம் வாழ்வுரிமை என்பவற்றுக்காக என் கல்வி துறந்து என் இளமையைத் தியாகம் செய்து, என் உயிரினை துச்சமென மதித்து, மேனியெங்கும் விழுப்புண்பட்டு ஒரு காலம் ஆயுதம் ஏந்திப் போராடிய ஆயுதப் போராளி என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்.

ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட திடீர் மாற்றம். அதைத் தொடர்ந்து உருவான இலங்கை இந்திய ஒப்பந்தம். அதனால் நாட்டுக்கு வருகை தந்த இந்திய அமைதிப்படை எமது ஆயுதங்களைக் களைந்து தேசிய அரசியல் நீரோட்டத்தில் எம்மைக் கலக்க வைத்தது.

இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றை நன்கு கற்றுணர்ந்த எமக்குத் தெரியும் சிங்கள அரசாங்கமும் பௌத்த சிங்கள பேரினவாதிகளும் தமக்குத் தேவையெனில் இரு தரப்பு ஒப்பந்தங்களைச் செய்வதில் வல்லவர்கள். அதே போல அந்த ஒப்பந்தங்களைச் செயற்படுத்தாமல் பின்வாங்குவதில் அதனைக் கிழித்தெறிவதில் அதைவிட வல்லவர்கள் என்பதை நான் மட்டுமல்ல, இந்த நாடு மட்டுமல்ல, சர்வதேசமும் நன்கு அறியும்.

டட்லி -செல்வா ஒப்பந்தம், பண்டா – செல்வா ஒப்பந்தம், யாழ். நகரில் அன்றைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அளித்த வாக்குறுதி என்று செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் எம்மை நம்பவைத்து கழுத்தறுத்தவையே.

இலங்கை இந்திய ஒப்பந்தம் சர்வதேச ஒப்பந்த நியமங்களுக்கு உட்பட்ட ஒரு ஒப்பந்தம் என்பதனால், அதனை மீறமாட்டீர்கள் அதன் வழி வந்த 13ஆவது அரசியல் சீர்திருத்தத்தையும் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்பினோம். ஆனால், ஒப்பந்தக் கடப்பாட்டை மீறுவதில் சர்வதேசத்துக்கே தண்ணீர் காட்டும் திறமையுள்ளவர்கள் என்பதனைக் காட்டிவிட்டீர்கள்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தையடுத்து இலங்கை அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது அரசியல் சீர்திருத்தம் உட்பட இதுவரை எமது அரசியலமைப்பு 22 சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது. இவை யாவும் இலங்கை அரசியலமைப்பின் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளின் பிரமாணங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது. திருத்தம் நிறைவேற்றிய பின்னர் அத் திருத்தங்கள் யாவும் அரசியலமைப்பின் பிரிக்க முடியாத ஒரு பாகமாக சட்ட ரீதியான வலுவினைப் பெற்றுக் கொண்டன.

எனவேதான் நான் கூறுகின்றேன். எமது 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தம் எமது அரசியலமைப்பின் குறைப் பிரசவம் அல்ல. கருச்சிதைவுக்குட்பட்டு வந்ததுமல்ல. வலதுகுறைந்ததுமல்ல. 13வது அரசியல் சீர்திருத்தத்தின் ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு வரிகளும் இலங்கையின் பிரிவுபடாத் தன்மையையும் ஒற்றையாட்சித் தன்மையையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலான ஏற்பாடுகளையே கொண்டுள்ளது. உண்மையிலேயே நான் கேட்கின்றேன். இந்த உயரிய சபையிலிருக்கும் எத்தனைபேர் எமது அரசியலமைப்பின் 13ஆவது சீர்திருத்தத்தினை கருத்தூன்றி தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் வாசித்துள்ளீர்கள். கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்பது போல, யாரோ அன்று கூறியவற்றை இன்று மனதில் ஏற்றுக் கொண்டு 13ஆவது அரசியல் சீர்திருத்தம் பற்றிக் கதைக்கின்றீர்களேயொழிய, 13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டு கதைப்பதாக நான் உணரவில்லை.

எமது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் இன்னும் ஒரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை நிறைவேற்றப்பட்ட ஏனைய அரசியல் சீர்திருத்தங்களை விடவும் பெருமைமிக்கது. இலங்கைப் பாராளுமன்றத்தில் 6 இல் 5 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட ஒரேயொரு சீர்திருத்தம் இந்த 13ஆவது சீர்திருத்தம். அதில் இன்னுமொரு முக்கிய விடயம் அரசியலமைப்பின் 6ஆவது திருத்தத்தால் பாராளுமன்றத்தில் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவம் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இச் சீர்திருத்தத்தில் வாக்களிக்கவில்லை. அப்படியெனில் இந்தப் 13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு 6இல் 5 பெரும்பான்மையுடன் வாக்களித்து சாதனை படைத்து நிறைவேற்றிய பெருமை முற்று முழுதாக சிங்கள பேரினவாதக் கட்சிகளையே சாரும். இந்த உண்மையினை உணராது 13ஆவது திருத்தச் சட்டத்தை இந்தப் பாராளுமன்றத்தில் ஏதோ தமிழ்க் கட்சிகள் நிறைவேற்றியதுபோல் கோசமும் கூக்குரலுமிடுகின்றீர்கள்.

எல்லாவற்றையும் விட இந்த 13ஆவது அரசியல் சீர்திருத்தத்தில் குறிப்பிடக்கூடிய இன்னுமொரு முக்கிய விடயம் இச்சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது எமது நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அவர்கள், அந்த அமைச்சரவையில் முக்கிய கபினற் அமைச்சராக இருந்தவர். இச் சீர் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கும் நிறைவேற்றுவதற்குரிய கூட்டுப் பொறுப்பினை அளிக்கவேண்டிய வரலாற்றுக் கடமைமிக்கவர் நாட்டில் அண்மைக்காலமாக தொல்லியல் வரலாறு, புராதன விகாரைகள் வரலாறு, மகாவலி காணி வரலாறு போன்ற யாவற்றையும் அக்குவேறு, ஆணி வேறாக உரிய அதிகாரிகளிடத்தில் கேட்கும் அளவுக்கு கற்றுணர்ந்த எமது ஜனாதிபதி இந்த 13வது அரசியல் சீர்திருத்த விடயத்தில் தனது வரலாற்றுக் கடமையினை மறந்திருக்கமாட்டார் என நான் நினைக்கின்றேன்.

எமது அரசியலமைப்பின் 13வது சீர்திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாகியது. அத்தியாயம் 17 (அ) மூலம் மாகாண சபைகள் ஸ்தாபிப்பது, ஆளுநர் நியமனம், ஆளுநர் அதிகாரம், மாகாண சபைகள் ஆக்கும் நியதிச்சட்ட விதிகள், மாகாண அமைச்சரவை பற்றிக் குறிப்பிடுகின்றது.

அதன் 9ஆம் அட்டவணை நிரல் ஒன்று மாகாண சபைகள் பிரயோகிக்கக்கூடிய அதிகார எல்லைகளைக் குறித்துநிற்கின்றது. பின்னிணைப்பு ஒன்று சட்டமும் ஒழுங்கும் பற்றிக் குறிப்பிடுகிறது. இதில் மாகாண பொலிஸ் அதிகாரம் பற்றி மிகத் தெளிவாகக் கூறுகிறது. பொலிஸ் மா அதிபர் இலங்கைப் பொலிஸ் படையின் தலைவராக இருப்பார் மாகாண மட்டப் பொலிஸ் படையானது பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இயங்கும். இதே போல தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மாகாண பொலிஸ் ஆணைக்குழு தொடர்பாகவும் விளக்கமாக, புரியக்கூடிய வகையில் எடுத்துரைக்கின்றது. இந்த ஏற்பாடுகளின் கீழ் தான் இலங்கையின் மாகாண சபைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒன்றிணைந்த வட- கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராஜா அவர்கள் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் தற்பொழுது நீங்கள் மாகாண சபை பொலிஸாருக்கு பொல்லுப் பொலிசா, கம்புப் பொலிசா, தடிப் பொலிசா என வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையை எவ்விதத்திலும் குலைக்கவில்லை. ஒற்றையாட்சிக்குள் நிருவாகப் பரவலாக்கத்தை மட்டுமே மேற்கொண்டுள்ளது. மாகாண சபையைப் பற்றிப் போசும் போது, 13ஆவது திருத்தம் பற்றிப் பேசும் பொழுது எமது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை என்பது ஏதோ வட கிழக்குக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என்ற பிரம்மையில் இன்றும் இருக்கின்றார்கள். உண்மையில் இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபையினை, அதன் அதிகாரங்களை அதிகம் சுவைத்ததும், அதன் மூலம் அதிகம் பயன் பெற்றதும் வட- கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் என்பதே உண்மையாகும்.

இந்த உயரிய சபையில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள், ஜனாதிபதி அவர்கள் உட்பட அனைவரும் பதவியேற்கும் போது செய்யப்பட்ட சத்தியப்பிரமாண வாசகத்தின்பால் உங்களை ஈர்க்கின்றேன். எமது சத்தியப்பிரமாணத்தின் போது இலங்கை ஜனநாயக் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கும் சட்டத்திற்கும் இணங்க பற்றுறுதியோடு எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிக் காப்பேனென்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கின்றேனென்று பிரமாணம் எடுத்துள்ளீர்கள். அப்படியானால் அரசியலமைப்பின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமான 13ஆவது சீர்திருத்தத்திற்கு முரணாக, எதிராக, உங்கள் கருத்துக்களை வெளியிடுவது நீங்கள் செய்த சத்தியத்துக்கு முரணானதாக அமையாதா, அது அரசியலமைப்பை மீறும் செயலாகாதா?, அவ்வாறெனில் அரசியலமைப்பை மீறிய தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு உங்களை உட்படுத்த முடியாதா, ஜனாதிபதி அவர்கள் தான் செய்த, செய்யாத செயலுக்கு தண்டனைக்குட்படுத்த முடியாதவரெனினும் அரசியலமைப்பை மீறும் போது அவரும் அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படவேண்டியவரென்று பொருள் கோடல் செய்யமுடியாதா.

தூங்குபவர்களைத் தட்டியெழுப்பலாம், புரியாதவர்களுக்குப் புரிய வைக்கலாம், அறிவில்லாதவர்களெனின் அறிய வைக்கமுடியும். ஆனால், நமது அரசியல்வாதிகள் இவற்றை புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இல்லை. தெரிந்து கொள்ளும் பக்குவத்திலுமில்லை. அறிந்து கொள்ளும் பக்குவத்திலுமில்லை. ஆனால், இவர்கள். எமது நாட்டின் எதிர்காலத்தோடு விசப்பரீட்சை விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஒரு ஆறு தசாப்த காலம் எம் நாடு பின்நோக்கிச் செல்வதற்கான முன்னாயத்தங்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் சிந்தியுங்கள். எம் நாடு பெரிதா, நம் நாட்டுக்கான தீர்மானம் எடுப்பது பெரிதா, இல்லை. நமது கட்சி, நமது பதவி, நமது அதிகாரம் தொடர்பான தீர்மானம் மட்டுமே முக்கியமா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டிய இறுதித் தருணம் இது என்பதை மறவாதீர்கள்.