பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட மூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் விவாதத்திற்கு விடப்படாது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, கூச்சல் .குழப்பங்களுக்கு மத்தியில் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்கள் மீதான விவாதத்திற்கு இரவு 8 மணிவரை நேரம் சபாநாயகர் அறிவித்த நிலையில் மாலை 4.30 மணிக்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பெறுமதி சேர்வரி (திருத்தச்) சட்டமூலம், நிதிச் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்கு ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் வற் வரியில் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலை சபைக்கு சமர்ப்பிக்குமாறு அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் அதனை சமர்ப்பிக்காது வற் வரி சட்டமூல விவாதத்தை தொடர்ந்து முன்னெடுத்து சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசு முயற்சித்தது.

என்றாலும் எதிர்க்கட்சிகள் ” கூட்ட நடப்பெண்” கோரிய நிலையில் அதற்கு தேவையான 20 எம்.பி. க்கள் சபையில் இல்லாத நிலையில் பிரதி சபாநாயகர் சபையை ஒத்திவைத்ததால் பெறுதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் (வற்)மீதான விவாதம் இடை நடுவில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த விவாதத்தை திங்கட்கிழமை (11) நடத்தி அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் சபைமுதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. ஒதுக்கீடு (2024) சட்டமூலம் மீதான திங்கட்கிழமை தினத்துக்குரிய குழுநிலை அலுவல்கள் நிறைவுற்றதை தொடர்ந்து ஒழுங்குப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டை விவாதித்து திங்கட்கிழமையே நிறைவேற்றுவதற்கான பிரேரணையை சபை முதல்வர் முன்வைத்தார். அத்துடன், குறைநிரப்புத் தொகை செலவீனத் தலைப்பையும் திங்கட்கிழமையே அங்கீகரிப்பதற்கும் அவர் முன்மொழிந்தார்.

அதற்கமைய, இந்தப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகோரிக்கை விடுத்தது. இதற்கமைய நேற்று காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம்மற்றும் நிதிச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டை விவாதித்து திங்கட்கிழமையே நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்ததுடன்,அதற்கமைய ஆளும் கட்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 51 மேலதிக வாக்குகளால்நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் திங்கட்கிழமை (11) 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில் அதனுடன் இணைந்ததாக இந்த பிரேரணை மீதான விவாதத்தையும் முன்னெடுக்க சபாநாயகர் முயற்சித்தார்.

எனினும் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தவே ”சரி அப்படியானால் வரவு செலவுத்திட்ட திங்கட்கிழமை (11) விவாதம் முடிந்தவுடன் தனியாக விவாதத்திற்கு எடுப்போம். விவாதம் 8 மணியானாலும் விவாதத்தை தொடர்வோம் ”எனக்கூறிய சபாநாயகர் அதற்கு சபையின் அனுமதியும் கோரினார். இதற்கு சபையும் அனுமதி வழங்கியது. எனினும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் அரசு தரப்பினரின் நேரத்தை மட்டுப்படுத்தி எதிர்கட்சியினருக்கான நேரம் வழங்கப்பட்ட நிலையில் இவ்விவாதம் மாலை 4.30 மணிக்கு நிறைவுற்றது.

இதனையடுத்து உடனடியாகவே சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம், நிதிச் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உரையாற்றினார்.அவரின் உரை முடிந்தவுடன் அரசு பிரேரணையை நிறைவேற்ற முற்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் தமது உரைகளுக்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தின .ஆனால் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் எதிரிக்கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைத்ததால் திங்கட்கிழமை (11) விவாதம் தேவையில்லையென சபாநாயகர் கூறியதனால் சபையில் கடும் அமளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுந்து, சபைமுதல்வர் சுசில் பிரேமஜயந்த இந்த விவாதத்தை நடத்த போதுமான காலத்தை வழங்குவதாக காலையில் சபையில் தெரிவித்தார். அதனாலே நாங்கள் அதற்கு இணங்கினோம். ஆனால் தற்போது விவாதத்துக்கு இடமளிக்காமல் வாக்களிப்புக்கு செல்வது ஜனநாயக விராேத செயலாகும் என்றார்.

இருந்தபோது வாக்களிப்புக்கு செல்ல கோரம் மணியை ஒலிக்கவிடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன் பிரகாரம் வாக்களிப்பு மாலை 4,45 மணியளவில் இலத்திரணியல் முறையில் இடம்பெற்றது.

அதன் பிரகாரம் பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு வாக்களிப்புக்கு விடப்பட்ட நிலையில் ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 57 மேலதிக வாக்குகளினால் நிரைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம், மூன்றாம் மதிப்பீடும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

வாக்களிப்பில் ஆளும் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரோஷான் ரணசிங்க சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் இதேவேளை நிதிச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.