யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி கருகல்

யாழ். மாவட்டத்தில் காலபோக நெற் பயிர் செய்கையில் பயிர்களில் பொட்டாசியம் பற்றாக்குறையால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார்.

யாழ். மாவட்டதில் சுமார் 13 ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணத்தில் நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நெற்பயிர்கள் பொட்டாசிய குறைவால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, தைகடி, நவாலி, கோப்பாய், கரவெட்டி, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் போன்ற பல பிரதேசங்களிலும் நெற் பயிர்களில் பொட்டாசியக் குறைபாடு அவதானிக்கப்பட்டுள்ளது.

இக் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியாக முதிர்ச்சி அடைந்த இலைகள் கடும் மஞ்சள் நிறமாவதோடு பொட்டாசிய பற்றாக்குறை அதிகமாகும் போது இலைகள் நுனியில் இருந்து அடிவரை செம் மஞ்சள் நிறத்திலிருந்து மஞ்சள், கபில நிறமாக மாறும்.

அதாவது இலையின் நுனிப்பகுதியில் தலை கீழ் “வி” (V) வடிவில் எரிவுகள் ஆரம்பிக்கும். இலை நுனியில் இருந்து இறக்கத் தொடங்கும்.

இதன் காரணமாக மட்டம் பெயர்தல் பாதிக்கப்படுவதுடன் தாவர வளர்ச்சி குன்றி பயிர்கள் கட்டையாக காணப்படும் நிலையில் நெல் மணிகள் பதர் ஆகும். இதனால் பாரியளவு உற்பத்தியிழப்பு ஏற்படும்.

விவசாயிகள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நெற் செய்கையில் போசணை முகாமைத்துவத்தை அதிகரிக்க முடியும்.

பொட்டாசியம் அடங்கிய இரசாயனப் பசளைகளை சிபாரிசுக்கு அமைய இடல் , பொட்டாசியம் அடங்கிய திரவ பசளையினை சிபாரிசுக்கமைய விசிறல், மேலும் வைக்கோலில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுவதனால் அடுத்த போகத்தில் வைக்கோலினை இட்டு உழவு செய்தல், நெல் அடிக்கட்டைகளை (ஒட்டுக்கள்) அறுவடையின் பின்னர் உழுதுவிடல் கிளிசிரியா இலைகளை வயலில் தூவிவிடல் வேண்டும் இதன் மூலம் நைதரசன் மற்றும் பொட்டாசியம் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.