ரணில் ஜனாதிபதி வேட்பாளர் என்பது பொதுஜன பெரமுன கட்சியின் கருத்து அல்ல – நாமல் ராஜபக்ச

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளைப் பெற்ற தற்போதைய அமைச்சர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்த போதிலும் அது கட்சியின் கருத்து அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கன்ஹுவரனெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும் அடுத்த அதிபர் பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்த கூட்டணியில் இருந்து பிறப்பார்.

அதிபருடன் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் எமது எம்.பிக்களும், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிப்பவர்களும் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். மற்றவர்கள் வேறு பெயர்களை வழங்குகிறார்கள்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தமது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பதற்கு தமது கட்சிக்கு சுதந்திரம் உள்ளதாகவும்,

ஏனைய கட்சிகள் இவ்வாறு எதிர் கருத்துக்களை முன்வைத்தால் கட்சி உறுப்புரிமை கூட தடைசெய்யப்படும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதாக எதிர்க்கட்சிகள் கவலைப்பட்டாலும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளதாகவும், பிரச்சினை ஏற்பட்டால் சபாநாயகருடன் கலந்துரையாடி முடிவெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.