ஸ்திரமான இலங்கையை கட்டியெழுப்ப நிலையான சமாதானம் உறுதி செய்யப்படல் வேண்டும் – பிரித்தானிய இந்து – பசுபிக் பிராந்திய விவகார அமைச்சர் மேரி ட்ரெவெல்யான்

நிலையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான சமாதானத்தை உறுதிசெய்வதன் மூலமே ஸ்திரமான இலங்கையைக் கட்டியெழுப்பமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், மோதலுக்கு பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு பிரித்தானியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்த பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு, எதிர்கால ஒத்துழைப்புசார் திட்டங்கள், இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ‘பைனான்ஸியல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்நேர்காணலில் அவர் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

கேள்வி – இலங்கைக்கான உங்களது விஜயத்தின் மூலம் எதனை அடைவதற்கு எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் – பிரித்தானியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் இவ்வேளையில் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் முதன்முறையாக இலங்கைக்கு வருகைதருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இதன்போது காலநிலை மாற்றம் தொடக்கம் கடற்பிராந்தியப் பாதுகாப்பு வரை பிராந்திய ரீதியில் முக்கியத்துவம் பெறும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம்.

குறிப்பாக கடற்பாதுகாப்பை முன்னிறுத்திய கூட்டு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு உள்ளடங்கலாக இந்து சமுத்திரப்பிராந்தியம் தொடர்பில் பிரித்தானியா கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்புக்கு இலங்கை தலைமைதாங்கும் இவ்வேளையில், நாம் ஒன்றிணைந்து இருதரப்பினருக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய புதிய வாய்ப்புக்களை அடையாளங்காணவும், இருதரப்பு வர்த்தகத்தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும் என நம்புகின்றேன். இதில் இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய பிரித்தானியாவின் உதவிகளும் அடங்கும்.

கேள்வி – இலங்கையுடனான ஒத்துழைப்பில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் என்ன?

பதில் – இருநாடுகளினதும் கூட்டிணைந்த ஒத்துழைப்பில் காலநிலைசார் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்திய செயற்பாடுகள் என்பன மிகப்பிரதானமானவையாகும். அதேவேளை மோதலின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு ஆகிய விவகாரங்களிலும் நாம் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றோம்.

அதன்படி இருநாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பு போன்ற பிராந்தியக் கட்டமைப்புக்களின் ஊடாக இலங்கையுடனும் ஏனைய முக்கிய நாடுகளுடனும் எமது தொடர்புகளை விரிவுபடுத்திவருகின்றோம்.

கேள்வி – இலங்கையில் நிலையான சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானியாவினால் எவ்வழிகளில் உதவமுடியும்?

பதில் – கடந்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதுடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற, துடிப்பான பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கே நாம் உதவ விரும்புகின்றோம்.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் ஊடாக 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான மனிதாபிமான உதவிகள் பிரித்தானியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டன. அவ்வுதவிகள் மூலம் பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 70,000 மக்கள் பயனடைந்தனர். அதேபோன்று மோதலுக்கு பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான உதவிகளை நாம் தொடர்ந்து வழங்குவோம்.

நிலையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான சமாதானத்தை உறுதிசெய்வதன் மூலமே ஸ்திரமான இலங்கையைக் கட்டியெழுப்பமுடியும். அதன்மூலம் இலங்கையால் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்கவும், பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ளவும் முடியும்.