இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதிலுள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார் என்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இன்று நேரில் தெரிவித்தார்.
அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று இந்தியத் தூதுவர் மேலும் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதுவருடன் பிரதித் தூதுவர், அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் கோவிந்தன் கருணாகரம், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டபோது, என்னென்ன விடயங்கள் இந்தியத் தரப்பினால் அறிவுறுத்தப்பட்டது என்பது குறித்து இந்தியத் தூதுவர் விளக்கமளித்தார். அத்துடன் இலங்கை – இந்தியக் கூட்டறிக்கையையும் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இந்தியத் தூதுவர் கையளித்தார்.
இரண்டு கட்சிகளும் எப்படியான தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என தூதர் கேட்டார்.
13வது திருத்தத்தை இறுதி இலக்காக கொள்ளவில்லையென்றும், சமஸ்டி அடிப்படையிலான தீர்வை பெற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தை தாம் அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்திய தூதர் குறிப்பிட்டார். துறைமுகம், சக்தி, முதலீட்டு வலயம் ஆகியவற்றில் இந்தியா பங்களிக்கவுள்ளதாக தெரிவித்தார்.