ஜேவிபி கிளர்ச்சியின் போது வன்முறையில் ஈடுபட்ட அரச அதிகாரிகள் பொறுப்பு கூறவேண்டும் – ஐநா வேண்டுகோள்

1989ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின் போது அரச அதிகாரிகளால் இழைக்கப்பட்ட வன்முறைகளிற்கு பொறுப்பு கூறவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகளின் நான்கு அமைப்புகள் இது தொடர்பான கூட்டு வேண்டுகோள் ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளன.

1989 ம் ஆண்டு ஜேவிபியின் கிளர்ச்சியின் போது மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற பலவந்தமாக காணாமல்போகச்செய்தல்,தன்னிச்சையாக தடுத்துவைத்தல்,சித்திரவதை,நீதிக்கு புறம்பான படுகொலைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஐநா அமைப்புகள் மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பான அரச அதிகாரிகள் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படாமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளன.

இழைக்கப்பட்ட குற்றங்களின் முக்கிய குற்றவாளிகளை (அரச அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள்) பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு நீதித்துறை நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து நான்கு அமைப்புகளின் ஐநா அறிக்கை கவலை வெளியிட்டுள்ளது.

பொது நலவாய பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் இலங்கை வருகை

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு நாட்டை வந்தடைந்தார்.

செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க ஆகியோர் வரவேற்றனர்.

ஸ்டீபன் ட்விக்கின் இலங்கை விஜயத்தில் அவருடன் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் மூலோபாய மற்றும் செயற்பாட்டுப் பிரதானி செல்வி எமில் டேவிஸும் இணைந்துள்ளார்.

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் ஸ்டீபன் ட்விக்கின் இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மின்சார சபை, அமைச்சரவைக்கு மின் கட்டணத்தை உயர்த்த அதிகாரமில்லை – சம்பிக்க

இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது அமைச்சரவை அமைச்சர்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரம் இல்லை என முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் அடிப்படையில் இது ஏற்புடையது இல்லை என்றும் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தை பாதிக்கும் வகையில் கட்டணத்தை மாற்றுவதற்கு இந்த தரப்புக்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனினும் மின்சாரக் கட்டணத்தை அறிவிப்பதற்கான முழு அதிகாரமும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த, கோட்டாபய ராஜபக்ச மீது பொருளாதார தடைகளை விதித்தது கனடா

முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கையர்கள் மீது கனடா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இராணுவத்தை சேர்ந்த மிருசுவில் படுகொலையாளி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோரே தடைவிதிக்கப்பட்ட ஏனைய இருவருமாவர்.

கனேடிய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில், கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, 1983- 2009 வரையான ஆயுதப் போரின் போது மனித உரிமைகளை மீறுவதற்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடைகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

“சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள், பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு ஒரு பரிவர்த்தனை தடையை விதிக்கின்றன, இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் முடக்கி, குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவிற்கு அனுமதிக்க முடியாததாக மாற்றும். பொறுப்புக்கூறல் தொடர்பில் கனடா மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கு அர்த்தமுள்ள மற்றும் உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியின் முன்னேற்றத்தையும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளையும் பாதிக்கிறது. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் நீதிக்கு தகுதியானவர்கள். எனவேதான், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை நிறுவுவதற்கான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு கனடா தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்தவர்களுக்குத் தொடரும் தண்டனை விலக்கை கனடா ஏற்றுக்கொள்ளாது என்ற தெளிவான செய்தியை இந்தத் தடைகள் வெளிப்படுத்துகின்றன.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்காக வாதிடுவதற்கு தொடர்புடைய பலதரப்பு அமைப்புகள் உட்பட சர்வதேச பங்காளிகளுடன் கனடா தொடர்ந்து ஒத்துழைக்கும், இது நாட்டிற்கான பாதுகாப்பான, அமைதியான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான முக்கியமான படியாகும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழுவின் ஒரு பகுதியாக கனடா, 51/1 தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் சமாதானத்தை அடைவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தொடர்ந்து வாதிடும்.

இலங்கையில் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் போக்குவதற்கான அவசர அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நோக்கிய முயற்சிகளுக்கு கனடா ஆதரவளிக்கிறது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் செயற்படுவதை நாங்கள் வலுவாக ஊக்குவிக்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்விதபேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென்றும், காலை 10 மணிக்கு நினைவேந்தல் நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னராக அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் காலை பத்து மணியளவில் பிரதான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் கோப்பாய் தவிசாளருமான நிரோஷ், புளொட் அமைப்பை சேர்ந்த சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிசோர், ரெலோவின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உள்ளிட்டவர்களுடன் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டணி குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு – செல்வம் எம்.பி

தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்

புகையிரத திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தேவையின் அடிப்படையில் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்ப்பதற்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி இன்று கிடைக்குமென தாம் நம்புவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 31ஆம் திகதி புகையிரத திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 450 பேர் ஓய்வு பெற்றதையடுத்தே அத்தியாவசிய சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சுமார் 400 ஊழியர்களை மீளப் பணிக்கமர்த்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது

யாழ். கலாச்சார மத்திய நிலையத்தினை திறந்துவைக்கிறார் ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்க உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 11ஆம் திகதி ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்போடு இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அது தொடர்பான முன்னேற்பாட்டு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது.

அதில் முப்படைகளின் பிரதிநிதிகள், துறைசார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழரசுக் கட்சி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டமைப்பிற்கு வெளியிலுள்ள தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிடுவதா என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலை எதிர்கொண்டதை போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியுள்ளது.

எனினும், கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாததால் அது பற்றி மீள பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தேர்தல் நெருங்கி விட்டதால், அதைபற்றி பேச அவகாசமில்லையென தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

இறுதியில், தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பங்காளிக்கட்சிகள் எப்படி போட்டியிடுவதென விரைவில் அறிவிப்பார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரினை பயன்படுத்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி முதல் புதிய மின்கட்டணங்கள் அமுலுக்கு வரும் – பந்துல குணவர்தன

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய கட்டணங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்று முன்மொழிவுகளை வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பிற அமைப்புகளுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.