இந்தியாவினால் பேருந்துகள் அன்பளிப்பு

”இலங்கையின் அசைவியக்கத்திற்கும் வாய்ப்புகளுக்கும் ஆதரவளித்தல்” எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்காக 75 பஸ்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்  பந்துல குணவர்தனவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார்.

இலங்கையின் பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய உதவின்கீழ் 500 பஸ்கள் இலங்கைக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 38 இலங்கையர்கள், கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று ஆரம்பித்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, அவர்களின் கடவுச்சீட்டுகள் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தற்போது கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதால், நாடு திரும்புவதற்காக இந்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தமிழரசு கட்சி பிரிந்து சென்றால் ஏனைய தமிழ் தரப்புக்களையும் கூட்டமைப்பில் இணைத்து போட்டியிடுவோம் – ஜனா எம்.பி

இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்து பலமான தமிழ் தேசிய கூட்டமைப்பாக களமிறங்குவோம் என ரெலோ அறிவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் கோவிந்தம் கருணாகரன் இதனை இணைய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசு கட்சி தனித்து செல்வதாக இருந்தால், தனித்து செல்லலாம். ஆனால் கூட்டமைப்பிலுள்ள மற்றைய கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டுமென கூறுவதற்கு தமிழ் அரசு கட்சிக்கு எந்த அருகதையுமில்லை. நாங்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடுவோம்.

தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், இரா.சம்பந்தனிற்கு ரெலோ, புளொட் கட்சிகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகள், ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்து ஒரு பலமாக கூட்டாக உருவாக்கி போட்டியிடுவோம். வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள மக்கள், தமிழ் தேசிய பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் ஒரு அணியில் திரள வேண்டுமென வலியுறுத்தியதற்காக மட்டுமல்ல, எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வந்து பலமான ஒரு கூட்டணியை உருவாக்குவோம்.

தமிழ் கட்சிகளை ஒன்று சேர்க்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பொதுவான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது ரெலோவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கட்சியாக பதிவு செய்யப்படும் – ரெலோ அறிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக உருவாகும் என்று அதன் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இதனை இன்று தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நேற்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகோபித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு எதிராக மேற்படி தீர்மானத்தைப் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசு நிறைவேற்றியிருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டித்தார்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக உருவாகும். யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம்” – என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேட்புமனுக் கோரலின் போது தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவதில் தேர்தல்கள் ஆணைக்குழு முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றாவிட்டால், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களினால் செலுத்தப்பட்டுள்ள கட்டுப்பணத்தை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கணக்கிலிருந்து செலுத்த நேரிடும் என சட்ட நிபுணர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கிடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதியிடம் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு கோரலுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தெரிவத்தாட்சி அலுவலர்கள், உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரை அழைத்து கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், தேர்தல் தொடர்பான எந்தவொரு அறிவித்தலையும் வெளியிட முடியாது என்றும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் தேர்தல் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி இறுதியாக இந்த அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியுள்ளது.

அதன் பின்னர் இதுவரையில் அவர்கள் மேற்குறிப்பிட்ட குழுவினரை சந்திக்கவில்லை என்பதும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரியவந்துள்ளது.

இது சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதில் பாரதூரமான தாக்கத்தை செலுத்தும் என்றும் குறித்த சட்ட நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு முறையான சட்ட முறைமைகளை பின்பற்றாவிட்டால், தேர்தலை சட்ட ரீதியாக நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தற்போது வேட்புமனு தாக்கல் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களால் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செலுத்தப்படும் கட்டுப்பணம் தேர்தல் செயலாளர் அலுவலகத்தினால் திறைசேரிக்கு அனுப்பப்படும்.

ஆனால் தேர்தல் ஆணைக்குழு வழமைக்கு மாறாக வேட்புமனு கோரியுள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள்செலுத்திய கட்டுப்பணத்தை தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தமது தனிப்பட்ட கணக்கிலிருந்து செலுத்த வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சுமந்திரன் இந்திய அரசிடம் கோரிக்கை

அரசியலமைப்பு ரீதியிலான தீர்வு திட்டத்தை நோக்கிய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஆர்வத்துடன் கலந்துக்கொள்கிறோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறைந்தது அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதுடன், இதற்காக இந்தியாவின் ஒத்துழைப்பினையும் கோருவதாக  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற 9 ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள  எம்.ஏ.சுமந்திரன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏ.என்.ஐ. செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு திட்டத்தில் அந்த மக்களின் சார்பாக இந்தியாவே முன்னின்று செயற்பட்டது. எனவே அரசியலமைப்பு ரீதியிலான தீர்வு திட்ட விடயத்தில் இலங்கை தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதொன்றாகும்.

தற்போது அரசாங்கத்திற்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றினேன்.

பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னரான ஒரு கால வரையறைக்குள் தீர்வு திட்டத்தை அடைவதற்கான அரசுடனான பேச்சுவார்த்தைகளில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கலந்து கொண்டு வருகின்றோம். முழுமையான அதிகாரபகிர்வு நோக்கிய தீர்வு திட்டத்தில் எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குவோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுவே பெரும் சிக்கலாகும். எனவே தான்  குறைந்தது அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதுடன், இதற்காக இந்தியாவின் ஒத்துழைப்பினையும் கோருகின்றோம்.

அதேபோன்று கால தாமதமின்றி மாகாணசபைத் தேர்தலை நடத்தவும், எந்தவொரு தேர்தலையும் ஒத்தி வைக்கக் கூடாது என்றும் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். எனவே இலங்கை வாழ் தமிழர்களுக்காக இந்தியா துணை நிற்க வேண்டும் என்றார்.

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சிங்கப்பூர் சட்டங்களை அறிமுகப்படுத்த தயாராகும் ஜனாதிபதி

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம்  எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பத்திரிகைகள் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளபோதிலும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி முதல் காலாண்டில் கிடைக்க பெறும் : ரணில் நம்பிக்கை

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தமாத இறுதியில் இந்தியா பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிகள் இந்த வருடத்தின் முதல்காலாண்டில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா இந்தமாத இறுதியில் பதிலளிக்கும்சீனாவுடன் இன்னுமொரு சுற்றுப்பேச்சுவார்த்தைகள்ஆரம்பமாகியுள்ளன அவையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனா வழங்கிய கடன்களை இரத்துச்செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவில்லை ஆனால் அடுத்த 20 வருடங்களிற்குள் கடன்களை வழங்குவதற்கான கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் 500 பேருக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு

அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இணைந்து, அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களுக்கு 550 வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடிந்ததாக அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க, அமெரிக்காவில் சுகாதாரத் துறையில் ஆட்சேர்ப்புகளை நடத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, 250 பதிவு செவிலியர்கள், 100 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 200 நர்சிங் உதவியாளர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் உள்நாட்டில் நடத்தும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் டொலருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தம்

வெளிநாடுகளில் பணிபுரிபவர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் 2 ரூபாய் ஊக்கத் தொகையை இலங்கையின் மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல்; இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சட்டவிரோதமான ஹவாலா அல்லது உண்டியல் முறைகள் மூலம் பணம் அனுப்பியதை அடுத்தே இந்த முறை அறிமுகப்படுத்தபட்டது.

எனினும் எதிர்பார்த்தபடி வெளிநாடுகளின் தொழிலாளர்கள் பணத்தை வங்கிகளின் ஊடாக அனுப்பப்படவில்லை.

இதனையடுத்தே இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அமெரிக்க டொலர் அனுப்புதலுக்கும் வழங்கப்படும் 2 ரூபாய் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு வங்கிகளை மத்திய வங்கி கேட்டுக் கொண்டதாக வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊக்கத்தொகையை நிறுத்துவது தொடர்பான மத்திய வங்கியின் உத்தரவு டிசம்பர் 30ஆம் திகதி கிடைத்துள்ளதாகவும், தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.