தேர்தல் காலம் தாழ்த்தப்படின் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு முயற்சிக்குமானால் அதனை தடுத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் விரைவில் புதிய ஆட்சி உருவாக தேர்தல் நடைபெற வேண்டும் என அக்கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு தீர்மானித்தன் பின்னர், நீதிமன்றம் அதற்கு முரணான தீர்ப்பை வழங்கினால் அரசாங்கம் படுதோல்வியடையும் என்றும் குறிப்பிட்டார்.

புதிய உள்ளூராட்சி மன்றங்களும் புதிய நாடாளுமன்றமும் தெரிவு செய்யப்பட்டு சர்வதேசத்துடன் தொடர்புகளைப் பேண முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் மீது சர்வதேசத்திற்கு நம்பிக்கையில்லாத இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு பின்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

சீனாவின் கொவிட் தொடர்பில் வெளிப்படைத் தன்மையை பேண வேண்டும்- உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீன அதிகாரிகள் நாட்டில் கொவிட் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக நாட்டின் பல கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் தொற்றுகள் உயர்ந்துள்ளன மற்றும் பல நாடுகள் இப்போது சீனாவிலிருந்து பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு சேர்க்கைகள் மற்றும் இறப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்க விரும்புவதாகக் கூறுகின்றனர். தடுப்பூசிகள் பற்றிய புள்ளிவிபரங்களையும் ஆராய விரும்புகிறது.

அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொவிட் சோதனைகளை விதித்துள்ளன, ஏனெனில் அவர்கள் வைரஸ் மீண்டும் பரவக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.

மேலும், சீனாவில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் விமானத்தில் ஏறும் முன் சோதனையை வழங்க வேண்டும்.

யாழ் நகர சபையை கலைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை

யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று (சனிக்கிழமை) ராஜினாமா செய்யவுள்ள நிலையில் யாழ் மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ,மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது என்பதோடு அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு தேர்வு நடைபெறும்.

இதேவேளை கிழக்கு மாகாணத்yaaதிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் புதிய திட்டம் வடகிழக்கில் நிறுத்தப்பட வேண்டும் – சபா குகதாஸ்

ஜனாதிபதி ரணில் அரசாங்கம் பயிர் செய்கை செய்யப்படாத நிலங்களை அரச உடைமையாக கையகப்படுத்தும் புதிய வடிவிலான நில அபகரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

அதன் முதற் கட்டமாக வடக்கு மாகாணம் உட்பட பதுளை, குருணாகல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையில் கடந்த 30 ஆண்டு போர் காரணமாக இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு தேசங்களில் வசிப்பதால் அவர்களுக்கு சொந்தமான பெரும் தொகையான பயிர்ச்செய்கை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன.

அதனை அவர்கள் பயன்படுத்த ஒரு நிலையான அரசியல் தீர்வு மிக அவசியமானது. ஆகவே இனப் பிரச்சினைக்கான தீர்வுவை முன்னெடுப்பதை தவிர்த்து நிலத்தை கையகப்படுத்தல் புதிய வடிவிலான இன அழிப்பாகவே மாறியுள்ளது. இத்தகைய செயற்பாடுகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 14000 ஏக்கர் காணி அபகரிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிரந்தர அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்படும் வரை பயிர்ச்செய்கை நிலங்களை கையகப்படுத்தல் மற்றும் அரச திணைக்களங்கள் மூலமாக நிலத்தை அபகரிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

அத்தோடு வடக்கு கிழக்கில் மாகாணத்திற்கு சொந்தமான அரச காணிகள் வடகிழக்கில் வாழம் மக்களில் சொந்தக் காணி இல்லாதவர்களுக்கும் தொழில் வாய்ப்பு இல்லாது ஆயிரக்கணக்காக தொழில் தேடி அலையும் இளையோருக்கும் வழங்கப்பட வேண்டும் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

நாளை (சனிக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மணிவண்ணன் தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து அவர் தனது பதவியை துறக்க முன்வந்துள்ளார்.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் இராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிததுள்ளன.

கடந்த 2020 டிசம்பர் 30ஆம் திகதி மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்ட நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மண்ணில் வேரூன்றும் முயற்சியாகவே சீனா அரிசியை வழங்கியுள்ளது: ஐங்கரநேசன்

பட்டினியால் குடும்பங்கள் படும் அவலத்தை சீனா சாதகமாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே அரிசியை வழங்கி வருவதாக, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்ற திட்டத்தின்கீழ் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சீனர்களின் உணவுப் பண்பாட்டில் இடம்பிடித்துள்ள பசைத் தன்மைகூடிய ஸ்ரிக்கி றைஸ் அரிசியே இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உணவுப் பண்பாட்டில் கடலட்டை எவ்வாறு இல்லையோ, அதேபோன்றே இந்த ரக அரிசியும் இல்லை.

சீனா மனிதாபிமான நோக்கில் அரிசியை வழங்கியிருந்தால் எங்களது பயன்பாட்டிலுள்ள அரிசியைத் தெரிவு செய்து வழங்கியிருக்கும். ஆனால், இந்தச் சீன அரிசியில் மனிதாபிமானம் இல்லை, வல்லாதிக்கப் போட்டி அரசியலே அதிகமாகவுள்ளது. பசியோடு இருக்கும் மக்களைச் சீன அரிசியை நிராகரிக்குமாறு எவருமே கோரமுடியாதபோதும் இந்த அரிசியிலுள்ள அரசியலை எமது மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி உடனடியாகத் தீரப்போவதில்லை. இதனாலேயே அரசாங்கம் பயன்படுத்தாமலுள்ள காணிகளை எடுத்து இராணுவத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது. இது உணவு உற்பத்தி என்ற பெயரில் காணிகளை கையகப்படுத்தும் மறைமுக நோக்கத்தையும் கொண்டுள்ளது.

வடக்குக் கிழக்கில் உள்ள வெற்றுக் காணிகளில் எமது பொது அமைப்புகள் அல்லது தன்னார்வலர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட முன்வரவேண்டும். பல வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். குத்தகை அடிப்படையிலேனும் பயிர்ச்செய்கைக்கு காணிகளை வழங்க அவர்கள் முன்வரவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் பசியால் ஒரு சிறுவன் இறந்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சமூகத்துக்குமே இழுக்காகும்.

போர்க்காலத்தில் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டிருந்தபோது கூட பட்டினியால் எவரும் இறந்ததில்லை. பிரதேச செயலகங்களில் கிராம சேவையாளர் பிரிவுரீதியாகப் பட்டினியை எதிர்நோக்கியுள்ள வறிய குடும்பங்களின் விபரங்கள் உள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டுமே அன்னதானங்கள் என்று இல்லாமல் இக்குடும்பங்களின் சிலநாள் பசியையேனும் போக்க எமது ஆலயங்களும் முன்வரவேண்டும்’ என கூறினார்.

கடலட்டை பண்ணைகளுக்காக யாழில் பேரணி

கடற் தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அட்டைப் பண்ணைகள் வேண்டுமென இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டைப் பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது.

தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப் பண்ணை காணப்படுகின்றது.

சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடற் தொழில் மேற்கொள்ளாத சிலரும் அட்டப்பண்ணையை விரும்பாத சிலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அட்டை பண்ணைகளை அமைப்பதற்கு சங்கங்களின் விருப்பமும் பெறப்பட்டே உரிய திணைக்களங்கள் ஊடாக அளவீடு செய்யப்பட்டு அனுமதியுடன் பண்ணைகளை அமைத்துள்ளோம்.

அட்டைப் பண்ணைகளை வேண்டாம் என கூறுவோர் ஏன் வேண்டாம் என முதலில் மீனவ சங்கங்களுடன் பேச வரட்டும் அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கட்டும்.

யாழில் அட்டப் பண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் துறைசார்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே ஒரு சிலரின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மீனவ சமூகம் நன்மை அடைகின்ற அட்டைப் பண்ணைகளை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர தடுக்கக் கூடாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இலக்கத்தகடுகளிலுள்ள மாகாணங்களை நீக்க தீர்மானம்

புதிதாக வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் உரிமையாளர்கள் மாற்றத்தின் போது வாகன இலக்க தகடுகளிலும் மாற்றங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் புதிதாக வாகனங்களை பதிவு செய்யும் போதும், உரிமையாளர்கள் மாற்றப்படும் போதும் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க வாகன இலக்கத்தகடுகளிலுள்ள மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் உரிமை மாகாணங்களுக்கு இடையில் மாற்றப்படும் ஒவ்வொரு முறையும் இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியிருக்கும் போது வாடிக்கையாளர்களும் போக்குவரத்து திணைக்களமும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள நேரிட்டுள்ளது.

வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது வாடிக்கையாளர்கள் மற்றும் போக்குவரத்து திணைக்களம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் போது, சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு 24 புள்ளிகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த புள்ளி வழங்கும் முறைமை தொடர்பில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் பயன்படுத்தும் அரிசியையே வழங்கினோம் – சீன பிரதித் தூதுவர்

சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் கவலை தெரிவித்தார்.

சீன அரசின் நிவாரண அரிசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக இலங்கைக்கான சீன பிரதித் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது தொடர்பில் ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நான் உட்பட சீன மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் அரிசியையே இங்கு வழங்கினோம். அந்த அரிசியை ஸ்ரிக்கி றைஸ் (sticky rice) என்று சொல்வார்கள்.

அதனை சமைப்பதற்கான வழி முறை என்பது சற்று வித்தியாசமானது என்றார்.

பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரிசி : செல்வம் எம்.பி அரச அதிபருக்கு கடிதம்

இந்தியாவின் தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் தொடர்பில் தகவல் கோரி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வவுனியா அரசாங்க அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.


இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன்.

இவ்விடயத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.