போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் – நிமல் சிறிபால

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என கப்பற்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி தொடர்பில் தற்போது விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இக்கட்டான நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்று நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் ஜனநாயக போராட்டத்தை வன்முறை போராட்டமாக மாற்றியமைத்தார்கள்.

அரகலயவில் முன்னின்று செயற்பட்ட கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

மக்கள் மத்தியில் இவர்களுக்கு எந்தளவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் அனைவரையும் மக்கள் தமது பிரநிதிகளாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்.நாட்டு மக்கள் நெருக்கடியான நிலையில் இருக்கும் போது அரசியல் ரீதியான தீர்மானத்தை சிறந்த முறையில் எடுக்கமாட்டார்கள்.தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களின் 8800 உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5100 ஆக குறைப்பதற்காகவே புதிய எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது.புதிய எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற வேண்டும் என்றார்.

நாட்டை நிர்வகிக்கும் அனைத்து தரப்பினரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர்

நாட்டில் இன்று நேர்மை காணப்படுகின்றதா? அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் வரை அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர். நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர். இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோயாகும். பல ஆண்டுகளாக நாம் இந்த நோய்க்கு அடிமையாகியுள்ளோம். இதிலிருந்து விடுபடுவதற்கான பலம் எம்மிடமில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (டிச. 25) பன்னிப்பிட்டி தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையின் போது உரையாற்றுகையிலேயே பேராயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதன் மூலம் உணவு உண்பதற்கு நாம் பழகியுள்ளமை வெட்கப்பட வேண்டிய முன்னுதாரணமாகும்.

முன்னைய காலங்களைப் போன்று எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்யும் நிலைமை காணப்பட்டால், இன்று இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது.

புதிதாக தோற்றம் பெறும் அனைத்துக்கும் அடிமையாகி, அனைத்தையும் வணங்கும் சமூகம் எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ளது.

உலகின் சொத்துக்களுக்கும் அதிகாரத்துக்கும் அடிமையாகாமல், அவற்றின் மீது பேராசை கொள்ளாமல் அவற்றிலிருந்து மீள வேண்டும் என்பதையே இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இறப்பும் வலியுறுத்துகின்றன. புத்த பெருமானும் இதனையே போதித்துள்ளார்.

எமது நாட்டில் தயாரிக்கக்கூடிய அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நாம் பழகியுள்ளோம். இதன் காரணமாக நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அவை எதனையுமே இறக்குமதி செய்வதற்கு எம்மிடம் இன்று பணம் இல்லை.

முன்னைய காலங்களைப் போன்று எமக்கு தேவையானவற்றை நாமே தயாரிப்பதற்கு பழகிக்கொண்டிருந்தால், இன்று எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதன் மூலம் உணவு உண்பதற்கு நாம் பழகியுள்ளமை வெட்கப்பட வேண்டிய முன்னுதாரணமாகும்.

நாட்டில் இன்று நேர்மை காணப்படுகின்றதா? அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் வரை அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர்.

நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர். இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோயாகும். பல ஆண்டுகளாக நாம் இந்த நோய்க்கு அடிமையாகியுள்ளோம். இதிலிருந்து விடுபடுவதற்கான பலம் எம்மிடமில்லை.

எம்மிடம் சொத்துக்கள் காணப்படுவது போதுமானதல்ல. இன்றைய சூழலில் பொய்களுக்குப் பின்னால் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். வறுமை நிலையில் உள்ளவர்களுடன் நத்தார் தினத்தை நாம் கொண்டாட வேண்டும் என்றார்.

அரசுடனான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் – சம்பந்தன்

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மத்தியஸ்தம் அல்லது மேற்பார்வை அவசியம் என்று கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.

இலங்கையில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் அத்தனை விடயங்களையும் இந்தியா நன்கு அறிந்துள்ளது.

குறிப்பாக, 1983ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் விவகாரம் சம்பந்தமாக இந்தியா விசேடமாக கரிசனை கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது.

அதன் பின்னரான காலத்திலும், தமிழ் மக்களின் விவகாரங்களில் இந்தியா முழுமையான பங்களிப்பினை செய்தே வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் பங்களிப்பினை புதிதாக கோரவேண்டியதில்லை.

தற்போது தமிழர் தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளின்போதும் இந்தியாவின் வகிபாகம் நிச்சயமாக இருக்கும்.

தற்போதைய சூழலில் அந்த வகிபாகம் எவ்வாறானது என்று வரையறுக்கப்படாவிட்டாலும், நிச்சயமாக இந்தியா தனது பாத்திரத்தினை முக்கியமானதாக வகிக்கவுள்ளது.

அந்த வகையில், தமிழ் மக்கள் தமது நியாயமான அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கு இந்தியா நிச்சயமாக தனது பங்களிப்பை பூரணமாகவும் அர்ப்பணிப்புடனும் வழங்கும் என்றார்.

தேசிய இனப் பிரச்சினை தீர்வுக்கான பேச்சில் இந்திய மேற்பார்வை தேவை – தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தல்

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மேற்பார்வை அவசியம் என்று தமிழ் அரசியல் தலைவர்களான விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் 5ஆம் திகதி இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதெனவும், 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ள நிலையிலேயே அத்தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினை பொறுத்தவரையில், தமிழ் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை எட்டவேண்டிய இக்கட்டான நிலைமையில் உள்ளது.

குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்வது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல தேவைப்பாடுகள் உள்ளன.

ஆகவே, தமிழர்கள் தரப்பினை புறமொதுக்கிவிட்டு அவர்களால் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமையில் தான் தமிழர் தரப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. அவ்விதமான சூழலில் நாம் ஒற்றையாட்சியை அடிப்படையாக வைத்து பேச்சுக்களை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை.

எமக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி விட்டுக்கொடுப்பற்ற பேச்சுக்களுக்கு தயாராக வேண்டும். குறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான பேச்சை முன்னெடுப்பதென்பதில் தளர்ந்துவிடக்கூடாது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இறுக்கமான பிடிமானத்தில் இல்லாது பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முயலுகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்கம், பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தராக நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மை அழைத்து வருவதற்கான சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் உள்ளன.

இதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவின் மத்தியஸ்தை கோருவோம்.

ஆகக்குறைந்தது பேச்சுக்களின்போது இந்தியாவின் மேற்பார்வையையாவது கோருவோம். இதன் மூலம் அரசாங்கத்தின் நழுவல் போக்கினை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

செல்வம் அடைக்கலநாதன்

ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டியது அவசியமாகும்.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், அச்செயற்பாடு எவ்வாறு சாத்தியமாகும், எவ்வாறு அமையப்போகிறது என்பது தெரியாதுள்ளது.

ஆனால், தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் தரப்பாகிய நாங்கள் சாதிக்க முடியும். பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

எங்களுடைய செயற்பாடுகளின்படி, பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் அனுசரணையோடு ஏனைய நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்பதும் எங்களுடைய கோரிக்கையாக நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

அந்த வகையில் சில பேர் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் ஏன் இதைச் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால், நான் அதை சொல்லாததற்கான காரணம், ஜனாதிபதியின் நிகழ்ச்சித் திட்டம், என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை என்பதாலாகும்.

ஆனால், நாங்கள் ஒரு கால வரையறையை கொடுத்திருக்கின்றோம். அதனடிப்படையில் அவை நடைபெற வேண்டும். ஜனாதிபதி நல்ல நோக்கத்துக்காக இதனை கையில் எடுத்துள்ளாரா? அல்லது பொருளாதார பிரச்சினைகளை மேம்படுத்துவதற்காக செய்கிறாரா என்றொரு கேள்வி இருக்கிறது.

ஆனாலும், இந்த சந்தர்ப்பங்களில் வாய்ப்பை நாங்கள் நழுவவிட்டு விடக்கூடாது. ஆகவே, தமிழர் தரப்பு எல்லோருமாக சேர்ந்து முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் எங்களுடைய நிபந்தனைகளையும் எங்களுடைய கோரிக்கைகளையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றார்.

சித்தார்த்தன்

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,

அரசாங்கத்துடன் பல்வேறு தருணங்களில் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். இந்தப் பேச்சுக்களில் சாதகமான நிலைமைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

எதிர்வரும் காலத்திலும், அவ்விதமான நிலைமைகள் நீடிப்பது பொருத்தமற்றதாகும்.

ஆகவே, பேச்சுவார்த்தைகள் உரிய இலக்கினை அடைவதற்கும், அவை வெற்றி பெறுவதற்கும் அரசாங்க மற்றும் தமிழ்த் தரப்பினை வழிநடத்திச் செல்வதற்கும் மேற்பார்வை அமைந்திருத்தல் மேலும் நன்மைகளையே ஏற்படுத்தும் என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால வரலாற்றை பார்க்கின்றபோது, ஒவ்வொரு தடவையும் பேச்சுக்களை முன்னெடுப்பதும், ஒப்பந்தங்களை செய்வதும், பின்னர் சொற்ப காலத்தில் அவற்றை முறித்தெறிந்து செயற்படுவதுமே வாடிக்கையாக மாறிவிட்டது.

இவ்வாறான நிலையில் தான் தற்போது பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் பற்றிய பேச்சுவார்த்தையின் போது அம்மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக தீர்வொன்றை எட்டுவதாக இருந்தால், நிச்சயமாக மூன்றாம் தரப்பின் மேற்பார்வை அவசியமாகின்றது.

அவ்வாறில்லாமல், அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுக்கின்றபோது அப்பேச்சுக்கள் வெறுமனே சர்வதேசத்துக்கான கண்துடைப்பாகவே சித்தரிக்கப்படும் ஆபத்துள்ளது.

இதனை விடவும் இந்தியா தமிழர்களின் விடயத்தில் நீண்ட காலம் வகிபாகத்தினை கொண்டிருப்பதால், இந்தியாவின் மேற்பார்வையானது மிகவும் அவசியமானதாகும் என்றார்.

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நல்லூரில் சமகால நிலைமை தொடர்பில் விசேட சந்திப்பு

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

நல்லூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று (டிச. 24) மாலை ஒன்றுகூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் 2 மணிநேரம் வரை கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்த் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியுடனான சந்திப்பு, தேர்தல், ஜெனீவா போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

Posted in Uncategorized

இக்கட்டான பொருளாதார நிலையிலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை பகிருங்கள் – யாழ் ஆயர்

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை சிறப்பாக உணர்த்தும் காலம் கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் காலமாகும் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

2022ஆம் ஆண்டின் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை இன மத நிற மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதும் கொண்டாடும்  இவ்வேளை கிறிஸ்து பிறப்பின்  பெருவிழா வாழ்த்துக்களை  முதலில் உங்கள் அனைவருக்கும்  தெரிவிக்கிறோம்.

வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார் (யோவான்1:1-14) என்ற யோவான் நற்செய்தியாளரின் வார்த்தைகள்  கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையைத் தெளிவாகத் வெளிப்படுத்துகிறது.

கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையையும் கிறிஸ்து பிறப்பின் மகிழ்வையும் நம்பிக்கையையும்  அர்த்தத்தையும்  எமது எந்தத் துன்பமான காலநிலையம்   இக்கட்டான அனுபவமும் என்றும் குறைத்து விடவோ எடுத்து விடவோ  முடியாது.

நீங்கள் உங்கள் ஆலயங்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிவும் அமைக்கும் கிறிஸ்து பிறப்பைச் சித்தரிக்கும் கிறிஸ்மஸ் குடிலும் அதனோடு இணைந்த கிறிஸ்மஸ் மரமும் மின் விளக்குச் சோடினைகளும்  நடத்தும் ஒளி விழாக்களும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையான  நம்பிக்கையின் அடையாளங்களாக அமையட்டும்.

இந்த அடையாளங்களின் வெளி அர்த்தத்தை தாண்டிச் சென்று அவற்றின் வழியாக வெளிப்படுத்தப்படும் இறை இருப்பையும் இறை அன்பின் மனமகிழ்வையும் உங்கள் மனதுகளில் முழுவதுமாக உணர்ந்து இயன்றவரை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை நாம் சிறப்பாக உணர்ந்து அந்த உண்மையை பகிர்ந்து கொள்ள சிறப்பாக அழைப்பு விடுக்கும் காலம் கிறிஸ்து பிறப்பு விழா காலமாகும்.

இன்றைய இக்கட்டான பொருளாதார நிலையிலும் அன்றாடப் பொருட்களின் தட்டுப்பாடுக்கு மத்தியிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலையிலும்  கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் இருக்கும் இந்த இக்கட்டான வேளையில் இந்த அன்பின் பகிர்வு கட்டாயமாகப் பணமாகப் பொருளாக உணவாக ஆடையாக இருக்க வேண்டுமென்பதில்லை.

தேவையில் இருப்போர்க்கு உடலுதவி செய்தல் – துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் தெரிவித்தல் – வைத்தியசாலையில் துன்பப்படுவோரைச் தரிசித்தல்  – சிறைச்சாலைகளில் வாடுவோரைச் சந்தித்தல் போன்ற செயல்கள் மூலம் கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை வெளிப்படுத்துங்கள்.

இந்த பெருவிழாவின் போது உலகம் முழுவதிலும்  பல்வேறு மொழிகளிலும் பாடப்படும் ஒரே இறைவார்த்தை உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு  அமைதி உண்டாகுக என்பதாகும் (லூக்காஸ் 2:13-14)

உலகில் அவருக்கு உகந்தோருக்கு  அமைதி உண்டாகுக எனத் தெரிவித்து இறையாசீர் மிக்க கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என்றுள்ளது

Posted in Uncategorized

வர்க்க வேறுபாடற்ற ஒரேவிதமான நத்தாரின் மகிழ்ச்சியை வழங்குவதே எமது இலக்கு – ஜனாதிபதி

இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகையைக் குறிக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை இதுவாகும்.

பெத்லஹேமில் ஒரு தொழுவத்தில் பிறந்த குழந்தையே இயேசு கிறிஸ்து ஆவார். இவர் உலகை யதார்த்தமாகப் பார்ப்பதில் பிறப்பிலிருந்தே முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்க அவர் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.

இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார நெருக்கடி நிலையில் ஒருவரையொருவர் இரக்கத்துடனும் அன்புடனும் வாழ்த்தி, சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவமாகும்.

“செலவுகளைக் குறைப்போம், எளிமையாக நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவோம், துன்பப்படுபவர்களுக்கு நம்மிடம் எஞ்சியிருப்பதைக் கொடுப்போம்” என்று பாப்பரசர் போப் பிரான்சிஸ், மனிதநேயத்தின் மதிப்பைக் கற்பிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகை வீட்டுக்கும் ஏழைக் குடிசைக்கும் ஒரேவிதமான நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை வழங்குவதே எங்கள் அரசாங்கத்தின் இலக்காகும்.

எனவே அனைவருக்கும் அன்பைப் பரப்பும் மற்றும் மனிதநேயத்தைப் பகிர்ந்து கொள்ளும் குடிமக்களாக இந்த பண்டிகைக் காலத்தில் அனைவரும் தங்கள் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம் – எதிர்க் கட்சித் தலைவர்

அன்பையும் அமைதியையும் பகிர்ந்துகொள்ளும் பண்டிகையான நத்தார் என்ற உண்மையான கிறிஸ்தவப் பிறப்பு, அமைதியான, அன்பான இதயங்களுக்கு மட்டுமே என்பது யதார்த்தமாகும். எனவே நாம் எப்போதும் உண்மையான நத்தார் தினத்தைக் கொண்டாடுவோம்.

இந்த வருட நத்தார் பண்டிகையை  இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகில் அமைதியின் செய்தியை எடுத்துரைத்து, மனிதர்கள் அனைவரையும் தீமையிலிருந்து காப்பாற்றுவதற்காக உலகிற்கு வந்த சமாதானத் தூதரின் பிறப்பு, அதாவது குழந்தை இயேசுவின் பிறப்பு உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகிறது.

அன்பு, சமாதானம், சகோதரத்துவம் என்ற கருப்பொருளைக் கொண்ட, உன்னதமான நத்தார் பண்டிகை கிறிஸ்தவர்களின் சமயப் பண்டிகை மட்டுமல்லாது, இனம், மதம், குலம், நிறம், சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலுமுள்ள எண்ணற்ற மக்களால் கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகும்.

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி, தன்னுடைய குமாரனை உலகிற்கு அனுப்பியது, தேவனுடைய ராஜ்யத்தின் மதிப்புகள் மீண்டும் பூமியில் வாழ வேண்டும் என்று இறைவன் எதிர்பார்த்ததனாலாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை டிசம்பர் மாதத்தில் தேவாலயத்தில் மணிகள் ஒலிக்கச் செய்து, இயேசுவின் பிறப்பை மெழுகுவர்த்தி வழிபாடுகளுடன் கொண்டாடுகிறார்கள்.

உலகில் அனைத்து இறைதூதர்களும் ஒரு நல்ல வழியைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களது தர்மத்தின் சாராம்சம் சாந்தி, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் கருணையாக இருந்தது.

இன்று நாம் மிகுந்த பக்தியுடன் நினைவுகூரும் இயேசுநாதர், மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த கருணையும் அன்பையும் காட்டிய அற்புதமானவர்.

பகிர்வு பற்றிய அற்புதமான பாடத்தை உலகுக்குக் கற்றுத் தந்த இறைமகன் இயேசு, மனித சுதந்திரத்தைப் பற்றி உலகிற்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொண்டு வந்தார். ஒருவரையொருவர் மதித்தல், ஒருவரையொருவர் அன்பாக நடத்துதல், அனைத்து மனித இனத்தையும் சகோதரத்துவத்துடன் நடத்துதல் ஆகிய உன்னத நற்பண்புகளை நடைமுறையில் உலகிற்கு போதித்தார்.

இயேசுநாதரின் கோட்பாடு அன்பு. எனவே, நத்தார் தினத்தை அமைதியின் பருவம் என்றும் கூறலாம். அன்பையும் அமைதியையும் பகிர்ந்துகொள்ளும் பண்டிகையான நத்தார் என்ற உண்மையான

கிறிஸ்தவப் பிறப்பு, அமைதியான, அன்பான இதயங்களுக்கு மட்டுமே என்பது யதார்த்தமாகும். எனவே, நாம் எப்போதும் உண்மையான நத்தார் தினத்தைக் கொண்டாடுவோம். ஆகவே, இந்த வருட நத்தார் பண்டிகையை நாம் இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம்

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் திணைக்களங்களை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிட கோரிக்கை

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் திணைக்களங்களை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிடுமாறு பைடனுக்கான தமிழர்கள் எனும் அமெரிக்காவினை சேர்ந்த தமிழ் அமைப்பினால் அமெரிக்கச் செயலர் பிளிகனுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் துறைகளை பயங்கரவாத அமைப்புகளாகவும், அவற்றின் தலைவர்களை பயங்கரவாதிகளாகவும் வகைப்படுத்த வேண்டும் என்று கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க மற்றும் வனத்துறையின் தலைவரும் பாதுகாப்பு அதிகாரியுமான கலாநிதி கே.எம்.ஏ.பண்டார ஆகியோரை பயங்கரவாதிகளாக அறிவிக்குமாறு அமெரிக்கத் தமிழர்கள் அவசரமாக இராஜாங்கத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டு அமைச்சரவை அதிகாரிகளும் தமிழர்களின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டதுடன் இலங்கை அரசின் நில அபகரிப்புக் கொள்கையையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இவையும் மற்றைய இலங்கை அரசாங்கத் திணைக்களங்களும் 100% சிங்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டிருக்கின்றன, தொல்பொருள் அபிவிருத்தி மற்றும் வனப் பாதுகாப்பு என்ற பொய்யான போலிப் பாவனையின் கீழ் தமிழர் நிலத்தை அபகரிக்கும் கூட்டு இலக்குடன். தமிழர்களிடமிருந்தும் தமிழ் விவசாயிகளிடமிருந்தும் காணிகள் பறிக்கப்பட்டவுடன், சிங்களக் குடியேற்றங்கள் அவர்களின் இடத்தில் வைக்கப்பட்டு, பல நூற்றாண்டுகள் பழமையான, புனிதமான இந்துக் கோயில்கள் பௌத்தர்களால் மாற்றப்படுகின்றன.

சட்டவிரோதமான நில அபகரிப்பு என்பதுடன், இது இனச் சுத்திகரிப்புக்கான தொடர்ச்சியான முயற்சி மற்றும் சர்வதேச மனித உரிமைகளை தெளிவாக மீறுவதாகும்.

இந்நடவடிக்கையானது அப்பகுதியின் தமிழர் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் அழித்து தமிழர் தாயகத்தின் ‘சிங்கள பௌத்தத்தை’ மேலும் முன்னெடுப்பதற்கான முயற்சியாகும்.

பயன்படுத்தப்படும் முறை மீண்டும் மீண்டும் வருகிறது: ஆராய்ச்சி என்ற பெயரில், தொல்லியல் துறை சில தோண்டுகிறது, குறிப்பாக இந்து கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சுற்றி. பழங்கால தொல்பொருட்கள் வசதியாகக் காணப்படுகின்றன, அவை தெற்கிலிருந்து கொண்டு வரப்பட்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் நடப்பட்டிருக்கலாம், மேலும் அவை முக்கியமான பௌத்தப் பொருள்களாகக் கூறப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இந்து கோவில்களை இடித்து, அவற்றின் எச்சங்களில் புத்த கோவில்களை எழுப்புகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழர்களின் விளைநிலங்கள் தென்பகுதியில் இருந்து புதிதாக வந்துள்ள சிங்களக் கிராம மக்களிடம் கையளிக்கப்படுகிறது.

வனத் துறைக்கும் இதே மாதிரிதான்: தமிழ் விவசாயிகள் தங்கள் பூர்வீக நிலங்களில் விவசாயம் செய்வதைத் தடுக்கும் உத்தரவுகளுடன், தவறான பாதுகாப்புக் கோரிக்கைகளின் கீழ், துறைக்கு நிலம் ஒதுக்கப்படும். சில மாதங்களுக்குப் பிறகு, சிங்களக் குடியேற்றங்கள், பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் கொண்டு வரப்படுகின்றனர், அதே நேரத்தில் தமிழர்கள் அவர்களது வீடுகளிலிருந்தும் வாழ்வாதாரங்களிலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்.

ஒரு முழு மக்களையும் அழிக்க இலங்கை அரசு திட்டமிட்டு முயற்சிப்பதால், நாளுக்கு நாள் தமிழர்கள் தங்கள் சொத்துக்களையும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேலும் மேலும் இழக்கின்றனர்.

1980 களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கு நில அபகரிப்பு ஒரு முக்கிய காரணம்.

இது மீண்டும் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால்
இந்த குண்டர், குற்றச் செயல்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் எங்கள் உதவிக்கு வராத வரையில் இதில் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது.

தொல்பொருள் மற்றும் வனத் துறைகளை அங்கீகரிப்பது முதல் படி: பயங்கரவாதத் தலைவர்களால் ஆளப்படும் பயங்கரவாத அமைப்புகள். முகமூடி கிழிக்கப்படும் போது, ​​அவர்கள் ஒரு மிருகத்தனமான, இனப்படுகொலை ஆட்சியின் முன்கூட்டியே காவலர்களே தவிர வேறில்லை என்பது தெளிவாகிறது.

நாம் வாழ்வதற்கும், அமைதியைக் காப்பதற்கும், தமிழர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட இறையாண்மையுள்ள நாடு தேவை.

வாக்கெடுப்பு மூலம் இதை நிறைவேற்ற முடியும். 1999 இல் கிழக்கு திமோரில் செய்தது போல், வாக்கெடுப்பை ஒழுங்கமைக்கவும் மேற்பார்வை செய்யவும் அமெரிக்கா உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உங்கள் தலையீடு இந்த பயங்கரமான துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இக்கட்டான நேரத்தில் எங்களின் அவலநிலையை கருத்தில் கொண்டதற்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது

பட்டினியால் வாடிய சிறுவன் மூதூரில் பரிதாபமாக மரணம்

பட்டினியால் வாடிய சிறுவன் மூதூரில் பரிதாபமாக மரணம் – மூதூரில் பரிதாபமாக மரணம் மனதை நெகிழவைக்கும் துயரம்

மிகக் கொடிய வறுமையால் பட்டினியால் வாடிய சிறுவன் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந் தார். இந்தத் தகவலை அந்தப் பகுதியின் சுகாதார தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.

மூதூர் – 64ஆம் கட்டை – சகாயபுரம் கிராமத்தில் உள்ள மாணிக்க விநாயகர் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள வீதியில் குடியிருக்கும் வைரமுத்து ராமராஜன் என்ற சிறுவனே பட்டினியின் கொடுமையால் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல்களை மூதூர் பாரதிபுரம் – கிளிவெட்டியில் உள்ள மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவில், மூதூர் – 64 ஆம் கட்டை, சகாயபுரம் கிராமத்தில் மிகவும் வறுமை நிலையில் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவர்களில் தந்தையை இழந்து தாயுடன் வாழ்ந்து வந்த சிறுவன் ராமராஜன் குடும்பமும் ஒன்றாகும். இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள ஆலயத்துக்கு சென்று தன்னால் முடிந்த பணிகளை செய்வான். அறநெறி பாடசாலைக்கு ஆர்வத்துடன் வருவான். எனினும், வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இல்லை. இந்த நிலையில் நாங்கள் முடிந்தவரை அடிக்கடி சிறு உதவிகளை சிறுவன் குடும்பத்துக்கு செய்து வருகின்றோம். கடந்த வாரம் உண்ண உணவின்றி பலவீனமாக இருப்பதாகவும் அவர்களின் தற்காலிக வீட்டில் உள்ளேயும் வெளியேயும் மழை வெள்ள நீர் தேங்கி நிற்பதாகவும் எமது பணியாளர்களால் படத்துடன் உறுதிபடுத்தப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக சமூக நலன் விரும்பி ஒருவரிடம் என்பவரிடம் இருந்து நிதியை பெற்று ஒரு மாதகாலத்துக்குப் போதுமான 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருள்களை பெற்று கொடுத்தோம். நாங்கள் சிறுவனின் நிலை அறிந்து அவரின் வீட்டுக்கு சென்றபோது அவர் எழுத்திருக்க முடியாத நிலையில் சோர்ந்து காணபட்டார். அவர்களின் வீட்டுக்குள் மழை நீர் வழிந்தோடியது. வீட்டுக்குள்ளே போக முடியாதபடி சுற்றிவர நீர் தேங்கி நிற்பதை யும் காணமுடிந்தது.

இந்த நிலைகண்டு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினேன். இனிமேலாவது இருக்கின்ற சிறுவர்களை பாதுகாக்க அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். சகாயபுரம் கிராமம் போன்று பல கிராமங்களில் வறுமையின் கோரப் பிடி யில் சிக்கி பெருமளவு மக்கள் கவனிப்பாரற்று உள்ளனர். இவ்வாறனவர்களுக்கு நாம் உதவி வருகிறோம். அதிகாரிகளும் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.