பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை (26) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஜ் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற், கலாசார ஒத்துழைப்புக்கான துணைத் தூதுவர் ஒலிவியா பெலீமியர் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தின் ஊடகத் தொடர்பாடல் அதிகாரி டினுசா இல்லப்பெருமா ஆகியோர் அடங்கிய குழுவினரே செவ்வாய்க்கிழமை (26) காலை யாழ்ப்பாணப் செய்தனர்.

பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழுவினரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன், கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சமகால விடயங்கள் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தினூடாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முன்னெடுக்கப்படும் கற்றல் மற்றும் ஆராய்சி செயற்றிட்டங்களின் மீளாய்வு குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

மழைக்கு மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுட்டிப்பு

யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகனினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.

நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக கடும் மழை பொழிய ஆரம்பித்த போதிலும் , மழையையும் பொருட்படுத்தாது , நினைவிடத்தில் கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபன் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜே.ஆர் காட்டிய வழியில் பயணித்திருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் – ஜனாதிபதி

மறைந்த ஜே.ஆர். ஜயவர்தன, 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கி கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் என்று ஜனாதிபதி ரணி்ல் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர், ஜயவர்தனவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வையொட்டி விடுத்துள்ள விசேட செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது அமர்வில் பங்கேற்க அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே, ஜே.ஆர் ஜயவர்தனவின் ஜன்ம தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விசேட செய்தியை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஜே.ஆர், ஜயவர்தனவின் ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட செய்தியை ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பீ. மும்முல்லகே வாசித்தார்.

அதில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது:-

“ஜே.ஆர். ஜயவர்தன இந்நாட்டில் சமூக பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்திய புரட்சியாளர். அவர் 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கிக் கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும்.

நாட்டில், ஏற்பட்ட கலவரங்கள், யுத்தம் மற்றும் அவரது கொள்கை பற்றிய புரிதல் இன்மை காரணமாக, அவரது சமூக பொருளாதார கொள்கைகளின் பலன்களை முழுமையாக அடைய முடியாமல் போனது.

எமது வலயத்தின் இந்தியா , சீனா, வியட்நாம், உள்ளிட்ட நாடுகள் ஜே. ஆர். ஜயவர்தனவின் கொள்கைகளையே பின்பற்றின. அந்த நாடுகள் காலத்திற்கு ஏற்றவாறு தமது கொள்கைகளை மாற்றிக்கொண்டு முன்னோக்கிச் சென்றன.

1938 களில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக அரசியலுக்கு பிரவேசித்த அவர், 1946 களில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆரம்பித்தார். இலங்கையின் முதலாவது கெபினட் அமைச்சராக தெரிவானதோடு, டட்லி சேனநாயக்கவுக்கு பின்னர் 1973 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1977 தேர்தலில் இலங்கையின் பிரதமரான ஜே. ஆர். ஜயவர்தன அரசமைப்பு மாற்றத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உருவாக்கினார்.

அணிசேரா அமைப்பின் ஆறாவது பொதுச் செயலாளராக அவர் தனது நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் மகத்தானவை. அதனை நினைவுகூருவது பாராட்டப்பட வேண்டியது.” – என்றார்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையே உதவியது – பிரதீப் ஜயவர்தன

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது.”

இவ்வாறு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனும் ஜே.ஆர். ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினருமான பிரதீப் ஜயவர்தன தெரிவித்தார்.

ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வு கொழும்பில் நேற்று (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதீப் ஜயவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் துணிச்சலான தீர்மானங்களை நாம் பாராட்டுகின்றோம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்துக்கு நாம் பூரண ஆதரவளிக்கின்றோம். எனவே, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.

Posted in Uncategorized

திருமலையில் திலீபனின் நினைவூர்தி மீது தாக்குதல்; கஜேந்திரன் எம்.பியும் தாக்கப்பட்டார்.

திருகோணமலை – கொழும்பு வீதியில், சர்தாபுர பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று (17) திருகோணமலை மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, திகோணமலை – கொழும்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்தது.இதன்போது, இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

அந்த பகுதியில் பொலிஸார், இராணுவ புலனாய்வுத்துறையினரும் பிரசன்னமாகியிருந்ததாகவும், பொலிஸார் தாக்குதலை தடுக்க தவறியதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ் மக்களின் அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகளை பாதுகாக்குமாறு இந்தியா வலியுறுத்தல்

தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி இலங்கையில் தமிழர்களின் வாழ்வை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவக் குறைப்புக்கு தீர்மானமில்லை – இராணுவ பேச்சாளர்

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் எண்ணிகை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்குறைப்பு செய்யப்படவில்லை எனவும், கட்டளைத் தளபதிகளின் எணிக்கை குறைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொதுமக்களின் பெருமளவான காணிகளும் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அவ்வப்போது படையினரின் தேவைக்காகக் காணிகளும் அளவீடு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என அரசியல்வாதிகளும், பொதுமக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், வடக்கு, கிழக்கில் அதிகளவான படையினர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனச் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு, கிழக்கில் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதில்லை என இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ள நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பௌத்த பிக்குவால் குழப்பம்; அளவீட்டுப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்கள்

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்து சென்றதுடன், யுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் வருகை தந்து தமது காணிகளில் குடியேறி, விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கிராமத்தில் தமது மயானம் இருந்ததாக தெரிவித்து அருகில் உள்ள கொக்குவெளி சிங்கள கிராம மக்கள் இரு பிக்குகளின் தலைமையில் குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய காணி ஒன்றினை உரிமை கோரி வந்ததுடன், தற்போது அதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்து குழப்பம் விளைவித்து வந்தனர்.

இது தொடர்பில் குறித்த காணியினை விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தி வரும் கருப்பனிச்சாங்குளம் கிராமத்தை சேர்ந்த நபர் கருத்து தெரிவிக்கையில்,

இது எனது பரம்பரை வழியான காணி. இங்கு எனது மூதாதையர்கள் முதல் நாங்கள் வரை நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றோம். பின்னர் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் வருகை தந்து காணியில் விவசாய செய்கையினை முன்னெடுத்து வருகின்றோம். தற்போது எமது காணியில் காய்க்கும் நிலையில் பெரிய தென்னை மரங்களும் நிற்கின்றன.

இந்நிலையில் எனது காணியில் சிங்கள மக்களுக்கான மயானம் இருந்ததாக கூறி, அதனை மீள அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, எனது காணிக்கான அனுமதி பத்திரத்தை கூட பிரதேச செயலகத்தால் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர்.

எனது காணியில் முன்பு மயானம் இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை. அல்லது சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கூட இல்லை. குறித்த சிங்கள கிராமத்திற்கு அண்மையில் மூன்று மயானங்கள் உள்ளது. அவர்கள் அங்கு சடலங்களை புதைக்க முடியும். தற்போது எனது காணியை சுற்றி தமிழ் மக்கள் குடியமர்ந்துள்ளனர். எனவே இங்கு மயானம் அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது நீதியான செயற்ப்பாடாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பகுதிக்கு பிக்கு இருவரின் தலைமையில் வருகை தந்த சிங்கள மக்கள் குறித்த காணியில் தங்களது மூதாதையர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காணியில் மயானம் அமைப்பதற்காக அதனை மீட்டுத்தருமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் பொலிசார் இரு தரப்புடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த காணி 1967 ஆம் ஆண்டில் மயானமாக இருந்ததாக நில அளவைத்திணைக்களத்தின் கள ஆய்வு குறிப்பில் இருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், நில அளவைத் திணைக்களத்தின் 2019 அறிக்கையின் படி அது வன இலாகாவிற்குரிய காணியாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மயானம் இருந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் முரண்பட்ட தமிழ் மக்கள், இப்படி ஒரு மயானம் இருப்பதாக பிரதேச சபையின் அறிக்கையில் கூட இல்லை. நாம் இந்த காணியை அளவீடு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். மயானம் அமைப்பதற்கு சிங்கள கிராமத்திலேயே பல அரச காணிகள் இருக்கின்றது. அங்கு அதனை அமைக்க முடியும் என தெரிவித்ததுடன், நீண்டகாலமாக குடியிருக்கும் நிலையில் நீதிமன்றம் ஊடாக இதற்கு தீர்வைக் காணுமாறும் தெரிவித்தனர்.

எனினும், குறித்த காணியை நில அளவீடுசெய்து சிங்கள மக்களின் மயானத்திற்காக ஒதுக்குமாறு பௌத்த மதகுரு வருகை தந்த அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு பிரதேச செயலாளர் இருதரப்புக்கும் தெரிவித்ததுடன், அதுவரை தற்காலிகமாக அயலில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்குமாறும் சிங்கள மக்களுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிலமை சீராகியது.

குழப்ப நிலையால் அளவீட்டுப் பணிகளுக்காக வருகை தந்த நில அளவைத்திணைக்களத்தின் அலுவலர்கள் காணியை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனித புதைகுழிகளை மறைப்பதற்காகவே அவ்விடங்களில் விகாரைகள்? ரெலோ தலைவர் செல்வம் எம்.பி சந்தேகம்

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே பௌத்த விகாரைகளை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொக்குதொடுவாயில் மனித புதைக்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தென்னிலங்கை தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கிடப்பிலே உள்ளது எனவும் ஒவ்வொரு இடத்திலும் மனித எச்சங்களை கண்டு பிடித்து கிடப்பில் போடும் நிலையே இலங்கையில் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இந்த விடயத்தில் சர்வதேசம் சரியான கவனத்தை எடுக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு பணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என முல்லைத் தீவு நீதவான் நீதிபதி தெரிவித்துள்ளார்;.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 09 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது முழுமையான 17 உடற்பாகங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வு அகழ்வு நடவடிக்கைகள் கடந்த 06 ஆம்; திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் 9 ஆம் நாள் அகழ்வு பணிகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

குறித்த அகழ்வு பணிகள், தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ். நிரஞ்சன், தடயவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்றைய அகழ்வு பணியின் போது, ஆடையொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குரிய இ-1124 அடையாள இலக்கமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த அகழ்வு பணி இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.