சிறைச்சாலைகளில் நெரிசல் 259 % அதிகரிப்பு

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நெரிசல் 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய நிலையில், தற்போது 26,791 கைதிகள் உள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.

இதனால், சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் கோபா குழு தெரிவித்துள்ளது.

17,502 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளடன், 9,289 பேர் தண்டனைக் கைதிகளாக உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நாட்டினது நெருக்கடி நிலைமைகளின்போது கட்சிகளின் பங்களிப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களுடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக்;கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி குறித்த பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மாதமொருமுறை ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

சென்னை – காங்கேசன் துறை முதலாவது பயணிகள் கப்பல் நாளை மறுதினம்

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமான விடயமல்ல – அகிலவிராஜ் காரியவசம்

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமான விடயமல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தையை இன்று சில அரசியல்வாதிகள் விமர்சித்து வருகிறார்கள்.

2500 வருட வரலாறு கொண்ட எமது நாட்டில், எங்கு தோண்டினாலும் புராதனச் சின்னங்கள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கும்.
மலசலகூடத்திற்காக குழியொன்றை தோண்டினால்கூட, இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

தொல்பொருள் சின்னங்கள் காணப்படும் இடங்களை நாம் நிச்சயமாக பாதுகாக்க வேண்டும்.

அதேநேரம், தற்போது வாழும் மக்களையும் அது பாதிக்காத வகையில் எமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

சிங்கள- பௌத்த தொல்பொருள் மட்டும் இங்கு தொல்பொருட்களாக கருதிவிட முடியாது.
அது இன, மதங்களுக்கு அப்பாற்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களை இந்நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் – எரான் விக்ரமரட்ண

இந்நாட்டு மக்கள் ஒருபோதும் ராஜபக்சக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மறந்து விடமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ண குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று மொட்டுக் கட்சியின் சிலர் கூறுகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்குள் தாங்கள் செய்த அநியாயங்களை மக்களிடமிருந்து மறக்கடித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்நாட்டு மக்கள் ஒருபோதும் அவர்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மறந்து விடமாட்டார்கள். ராஜபக்சக்கள் கொள்ளையடித்ததை நிரூபித்துக் காட்டுமாறு ஒரு அமைச்சர் கூறுகிறார்.

திருடியது ஒரு பக்கம் இருக்கட்டும். பிழையான தீர்மானங்களை எடுத்து நாட்டு மக்களை இந்த நிலைமைக்குள் தள்ளியது யார் என்று கேட்க விரும்புகிறேன்.

இன்று 27 வீதமான பெற்றோர் தங்களின் உணவுத் தேவையை குறைத்து, தங்களின் பிள்ளைகளுக்கு உணவு வழங்கி வருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இதற்கெல்லாம் யார் காரணம்? இப்படியான நபர்களுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கண்ணாடி முன் செல்லும் போது நாட்டிற்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவர் தனக்கு தெரிவதாக சரத் பொன்சேகா தெரிவிப்பு

கண்ணாடி முன் செல்லும் போது நாட்டிற்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவர் தனக்கு தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு எவரால் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு திறமையான தலைவர் அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடி நிலையில் இருந்து மீள இந்தியாவின் ஒத்துழைப்பு மிக அவசியம் – அமெரிக்க திறைசேரி செயலாளர்

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் நடவடிக்கைகளை அவதானித்து வருவதுடன், கடந்த ஆறு மாதங்களில் பல்வேறு விடயங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அச்சுறுத்தல் பொருளாதாரத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருவதுடன், இலங்கை போன்ற நாடுகளுக்கு உரிய தருணத்தில் முழுமையான கடன் நிவாரணங்களை வழங்குவதற்கு மேலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் திர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் வழங்காத அரசாங்கத்தில் நீடிக்கோம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க கடுமையாக உழைத்த உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் நீடிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இதுவரை வழங்கப்படாத அமைச்சரவை அமைச்சர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் அண்மையில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் நடத்தையை கடுமையாக விமர்சித்ததுடன், தமது கட்சித் தலைவர் அரச தலைவர் என்பதாலேயே அவரது செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியை ஓரங்கட்டும் எண்ணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைவிட முயற்சித்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என எச்சரித்துள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமையை அரசாங்கம் மதிக்கவில்லை ; பவ்ரல் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியும். என்றாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட ஐந்தாயிரம் இலட்சம் ரூபா மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ ஆளும் அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. இருந்தபோதும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும்.

அத்துடன் அரசியலமைப்புக்கு அமைய நடத்தப்படவேண்டிய தேர்தல் ஒன்றை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிப்பது தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்காகவா என அரசாங்கத்திடம் கேட்கிறோம். அதேபோன்று முழுமையாக தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகுவதாக இருந்தால் எல்லை நிர்ணய நடவடிக்கையை ஏன் செய்ய வேண்டும் என கேட்கிறோம்.

மேலும் அரசாங்கம் தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கதைத்து வருகிறது. அப்படியானால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த இல்லாத பணம் ஜனாதிபதி தேர்தலை நடத்த எவ்வாறு கிடைக்கிறது?. நாட்டு மக்களின் பணத்தை தங்களுக்கு நன்மையாகும் வகையில் தேர்தலுக்காக நினைத்த பிரகாரம் செலவிட முடியுமா? அதனால் அரசியல் அதிகாரம் மற்றும் தங்களின் நன்மைக்காக மாத்திரம் அரசாங்கம் செயற்பட்டு வருவது இன்று தெளிவாக தெரிகிறது.

எனவே தேர்தல் நடத்துவது நாடொன்றின் மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாத்து கொடுப்பதாகும். என்றாலும் அரசாங்கம் தற்போது அந்த உரிமை மற்றும் ஜனநாயகத்தை இல்லாமல் செய்யும் மக்கள் எதிர்ப்பு செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது எனறார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(13) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.

கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதியும் அதன் பின்னரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காகவே அஜித் ரோஹன இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவும் அங்கம் வகிக்கின்றார்.

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தெரியவந்த சந்தேகநபர் தொடர்பான அறிக்கையை, எதிர்வரும் வியாழக்கிழமை ஆணைக்குழுவில் வழங்குமாறு தெரிவித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதியும் அதனை அண்மித்த நாட்களிலும் தமது சொத்துகள், வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 70 பேரிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.