கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபாய் பணம் தொடர்பிலேயே   வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ் விசேட குற்றப் பிரிவிற்கு  கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயார் : நீதிமன்றுக்கு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி  சாலிய பீரிஸ் உச்ச நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்ற  தேர்தலுக்கு எதிரான மற்றும் ஆதரவான மனுக்கள் மீதான விசாரணைகள்  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனத் சில்வா மற்றும் எஸ்.  துரைராஜா  ஆகியோர் முன்னிலையில்  எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தை 2030 இனுள் 100,000 ஆக குறைக்க திட்டம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிடுகின்றது.

தற்போது 200783 ஆக காணப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 2024 இல் 135,000 ஆகக்குறைப்பதற்கு எண்ணியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2030 இல் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒருஇலட்சமாக குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தேவைகளிற்கு ஏற்ப எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு சவால்களிற்கு தீர்வை காண்பதற்காக சிறந்ததிறன் உள்ள இராணுவத்தை உருவாக்கும் நோக்கம் குறித்தும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்று காலை இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாகச் சென்று பல தரப்பினர்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளனர். குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டமானது தொடர்ந்து பேரணியாக சென்று யாழ் நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திலும், அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் மகஜர்களை கையெழுத்துள்ளனர்.

இலங்கைக்கு பங்களாதேஷ் 6 மாத கால அவகாசம்

இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை  வழங்கியுள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.

முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும்,வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார்.

வட்டுவையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது மாரடைப்புக்கு உள்ளான முன்னாள் முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவுகை வண்டி மூலம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்தவேளையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டதாக களுத்துறை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக” தூத்துக்குடி துறைமுக ஆணையகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்து்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கப்பல் நிறுவனத்தினர் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும். தற்போது 2 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனால் வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது மீண்டும் கொழும்பு, கொச்சி, சென்னை ஆகிய இடங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தற்போது பயணிகள் கப்பல் வந்து இருப்பது ஒரு ஆரம்பம்தான். தொடர்ந்து பல கப்பல்கள் தூத்துக்குடிக்கு வர வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணிக்கான சின்னம் , பொதுப்பெயர் சனிக்கிழமை அறிவிக்கப்படும்

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபமொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், ஆகியோருடன் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.

மேலும் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்ட சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இணக்கம் கண்டுள்ளதாக தெரியவருகிறது. ஆனாலும் கட்சிகளுக்கிடையே பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் ஆசன பங்கீடுகள் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா,  எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், வி.மணிவண்ணன், க.சர்வேஸ்வரன், குருசாமி சுரேந்திரன், விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர்கள், பிரதிநிதிகள் அடங்கிய 25 பேர் வரையானோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இன்றைய கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாதநிலையில் கட்சித்தலைவர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடி இறுதி முடிவை எட்டுவதுடன் சனிக்கிழமை கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த பொதுச்சின்னத்தில் போட்டியிடுவது, கூட்டணிக்கான பொதுப்பெயர், கூட்டணி ஒப்பந்தம் தொடர்பில் இதன்போது இறுதித்தீர்மானம் எட்டப்படவுள்ளது

யாழ்ப்பாணம் மண்டைதீவில் விரைவில் சர்வதேச விளையாட்டு மைதானம்

யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இன்றய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  இக் கலந்துரையாடலில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்துவைத்து சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மைதானத்திற்காக ஏற்கனவே 50 ஏக்கர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் 100 ஏக்கர் வரை தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜிம்னாஸ்ட்டிக் ஸ்ரேடியம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் மாவடங்கள் தோறும் விளையாட்டு மையங்களை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் யாழ்.மாவட்ட பிரதம திட்டமிடல் பணிப்பாளர் நிக்களஸ்பிள்ளை மற்றும் வடமாகாண விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு தடை விதிக்க பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராக கனடா தடைவிதித்துள்ள நிலையில், பிரிட்டனின் பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருவது குறித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் கரெத் தோமஸ் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் தடைவிதிப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்திவரும் பின்னணியில், கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே கரெத் தோமஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் தடைவிதித்திருக்கின்றது.

ஆனால் இங்குள்ள பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு உதவும் வகையில் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருகின்றார்கள்’ என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.