பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி அறிக்கை

உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020ஆம் ஆண்டில் பரவிய கொரோனா தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது கூட்டமைப்பின் இலட்சியம் இல்லை-செல்வம் எம்.பி

தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

-மன்னாரில் வைத்து நேற்று புதன்கிழமை(4) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த தேர்தலையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம்.அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலையும் நாங்கள் சந்திக்க வேண்டும்.எனினும் தேர்தல் முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த முறையானது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆளுகின்ற நிலை இல்லாத முறையாக இருக்கிறது.மக்களினுடைய எண்ணங்கள் புறக்கணிக்கப்படுகின்றது. அந்த வகையில் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது.ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் என்பது எமது நோக்கம்.
இந்த கால கட்டத்தில் இந்த தேர்தல் வருகிறது என்பதை பார்க்கின்ற போது அரசாங்கம் நடக்க இருக்கின்ற தேர்தலுக்கான நிதி யை உலக நாடுகளிடம் இருந்து பெற்று மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை மக்கள் செலுத்துகின்ற வாக்கின் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.

எனவே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.இந்த தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதும் எமது பிரதான கருத்து.

இத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை.தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும்.தேர்தலுக்கான அமைப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

ஒற்றுமையாக எமது இனப்பிரச்சினை,மக்களின் பிரச்சினைகள் போன்றவற்றை நாங்கள் தட்டிக்கேட்கும்,அதனை செயல் படுத்துகின்ற விடையங்களை கையாளுகின்ற ஒரு அமைப்பாக தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயல்பட வேண்டும்.

நாங்கள் முன் வைத்த கோரிக்கை மட்டக்களப்பில் இடம் பெற இருக்கும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன்.
ஒற்றுமையை வலியுறுத்துகின்ற வகையில் எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின் நாங்கள் என்ன செய்வது என்ற நிலைப்பாட்டை தெரிவித்துக் கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய முன்னாள் பிரதமர் போர்ட் சிற்றிக்கு விஜயம்

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பு போர்ட் சிட்டிக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு போட்டிசிட்டியின் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரெயாஸ் மிகுலர் ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் நிறுவன விவகாரங்களிற்கான இயக்குநர் விந்தியா வீரசேகர, போட் சிட்டி கொழும்பின் முகாமைத்துவ பணிப்பாளர் யாங் லு ஆகியோரை சந்தித்த டேவிட் கமரூன் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் திட்டத்தின் தனியார் கூட்டான்மை மற்றும் பங்களிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுக வீரக்கோனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

சோலர் பெனல்களுக்கான வரிகள் நீக்கம்

சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சோலர் பெனல்களுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரி இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எரிசக்தி மற்றும் மின்சார நெருக்கடிக்கு தீர்வாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐ. நா உதவிச் செயலாளர் நாயகம் – பிரதமர் இடையே கலந்துரையாடல்

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் , நீண்ட கால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கச் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன , ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜாவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் உதவி நிர்வாகியும், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (03) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினார். இதன் போது கன்னி விக்னராஜா சமூக அரசியல் அபிவிருத்திக்கான இலங்கையின் திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்தார். ‘இலங்கை சரியான திசையில் மீள்வதை நாங்கள் பாராட்டுகிறோம்,’ என்று தெரிவித்த அவர், தமது  தொடர்ச்சியான உதவியையும் உறுதிப்படுத்தினார்.

இதன் போது கன்னி விக்னராஜா அண்மையில் உதவிச் செயலாளர் நாயகமாக பதவி உயர்வுபெற்றமைக்காக பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பேண்தகு அபிவிருத்தி இலக்குகள், பசுமைப் பொருளாதாரம், சமூக ஒற்றுமை மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அவர் பிரதமரை சந்தித்தார்.

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான திட்டங்கள் குறித்து பிரதமர் அவருக்கு விளக்கியதுடன், நல்லிணக்கச் செயற்பாட்டின் முன்னேற்றம் பற்றியும் விளக்கினார். பெரும்பாலான கைதிகள் விடுவிக்கப்பட்டு, கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விவசாய மற்றும் கடற்றொழில் வாழ்வாதாரங்கள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, நாட்டின் முன்னுரிமைகள் பற்றிய சிறந்த விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதும் இலங்கைக்கு உதவுவதற்கான புதிய வழிகள் குறித்து ஆராய்வதும் குறிப்பாக சமூக பொருளாதார மீட்சிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்த பின்தொடரலில் கவனம் செலுத்துவதுமே தனது நோக்கம் என குறிப்பிட்டார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை – விஜயதாஸ

இனங்களுக்கிடையில் சிதைவடைந்திருக்கும் நல்லிணக்கத்தை மீள கட்டியெழுப்ப எடுக்கும் நடவடிக்கை மக்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக உளப்பூர்வமாகவே மேற்கொள்வதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்  என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நீதி அமைச்சில் நேற்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்காத மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் தாமதம் ஏற்படும் நாடு என எமது நாட்டுக்கு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலை இருக்கும்போது முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு அது தடையாக இருக்கின்றது. அதனால் இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள்வதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி உட்பட பல நிலைமைகள் காரணமாக நீதிமன்றங்களில் 11இலட்சம் வழக்குகள் குவிந்துள்ளதுடன் 26ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பது பாரிய நிலைமையாகும்.

மேலும் கடந்த காலங்களில் தலைதூக்கி இருந்த பொருளாதார பிரச்சினை காரணமாக அராஜக நிலையில் இருந்த நாட்டை பொறுபெடுப்பதற்கு யாரும் முன்வராத நிலைமையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஓரளவு ஆறுதலான சூழல் ஏற்பட்டு, நாடு ஸ்திர நிலைக்கு மீண்டு வந்துகொண்டிருக்கின்றது.

அத்துடன் நீதி கட்டமைப்பை புதுப்பிப்பதற்காக 22 புதிய சட்ட மறுசீரமைப்புகளுக்கு கடந்த 6மாதங்களுக்குள் அனுமதித்துக்கொண்டுள்ளோம். சட்டங்களை இயற்றுவதுபோல் அதனை செயற்படுத்துவதற்கும் குறித்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். நாட்டின் தற்போதைய நிலைமை தாெடர்பில் ஆராய்ந்து பார்த்து சட்ட கட்டமைப்பை மாற்றியமைப்பதற்காக ஊழல் எதிர்ப்பு சட்டத்தை விரைவாக அனுமதித்துக்கொள்ள இருக்கின்றோம்.

அத்துடன் இனங்களுக்கிடையில் சிதைவடைந்துள்ள நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பாரிய பொறுப்பு நீதி அமைச்சுக்கு சாட்டப்பட்டிருக்கின்றது. இன ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது மக்களை ஏமாற்றுவதற்கு அல்ல.  மாறாக உளப்பூர்வமாகவே மேற்கொள்வதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

காஞ்சனவின் கருத்து தவறானது: சம்பிக்க விளக்கம்

இலங்கை மின்சார சபை அடைந்துள்ள இலாபம் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ள கருத்தை நிராகரிப்பதாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

நீர்மின்னுற்பத்தி பாவனை அதிகரிக்கப்பட்டதால் கமந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை மின்சார சபை ஒப்பீட்டளவில் இலாபமடைந்துள்ளதாக மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர செவ்வாய்கிழமை (ஜன. 3) டுவிட்டர் வலைத்தளத்தளம் ஊடாக செய்தி வெளியிட்டிருந்தார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் இலங்கை மின்சார சபை கடந்த இரு மாதங்களில் இலாபம் பெறவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை இலங்கை மின்சார சபையின் நிதி நிலைமை தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிடும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்கட்டணத்தை அதிகரிக்காமல் இருந்திருந்தால் இலங்கை மின்சார சபை மாதாந்தம் 11 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மின்னுற்பத்திக்காக கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நீர்மின்னுற்பத்தியின் பயன்பாடு முறையே 635.5 மற்றும் 655 ஜிகாவாட் மணிநேரமாக காணப்பட்டது.ஆகவே இக்காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையின் செலவுகள் குறைவடைந்துள்ளன.

பொய்யான மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்களை குறிப்பிடுவதற்கு முன்னர் நிலைமையை அறிந்துக் கொண்டு கருத்துக்களை குறிப்பிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்கள் ஜனவரி 23 வரை ஏற்கப்படும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசி நாள் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தங்களின் நிறுவன தலைவர்கள் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மின் கட்டணத்தை அதிகரிக்க IMF நிபந்தனையே காரணம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கருத்துப்படி, சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திடம் இலங்கை பொருளாதாரத்திற்கு மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை கோரியுள்ளது.

இந்த சர்வதேச நிதியங்கள் விதித்துள்ள இந்த நிபந்தனைகளின் காரணமாகவே இன்று மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட வரியில்லா வர்த்தக வளாகத்தை நேற்று (03) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியம் நமது பொருளாதாரத்தை மறுசீரமைக்க ஒரு திட்டத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறது. மானியங்கள் சாத்தியமில்லை என்ற நிபந்தனைகளுக்கு நாம் அடிபணிய வேண்டும். அதற்கு நாங்கள் அடிபணியாவிட்டால் அல்லது அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தேவையான கடன் தொகை கிடைக்காது. சர்வதேச ஆதரவும் கிடைக்காது.

இன்று மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். அது தான் காரணம். இதை விரும்பி செய்யவில்லை.

ரணில் – ஐ.நா உதவிப் பொதுச்செயலாளர் இடையை சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவி நிர்வாக அதிகாரியும் ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பில் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.