தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐ.நா. அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூ குழுவினர் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணியின் தூதுக்குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்தனர்.

கூட்டணி பிரதி தலைவர் வெ. இராதாகிருஷ்ணன், எம்பி உதயகுமார் ஆகியோர் கூட்டணி தலைவர் மனோ கணேசனுடன் கலந்துகொண்டனர்.

ஐ.நா. சபையின் சார்பாக இலங்கையின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் அதிகாரிகள் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவுடன் கலந்துகொண்டனர்.

 

 

 

இந்திய வம்சாவளி மலையக தமிழரது அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், ஐ.நா. உலக உணவு திட்டம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகள், உணவின்மை மற்றும் வறுமை ஆகியவற்றால் பின்தங்கிய நலிவுற்ற மக்களாக கணக்கெடுத்து அடையாளப்படுத்தியுள்ள பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர பாமர மக்கள் தொடர்புகளிலும் ஐ.நா. அதிகாரிகளுக்கு விளக்கி கூறப்பட்டன.

இச்சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தொகுத்துள்ள, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம், பணிப்பாளர் பீட்டர் டியூவுக்கு, கூட்டணி தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, தென்னிலங்கையில், வாழும் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் தொடர்பில் ஆராய விரும்புகின்றோம் என கொழும்பில் உள்ள ஐ.நா. காரியாலயம் விடுத்துள்ள அழைப்பின் பேரில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது

யாழ். மாநகர மேயர் ஐ.நா. குழு இடையே சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த சந்திப்பின் போது, யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் நிறைவில், ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கு, நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர், பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம் – ஒருவர் கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா. தலைமையகத்திற்கு அருகாமையில் உள்ள பௌத்தலோக மாவத்தையில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, மாணவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெற் பயிர்களை அரச அதிகாரிகள் அழிக்க முற்பட்டமையால் கிளிநொச்சியில் அமைதியின்மை

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழான ஒதுக்கீட்டு பிரதேசங்களை ஆக்கிரமித்து பயிர்ச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வியாழக்கிழமை (17) குறித்த செய்கைகளை அழிப்பதற்காக பொலிஸாருடன் சென்ற வேளை நீர்ப்பாசன திணைக்களத்தினருக்கும் நெற் செய்கையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஒதுக்கீட்டு பிரதேசங்களில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நேற்றைய தினம் இவ்வாறு பயிர்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆனால் ஆரம்பத்தில் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளும்போது குறித்த அதிகாரிகளால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலை காணப்பட்டதுடன் குறித்த பிரதேசத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான அறிக்கைகள் எதுவும் மாவட்ட உயர்நிலை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அறிய முடிந்துள்ளது.

 

இது ஒருபுறமிருக்க கிளிநொச்சி கிழக்கு நீர்பாசன பொறியிலாளர் பிரிவின் கீழுள்ள கல்மடுக்குளததின் கீழ் அரச அதிகாரிகள் உள்ளடங்கிய சிலர் சட்ட விரோதமாக மேற்கொண்ட பயிர் செய்கைகளுக்கு குளத்து நீர் திறந்து வழங்கியது தெடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விவசாய ஆராய்ச்சிக்கு அமெரிக்காவிடம் உதவி கோரும் ஜனாதிபதி

இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற, அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் (Fulbright) ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உணவைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளம் இல்லாத தீவு நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்குத் தேவையான காணிகளை அடையாளங்கண்டு விவசாயத்தை நவீனமயப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நவீன விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் (TRI) இணைப்பதன் மூலம் இலங்கையின் விவசாய ஆராய்ச்சித் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிய பல அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதில் பேராசிரியர் பிரதீபா பண்டாரநாயக்க போன்ற ஃபுல்பிரைட் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பத்து வருடங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாபெரும் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும், ஃபுல்பிரைட் புலமைப்பரிசில்கள் மற்றும் உதவிகள் மூலம் இலங்கைக்கு வளவாளர்களை அழைத்துவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியம் – சீனப்பிரதிநிதி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனாவின் வெளிநாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லிங் கொங்ரியன் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற வகையில் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், மனித வளம் மற்றும் ஏனைய வசதிகள் காணப்படுகின்ற போதும், முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியம் தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷன்ஹோங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை  பாராளுமன்றத்தில் சந்தித்தபோதே சீன விசேட பிரதிநிதி லிங் கொங்ரியன் இதனைத் தெரிவித்தார்.

தேவையான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, முதலீட்டுக்கு நட்பான சூழல் உருவாக்கப்பட்டால் ஹம்பாந்தோட்டடை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஏனயை பொருளாதார வலயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு சீனா அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் நீண்டகால நட்பு நாடாக சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பாராட்டிய சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

அத்துடன், வெளிநாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லிங் கொங்ரியன் இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் விசேட கூட்டத்திலும் கலந்துகொண்டார். இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக விளங்குவதற்குத் தேவையான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொழில்துறை மற்றும் விவசாயத்துறையில் மேம்படுத்துவதற்குத் தேவையான திறமைமிக்க இளைஞர் சமுதாயம் போன்ற வளங்களை இலங்கை கொண்டிருப்பதாக பாராளுமன்ற நட்புறவு சங்கத்தில் உரையாற்றும்போது அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக இலங்கை சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர்  நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்

பசில் இலங்கை திரும்புகிறார்: பட்ஜெட் வாக்கெடுப்பில் 2/3 பெரும்பான்மை பெற திட்டம்!

வரவு செலவு திட்டத்திற்கு  2/3 பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து மீண்டும் இலங்கை திரும்புகிறார்.

அண்மைய அரசியல் நெருக்கடியின் போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பின்னர் சனிக்கிழமை இலங்கை திரும்பவுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டத்திற்கான 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ராஜபக்ச, சனிக்கிழமை இலங்கைக்கு வருவார் என்றும், நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தது போல் பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கத் தொடங்குவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும், உடனடியாக டிசம்பரில் நடைபெறவுள்ள வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பிப்பின் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னெடுப்புக்களை உடனடியாக ஆரம்பிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குப் பிறகு புதிய தேர்தலுக்குச் செல்வது என்ற முடிவு எடுக்கப்படும் வரை அரசாங்கம் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து செயல்படும் வகையில் வரவு செலவு திட்டத்திற்கு 2/3 பெரும்பான்மையைப் பெறுவதே முன்னாள் நிதியமைச்சரினதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.

பசில் பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பார் எனவும் மற்றும் அடித்தள மட்டத்தில் கட்சியின் பிரபலத்தை மீண்டும் பெறுவதற்காக தரை மட்ட பிரச்சாரத்தை தொடங்குவார். பசில் நாடு திரும்பியவுடன் கட்சியில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது என டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய நலன்களுக்கேற்ப இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மாற்றப்பட்டுள்ளது – சரத் வீரசேகர

இந்தியாவின் அழுத்தத்தினால் வடக்கு மாகாணத்தில் சீனாவிற்கு அபிவிருத்தி செயற்திட்டங்கள் மறுக்கப்பட்டன. இந்தியாவின் பாதுகாப்பு நிமித்தம் எடுக்கப்பட்ட ஒருசில தீர்மானங்கள் இலங்கையின் வெளிவிவகார கொள்கையின் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது, ஆகவே வெளிவிவகார கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எமது நாட்டின் வெளிவிவகார கொள்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் சுயாதீனத்தன்மையை பாதிக்காத வகையில் வெளிவிவகார கொள்கை நடுநிலையான தன்மையில் பேணப்பட வேண்டும்.விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் இன்றும் உலக நாடுகளில் வாழ்கிறார்கள்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கும்,ஜப்பான் நாட்டுக்கும் வழங்க முயற்சி எடுக்கப்பட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் வழங்கும் முயற்சி தோல்வியடைந்ததன் பின்னரே அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டது, ஆகவே இலங்கையின் வெளிவிவகார கொள்கை நடுநிலையானது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது.

இந்தியாவின் பாதுகாப்பு காரணிகள் நிமித்தம் எடுக்கப்பட்ட ஒருசில தீர்மானங்கள் இலங்கையின் வெளிவிவாகர கொள்கையை கேள்விக்குள்ளாக்கியது.

வடக்கு மாகாணத்தில் சீனாவிற்கு ஏதேனும் செயற்திட்டம் வழங்கும் போது அதற்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கும் போது அந்த செயற்திட்டத்தை அரசாங்கம் நீக்கிக் கொள்கிறது. இது முழு வெளிவிவகார கொள்கைக்கும் எதிரானதாக அமையும்.

அதேபோல் சீனாவின் தொழினுட்ப தகவல் கப்பல் இலங்கைக்கு வருகை தரும் போது இந்தியா கடும் அழுத்தத்தை பிரயோகித்தது.

எமது வெளிவிவகார கொள்கை பொருளாதாரத்தில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது. இந்தியாவின் அன்றைய கொள்கைக்கும், இன்றைய கொள்கைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் பிராந்தியங்களை ஆட்சி செய்தவர்களின் கொள்கைக்கு அமைய இந்தியாவுடனான இலங்கையின் வெளிவிவகார கொள்கை காணப்பட்டது என்றார்.

தமிழர்களின் காணிகளை அரசாங்கம் அபகரிக்கவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி – சித்தார்த்தன் எம்.பி

வரவு செலவு திட்டத்தில் கூடுதல் நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்படுவதன் காரணம் தமிழர் பகுதிகளில் உள்ள காணிகளை கையகப்படுத்தவே என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதார நெருக்கடி நிலையில் நாடு வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளது. இந்த நிலையிலும் கூட இந்த வரவு செலவு திட்டத்திலே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து விட்டது இந்தநிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுக்கின்றது. எம்மை பொறுத்தவரை இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதற்கான காரணம் எங்கள் பகுதிகளிலே உள்ள காணிகளை அபகரிப்பதற்கு, காணிகளை கையகப்படுத்தி அவற்றை வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு என அந்த நிதிகள் பயன்படுத்தப்படுகின்றது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

”யுத்த காலங்களில் நீங்கள் யுத்தம் புரிவதற்காக நீங்கள் வாங்கிய ஆயுதங்கள், தளவாடங்கள் சம்மந்தமாக செலவுகளை பார்க்கலாம். அவைகள் கூட இன்று இல்லாத நேரத்தில் கூட இந்த நிதிகள் எதற்காக? ஒதுக்கப்படுகின்றது. இன்றும் இந்த நாடு யுத்த மனப்பான்மையில் தான் இருக்கின்றதா? இதனை நாங்கள் மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இந்த பாதுகாப்புக்கு அமைச்சுக்கு ஒதுக்கபப்டுகின்ற நிதி நிச்சயமாக குறைத்துக்கொள்ள வேண்டும்.அரைவாசியாக கூட வெட்டிக்கொள்ள முடியும். அதேபோல் இன்றைய நாளாந்த வருமானத்தினை எதிர்பார்த்து வாழுகின்ற மக்கள் அந்த குடும்பங்கள் பட்டினியாக இருக்கின்ற நிலைமையை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

அவர்களுக்கான நிவாரணங்களை சரியான முறையில் கொடுக்கப்பட வேண்டும். அது சரியாக கவனிக்க வேண்டும். இந்த முறை அதுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை. இதெல்லாம் இன்று இருக்கக்கூடிய பொருளாதார நிலையிலே மக்களுடைய வறுமையை போக்குவதற்கு முயற்சி எடுப்பது மிக முக்கியமான இருந்தாலும் அவர்கள் அதை செய்வதற்கு கால தாமதம் அல்லது செய்யாது விடுகின்ற நிலைமையை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டினை பொறுத்த மட்டில் பேராதனை பல்கலைக்கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு ஏறக்குறைய 40 வீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் மிக பாதிப்பான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த முடிவற்ற பொருளாதார நெருக்கடியால் வறுமை நிலைக்கு கீழ் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது . அதேவேளையில் உலக வங்கியின் 2020இ2021 அறிக்கையில் வறுமை நிலையில் ஏறக்குறைய 13.1 வீதமான மக்கள் இந்த நாட்டில் வறுமை நிலையில் இருந்திருக்கிறார்கள். ஆனால் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அது 25.6 ஆக உயர்ந்து நிற்கிறது. இவ்வாறு படிப்படியாக மக்கள் வறுமை நிலைக்கு சென்றிருக்கிறார்கள் அவர்களை மீடடெடுப்பதற்கான முக்கியமாக வரவு செலவுத்திட்டத்தினை பொறுத்த மட்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆனால் இவைகள் செயற்படுத்தப்பட வேண்டும். இதற்கு நிதி எங்கிருந்து வரும்? ஏனென்றால் இந்த நாட்டின் மொத்த கடன் 51 பில்லியனுக்கு கூடுதலாகும். இதில் இறையாண்மை வரி 35 பில்லியன் இருக்கிறது. ஆனால் இந்த வரவு செலவுத்திட்டம் முழுமையாக ஐ.எம்.எவ் ஊடாக வரக்கூடிய அந்த நிதியினை எதிர்பார்த்து போடப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே பார்க்கபப்டுகின்றது. எதிர்பார்க்கின்ற நிதியை 2.9 பில்லியன். இதை பார்க்கின்ற போது எவ்வாறு சாத்தியமாகப்போகிறது நாட்டினை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்ற பல கேள்விகள் இருக்கின்றது. ஒரு விடயத்தினை மறந்து விட கூடாது ஜனாதிபதி அவர்கள் மீண்டும் மீண்டும் பல தடவைகள் சொல்லியிருக்கிறார் கடந்த காலங்களிலே மக்களுக்கு பிரபல்யமான தீர்மானங்களை எடுத்தார்கள்.

சில கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் விட்டதால் தான் இந்த நாடு இப்படி போய் இருக்கின்றது. ஜனாதிபதி கூறிய கூற்று 100 வீதம் சரிஇ அவர் ஒரு இடத்தில் ஒரு உதாரணம் கூறுகின்றார் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் அவர்கள் கூறியிருக்கிறார் நான் கடுமையான தீர்மானங்களை எடுத்தேன். பண்டார நாயக்க அவர்கள் பிரபல்யமான திருப்திப்படுத்துகின்ற தீர்மானகளை எடுத்தார். அதனால் தான் இலங்கை பின்னடைவுக்கு போய் இருக்கின்றது என்று கூறியிருக்கிறார். இவர் கூறிய விடயம் நிச்சயிக்க இனப்பிரச்சனைக்குரிய விடயம் தான். ஏனெனில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் இந்த 56 சிங்களம் மாத்திர சட்டம் அதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது

தான் இந்த இனப்பிரச்சினை என்பது. அதன் சரித்திரத்துக்கு போக வேண்டாம் அதனால் ஏற்படட் அழிவுகள் தான் பெரிது. அதனால் தான் படிப்படியாக ஒரு யுத்தம் உருவாகி யுத்தத்திற்க்காக அரசாங்கம் கோடிக்கணக்கான மில்லியன் பணத்தினை செலவழித்து இந்த யுத்தத்தினை நடாத்தி அதற்காக கடனை பெற்று அந்த கடனை அடைக்க மீண்டும் கடனைப் பெற்று இந்த நாடும் அழிந்து பின்னடைவுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்தது.

இதனை கூறிய ஜனாதிபதி ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும். அவரும் பிரசித்தமான அல்லது மக்களுக்கு பிரபல்யமான தீர்வை எடுக்க கூடாது .இன்று இருக்கின்ற நிலையில் நியாயமான அரசியல் தீர்வை தான் முழுமையான ஒரு பிரச்சினைக்கு யாருமே தீர்வாக சொல்லுவார்கள். ஏனென்றால் ஒரு இனப்பிரச்சினை இருக்கும் வரை நல்லிணக்கத்தை அடைய முடியாது.” என்றார்.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்படக்கூடாது – சர்வதேச மன்னிப்புச் சபை

பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் 90நாட்கள் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்தியத்திற்கான ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரன வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரின் தடுத்து வைக்கும் உத்தரவு மேலும் நீடிக்கப்படக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.