ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – மனோகணேசன்

ராஜபக்ஷர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம். கோட்டாபய ராஜபக்ஷ போனாலும், அவரது பாவத்தின் நிழல் போகவில்லை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16 ஆம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இந்த அரசு நடக்கிறது. அந்த பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி, தென்கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

நேற்று முதல் நாள் அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி நண்பர்கள் என்னுடன் பேசிய போது தெளிவாக ஒன்றை சொன்னேன். ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம் என்று சொன்னேன். நாம் இன்று இருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற இடத்தில் நாம் செளக்கியமாகவே இருக்கிறோம் எனவும் சொன்னேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி நினைத்து இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய அடுத்த நாளே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், அதை நாம் செய்யவில்லை. ஏனென்றால் பேரினவாதம், ஊழல் ஆகிய இரண்டு பேரழிவுகளுக்கும் ஏகபோக உரிமையாளர்களான ராஜபக்ஷர்களுடன் கலப்பு கல்யாணம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் இல்லை. எங்கள் இந்த கொள்கை நிலைப்பாடு காரணமாகத்தான் நாம் இன்று ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.

இன்று இந்த ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசில் அங்கம் வகிப்பவர்கள், தாம் ஏதோ வெட்டி முறித்து விட்டதாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. நாம் அங்கே கொள்கை நிலைப்பாடு காரணமாக இல்லை. ஆகவேதான் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அதுதான் உண்மை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இன்றுவரை இந்த அரசு தொடர்கிறது. அந்த பாவத்தின் நிழலில் அங்கமான உங்களுக்கு பாவத்தின் சம்பளம் அடுத்த தேர்தலில் கிடைக்கும்.

16ம் திகதி நவம்பர் 2019 முதல் இன்றுவரை, நான்கு வருடங்கள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசாங்கத்தின் பதவிகளில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம், நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுகிறேன். அபிவிருத்தி செய்ய நிதி இல்லை என்பீர்கள். சரி, அபிவிருத்தியை விடுங்கள். அரச நிர்வாகரீதியாக தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக, அரசாங்க எம்பிகளாக இதுவரை என்ன செய்து கிழித்துள்ளீர்கள் என பகிரங்கமாக சொல்லுங்கள்? வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன்.

எனவேதான், இந்த புதிய, பழைய பாவங்களின் கூட்டணியில் நாம் இல்லை. நாங்கள் சோரமும் போகவில்லை. பாவமும் செய்யவில்லை. ஆகவே இந்த பாவத்தின் சம்பளம் எமக்கு கிடையாது. எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முற்போக்கு அரசியல் இயக்கம், அடுத்து வரும் புதிய அரசாங்கத்தில், புதிய பலத்துடன், நேர்மையாக அங்கம் வகிக்கும் என்றார்.

எதிர்காலத்தில் சஜித் கோட்டாபய போன்று செயற்படக் கூடும் – சரத்பொன்சேகா

முன்னாள் இராணுவதளபதி ஜெனரல் தயாரத்நாயக்காவின் ஆலோசனைகளை பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதை கடுமையா விமர்சித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா எதிர்காலத்தில் சஜித்பிரேமதாச கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவையும் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் நான் கைதுசெய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாகஇருந்தவர்களில் ஒருவர் தயா ரத்நாயக்க என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தயாரத்நாயக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய விசுவாசி அவரின் நம்பிக்கைக்குரியவர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படலாம் எனவும் விமர்சித்துள்ளார்.

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் – வைகோ

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் தெற்கிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசாங்கம் உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்

இந்த நாள் சோகமயமான நாள். 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள். தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்.

எங்கள் மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். எதையாவது உளறிக்கொண்டிருப்பதே அவருக்கு வழக்கம். அண்மையில் சொன்னார். இந்திய சுதந்திரம் காந்தியாரால் கிடைக்கவில்லை. நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களால்தான் இந்திய சுதந்திரம் கிடைத்தது என்று ஆர்.என்.ரவி கூறினார்.

நான் நேதாஜியை மிகவும் நேசிப்பவன். கல்கத்தாவிற்கு இரண்டு முறை சென்று நேதாஜி கடைசியாக வாழ்ந்த அந்த வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நேதாஜியின் பெருமைகளைப் பேசியிருக்கிறேன். நேதாஜி சிங்கப்பூர் மைதானத்திலிருந்து

“ஓ! தேசப் பிதாவே! காந்தியடிகள் அவர்களே இந்தியாவிற்கு விடுதலை கிடைப்பதற்கு இங்கே நானும் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றிபெற வேண்டும் என்று ஆசி கூறுங்கள்” என்று வானொலியில் பேசிய நேதாஜி மகாத்மா காந்தி அவர்களை தேசப் பிதா என்று முதன் முதலில் அழைத்தவர்.

ஆளுநரே அப்படி பேசவில்லை என்று மறுத்துவிட்டாரே என்றார் பிரகலாத் ஜோசி.

வைகோ: அனைத்துப் பத்திரிகைகளிலும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நான் கூறியது செய்தியாக வந்திருக்கிறது. அமைச்சர் பத்திரிகைகள் படிப்பதில்லை போலும்.

இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே மொழி; ஒரே மதம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்கின்றன. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிடும்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நாள்தோறும் தாக்கப்படுகின்றனர். அவர்களைப் படகுகளோடு கைது செய்து இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது. அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்பொழுது மற்றொரு ஆபத்து நம்மைச் சுற்றி வளைத்துள்ளது. செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தையும் அமைத்துவிட்டது. நமக்கு சீனாவிடமிருந்து ஆபத்து முதலில் தெற்கே இருந்துதான் வரும். ஒன்றிய அரசு இந்த ஆபத்தை உணர வேண்டும்.

இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதை நினைத்து இலங்கைப் பிரச்சினையை ஒன்றிய அரசு கையாள வேண்டும்.

லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்பு

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Posted in Uncategorized

சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கல்லீரல் செயலிழப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை என்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா். இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன.24-ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட அவா், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார் ஜெனரல் தயா ரத்நாயக்க

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்துள்ளார்.

இன்று எதிர்க்கட்சி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்திக்குக்கு தனது ஆதரவை வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது, எதிர்க்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொது கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக தயா ரத்நாயக்கவை நியமித்தார்.

தயா ரத்நாயக்க இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

நாட்டினை வங்குரோத்து செய்தோரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க

இலங்கையில் பலம் மிக்க அரசியல் மாற்றம் ஒன்று உருவாக அனைத்து விடயங்களும் தயார் நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பலம் பொருந்திய அரசியல் மாற்றம் ஒன்று உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.

நாட்டினை வங்குரோத்து செய்தோரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.

தரத்துடன் கூடிய பாரியளவிலான பல கோணங்களுடன் ஒரு அரசியல் கூட்டணி நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து சிறந்த ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க உள்ளோம்.

அதே போன்று சிறந்த தேர்ச்சியான வேட்பாளர் குழுவினை பொதுத் தேர்தலிலும் களமிறக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீன்பிடிப் படகு சீஷெல்ஸ் கடற்படையால் மீட்பு

இலங்கை மீன்பிடிப் படகான லோரன்சோ புத்தா சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை சீஷெல்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி தனது கன்னிப் பயணத்தில் இணைந்த இந்த மீன்பிடிப் படகு கடந்த சனிக்கிழமை 6 மீனவர்களுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது.

குறித்த படகிலிருந்த 6 மீனவர்களும் சீஷெல்ஸ் கடலோர காவல் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பயங்கரவாதிகளான ராஜபக்சக்களிடமிருந்து நாட்டை விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் – சஜித்

நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். தேசப்பற்றின் பெயரால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ் குடும்பம் மக்களை கொள்ளையடித்து தன்னிச்சையாக நடந்து கொண்டதே இதற்கு காரணம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும்,ராஜபக்ஷ்ர்கள் மற்றுமொரு பொருளாதார பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நட்பு வட்டார செல்வந்தர்களை பாதுகாக்கும், கூட்டாளிகளுக்கு சலுகைகளை வழங்கும் ராஜபக்ஷ் பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்து மக்களை இந்த நெருக்கடியில் இருந்து மீட்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹேவாஹெட்ட நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஜன பௌர(மக்கள் அரண்) மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாற்றுத் தரப்பினர் எனக் கூறிக்கொள்ளும் குழு திருடர்களைப் பிடிக்க அதிகாரத்தைக் கேட்கின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் இல்லாமலயே திருடர்களைப் பிடித்தது.

நாட்டிற்கு மாற்று அணி என்று கூறும் சில குழுக்கள் ஆவணப் கோப்புகளைக் காட்டி திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும், நீதித்துறையின் ஊடாக நாட்டை வங்குரோத்தடையச் செய்த திருடர்கள் யார் என்பதை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொணர்ந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார்.

இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து,விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி,குற்றம் சாட்டப்பட்டவர்களது குடியியல் உரிமைகளை இல்லாதொழிக்காதது ஏன் என ஜனாதிபதியிடம் வினவிய போது அவர் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியா மூலம் தற்போதைய ஜனாதிபதியை நியமித்தமையே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியாவைச் சேர்ந்த 134 பேர் தமது கைகளை உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளமையினாலயே நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களை பாதுகாத்து வருகிறார்.

இது தொடர்பில் வினவிய போது மொட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பல தடைகளை ஏற்படுத்தினார்கள்.இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று ஒரு கைப்பாவை ஜனாதிபதியே ஆட்சியில் இருக்கிறார்.இந்த கைப்பாவையின் அதிகாரங்கள் ராஜபக்ஷ்ர்களின் கைகளிலயே உள்ளன.

இந்த திருடர்களுடன் ஜனாதிபதிக்கு டீல் இருந்த போதிலும்,இவ்வாறான டீல் தன்னிடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் திருடர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

நாட்டை வங்குரோத்தாக்கிய திருடர்களும், திருடர்களை பாதுகாக்கும் ஜனாதிபதியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவர். இவர்களுக்கு உரிய பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கையின் ‘சுதந்திர தினம்’ வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம்

பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கறுப்பு தினம்’ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி 4 ஆம் திகதி கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன அறிவித்துள்ளன.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கு.துவாகரன் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களுக்கான உரிமைகள் மீறப்படுகின்றன. இருப்பு கேள்விக்குரியாகியுள்ளது. அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் மாறுகின்றார்கள். எனினும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது இன்றுவரை முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அது வெறும் பேசுப்பொருளாக மாத்திரமே இருக்கின்றது. பெப்ரவரி ஆகவே வடக்கு, கிழக்கு தழுவிய கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என மாணவர் ஒன்றிய தலைவர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.

“அரசாங்கம் பல்வேறு புதிய சட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள், நிலங்களை கைப்பற்றி விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளாகள் என இவை தொடர்கின்றன. ஆகவே தமிழர்களின் தீர்வு எட்டப்படும் வரை போராடியே ஆகவேண்டும் என்பதே வரலாற்று உண்மை.”

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, காணாமல் போனோர் அலுவலகம் (OMP) மற்றும் அரசாங்கத்தின் புதிய உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழு (TURC) என்பன தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே எனத் தெரிவித்துள்ளார்.

“14 வருடங்களாக நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுகத்துக்கொண்டிருக்கின்றோம். எத்தனை ஜனாதிபதி மாறி மாறி வந்தாலும். எனினும் எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை யாரும் கூறவில்லை. 220ற்கும் மேற்பட்ட தாய்மாரை நாம் இழந்துள்ளோம். இவ்வாறான ஒரு சூழலிலேயே நாம் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றோம். ஓஎம்பி, டிஆர்சி என அனைத்தும் பொய்களே. எம்மை ஏமாற்றுவதற்காகவே இவைகள். பிள்ளைகளுக்கு , பாடசாலை மாணவர்களுக்கு என எவருக்கும் சுதந்திரம் இல்லை. எமது உரிமைக்காக போராடுவதற்கு எமக்கு சுதந்திரம் இல்லை. ஆகவேதான் நாங்கள் பெப்ரவரி 4ஐ கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்.”

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சஹராஜன் சுகந்தி, திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கே.செபாஸ்டியன் தேவி ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெப்ரவரி 4ஆம் திகதி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.