மதுரை – யாழ்ப்பாணம் இடையே விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்

மதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த உதவுமாறு இந்திய பிரதமரிடம் கோரிக்கை

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இந்தியாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில கட்சிகளும் சிவில் அமைப்புகளும் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடிதம் எழுதி உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன.

35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் தனித்துவம் கொண்ட தேசிய இனமாக தமது தேசத்தில் சுயநிர்ணய உரிமையோடு வாழ்வதற்கான போராட்டத்தினை சர்வதேசமும் வியக்கும் அளவில் முன்னெடுக்கப்பட்டது.

ஒற்றை ஆட்சியின் கீழ் சுதந்திரமாக வாழ முடியாது. எமக்கான சுயாட்சி இருக்க வேண்டும் எனும் திடமான அரசியல் சிந்தனையோடு கட்டமைக்கப்பட்ட வடிவிலே போரியல் ஒழுக்கத்துடன் விடுதலை செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் யுத்த குற்றங்களுக்கு எதிராகவும், உறவுகள் காணாமலாக்கப்பட்டமை, காணிகள் அபகரிக்கப்பட்டமை, அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் இருக்கின்றமை என்பவற்றிற்கு நியாயமான நீதியினை பெற்றுத் தருமாறு வடக்கு கிழக்கு மக்கள் இன்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு தமிழக முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம்

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதமொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை சந்திக்க உள்ள நிலையில் குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்

அத்துடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழ தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசாங்கமும், திமுகவும் உறுதியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான தீர்வை எட்டுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன் நிறைவேறியது.

அதற்கமைய ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாங்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

பொது மன்னிப்பில் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்டனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது. சண்முகரட்ணம் சண்முகராஜன், செல்லையா நவரட்ணம் ஆகியோரே நேற்று மாலை சிறைகளிலிருந்து இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டில் செல்லையா நவரட்ணத்துக்கு 200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று வெடிப்பொருள்களுடன் கைதான சண்முகரட்ணம் சண்முகராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

13 ஐ முழுமையாகத் தர முடியாது; தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

13ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தின் அனுமதியின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது. அத்துடன், சில விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கட்சிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு நாளை வியாழக்கிழமை உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தப் பயணத்துக்கு முன்னதாக தமிழ்த் தேசிய கட்சிகளை பேச்சுக்கு அழைத்தார். நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டட வளாகத்தில் இந்தப் பேச்சு நடந்தது. பேச்சின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் கொண்டு வந்த சில தயார்படுத்தல்களான மனித உரிமைகள் விவகாரம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான விடயங்களை விவரித்தார்.

சம்பந்தனின் எதிர்ப்பை தொடர்ந்து அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயத் துக்கு கலந்துரையாடல் மாறியது. இந்தப் பேச்சின்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்துக் கட்சிகளின் தலை வர்களின் ஆதரவும் தேவை என்று ஜனா திபதி கூறினார். அத்துடன், பொலிஸ் அதிகாரம் இல்லாத 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடி யும். அத்துடன், சில விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள் ளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும் – இந்த விடயங்கள் தொடர்பில் சட்டரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தரப்பு தெரிவித்தது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்னைகளை தீர்க்கவே நான் விரும்புகிறேன். அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது எனது நோக்கமல்ல. வடக்கு, கிழக்கு மக்களுக்கு நான் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை. அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும்- என்றும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதனிடையே, 13ஆம் திருத்தம் குறித்த ஜனாதிபதியின் இந்த முடிவை தாம் ஏற்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பில் இரா. சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன், சி. வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சி. சிறீதரன், த. சித்தார்த்தன், சாணக்கியன் இராச மாணிக்கம், தவராசா கலையரசன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோருடன் சிறீ லங்கா சுதந்திர கட்சியின் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி தரப்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, விஜயதாஸ ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், ச. வியாழேந்திரன், சி. சந்திரகாந்தன் மற்றும் கே. திலீபன் எம். பி. ஆகியோர் பங்கேற்றனர்.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகமெனின் கிழக்கு மக்களையும் முழுமையாக இணைத்து பயணிக்க வேண்டும் – யாழ்.பல்கலை சட்ட பீட தலைவர்

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகமெனின் கிழக்கு மக்களையும் முழுமையாக இணைத்து பயணிக்க வேண்டும்- என யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டப்பீடத்தின் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற 13 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது தான் மாகாண சபை முறைமை . மாகாண சபையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியதன் தேவை தெற்கில் எழுந்துள்ள நிலையில் தேர்தல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுகின்றன.

தமிழ் தரப்பிலிருந்து பல்வேறு வகையான தீர்வுகளை முன்வைத்து தோற்றதன் பின்னரே இந்தியாவின் அழுத்தத்தால் மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது.

1972 மற்றும் 1978 ம் ஆண்டு அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது தமிழர்கள் சமஷ்டியை முன்வைத்த போதும் இரு யாப்புகளிலும் ஒற்றையாட்சி என தெளிவாக முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் சமஷ்டி என்பதை உள்ளடக்கி இலங்கையில் அரசியலமைப்பு உருவாக வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழர்களை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக கட்டியெழுப்புவதற்கு எமக்கு முன்னால் உள்ள தீர்வு மாகாண சபையாக காணப்படுகின்றது.

மாகாணசபை உருவாக்கப்பட்ட போது இது ஒற்றையாட்சிக்கு எதிரானதென உயர் நீதிமன்றத்திலே வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டபோது மாகாண சபை துணைநிலை அமைப்புக்கள் தான் என நீதிமன்றம் தெளிவாக தீ்ர்ப்பளித்தது.

இதனிடையே விவசாயம் , கல்வி போன்றவற்றிற்காக மாகாண சபை மூலம் சட்டமாக்கல் இயலுமை உள்ளது.

நியதிச் சட்டங்களை உருவாக்க முடியுமாக இருப்பினும் ஆளுநர்களின் ஒப்புதல்களின்றி பல இடங்களில் சட்டமாக்க முடியாத நிலையுள்ளது.

மாகாண சபை நிலைமைகைள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமாக்க முடிந்தாலும் மாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னரே சட்டமாக்க முடியும்.

நியதிச் சட்டங்களை ஆளுநர் மறுக்கும் தருணம் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் 13 ம் திருத்தச்சட்டத்திலுள்ளது.
முழுமையான காணி , பொலிஸ் அதிகாரம் மாகாணசபைக்கு காணப்படாவிட்டாலும் குறிப்பிட்ட அளவு மாகாண பொஸிசை அமைக்கும் அளவிற்கு அதிகாரமுள்ளது.

மாகாணங்களிலுள்ள சிறிய குழப்பங்களை சீர்ப்படுத்தும் அதிகாரம் மாகாணப் பொலிஸிற்குள்ளது.

மாகாண சபையின் தேவைப்பாட்டுக்கு மாகாண சபைக்குள்ள அரச காணி உள்ள போது அதை பயன்படுத்த முடியுமான இயலுமையுள்ளது.

நாங்கள் பல விதத்தில் பலராலும் பாரபட்சப்படுத்தப்பட்ட சமூகம். ஒரு சுயாட்சிக்கான தனியாட்சிக்கான அதிகாரம் கொண்டவர்களாக எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும்.

மாகாண சபைச் சட்டத்தை முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் நிர்வாகத் திறனை அதிகரிக்க முடியும். இதனை பயன்படுத்தி எமது பிரச்சினைக்குரிய அதியுச்ச தீர்வை நோக்கி பயணிக்க முடியும்.

எமக்கான தீர்வை எவ்வாறு அடையப் போகின்றோம் , சிங்கள மக்களுக்கு எவ்வாறு இதை தெளிவுபடுத்தப் போகின்றோம் என்பதை வகுக்க வேண்டும்.

வடக்கும்,கிழக்கும் சட்டரீதியாக இணைக்கும் வாய்ப்பு காணப்படுகையில் வடக்கு கிழக்கு மக்கள் விரும்புதல் வேண்டும்.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகமெனின் கிழக்கு மக்களையும் முழுமையாக இணைத்து பயணிக்க வேண்டும்.

தற்போதுள்ள முறைகளை சரியாக பயன்படுத்தாவிடின் எதிர்வருங் காலங்களி் மேலதிக அதிகாரங்கள் கைகளுக்கு வழங்காத நிலை ஏற்படும்.

எனவே 13 ம் திருத்தச்சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி எதிர்காலத் தீர்வுத் திட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ் பொது சன நூலகத்துக்கு விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

களனி பாலத்தில் ஆணிகள் பொருத்தப்பட்டனவா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் – தயாசிறி

களனி பாலத்தில் 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை அமைச்சர் பந்துல குணவர்த்தன சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” 2021, நவம்பர் 27 ஆம் திகதியன்று புதிய களனி பாலம் திறக்கப்பட்டது. இன்றுடன் இது திறக்கப்பட்டு 599 நாட்கள் ஆகின்றன.

ஆனால், இங்கிருந்து 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டுள்ளதாக இம்மாதம் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது, 8 இலட்சத்து 75 ஆயிரத்து 866 டொலர் பெறுமதியான ஆணிகள்தான் இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் என்றால், 77 இலட்சத்து 92 ஆயிரத்து 402 கிலோ இருப்புகள் இங்கு களவாடப்பட்டுள்ளமை தெரியவருகிறது.

ஒரு ஆணியின் நிறையானது 5 கிலோ என எடுத்துக் கொண்டால், 15 இலட்சத்து 58 ஆயிரத்து 480 ஆணிகள், 599 நாட்களில் இங்கிருந்து கழற்றப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 100 ஆணிகள் வீதம் திருடப்பட்டிருந்தால், 21 வருடங்களேனும் தேவை இவ்வளவு ஆணைகளை கழற்றுவதற்கு.

ஆனால், 599 நாட்களில் இவ்வளவு ஆணிகள் கழற்றப்பட்டிருக்குமானால், ஒரு நாளைக்கு 1300 ஆணிகளை கழற்றியிருக்க வேண்டும்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கழற்றினால்கூட, 10 ஆணிகளைத்தான் இங்கிருந்து கழற்ற முடியும்.
எனவே, இந்த விடயத்தின் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

உண்மையில் இங்கு ஆணிகள் கழற்றப்பட்டுள்ளனவா? அல்லது ஆணிகள் பொறுத்தப்படவில்லையா என்பதை அமைச்சர் சபைக்கு கூற வேண்டும். ”என்றார்.

தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உண்மை, நல்லிணக்கம் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளின் அமைதி நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகாரப்பகிர்வு, காணி விவகாரம் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகள் மற்றும் புதைகுழிகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.