தென்னிந்திய நகை வியாபாரிகள் 92 பேர் கொண்ட குழு இலங்கை வருகை

தென்னிந்திய நகை வியாபாரிகள் சங்க உறுப்பினர்களும் வட  இந்திய முதலீட்டாளர்களும் இன்று (17) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

92 பேர் கொண்ட குழுவினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்த குழுவினரை அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

இலங்கையில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவினர் கலந்துரையாடவுள்ளதுடன், அரசியல் பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்குத் தயாரா? என பவ்ரல் ஜனாதிபதியிடம் கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குப் பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்குத் தயாரா என அரசாங்கத்திடம் பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

சட்டரீதியான காரணங்களை முன்வைக்காமல், உள்ளூராட்சித் தேர்தலைக் காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தருணத்தில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க முற்போக்கான தேர்தல் சீர்திருத்தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய எல்லை நிர்ணய நடவடிக்கையின் மூலம் தொகுதிகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்த பின்னர் புதிய தேர்தல் முறை எப்படி இருக்கும் என்றும் ரோகண ஹெட்டியாராச்சி பிரதமரிடம் வினவியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 வீதமாகக் குறைக்கும்போது இளைஞர், பெண் ஒதுக்கீட்டுக்குத் தலா 25 வீதம் ஒதுக்கப்படுமா என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து ஸ்ரீ ரங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சதிஸ்குமார் சிறையில் இருந்து விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சதிஸ்குமார் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

சதிஸ்குமாரின் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கடிதம் இன்றைய தினமே(வெள்ளிக்கிழமை) மெகசின் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே அவர் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் என்ற விவேகானந்தனூர் சதீஸ், கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவருக்கு, பெப்ரவரி – 01 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய சதீஸ்குமார், ஏற்கனவே உச்ச நீதிமன்றில் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனுவினை மீளப் பெற்றுக்கொள்வதற்கான தனது ஒப்புறுதியினை பெப்ரவரி-23 அன்று சட்டத்தரணிக்கூடாக மன்றுக்கு சமர்ப்பித்திருந்தார்.

அதனையடுத்து, மனுதாரரின் மேல் முறையீட்டு மனுவினை மீளளித்த உச்ச நீதிமன்றம், குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது.

எனினும், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நீதி நிர்வாகச் செயற்பாடுகள் காலதாமதமானதால், தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் இன்றைய தினமே கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிக்கிறார்.

விவேகானந்த நகர் கிழக்கு, கிளிநொச்சியை வாழ்விடமாகக் கொண்ட சதீஸ்குமார், நெருக்கடிகள் மிகுந்த யுத்த காலங்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி ஓட்டுநராக உயிர் காப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வந்திருந்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பணியின் நிமித்தம் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது, வவுனியா- தேக்கவத்தை சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சதீஸ்குமாருக்கு எதிராக, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவியதாக குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் அவசரகாலச் சட்டவிதியின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், 2011ஆம் ஆண்டு, சதீஸ்குமாருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

அதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை ஆட்சேபித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் எதிராளி மேல் முறையீடு செய்திருந்தார்.

எனினும், வவுனியா மேல் நீதிமன்றின் தண்டனைத் தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றமும் மீளுறுதிப்படுத்தி வழக்கை முடிவுறுத்தியது.

இறுதியாக, 2017ஆம் ஆண்டு வழக்கின் தீர்மானத்தை மீளவும் உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு செய்த சதீஸ்குமார், நீதி நிவாரணத்தைக் கோரி காத்திருந்தார்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சதீஸ்குமாருக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது – அரச அச்சகம்

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச அச்சகத் திணைக்களத் தலைவர் கங்கானி லியனகே இது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மற்றும் பொது வாக்கெடுப்பு ஆகியவற்றுக்குத் தேவையான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என திறைசேரிக்கு கடந்த இரு வாரங்களில் இரண்டு தடவைகள் எழுத்து மூலமாக முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

மார்ச் மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட அச்சிடல் பணிகளுக்கான நிதி முழுமையாக கிடைக்கவில்லை.

நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரி ஒரு உத்தியோகபூர்வமாக அறிவிப்பை விடுக்க வேண்டும் என அரச அச்சகத் திணைக்களத் தலைவர் திறைசேரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

நிதி கிடைப்பதில் தாமதம் காணப்படுவதால் தபால் மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோ பூர்வமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தபால்மூல வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தநிலையிலேயே குறித்த திகதிக்கிடையில் தம்மாக் வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில்  திடீர் மரண விசாரணை அதிகாரி   அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக  , கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகளின் போசாக்கு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய  தேவை இதன் மூலம் உணரப்பட்டுள்ளது.

யாழில் 1814 கர்ப்பிணிகள் வறுமையினால் பாதிப்பு

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 139 கர்ப்பிணிகளும்,

யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்பிணிகளும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 118 கர்ப்பிணிகளும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 கர்ப்பிணிகளும்,

மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 98 கர்பிணிகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்பிணிகளும்,

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 கர்ப்பிணிகளும், வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் 49 கர்பிணிகளும், ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 கர்பிணிகளும், நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகள் என 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.நாவற்குழி விகாரைக்கு வரும் சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் விகாரையில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கும் வகையில் நாளைய தினம்(சனிக்கிழமை) சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார்.

நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே சவேந்திர சில்வா இவ்வாறு வருகை தரவுள்ளார்.

சவேந்திர சில்வா வருகை தரும் நிகழ்விற்காக தென்னிலங்கையில் இருந்து 128 பௌத்த பிக்குகளும் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த நிகழ்வுகள் நாளை காலை முதல் பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என மிகப் பெரும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச கால்பந்து தடை: 197 நாடுகள் ஆதரவு

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.

ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

208 நாடுகள் கலந்து கொண்ட இந்த பொதுச் சபையில் இலங்கைக்கு சர்வதேச கால்பந்து தடை விதிக்க 197 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.

விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டு சுதந்திரத்தை மீறுதல், தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை விதித்தல் போன்ற காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பாகங்களை பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்களாக மாற்றி பெளத்தமயமாக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டைப் பாகங்களை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன.

இந்தக் கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன.

இந்த விளம்பரத்தில் ‘ பல்வேறு தொல்பொருள் கலைப்பொருட்கள் தீவில் உள்ளன. மற்றும் பழங்கால மதிப்புள்ள மூன்று ஸ்தூபிகள்(கோபுரம்) இங்கு காணப்படுகின்றன. இந்தத் ஸ்தூபிகள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. மிகப் பெரிய ஸ்தூபியின் கல்லறையில் மூன்று கல்வெட்டுகள் காணப்பட்டன.’

‘பெரிய ஸ்தூபியின் விட்டம் 13.54 மீற்றர். அதன் சுற்றளவு 31.93 மீற்றர். கல்வெட்டுகளில் ஒன்று பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. பிராமி கல்வெட்டு கி.பி. 1-2 நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் சிங்கள பிராகிருதத்தில் எழுதப்பட்டது என்றும் கல்வெட்டு நிபுணர்கள் நம்புகின்றனர்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விளப்பரப் பலகையில் ‘பௌத்த இடிபாடுகளைக் கொண்ட இந்தத் தளம் டெல்ஃப்ட் தீவின்(நெடுந்தீவு) புராதன பௌத்த தளம். இது கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பெரிய ஸ்தூபி பவளக்கல்லால் ஆனது. ஏனைய இரு ஸ்தூபிகளும் கிழக்கு மேற்காக அமைந்துள்ளன.’ என குறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் புராதன தளமானது வெடியரசன் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது எனவும் இவை குறித்த வரலாற்றுப் பதிவுகள் பல்வேறு புராதன தமிழ் ஆவணங்களில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இந்த நடவடிக்கை திட்டமிட்ட வகையில் தமிழ் வரலாற்றை திரிபுபடுத்தும் பௌத்த ஆக்கிரமிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் விளம்பரப்படுத்தலுக்காக பிரதேச சபை அனுமதி பெறப்பட்டதா? விளம்பரப் பலகைகள் நாட்டப்பட்டமை குறித்து உரிய அதிகாரிகள் இதுவரை கவனம் செலுத்தாது இருப்பது ஏன் எனவும் நெடுந்தீவு மக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தப் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை வடக்கில் உள்ள வரலாற்றுப் பேராசிரியர்கள், பல்கலைக்கழக சமூகம், புத்திஜீவிகள் விரைந்து தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என நெடுந்தீவு மக்கள் கோரியுள்ளனர்.