தனிநபர்களை தடை செய்வதுமாத்திரம் போதாது- சர்வதேச நீதி பொறிமுறை அவசியம் – புலம்பெயர் செயற்பாட்டாளர்

தனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது  குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் என இலங்கையின் நீதி மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பின் ஆலோசகர் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

தடை ராஜபக்ச சகோதரர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அமெரிக்க கனடா இங்கிலாந்து போன்ற நாடுகளிடமிருந்து பல வருடங்களாக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது இலங்கை தான் தொடர்ச்சியாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது, எனவும் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு பின்னர் கனடா தடைகளை அறிவித்துள்ளமை தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள்  இலங்கையை துரத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது  குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை – வினோ எம்.பி

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கருத்துகள் தெரிவித்து வரும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறி சென்றுள்ளது. இதன் மூலம்  தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய கடந்த கால போராட்டம், இழப்புக்கள் மற்றும் தியாகங்கள் அனைத்தையும் தமிழரசுக் கட்சி செய்த இந்த செயல் மூலமாக கொச்சைப் படுத்தியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியினர் உண்மையான அக்கறையோடு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்திருக்கவில்லை என்பதை அவர்களுடைய இந்த முடிவு உணர்த்துகிறது.

தற்போது அது தேர்தலாக இருந்தாலும் சரி பேச்சுவார்த்தை மற்றும் ஜனாதிபதி சந்திப்புகளாக இருந்தாலும் சரி அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கருத்துகள் தெரிவித்து வரும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறி சென்றுள்ளது. இதன்மூலம் தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை என்பது வெளிச்சமாகியுள்ளது.

அதாவது இவர்கள் பிரிந்து சென்று தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளனர். இது தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அத்துடன் இவர்களின் நடவடிக்கை அற்ப தேர்தல் கதிரைகளுக்காக தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் செயற்பாடாகும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.

இலஞ்சம் வாங்கிய முன்னாள் ஜனாதிபதி செயலக அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் இயந்திர உபகரணங்களை பெற்றுத் தர சிபாரிசு செய்வதற்காக 10 கோடி ரூபா இலஞ்சம் கோரி அதில் முற்பணமாக 2 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அலுவலக பிரதானியாக செயற்பட்ட ஐ.கே. மஹநாம மற்றும் மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரின் தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (11) உறுதி செய்தது.

குறித்த இருவரினதும் மேன் முறையீட்டு மனுக்களை கடந்த 2021 மார்ச் 16 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் இன்று அது குறித்த தீர்ப்பை அறிவித்து, விஷேட நிரந்தர மேல் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான , எல்.ரி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர்களைக் கொண்ட குழாம் இதற்கான தீர்ப்பை நேற்று அறிவித்தது.

இந்த இலஞ்ச விவகாரம் தொடர்பில் கடந்த 2018 மே 3 ஆம் திகதி மேற்படி இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான விஷேட நிரந்தர மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து கடந்த 2019 செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் விசாரணைகள் இடம்பெற்றன. இருவருக்கும் எதிராக 24 குற்றச்சாட்டுக்கள் சட்ட மா அதிபரால் சுமத்தப்பட்டிருந்தன.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி (தற்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால்) ஜனக பண்டார மன்றில் ஆஜரானதுடன் முதல் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ஜனாதிபதியின் முன்னாள் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாம சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜராகினார். 2 ஆம் பிரதிவாதியான மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுலரத்ன ஆஜராகி வாதிட்டிருந்தார்.

இந்நிலையில் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த 2019 டிசம்பர் 19 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதன்போது சட்ட மா அதிபர் முன்வைத்த 24 குற்றச்சாட்டுக்களில், முதல் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாம 13 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டார். அத்துடன் 2 ஆம் பிரதிவாதியான மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க 11 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டார்.

இதனையடுத்தே தண்டனை விபரத்தை அறிவித்திருந்த, விஷேட நிரந்தர மேல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாமவிற்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 65 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது. அத்துடன் அவர் பெற்ற 2 கோடி ரூபா இலஞ்சத்தையும் மீள செலுத்தவும் அவருக்கு இதன்போது உத்தரவிடப்பட்டது. அத்துடன் மரக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிபதிகள் 55 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தனர்.

இந்த தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீடு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட முறைமை முற்றிலும் தவறானது எனவும், அதனால் அத்தண்டனையை ரத்து செய்து தம்மை விடுவித்து விடுதலை செய்யுமாறும் மேன் முறையீட்டில் கோரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்ற ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம் விஷேட மேல் நீதிமன்ற தீர்ப்பை சரியானது என ஏகமனதாக அறிவித்து மேன் முறையீட்டை நிராகரித்து தீர்ப்பளித்தது.

அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை சிரேஷ்ட பணிப்பாளர் – ஜனாதிபதி இடையே சந்திப்பு

அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் திருமதி ஐலின் லொவபக்கர் ( Eileen Laubacher) இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னெடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் பாராட்டுகளை திருமதி ஐலின் லொவபக்கர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதாரத் திட்டங்கள் குறித்து திருமதி லொவபக்கருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தலை தடுப்பது மற்றும் அந்த நோக்கத்திற்காக கடல்சார் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இலங்கையின் கூட்டிணைவை அமெரிக்கா பாராட்டுகின்ற அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் திருமதி லொவபக்கர் இங்கு மேலும் குறிப்பிட்டார்

ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்தது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி உடன்பாடு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தாம் முன்வைத்த 3 முன்மொழிவுகள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அரசாங்கம் ஒருவார கால அவகாசம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடல் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

Posted in Uncategorized

யாழில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள்

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது ஹிந்தி மொழிக் கற்ற்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. மேலும் ஹிந்தி மொழி சார்ந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யாழ் இந்திய துணைத் தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜேவிபி கிளர்ச்சியின் போது வன்முறையில் ஈடுபட்ட அரச அதிகாரிகள் பொறுப்பு கூறவேண்டும் – ஐநா வேண்டுகோள்

1989ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின் போது அரச அதிகாரிகளால் இழைக்கப்பட்ட வன்முறைகளிற்கு பொறுப்பு கூறவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகளின் நான்கு அமைப்புகள் இது தொடர்பான கூட்டு வேண்டுகோள் ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளன.

1989 ம் ஆண்டு ஜேவிபியின் கிளர்ச்சியின் போது மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற பலவந்தமாக காணாமல்போகச்செய்தல்,தன்னிச்சையாக தடுத்துவைத்தல்,சித்திரவதை,நீதிக்கு புறம்பான படுகொலைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஐநா அமைப்புகள் மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பான அரச அதிகாரிகள் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படாமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளன.

இழைக்கப்பட்ட குற்றங்களின் முக்கிய குற்றவாளிகளை (அரச அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள்) பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு நீதித்துறை நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து நான்கு அமைப்புகளின் ஐநா அறிக்கை கவலை வெளியிட்டுள்ளது.

பொது நலவாய பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் இலங்கை வருகை

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு நாட்டை வந்தடைந்தார்.

செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க ஆகியோர் வரவேற்றனர்.

ஸ்டீபன் ட்விக்கின் இலங்கை விஜயத்தில் அவருடன் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் மூலோபாய மற்றும் செயற்பாட்டுப் பிரதானி செல்வி எமில் டேவிஸும் இணைந்துள்ளார்.

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் ஸ்டீபன் ட்விக்கின் இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மின்சார சபை, அமைச்சரவைக்கு மின் கட்டணத்தை உயர்த்த அதிகாரமில்லை – சம்பிக்க

இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது அமைச்சரவை அமைச்சர்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரம் இல்லை என முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் அடிப்படையில் இது ஏற்புடையது இல்லை என்றும் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தை பாதிக்கும் வகையில் கட்டணத்தை மாற்றுவதற்கு இந்த தரப்புக்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனினும் மின்சாரக் கட்டணத்தை அறிவிப்பதற்கான முழு அதிகாரமும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த, கோட்டாபய ராஜபக்ச மீது பொருளாதார தடைகளை விதித்தது கனடா

முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கையர்கள் மீது கனடா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இராணுவத்தை சேர்ந்த மிருசுவில் படுகொலையாளி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோரே தடைவிதிக்கப்பட்ட ஏனைய இருவருமாவர்.

கனேடிய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில், கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, 1983- 2009 வரையான ஆயுதப் போரின் போது மனித உரிமைகளை மீறுவதற்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடைகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

“சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள், பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு ஒரு பரிவர்த்தனை தடையை விதிக்கின்றன, இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் முடக்கி, குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவிற்கு அனுமதிக்க முடியாததாக மாற்றும். பொறுப்புக்கூறல் தொடர்பில் கனடா மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கு அர்த்தமுள்ள மற்றும் உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியின் முன்னேற்றத்தையும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளையும் பாதிக்கிறது. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் நீதிக்கு தகுதியானவர்கள். எனவேதான், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை நிறுவுவதற்கான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு கனடா தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்தவர்களுக்குத் தொடரும் தண்டனை விலக்கை கனடா ஏற்றுக்கொள்ளாது என்ற தெளிவான செய்தியை இந்தத் தடைகள் வெளிப்படுத்துகின்றன.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்காக வாதிடுவதற்கு தொடர்புடைய பலதரப்பு அமைப்புகள் உட்பட சர்வதேச பங்காளிகளுடன் கனடா தொடர்ந்து ஒத்துழைக்கும், இது நாட்டிற்கான பாதுகாப்பான, அமைதியான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான முக்கியமான படியாகும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழுவின் ஒரு பகுதியாக கனடா, 51/1 தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் சமாதானத்தை அடைவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தொடர்ந்து வாதிடும்.

இலங்கையில் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் போக்குவதற்கான அவசர அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நோக்கிய முயற்சிகளுக்கு கனடா ஆதரவளிக்கிறது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் செயற்படுவதை நாங்கள் வலுவாக ஊக்குவிக்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.