மருந்துப் பொருட்களுக்கு நாட்டில் பாரிய தட்டுப்பாடு

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் மற்றும் ஒவ்வொரு வகை மருந்துப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக 150 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் ஆய்வக பொருட்கள் தற்போது கையிருப்பில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் சந்தை, மருத்துவ கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் கூட 75-மிகி அஸ்பிரின் மாத்திரைக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கண்டறிய புதிய உபகரணம் இறக்குமதி

போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு சோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

யூரியாக் கப்பல் நாட்டை வந்தடைந்தது

யூரியா உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலில் 28 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் – பிரசன்ன ரணதுங்க

தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், நாடு என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயற்படும் நிலை தற்போது கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதை வாழ்க்கை செலவுக்கு அமைய தேர்தல் ஒன்றை நடத்த குறைந்தது 20 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி செலவாகும் என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, இருப்பினும் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதால் ஒன்றும் மாற்றமடைய போவதில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போட சூழ்ச்சிகள் செய்யும் அரசாங்கம் – உதய கம்மன்பில

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பை ஆணைக்குழு வெளியிடும் என எதிர்பார்த்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் தேர்தலை ஏதாவதொரு வழிமுறையில் பிற்போடுவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இருமுனை போட்டி நிலவுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தேர்தலை நடத்துவதை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்களுடன் விசேட கலந்துரையாடல்

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

விசேட கலந்துரையாடலொன்றுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் ஆணைக்குழு நேற்று ஆலோசனை நடத்தியது.

மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அடிப்படை செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் அதிகாரிகள் என்ற வகையில் மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி திருத்தப் பணிகளுக்காக மூடப்படுகிறது

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும், திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக உரிய பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தற்போதைய 2 மணித்தியால 20 நிமிட தினசரி மின்வெட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை பொலிஸாருக்கு முதல் கட்டமாக 125 ஜீப் வண்டிகள் இந்தியாவால் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாருக்கு 500 ஜீப் வண்டிகளை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இவற்றில் முதற்கட்டமாக 125 ஜீப் வண்டிகள் நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் 125 ஜீப் வண்டிகளையும் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்தார்.

அதற்கான வைபவம் பத்தரமுல்லையிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உத்தியோகபூர்வமாக மேற்படி ஜீப் வண்டிகளுக்கான ஆவணங்களைக் அமைச்சரிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி, பொலிஸ் மாஅதிபர் சீ.டீ. விக்கிரமரட்ண உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் மடிச்சுக்கட்டி நோய்த்தாக்கத்தால் விவசாயிகள் பாதிப்பு

வவுனியா மாவட்டத்தில் மடிச்சுக் கட்டி நோய் தாக்கம் காரணமாக 782 ஏக்கர் நெற் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் நெல் மற்றும் பயிர் பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் கு.கஐரூபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை (டிச. 22)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நெற் செய்கை மாவட்டங்களில் வவுனியா மாவட்டமும் முன்னிலை வகிக்கின்றது. இம்முறை கால போகத்தில் 23 ஆயிரத்து 186 ஹெக்ரெயர் நெற் செய்கை எதிர்பார்க்கப்பட்ட போதும் ஆரம்பத்தில் போதியளவு மழை கிடைக்காமையால் 21 ஆயிரத்து 832 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைவான மழை வீழ்ச்சி கிடைத்ததுடன், தற்போது அதிகளவிலான மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றது. வானிலை மாற்றத்தினால் குறைந்தளவிலான பகற்காலமான, இருளான அதிக ஈரப்பதன் காலநிலை நிலவி வருவதால் நெற் செய்கை பயிர்களுக்கு இலை மடிச்சுக்கட்டி நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக விசாயிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம், பாவற்குளம், பம்பைமடு, மடுகந்தை, மகாகச்சகொடி, நெடுங்கேணி, கனகராயன்குளம், ஓமந்தை உள்ளிட்ட பகுதிகளில் 782 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது 25 – 30 வீதமான தாக்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் பொருத்தமான கிருமி நாசினிகளை பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அதிகரித்த உழவு கூலி, களை நாசினி மற்றும் கிருமிநாசினி என்பவற்றின் அதிகரித்த விலை என பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது மடிச்சுக்கட்டி நோய் தாக்கத்தால் தாம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ள

சீனி வரி மோசடி தொடர்பில் கோத்தாவை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு திட்டம்

சீனி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்து இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய 1,600 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை இழக்கச் செய்து பாரிய நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 25 சதமாக குறைக்கப்பட்டது.

இந்த வரிக்குறைப்பிற்கு 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு நிதி அமைச்சின்  அதிகாரிகளிடம் விசாரணை நடாத்திய போது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமைய வரிக் குறைப்பு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த வரிக் குறைப்பு அப்போதைய வர்த்தகத்துறை அமைச்சரான தனக்கே தெரியாமல் செய்யப்பட்டது எனவும், அரச அதிகாரிகள் சிலர் அது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றில் குரிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில், குறித்த வரி மோசடி தொடர்பில் விடயங்களை தெரிந்தோரின் வாக்கு மூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஓர் அங்கமாக  கடந்த 19ஆம் திகதி திங்களன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் ஆஜராக அமைச்சர் பந்துலவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும்  அன்றைய தினம் ஆஜராகாத அவர் பிரிதொரு திகதியை கோரியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி நடந்த அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு (கோபா) கூட்டத்தின் பின்னர் அரசின் உத்தரவிற்கமைய,  நிதி,பொருளாதார ஸ்திரம் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி,  பாரிய அளவில் வரி குறைப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற  பிரதிபலன் நுகர்வோரை சென்றடையாது வேறு தரப்பொன்று கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளதா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணை பிரிவு முதலாம் இலக்க விசாரணை அறை ஊடாகவும் விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.