எரிபொருள் கப்பல்களுக்கு தாமதக் கட்டணமாக 6 மாதங்களில் 10 மில்லியன் டொலர்கள்

டொலர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம் எரிபொருள் இறக்குமதிக்காக கடந்த ஆறு மாதங்களில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாமதக் கட்டணமாக கப்பல் நிறுவனங்களுக்கு செலுத்தியுள்ளது என்று டெய்லி மிரர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக, கப்பல் நிறுவனங்களுக்கு செலுத்த போதுமான அமெரிக்க டாலர்களைக் கண்டுபிடிக்கும் வரை எரிபொருள் சரக்குகளை இறக்குவதை தாமதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.

இது தாமதத்தை விளைவிக்கிறது. மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை இராஜாங்க அமைச்சர் சானக கடந்த ஆறு மாதங்களில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தாமதக் கட்டணமாக கப்பல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறையை அரசாங்கம் வகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கோரி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

“இந்த பொறிமுறையானது நடைமுறைக்கு வந்ததும், விநியோகஸ்தர்களிடமிருந்து விலை மனுக்கோரல் ஊடாக சேமிப்பு கிடங்குகளில் சேமிப்பதற்கு விரும்புபவர்களிடம் இருந்து எரிபொருள் சேமிப்புக்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் வழங்குவோம். பின்னர் பணம் செலுத்திய பின்னர் அதனை பயன்பாட்டுக்காக பெற்றுக்கொள்வோம். எனத் தெரிவித்தார்.

இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி இல்லாததால், இலங்கை தற்போது QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்கிறது.

QR குறியீட்டு முறையின் கீழ் விநியோகிக்க ஒரு மாதத்திற்கு 120,000 டன் டீசல் மற்றும் 100,000 டன் பெட்ரோலை நாடு இறக்குமதி செய்கிறது.

எரிபொருள் கொள்வனவுக்கான வெளிநாட்டுக் கடன் பத்திரங்கள் தொடர்பில் கேட்டதற்கு, நிறைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ரஷ்யாவின் கடன் வசதி குறித்து கருத்து தெரிவித்த அவர், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றார்

கடும் மழையால் யாழில் 1025 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 305 குடும்பங்களை சேர்ந்த 1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் டி.என் சூரியராஜா தெரிவித்தார்

கரவெட்டி,யாழ்ப்பாணம்,பருத்தித்துறை, மருதங்கேணி,சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளன. இதில் பருத்தித்துறைப்பிரதேச செயலர் பிரிவில் அதிகபட்சமாக 201 குடும்பங்களை சேர்ந்த 690 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் 16 குடும்பங்களை சேர்ந்த 46 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 24 குடும்பங்களை சேர்ந்து 72 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 54 குடும்பங்களை சேர்ந்த 177 பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 25 குடும்பங்களை சேர்ந்த 80 பேரும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 அங்கத்தவர்களும் பாதிப்படைந்துள்ளன அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் கலந்துரையாடல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு சந்திப்புகள் இடம்பெற்றன.

பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்பு பேரவையின் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க, அரசியலமைப்புச் சபைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியமனங்களை உடனடியாக சபாநாயகரிடம் கையளிப்பதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது ஒப்புக்கொண்டனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத மூன்று உறுப்பினர்களை அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் வர்த்தமானி ஒன்றை வெளியிடுவதற்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு 02 வார கால அவகாசம் வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

வௌிநாட்டு பணம் அனுப்பல்களுக்கு ஊக்குவிப்புத் தொகை

தனியொரு பணப்பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட வௌிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது வௌிநாட்டுப் பணத்தை பெற்றுக் கொள்ளும் முகவர்களிடமிருந்து குறித்த பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

பயனாளர்களின் பரிமாற்றல் செலவு மீளளிப்பாக இந்த ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

சம்பந்தனுக்கு நேரில் இ.தொ.க வாழ்த்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ´ஜனநாயகப் பொன் விருது´ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா,பிரதி தலைவி அனுசியா சிவராஜா, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இரா.சம்பந்தன் ஆற்றிய சேவைகளுக்காக இவ்விருது பல வருடங்களுக்கு முன்னதாக கிடைத்திருக்க வேண்டியது என்றும், இவ்விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை எடுத்துக் காட்டுகிறது எனவும் இவ்விருது கிடைத்தமைக்கு முழு மலையக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இ.தொ.கா தெவித்துள்ளது.

இரா.சம்பந்தன் இ.தொ.காவின் வாழ்த்துக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்ததுடன், தனக்கும் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குமிடையிலான நட்புறவையும் நினைவுப்படுத்தினார்.

மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது சிறந்த நண்பர் அவருடன் இணைந்து பல அறிவுப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டுள்ளளோம். மலையக மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் வரலாற்று சாதனைப் படைத்தவை என்றும், அரசாங்கத்தால் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்க்கப்பட்டு, முகவரியற்ற சமூகமாக மாற்றப்பட்ட போது அம்மக்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக முன்னின்று பல போராட்டங்கள் செய்து, அதை வெற்றிக்கொண்டு, மலையக மக்களுக்காக பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்து அவர்களை ஒரு ஆளும் சமூகமாக மாற்றினார். அவருடைய அரசியல் சாணக்கியத்தை ஈடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்தும் வெற்றிகரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையால் 9,300 மெட்ரிக் தொன் யூரியா விநியோகம்

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் சில பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 9,300 மெட்ரிக் தொன் யூரியாவை விநியோகிக்க உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), அமெரிக்க-யுஎஸ்எய்ட் (USAID), நிதியுதவியுடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய இடங்களில் 2.5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடும் சிறுபோக நெல் விவசாயிகளுக்கு 9,300 மெட்ரிக் தொன் யூரியாவை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள கமநல சேவை நிலையங்களில் தகுதியான விவசாயிகளின் விநியோக பட்டியல் வெளியிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விநியோக பட்டியல்கள் 18, நவம்பர் 2022 வரை காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இந்திய தூதுவர்கள் திருகோணமலை விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோர், இராஜதந்திர பணியாளர்களுடன் திருகோணமலை லங்கா ஐஓசி முனையத்துக்கு சென்றுள்ளனர்.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் அதன் செயற்பாடுகள் குறித்து இரண்டு இராஜதந்திரிகளுக்கும் லங்கா ஐஓசி பணியாளர்கள் விளக்கமளித்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை முனையத்தில் இருந்து இலங்கை சந்தைக்கான, லங்கா சுப்பர் டீசலின் முதலாவது விநியோகத்தையும் இந்திய உயர்ஸ்தானிகர், இதன்போது கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவரிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் “அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள தூதரகத்தில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்து  கலந்துரையாடினர்.

அதன்பின்னர் இப் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் கையளித்தனர்.

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிற்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நாட்டைத் துறந்து அகதிலிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.

இனப்படுகொலை நாடான இலங்கையில் அந்நாட்டு ஆட்சியாளர்களின் தமிழர்கள் மீதான இனவெறி மிகுந்த தவறான ஆட்சி நிர்வாகத்தின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்து வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி அந்நாட்டு மக்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். சொந்த மண்ணில் வாழ வழியற்ற நிலையில் வேறுவழியின்றி அங்குள்ள தமிழ் மக்கள் இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஏதிலிகளாக அவ்வப்போது புலம்பெயர்ந்தும் வருகின்றனர்.

அப்படி நிம்மதியாக வாழ இந்தப் பூமிப் பந்தில் ஒரு இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன், ஊரையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஆழ்கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட தொப்புள்கொடி உறவுகளான 300க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் கனடா நாடு நோக்கிச் செல்லும் வழியில் கடந்த நவம்பர் 8 ஆம் நாளன்று புயலால் கப்பலில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். விரைந்து செயல்பட்ட சிங்கப்பூர் அரசு மனிதநேய அடிப்படையில் தமிழர்களை மீட்டு, அருகிலிருந்த வியட்நாம் நாட்டில் ஒப்படைத்த நிலையில், தற்போது அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வியட்நாம் அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.

வறுமையின் காரணமாக இருந்த உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு பெரும் பொருட்செலவில் நாட்டை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும், பொருளாதாரம் முற்றாகச் சீரழிந்துள்ள இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கி, வறுமையிலும், பசியிலும் வாடி சிறுக சிறுக அவர்கள் உயிரிழக்கவே வழிவகுக்கும்.

 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏகாதிபத்திய பேரரசுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தீரத்துடன் போராடி அடிமைத்தளையை அறுத்தெறிந்து, விடுதலையை வென்றெடுத்த புரட்சிகர வியட்நாமிய நாடு, கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஈழத்தாயக விடுதலைக்காகப் போராடி வரும் தமிழர்கள், அடிமைத்தன அடக்குமுறைகளால் அனுபவித்த துன்ப துயரங்களையும், மன வலிகளையும் எளிதில் உணரும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் முழுமையாக நம்புகின்றனர். எனவே ஈழத்தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவை உடனடியாக வியட்நாமிய அரசு கைவிட வேண்டுமென்று கோருகிறேன்.

வியட்நாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களும் தாங்கள் கனடாவுக்குச் செல்ல விரும்புவதாகவும், தங்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாதென்றும், ஐநாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உடனடியாக வியட்நாம் அரசுடன் பேசி, அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிடச் செய்வதோடு, அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்குத் தமது சொந்த பொறுப்பிலேயே பாதுகாப்பாக அனுப்பி வைப்பதோடு, வாழ்வாதார உதவிகள் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர்கள் எங்கே என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டியதில்லை என்றும் ஏற்கனவே இதே வழக்கில் தொடர்புடையவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றத்தை நாடியுள்ள மனுதாரர்கள் அனைவரும, கிட்டதட்ட 30 ஆண்டுகள் சிறையில் உள்ளதையும், அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை கணக்கில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதை தான் உச்சநீதிமன்றம் பேரறிவளான் விவகாரத்தில் கருத்தில் கொண்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற இவர்கள் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
Posted in Uncategorized