11 இளைஞர்கள் கடத்தல் : வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கத்தில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கியமை  தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையையும்  மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா (தலைவர்) நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் : வெரிட்டே ரிசர்ச் ஆய்வில் தகவல்

பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர் அல்லது தங்களுக்கு இதுதொடர்பில் எந்தவித கருத்தும் இல்லை என்று கூறுகிறார்கள்.
அக்டோபர் மாதம் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பினால் (Syndicated Surveys) நடத்திய கணக்கெடுப்பின் படி, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சனத் தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் – அதாவது 53% – நம்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நாட்டில் நிலவும் பின்வரும் மூன்று கருத்துக்கள் கணக்கெடுப்பில் பங்குபற்றியவர்கள் இடையே கேட்கப்பட்டன, தங்களால் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தை தேர்ந்தெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

⦁ ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.

⦁ இது உள்ளூர் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது.

⦁ உள்ளூர் அரசியல் சக்திகள் மற்றும் ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.

53% உள்ளூர் அரசியல் சக்திகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்புகின்றனர் – 30% இரண்டாவது பதிலைத் தேர்ந்தெடுத்தனர், 23% மக்கள் மூன்றாவது பதிலைத் தேர்ந்தெடுத்தனர். உள்ளூர் அரசியல் சக்திகளின் தலையீடு இல்லாமல் இது மேற்கொள்ளப்பட்டதாக 8% பேர் மட்டுமே நம்புகின்றனர் (முதல் பதில்). 39% சதவீதம் பேர் தங்களுக்கு இது தொடர்பாக எந்தவித கருத்தும் இல்லை என்றும் அல்லது கருத்து தெரிவிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளனர்.

2019 ஏப்ரல் 21, (உயிர்த்த ஞாயிறு) அன்று மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகளில் மொத்தமாக 269 நபர்கள் கொல்லப்பட்டனர்.

கருத்துக்கணிப்பை நடைமுறைப்படுத்தல்

நாடளாவிய ரீதியில் தேசியளவில் வயது வந்த இலங்கையர்கள் 1,029 பேர் கொண்ட பதில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு 2023 அக்டோபரில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 95% நம்பக இடைவெளி மற்றும் ± 3% வழு எல்லையை உறுதிசெய்யும் வகையில் இதன் மாதிரி மற்றும் வழிமுறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

வெரிட்டே ரிசர்ச் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு (Syndicated Surveys) கருவியின் ஒரு அங்கமாக இக்கருத்துக்கணிப்பு வாக்களிப்பு பங்காளியான வன்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடட்டினால் நடத்தப்பட்டது. சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு கருவியானது இலங்கை மக்களின் உணர்வுகளை அளவிடுவதற்கான வாய்ப்பை மற்ற நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நினைவு கூர்பவர்களை கைது செய்ய பயன்படுத்தும் இலங்கை அரசாங்கம் – பேர்ள் அமைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைகூருவதை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவது குறித்து இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் கரிசனை வெளியிட்டுள்ளது.

தமிழர்களிற்கு எதிரான பாதுகாப்புபடையினரின் நடவடிக்கைகள் முன்னைய அரசாங்கங்கள் போல தற்போதைய அரசாங்கமும் சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதை புலப்படுத்தியுள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கம் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதையும் இலங்கையில் தமிழர்களின் குரல்களை ஒடுக்க முயல்வதையும் கண்டிக்கவேண்டும்,குறிப்பாக அவர்கள் இந்த கடினமான தருணங்களில் தங்களின் நேசத்திற்குரியவர்களை நினைகூரும் இந்த தருணத்தில் என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தைப் பார்வையிட்டார் இந்திய தூதுவர்

யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பால்கே இன்று புதன் கிழமை காங்கேசன்துறைமுகப் பகுதிகளை பார்வையிட்டார்.

காங்கேசன் துறை நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதன் கட்டுமானங்கள் மற்றும் தேவைகள் குறித்து இதன் போது யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் தூதுவருக்கு விளக்கமளித்தனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிவில் புலம்பெயர் தரப்பினர் டில்லியில் கூட்டாக வலியுறுத்தல்

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களும் நிர்வாக கட்டமைப்பும் இல்லாத நிலையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அதியுச்சமான தலையீட்டைச் செய்ய வேண்டுமென வடக்கு கிழக்கு அரசியல் சிவில் புலம்பெயர் தரப்பினர் கூட்டாக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தமிழர்களுக்கான அர்த்தமுள்ள நிரந்தர தீர்வினை வழங்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பைச் செய்யவதற்கு இந்தியா வகிபாகமளிக்க வேண்டும் என்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாதுள்ளமையால் தற்காலிக ஏற்பாடாக இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்திய தலைநகர் புதுடில்லியில் உள்ள ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் தலைவர் கிருஸ்ணபிள்ளை இளங்கோ அமெரிக்க தமிழர் ஐக்கிய அரசியல் செயல்குழுவின் செயலாளர் கலாநிதி. தமோதரம்பிள்ளை சிவராஜ் ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் செயற்குழுவின் செயலாளர் சுந்தர் குப்புசுவாமி, உலக சமூக சேவை மையத்தின் அறங்காவலர் ஆர்.சி.கதிரவன் தழிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளான துரைசாமி தவசிலிங்கம் வேலன் சுவமிகள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த குழுவினர் சார்பில் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

நாங்கள் இங்கு மூன்று விடயங்களை பிரதானமாக கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம். முதலாவதாக பூகோள ரீதியாக தாக்கம் செலுத்துகின்ற விடயமாகும்.

இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் சீனா சார்பு நிலையில் செயற்பட்டு வருகின்றார்கள்.

ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் தென் பகுதிக்கு அருகாமையில் உள்ளன. அத்தோடு கலாசார சமய மொழி உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் இந்தியாவுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது.

அந்தவகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையானவர்கள் எங்களது கடவுள் இந்தியா எம்மை ஆதரவாக பார்த்துக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கையுடன் இருக்கின்றார்.

அதுமட்டுமன்றி இந்த நம்பிக்கையானது எமது பாதுகாப்பையும் இந்தியாவின் தென்பிராந்திய தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்வதாக உள்ளது. அதனடிப்படையில் இந்த விடயம் பூகோள ரீதியாக முக்கியமானதாகும்.

இரண்டாவதாக சிங்கள பௌத்த திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களுக்கு நாம் நேரடியான சாட்சியாளர்களாக இருக்கின்றோம். பிரித்தானிய காலனித்தத்துவம் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவில் சிறுபான்மை மக்கள் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கதக்கதாக முதலில் இந்திய தமிழர்களின் பிரஜாவுரையை பறித்து அவர்களை நாடு கடத்தினார்கள். அதன் பின்னர் சிங்களம் மட்டும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக இனக்கலவரங்கள் அரங்கேற்றப்பட்டு தமிழ் மக்கள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு வலிந்து தள்ளப்பட்டார்கள். இதனால் தற்போது மில்லியன் கணக்கான தமிழ் மக்கள் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நிலைமைகள் உருவாகியுள்ளன.

தொடர்ந்து எமது இளைஞர்கள் யுவதிகள் பல்கலைக்கழகங்களில் உள்நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் தரப்படுத்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் தொடர்ந்ததன் காரணமாக இளைஞர்கள் ஆயுதங்களை கையிலெடுத்தார்கள். விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஆயுத ரீதியான போராட்டம் கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்றிருந்தது.

ஆயுதப்போராட்டம் நிறைவுக்கு வந்ததன் பின்னரும் தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுதல் பௌத்த மதம் சார்ந்த நிர்மாணங்களை மேற்கொள்ளுதல் என்று திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை முன்னெடுத்து அரசாங்கம் கொள்கை ரீதியாக முன்னெடுத்து வருகின்றது.

அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழர்களை ஓரங்கட்டும் செயற்பாட்டை பல்வேறு வழிகளில் முன்னெடுத்து வருகின்றது. உதாரணமாக கூறுவதாக இருந்தால் போர் நிறைவுக்கு வந்ததன் பின்னரும் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்புக்கள் நடைபெறுகின்றன. பாரியளவான நிதி ஒதுக்கீடுகள் வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்படுவதோடு தொடர்ச்சியாக அந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலைமைகளால் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள படைகள் தமிழர்களின் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. புலனாய்வாளர்களின் பிரசன்னங்கள் பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ளிட்டவையும் நீடிக்கின்ன.

அதேபோன்று வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் பிற பகுதிகளில் இருந்து படைகளின் உதவிகளுடன் இதேபோன்று பௌத்த தேரர்கள் தமது விரிவாக்கங்களைச் செய்து வருகின்றார்கள். ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்துக்களின் தொல்பொருள் பகுதிகள் சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமானவையாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் செயற்பாடுகளை பௌத்த தேரர்கள் முன்னெடுக்கின்றார்கள். அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக காணப்படுகின்றார்கள். அவர்களை கட்டுப்படுத்தவதற்கு யாருக்கும் அதிகரங்கள் காணப்படவில்லை. அதேபோன்று ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளில் ரூடவ்டுபடுகின்ற தரப்புக்கள் இதுவரையில் தண்டனைக்கு உட்படுத்தப்படாத நிலைமைகளும் நீடிக்கின்றன.

மூன்றாவதான விடயம் தமிழர்களுக்கச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பதும் அபகரிப்பதாகும். 1978ஆம் ஆண்டு இலங்கையின் மிகப்பெரும் நதியான மகாவலி நீர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டுவரப்பட்டு நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் நாம் மகிழ்ச்சி அடைந்தாலும் மகாவலி அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் தற்போது வரையில் ஒருதுளி நீர் கூட வடக்கு மாகாணத்துக்க கொண்டுவரவில்லை. அவ்வாறு கொண்டுவருவதற்கு சாதமான நிலைமைகள் இல்லை என்று எமது பொறியியலாளர்கள் உறுதிப்படுத்தியும் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் மகாவலி திட்டத்தின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தென்னிலங்கையில் இருந்து சிங்கள மக்கள் வரவழைக்கப்பட்டு குடியேற்றப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலைமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் அரச திணைக்களங்களும் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்கும் ஆபகரிப்புச் நடவடிக்கைகளுக்கும் துணையாக உள்ளன.

இவ்விதமான பிரச்சினைகள் சமகாலத்தில் தீவிரமடைவதால் நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். ஆகவே இந்த விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழ் மக்களின் பூர்வீகமான பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டியதும் அவசியமாகின்றது.

தமிழர்கள் தமது பூர்வீக நிலங்களில் பாதுகாக்கப்படுவதும் அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டுமாக இருந்தால் அதற்கான வகிபாகத்தை இந்தியாவாலேயே மேற்கொள்ள முடியும். இவ்விதமான நிலைமைகள் மூன்று தசாப்தத்துக்கு முன்னதாகவே காணப்பட்டமையை உணர்ந்த காரணத்தினால் தான் இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தத்தினை மேற்கொண்டது.

அந்த ஒப்பந்தம் தற்போது வரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வடக்கு கிழக்கு தமிழர்கள் தற்போது பாதுகாப்பற்ற நிலைமையை உணர்ந்துள்ளார்கள். அவர்களின் விடயங்களில் கரிசனைகளைக் கொள்வதற்கு சரியானதொரு நிறுவனக் கட்டமைப்பு காணப்படவில்லை. ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேநேரம் 13ஆவது திருத்தச்சட்டம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வாக அமையாது விட்டாலும் தமிழர்களின் கையில் சிறுஅதிகாரத்தை அளிக்கும் வகையிலான மாகாண சபைக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. அதனடிப்படையில் இந்தியா தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சிக்கலான சூழல்களும் நன்றாகவே அறிந்துள்ளது. ஆகவே அதற்கான அர்த்தபூர்வமான தீர்வினை வழங்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.

மேலும் தொடர்ச்சியாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமையில் தமிழர்களுக்கான நிர்வாகக் கட்டமைப்பொன்று காணப்படாதுள்ள நிலையில் தற்காலிக ஏற்பாடாக இடைகால நிர்வாக சபையொன்றை ஸ்தாபிப்தற்கும் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானதாகின்றது.

அதுமட்டுமன்றி இந்தியா இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவன் ஊடாக இந்தியா தனது தென்பிராந்தியத்தின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு வடக்கு கிழக்கு தமிழர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொடுக்க முடியும் என்றார்.

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் பேராயர் கடும் விசனம்

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளமையை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அவமதிக்கும் செயலாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசபந்து தென்னகோன் மீது காணப்படும் குற்றச்சாட்டுக்கள் எவற்றையும் கருத்திற் கொள்ளாது அவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் மூலம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பதும் தெளிவாகிறது என்றும் பேராயர் விசனம் வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையை பேராயர் மெல்கம் கர்தினார் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பதோடு, அதனை முற்றாக எதிர்க்கின்றார். இந்த நியமனமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயலாகும்.

273 அப்பாவி மக்களை கொலை செய்த, மேலும் 500 பேரை படுகாயமடயச் செய்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை தடுப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும், அதனை உதாசீனப்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இதுவரையிலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசபந்து தென்னகோன் போன்றோர் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றியிருந்தால் 273 அப்பாவி மக்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். அவர்கள் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் உதாசீனப்படுத்தியதனாலேயே அவர்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தேசபந்து தென்னகோன் போன்றோர் நாட்டின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை மிலேச்சத்தனமான செயற்பாடாகும்.

2022 மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்துகல்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட 17 கோடியே 85 இலட்சத்தை வழக்கிற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்குமாறு கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நபரொருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பது புலப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு தேசபந்து தென்னகோனுடைய பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். சட்டத்தரணிகள் உட்பட சமூகத்தில் பொது மக்கள் மத்தியிலும் இந்த நியமனம் தொடர்பில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இவை எவற்றையுமே கவனத்தில் கொள்ளாது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அமைச்சர் உட்பட ஜனாதிபதியை சூழவுள்ள சுயநலவாதிகள் சிலரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நியமனம் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. இந்த நியமனமானது நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை பொலிசுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அவமதிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எனது முதல் இலக்கு – பதில் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோன்

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எனது முதல் இலக்கு. அத்துடன் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கப்பம் கோருதல் ஆகியவற்றினால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பில் செயற்பட எதிர்பார்த்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்ற அவர் இன்றைய தினம் கொழும்பு, கங்காராம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் சமார் 25 வருடங்களாக வெவ்வேறு பொலிஸ் பதவிகளில் கடமையாற்றியுள்ளேன். எனக்கு அனுபவம் உள்ளது. நாட்டு மக்களின் நலனுக்காக இலங்கை பொலிஸ் சேவையை முன்னோக்கி கொண்டு செல்வேன்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எனது முதன்மை இலக்காகும். மேலும் நாட்டில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பது எனது இரண்டாவது பொறுப்பாகும். இன்று கிராமப்புற பாடசாலைகளில் கூட மாணவர்களிடத்தில் போதைப்பொருள் பாவனை பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது.

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நான் முன்னுரிமை அளிப்பேன். அத்தோடு அதனை மேற்கொள்ள சிறந்த திட்டமும் என்னிடம் உள்ளது. அதை செயல்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கப்பம் கோரல் ஆகியவற்றினால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பில் செயற்பட எதிர்பார்க்கின்றோம்.

நான் பொறுப்பில் இருந்த சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட்டேன் என்பதை அனைவரும் நன்கு அறிவர் என்றார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் முதாலாம் திகதி மீள ஆரம்பிக்கப்படும்

ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்செயலாக வெளிவந்த கொக்குத்தொடுவாய் பாரிய மனித புதைகுழி மேலும் விரிவடைந்து செவல்வதாக தெரியவந்ததையடுத்து அகழ்வுப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் நிறுத்தப்படும் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் முதலாம் முதல் மீண்டும் ஆரம்பமாகுமென, நவம்பர் 29ஆம் திகதியான இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சடலங்களை அகழ்ந்து எடுக்கும் பணிக்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“புதைகுழியானது கொக்கிளாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் 1.7 மீற்றர் நீளத்திற்கு நெடுஞ்சாலையை நோக்கி விரிவடைந்துள்ளமை ஸ்கேன் பரிசோதனை ஊடாக தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பிலேயே இன்று கலந்துரையாடப்பட்டது. இந்த புதைகுழி முற்று முழுதாக ஆராயப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அனைவரும் உள்ளனர். எனவே எதிர்வரும் வருடம் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.”

அகழ்வு நடவடிக்கைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வைத்தியர் வெளிப்படுத்தினார்.

“இந்த அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்துவதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். இதற்கான உத்தரவை நீதவான அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். பகுப்பாய்வு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. ”

இரண்டாம் கட்ட புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்படுவதோடு இத்துடன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன.  நவம்பர் 28 ஆம் திகதி வரை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து குறைந்தது 39 பேரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

தற்போது 14 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் நேற்று வெளிப்படுத்தியிருந்தார்.

கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியின் அளவை தீர்மானிப்பதற்காக கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களாக ரேடார் கருவிகள் மூலம் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அதன் முடிவுகள் மற்றும்  நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முல்லைத்தீவு நீதவான் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டன.

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை

மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.

அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

உரும்பிராயை சேர்ந்த முன்னாள் போராளியொருவரின் குடும்பத்தினர், ஒரு சிறாரை போராளியை போல ஆடை அணிவித்து அழைத்து வந்துள்ளனர்.

கோப்பாயை சேர்ந்த அன்றாட உழைப்பாளியொருவரும் தனது 3 பிள்ளைகளை போராளிகளை போல ஆடை அணிவித்து அழைத்து வந்துள்ளார்.

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு வழங்க முன்மொழிவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டு அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரால் சங்கானை பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி பொது அமைப்புகளிடம் பிரதேச செயலாளரால் இது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் குறித்த விடயத்தை எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த பகுதி மக்கள் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்வதை முற்றிலும் நிராகரித்திருக்கிறார்கள்.

கரையோர பகுதி மக்களின் வாழ்வாதரமே கடற்கரையை நம்பியே காணப்படுகின்றது. மாட்டுவண்டி சவாரித்திடல், சுடுகாடுகள், விவசாய நிலங்கள் காணப்படுகின்றன. ஆகவே வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் முன்மொழிவை முற்றிலும் நிராகரிக்கிறோம்.

குறித்த பகுதியை வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கினால் விகாரைகள், சிங்கள குடியேற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் குறித்த முன்மொழிவை நிராகரித்து வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். இல்லையேல் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் – என்றார்.