தாயக மக்கள் அனைவரும் ஹர்த்தாலில் பங்கெடுத்து வெற்றியை சிங்கள பெளத்த அரசிற்கு காண்பிக்க வேண்டும்

பிரான்ஸ் தமிழர் உரிமை மையம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலிற்கு பூரண ஆதரவினை வழங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் (Tamil Centre for Human Rights – TCHR, Est.1990) ஆகிய நாம், எதிர்வரும் செவ்வாய்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு எமது பூரண ஆதரவை தெரிவித்து கொள்வதுடன், மற்றைய புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி, இவ் ஹர்த்தாலிற்கு உங்கள் முழு ஆதரவை தெரிவிக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இவ் ஹர்த்தாலை முன்னின்று நடத்து அத்தனை கட்சிகள், சங்கங்கள் யாவருக்கும் எமது சிநேகபூரமான நட்பையும் ஆதரவையும் தெரிவிக்கும் அதேவேளை, உங்கள் இது போன்ற பணிகள் தொடர வேண்டுமென தாழ்மையாக வேண்டி கொள்கிறோம்.

நாட்டில் வாழும் எமது உறவுகளை எந்த பாகுபாடுமின்றி இவ் ஹர்த்தாலில் பங்கு கொண்டு முன்னெடுத்து மிக வெற்றியை சிங்கள பெளத்த அரசிற்கு காண்பிக்குமாறு உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வட-கிழக்குத் தழுவிய பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து மன்னாரில் அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில் குறித்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ),ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவை இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 11 மணியளவில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளருமான டானியல் வசந்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் , ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அ.ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

குறிப்பாக வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவ மயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கமானது எமது மக்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி ஏற்கனவே அடக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கின்ற எமது மக்களை மீண்டும் மீண்டும் அடக்கி ஆழ் வதற்கான ஒரு புதிய சட்டத்தை உருவாக்குகின்றது.
இதற்கு எதிராக நாங்கள் அனைவரும் கிளர்ந்து எழுந்து இந்த சட்டத்தை இந்த நாட்டிலிருந்து துடைத்து எடுப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினூடாக அரசாங்கத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் சிறிய கருத்தை பதிவிட்டாலே அவர்களை கைது செய்து சிறை படுத்துவதற்கான அதிகாரம் இந்த ஆயுதப் படைகளுக்கு வழங்கப்படுகின்றது.

ஏற்கனவே இந்த ஆயுதப் படைகளுக்கு இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் அதே போன்று அவசர கால தடைச் சட்டம் ஊடாக பல அடக்குமுறை அதிகாரங்கள் வழங்கி இருக்கிறது.

உதாரணத்திற்கு எமது கலாச்சார விழுமியங்களை அழிப்பதற்கான அதிகாரம் எமது நிலங்களை கைப்பற்றுவதற்கான அதிகாரம் மற்றும் கேள்வி கணக்கின்றி எமது இளைஞர்கள் யுவதிகளை சிறை படுத்துவதற்கான அதிகாரம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கான அதிகாரம் என்று பல அதிகாரங்களை வழங்கி இந்த நாடு எமது மக்களை அடக்கி ஆள்கிறது.

மீண்டும் மீண்டும் எமது மக்களை ஒரு திறந்தவெளி சிறைச்சாலைக்குள் வைப்பதற்கான புதிய சட்டத்தை நாட்டிலே இந்த அரசாங்கம் உருவாக்குகின்றது.
அது தான்சட்டம் எனவே இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இந்த நாட்டில் கொண்டு வராத வகையில் போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்த சட்டமானது தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த விடயத்தில் முஸ்லிம் சிங்கள மக்களின் பிரதிநிதிகளாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 25ம் திகதி பாராளுமன்றத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கட்டாயம் எதிர்க்க வேண்டும் என்பதுடன் எதிர் வரும் 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய அனைத்து மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அன்றைய தருணம் வர்த்தக நிலையங்களை மூடி அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் முச்சக்கர வண்டிகள் அரச தனியார் பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதோடு இளைஞர், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித நேயச் செயற்பாட்டாளர்கள் என்று பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு பாரிய எதிர்ப்பை காட்டுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தலைமையில் மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைவராக கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திய போதிலும், அவர் பங்கேற்க மறுத்துவிட்டார்.

Posted in Uncategorized

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் சேதத்திற்கு எதிராக வெளிநாட்டில் வழக்குத் தாக்கல்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் கடற்பரப்பில் ஏற்பட்ட சேதத்திற்கு எதிராக வெளிநாடு ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நீதி அமைச்சு கூறியுள்ளது.

அதற்காக 2 வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை தொடர்பு கொள்ளவுள்ளதாக நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2021 மே 19 அன்று கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல், 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு இருந்த போது, ​​மே 20 அன்று தீ விபத்துக்குள்ளானது.

யாழ். நெடுந்தீவில் ஐவர் படுகொலை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்..

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே அடையாளம் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கு கிழக்கில் 25ஆம் திகதி ஹர்த்தால் : 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ் விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவமயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த கதவடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

இவ் ஊடக சந்திப்பில் தமிழரசிக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா, டெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி வேண்டி நிற்பவர்களுடன் அமெரிக்கா ஐக்கியமாக நிற்கிறது-ஜூலி சுங்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் அமெரிக்கா கெளரவிப்பதோடு, நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஐக்கியமாக நிற்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் செய்தியில், “நான்கு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை இன்று நான் நினைவுகூர்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் அமெரிக்கா மரியாதை செலுத்துகிறது. நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஐக்கியமாக நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வர்த்தக அமைச்சர் – இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்துள்ளார்.

புதுடில்லியில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் 20.03.2023 இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கடந்த பெப்ரவரியில் அவர்கள் இருவரும் கலந்துரையாடிய விடயங்களின் மேம்பட்ட சந்திப்பாகவே இது அமைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு தரப்பு வர்த்தகத்தின் விரிவாக்கம், இலங்கை இடையே ரூபா வர்த்தகத்தை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சியில் வகிக்கக்கூடிய முக்கிய பங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும்

எதிர்காலத்தில் திட்டமிட்ட கலந்துரையைாடல்கள் மூலம் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதாக இருந்தால் அதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

தற்போதுள்ள அரசாங்கத்தில் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். அதனால் இதுவும் ஒரு தேசிய அரசாங்கம்தான் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் திட்டமிட்ட கலந்துரையைாடல்கள் மூலம் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த- இந்திய தூதுவர் கோபால் பாக்லே இடையே சந்திப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று வியாழக்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்கு இந்தியாவின் ஆதரவு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவுக்கு இந்தியா துணைநிற்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இந்திய முதலீடுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

நட்பு ரீதியிலும் சுமுகமான சூழ்நிலையிலும் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.