ஆக்கிரமிப்புக்களை எதிர்த்து வடக்கு கிழக்கில் போராட்டம்

வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா, பச்சனூர்மலை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் மத வழிபாட்டு இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோரி வடக்கு கிழக்கில் போராட்டம் இடம்பெறவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, காணிகள் ஆக்கிரமிப்பை கைவிடக்கோரியும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தினை அமுலாக்கப்படுவதை நிறுத்துமாறும் இந்தப்போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளதாக கூறினார்.

ஆகவே குறித்த போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன ஆதரவினை வெளியிட்டுள்ள என்றும் அதேபோன்று வடக்கு, கிழக்கு வாழ் ஒட்டுமொத்த தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப் படுகொலையை எதிர்த்து பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ரெலோவின் ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்

தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இடம்பெறவுள்ளது.

ஆளும்தரப்பில் இருந்து எதிர் தரப்பில் இருந்து பல அனுபவமிக்க அரசியல்வாதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகியவர்களும் அரசாங்கத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி 30 அமைச்சர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும்

உள்ளூராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கையை கையளித்ததன் பின்னர், மக்களுக்கு அறிவிப்பதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நாளை தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்

வவுனியாவில் சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக வவுனியாவில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வவுனியாவில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில் இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பதிய மாக்ஸிஸ லெனினிச கட்சி என்பனவும் கலந்துகொள்ளவுள்ளது.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், காணி ஆக்கிரமிப்புக்கள், தமிழர் பாரம்பரியங்களை அழிக்கும் செயற்பாடுகள் உட்பட அரசியல் தீர்வு விடயங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான கட்டமைப்பாக இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கொழும்பு – யாழ் ரயில் சேவை 2024 ஜனவரியில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சீரமைப்புப் பணிகளால் இச்சேவை இரத்து செய்யப்பட்டது.

இதனால் கடந்த ஜனவரி 5ம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை, எதிர்வரும் ஜுன் மாதம் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மஹவ முதல், அநுராதபுரம் வரையிலான ரயில் மார்க்கம் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் கோட்டை முதல் காங்கேசன்துறை வரையிலான நேரடி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும்

இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா முயற்சி

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடற்படை இருப்பு மற்றும் மூலோபாய மேற்பார்வையை எதிர்கொள்ளும் நோக்கில், இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ரேடார் தளம், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய சொத்துக்களை மதிப்பீடு செய்யும் என எக்கனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கி.மீ. தொலைவில் உள்ள இலங்கையின் டோண்ட்ரா விரிகுடாவின் காடுகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வரை மேற்பார்வையை விஸ்தரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எச்சரிக்கையையும் மீறி கடந்த ஆண்டு, சீனக் கப்பலை எரிபொருள் நிரப்புதல் மற்றும் தளவாடப் பொருட்களுக்காக ஆறு நாட்கள் ஹம்பாந்தோட்டையில் நிறுத்த இலங்கை அனுமதித்தமை குறித்தும் இந்தியா கடும் கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளை புத்துயிர்பெறச் செய்ய முயற்சித்த ஒருவர் சென்னையில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளை புத்துயிர்பெறச் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சென்னையில் ஒருவரை கைது செய்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தக மோசடியை ஒடுக்கும் நடவடிக்கையில், சென்னையில் சந்தேக நபர்களுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.

இந்த சோதனையின் போது ஏராளமான பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள், போதைப்பொருள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் தேசிய புலனாய்வு மையம் கைப்பற்றியுள்ளது.

2022 ஜூலை இல் இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை தொடங்கியது தேசிய புலனாய்வு மையம் இதுவரை 14 நபர்களை கைது செய்துள்ளது.

சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டதில் 6.8 மில்லியன் இந்திய ரூபாய், 1,000 சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் ஒன்பது தங்க கட்டிகளும் அடங்குவதாக தேசிய புலனாய்வு மையம் கூறியுள்ளது.

சோதனைகளை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலங்கை அகதி ஒருவரின் சார்பாக போதைப் பொருள் வர்த்தகத்தை நிர்வகித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் போன்று சீனா ஏனைய நாடுகளுக்கும் உதவ வேண்டும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு உதவியதை போன்று ஜாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுக்கும் சீனா உதவ வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த மாதம் சீனாவுக்குச் சென்றிருந்த கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சீனாவின் உயர்மட்ட பொருளாதார அதிகாரி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசிய அவர், கடன் நிவாரண விடயத்தில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜி20 நாடுகளின் பொதுவான கட்டமைப்பின் கீழ் உதவி கேட்ட பொருளாதார சரிவை சந்தித்த நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் சீனா ஏற்படுத்திய தாமதம் அமெரிக்கா உள்ளிட்ட பிற மேற்கத்திய நாடுகளினால் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஜி20 கட்டமைப்பின் கீழ் உதவிக்கு தகுதியில்லாத நடுத்தர வருமான நாடான சாட் மற்றும் இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் துண்டாடுதல் ஆகியவை நிதி ஸ்திரத்தன்மை அபாயங்களை அதிகரிக்கலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.

இலங்கை வாழ் இந்துக்களுக்காக டெல்லியில் போராட்டம்

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பழமையான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களை இடித்து, இந்து தமிழ் சமூகத்தின் கலாசார இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் செய்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

இதுபோன்ற செயற்பாடுகள் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல் என இந்து இயக்கத்தின் சர்வதேச தலைவர் ஸ்ரீ அருண் உபாத்யாய் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இந்த பிரச்சினையை இந்திய அரசு உணர்ந்து, இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சிறுபான்மையினரை இலக்கு வைக்க உதவும்

தற்போதைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கண்டனங்கள் எழுந்ததை தொடந்து அரசாங்கம் முன்னேற்றகரமான சட்டத்தை கொண்டுவருவதாக உறுதியளித்தது,ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு பதில் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணத்தை அதிகரித்துள்ளது ஒன்றுகூடல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றிற்கான உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அமைதியான விதத்தில் தன்னை விமர்சிப்பவர்களையும் சிறுபான்மை சமூகத்தவர்களையும் இலக்குவைப்பதற்கான கடுமையான சட்டங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

உடன்படமறுப்பவர்கள் மீதான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையும் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்துவைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தற்போதைய பயங்கரவாத தடை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும் உத்தேச சட்டம் மூலம் உள்ள ஆபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்