மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட கோரிக்கை

நாட்டு மக்கள் வாக்குரிமையை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்தவெள்ளம் ஓடும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.தேர்தலை நடத்த மகா சங்க சபையை கூட்டி சங்க பிரகடனத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி அஸ்கிரி, மல்வத்து, ஆகிய பீடங்களிடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தேசிய பிக்கு முன்னணியினர் வியாழக்கிழமை (02) அஸ்கிரிய மற்றும் மல்வத்து ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இச்சந்திப்பு தொடர்பில் தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வக்கமுல்ல உதித தேரர் குறிப்பிட்டதாவது,

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த அரசியலமைப்புக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுத்த போது ‘நாட்டில் தேர்தல் இல்லை, தேர்தலுக்கான அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக இல்லை’ என குறிப்பிட்டு நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் போது நாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

வரலாற்றில் பல சம்பவங்கள் அவ்வாறு பதிவாகியுள்ளன. வாக்குரிமையை கோரி மக்கள் வீதிக்கு இறங்கும் போது அரசாங்கம் மிலேட்சத்தனமான தாக்குதலை மேற்கொள்கிறது. கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நாட்டு மக்கள் வாக்குரிமை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும். ஆகவே நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.

இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஏற்கெனவே ஒரு வருடம் பிற்போடப்பட்டது. இந்த தேர்தலை மீண்டும் பிற்போட இடமளிக்க முடியாது.

உள்ளுராட்சின்றத் தேர்தலை விரைவாக நடத்த ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு வலியுறுத்தி மகாநாயக்க தேரர்களிடம் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் சகல பௌத்த மத பீடங்களையும் ஒன்றிணைத்து மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும், இரண்டாவது மாகாண மற்றும் உள்ளுராட்சிமன்ற அடிப்படையில் பௌத்த தேரர்களை ஒன்றிணைத்து விசேட கூட்டத்தை நடத்த வேண்டும் மூன்றாவது, செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தை சங்க பிரகடனமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

உள்ளுராட்சிமனற்த் தேர்தலை நடத்துமாறு ஆட்சியாளர்களுக்கு வழங்கும் யோசனைகள் செயற்படுத்தப்படாவிடின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு மகாநாயக்க தேரர்கள் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

குழந்தைகளுக்கு வழங்கும் உணவை குறைக்கும் இலங்கை குடும்பங்கள் – Save the Children

இலங்கையில் உள்ள அரைவாசிக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சேவ் தி சில்ரன்(Save the Children) மேற்கொண்ட ஆய்வில் வெளிவந்துள்ளது.

நாட்டின் பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட பட்டினி நெருக்கடியால் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனைத் தடுப்பதற்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்றுவதற்கும் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தற்போதிருந்தே செயற்பட வேண்டுமென சேவ் தி சில்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன் இலங்கை அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதிலிருந்து, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் நெருக்கடி, பற்றாக்குறை மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகள் குடும்பங்களில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

உலக வங்கியின் கூற்றுப்படி, உலகில் மிகவும் உயர்ந்த உணவுப் பணவீக்க உடைய நாடுகள் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் உள்ளது.

பணவீக்கத்தின் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் சராசரி குடும்பச் செலவு 18 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் இந்தக் கால கட்டத்தில் குடும்பங்களில் 23 வீத அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் பெரும்பாலான அல்லது அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது போனதாகவும் இலங்கையில் 9 மாவட்டங்களில் உள்ள 2,308 குடும்பங்களில் சேவ் தி சில்ட்ரன் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இவ்வாறான நிலையில், அதிகமான குடும்பங்கள் உயிர்வாழ்வதற்கான வேறு தேவைகளை நாடவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர்.

கடந்த காலங்களில் குடும்பங்களில் 24 வீத அதிகரிப்பையடுத்து, வீட்டுச் செலவுகளை ஈடுசெய்வதற்காக கடன் வாங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளதாகவும், உணவுகளை கடனுக்கு பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வீட்டு உபயோகப் பொருட்களை பணத்திற்கு விற்கும் நிலையில் 28 வீதமான குடும்பங்கள் காணப்படுகவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவை என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் பெண்கள் கடத்தல் அல்லது சுரண்டல், கூடுதல் நேரம் வேலை செய்வது மற்றும் சில சந்தர்ப்பங்களில் வேலைக்காக இடம்பெயர்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால்,  குழந்தைகள் தனிமையில் விடப்பட நேருவதால், அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என சேவ் தி சில்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரைவாசிக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உணவு உட்கொள்ளும் அளவைக் குறைப்பதாகக் கூறினாலும், 27 வீதமானவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கான உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர். பத்தில் ஒன்பது குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு போசாக்கான உணவுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளன.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 70 வீதமான  குடும்பங்கள் தங்களது வருமான ஆதாரங்களில் அனைத்தையும் அல்லது பெரும்பாலானவற்றை இழந்துள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இவற்றில், அரவாசிக்கும் மேற்பட்ட அதாவது 54 வீதமான குடும்பங்கள் தற்போது தங்களது  குடும்ப வருமானத்தை பருவகால தொழில்களின் அடிப்படையிலும் ஒழுங்கற்ற வேலைகளின் மூலமும் பெற்றுக்கொள்கின்றன. இந்த உறுதியற்ற தன்மை குழந்தைளுக்கான அடுத்தவேளை உணவுகளை எங்கிருந்து பெற்றுக்கொள்வது என்று என்று தெரியாத ஒரு ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்வதாக சேவ் தி சில்ரன் அமைப்பு குறிப்பட்டுள்ளது.

 

இது குறித்து சேவ் தி சில்ட்ரனின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா கூறுகையில்,

“ இந்தப் புள்ளிவிபரங்கள், இலங்கையின் நெருக்கடி எவ்வாறு கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது என்பதையும், எந்தவொரு நெருக்கடியையும் போலவே, குழந்தைகள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம், போஷாக்கு மற்றும் எவ்வாறு சுமைகளைத் தாங்குகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

கல்வி நடவடிக்கைகள் ஆபத்தில் உள்ளன. இந்த குழந்தைகள் நாட்டின் போருக்குப் பிந்தைய தலைமுறையாக நம்பிக்கையுடன் பிறந்தனர் ஆனால் நாங்கள் மீண்டும் தோல்வியடையும் அபாயத்தில் இருக்கிறோம் என்பதை காட்டுகின்றது.

 

“ இங்கு நாம் காணும் அனைத்தும் ஒரு முழுமையான உணவு நெருக்கடியின் உண்மையான ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றன. இலங்கை அரசாங்கம் சில குடும்பங்களுக்கு நலன்புரி திட்டங்கள் மூலம் மிகவும் தேவையான ஆதரவை வழங்கி வருகிறது, ஆனால் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் சமூக பாதுகாப்பு அமைப்புகளை விரைவாக கட்டியெழுப்ப வேண்டும். இது ஒரு அவசர காலநிலை என்பதுடன் இதற்கு அவசரமாக பதில் தேவைப்படுகிறது.”

அனைத்து மனிதாபிமான தலையீடுகளின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதற்கு சமூகங்களின் பாலின இயக்கவியலில் காரணியாக இருக்க வேண்டும் என  சேவ் தி சில்ட்ரனின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா  மேலும் கூறினார்.

மஹிந்த தேசப்பிரிய தேர்தல் ஆணைக்குழு உறுப்புரிமைக்கு விண்ணப்பம்

அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் கோரும் பணி முடிவுற்றுள்ளதாகவும் புதிய உறுப்பினர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலையில் புதிய கட்டுமானம் தொடர்பில் பொலிஸ்,தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக நீதிமன்ற அவதானிப்புக்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி இடம்பெற்று வரும் கட்டுமான பணிகள் தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்க்கனவே இருந்த AR/673/18 வழக்கானது இன்றையதினம் (02)நகர்த்தல் பத்திரம் இணைத்து நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிபதி ரி.சரவணராஜாவினால் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக நீதிமன்ற அவதானிப்புக்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளையாக்கி வழக்கு விசாரணைகளை 30.03.2023 திகதிக்கு தவணையிட்டுள்ளார்.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக செயற்ப்பாட்டாளர் ஞா.யூட் பிரசாந் ஆகியோர் இன்று வழக்கு தொடுனர்கள் சார்பில் முன்னிலையாகினர்.

இவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.தனஞ்சயன், சுபா விதுரன், ருஜிக்க நித்தியானந்தராஜா உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் ஆறுபேர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை கேட்ட நீதிபதி இவ்வாறு கட்டளையை பிறப்பித்தார் குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தொடுனர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி வி.எஸ்.தனஞ்சயன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் AR /673/18 என அழைக்கப்படும் குருந்தூர் மலை வழக்கில் நகர்த்தல் பத்திரம் இணைத்து கௌரவ நீதிமன்றத்திற்கு சமர்பணம் செய்துள்ளோம்.ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் கௌரவ நீதிமன்றமானது மூன்று திகதிகளில் கட்டளையினை வழங்கியுள்ளது இறுதியாக 24.11.2022 அன்று கட்டளை வழங்கியது அதில் 12.06.2022 ஆம் ஆண்டு ஆலய சூழல் கட்டுமானங்கள் எவ்வாறு இருந்ததோ அந்த கட்டுமானங்கள் அவ்வாறே இருக்கவேண்டும் என்றும் மேலதிகமாக கட்டுமானங்கள் எவையும் இடம்பெறக்கூடாது என்று கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த கட்டளையினை மீறி தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களத்தினாலும், குறித்த ஆலயத்தினை சார்ந்த விகாராதிபதியாலும் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் ஒத்துழைப்புடன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக நாங்கள் புகைப்பட சாட்சிகள் ஊடாகவும் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையினை மீறி தற்போது கட்டுமானங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது என்கின்ற அடிப்படையில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகளுடன் சமர்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சமர்பணத்தில் குறிப்பிட்ட கட்டளையினை மீறும் வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற செயற்பாடானது நீதிமன்றத்தில் பொதுமக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையினை பாதிக்கும் செயற்பாடாக இருக்கின்றது என்றும் விசேடமாக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இதனை கேட்ட நீதிபதி அவர்கள் இது தொடர்பிலான மேலதிக அறிக்கை சமர்ப்பிக்க முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தொல்பொருள் திணைக்கள தலைவருக்கும் அறிவித்தல் அனுப்பியுள்ளார்.

மீளவும் இந்த வழக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி அழைப்பதற்காக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது அன்று பொலிஸ் பொறுப்பதிகாரியும் தொல்பொருள் திணைக்களத்தின் தலைவரும் சட்டவிரோதமாக மேலதிகமாக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதா அங்கு மேம்படுத்தல் வேலைகள் நீதிமன்ற கட்டளையினை மீறி இடம்பெற்றதா என்பது தொடர்பில் அவர்கள் பதிலை வழங்குவதற்கா குறித்த திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது என்றார்.

இலங்கைக்கான உதவி குறித்து மூத்த இராஜதந்திரி சர்வதேசநாணய நிதியத்துக்கு எச்சரிக்கை

ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைக் குறிப்பிடவேண்டாமெனவும், தேர்தலொன்றின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் எனவும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் முன்னாள் இராஜதந்திரியுமான மார்க் மலோச்-பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘தேர்தலை நடாத்தவேண்டமென எதிர்க்கட்சியில் பலர் எம்மிடம் கூறியிருக்கின்றார்கள்.

தேர்தலை நடாத்துவதற்கான திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி எம்மால் பணத்தை அச்சிடமுடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிஷான் டி மெல், ‘தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை அரசாங்கத்தினால் வழங்கமுடியாமல் இருப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே காரணமென ஜனாதிபதி கூறுகின்றார்.

தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை வழங்குவதற்கு அரச திறைசேரி மறுப்பதன் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்படும் விவகாரத்தில் சர்வதேச நாணய நிதியம் பலிகடாவாக மாற்றப்படும் சம்பவத்தை இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நிஷான் டி மெல்லின் டுவிட்டர் பதிவை மேற்கோள்காட்டி, உலகளாவிய ரிதீயில் தமது மக்களுக்குப் பொறுப்புக்கூறத்தக்க அரசாங்கத்தைக்கொண்ட ஜனநாயக நாடுகளைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு பணியாற்றிவரும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷனின் தலைவரும் ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம், உலக வங்கி உள்ளிட்ட முக்கிய சர்வதேசக்கட்டமைப்புக்களின் முன்னாள் பிரதிநிதியுமான மார்க் மலோச்-பிரவுன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் ஒருபோதும் அமையாது என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள மார்க் மலோச்-பிரவுன், தற்போது நாடு மிகமுக்கியமான தருணத்திலுள்ள நிலையில், வாக்களிப்பின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய உதவியைப்பெற பூரண ஒத்துழைப்பை வழங்க சீனா தயார்

இலங்கை கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாகவும், அதனை முன்னிறுத்தி சர்வதேச நாடுகள் மற்றும் நிதியியல் கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை முகங்கொடுத்திருக்கும் குறுங்காலக்கடன் மீள்செலுத்துகை நெருக்கடிக்குத் தீர்வை வழங்கும் நோக்கில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை மீளச்செலுத்தவேண்டியுள்ள கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்குவதாகக் குறிப்பிட்டு சீன ஏற்றுமதி – இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) நிதியமைச்சிடம் நிதியியல் ஒத்துழைப்பு ஆவணமொன்றை வழங்கியிருப்பதாக மாவோ நிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவிகோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அச்செயன்முறைக்கு உதவுவதாக எக்ஸிம் வங்கி நிதியமைச்சிடம் சமர்ப்பித்த ஆவணத்தில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மாவோ நிங், அனைத்து வர்த்தகக் கடன்வழங்குனர்களும் ஒத்தவிதத்திலான கடன்சலுகைகளை வழங்கவேண்டும் என்றும் உதவிகளை ஒருங்கிணைப்பதற்குப் பல்தரப்புக்கடன்வழங்குனர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

‘சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அதன் தற்போதைய கொள்கையையும் கடன்சார் விவகாரங்களில் அதன் நிலைப்பாட்டையும் அடிப்படையாகக்கொண்டவையாகும். அதேவேளை இந்த நடவடிக்கைகள் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பிரதிபலிக்கின்றது.

இலங்கை கடன் ஸ்திரத்தன்மையை அடைந்துகொள்வதற்கு உதவுவதில் சீனா கொண்டிருக்கும் அக்கறை மற்றும் கடப்பாடு ஆகியவற்றையே அதன் நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன’ என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடியை உரியவாறு கையாள்வதை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட அனைத்து நிதியியல் கட்டமைப்புக்களுடனும் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் மாவோ நிங் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு தற்போதைய நெருக்கடிநிலையிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கும், அதன் கடன்நெருக்கடியைக் குறைப்பதற்கும், இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதை உறுதிசெய்வதற்கும் உதவுவதில் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களுடன் கூட்டாக இணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் சீன வெளிவிவகாரப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

2022 டிசம்பர் மாதம், யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும், சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ.ஆனோல்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரது நியமனம் குறித்த கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் தனது 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது சமர்ப்பிப்பிப்பைக் கடந்த 14 ஆம் திகதி நடாத்தியிருந்தார். அந்த  பாதீடு சமர்ப்பிப்பு உறுப்பினர்களுக்கிடையிலான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.

அதன் பின் பாதீட்டின் இரண்டாவது வாக்கெடுப்பு  கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வாக்கெடுப்பிலும் ஆனோல்ட் சமர்ப்பித்த பாதீடு 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக் காலம் 2022 மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி மேலும் ஒரு வருட காலத்துக்கு – எதிர்வரும் மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டிருந்தன. இந்த நீடிப்பின் படி, எதிர்வரும் மார்ச் 19 வரை சபை நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்காகப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காகவே தேர்தல் நடாத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி சபைகளின் ஆயுட் காலம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பது பற்றி அமைச்சரவை மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது. உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோக பூர்வ பதவிக் காலத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு புதிய அணுமின் நிலையம்

இலங்கைக்கு விரைவில் அணு உலைகள் ஊடாக மின்வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை அணு சக்தி சபையின் தலைவர் எஸ்.ஆர்.டீ.ரோசா தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக அணுசக்தி சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர் ரஷ்ய அரசாங்கத்துடன் கதைத்து இலங்கையில் 100 மெகாவோட் மின்சாரத்தை பெறும் வகையிலான சிறிய அணு உலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் விடுவிக்க கோரிய மைத்திரியின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்படுத்தப்பட்டு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங் குணவர்தன ஆகிய  இருவரடங்கிய நீதிபதிகள்  குழு முன்னிலையில் புதன்கிழமை (1) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து , அவற்றிலிருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த மேன்முறையீடு  மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதற்கமைய போதுமான புலனாய்வு தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை  தடுக்க  தவறியதன் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள்  தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர்  அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 12ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்டுமெனவும்  முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவையும் , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவையும் , சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாணய நிதியத்தின் கடனுதவி குறித்து உன்னிப்பாக அவதானம் – ஐரோப்பிய முதலீட்டு வங்கி

இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் உதவி தொடர்பில் கண்காணித்துவருவதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுக்குழுவின் தலைவர் கிரேஸ் ஆசீர்வாதம் ஆகியோருக்கு இடையில் லக்ஸம்பேர்க்கில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கிரேஸ் ஆசீர்வாதம் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஏற்றுமதியை மையப்படுத்திய போட்டித்தன்மைவாய்ந்தும், சூழலுக்கு நேயமானதும், தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு கொள்கை தொடர்பிலும் அவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு எடுத்துரைத்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பிலும், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி குறித்தும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் 50 மில்லியன் யூரோ நிதியுதவியில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் கழிவுநீர் முகாமைத்துவ செயற்திட்டம் குறித்து பிரஸ்தாபித்துள்ள கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப்பெற்றவுடன் இலங்கையில் பசுமை செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியுதவிகளை வழங்குவது குறித்துத் தம்மால் பரிசீலனை செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.