பசில் ராஜபக்ச நாடு திரும்பினார்

ஒன்றரை மாதங்களின் பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர், இரட்டைக் குடியுரிமை கொண்ட பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றார்.

இந்நிலையில் பசில் ராஜபக்சவின் வருகையுடன் எதிர்வரும் தேர்தலுக்கான தமது கட்சியின் திட்டங்களை விரைவில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஆளும்கட்சி கூறியுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானங்களை அவர் எடுப்பர் என்றும் அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களில் ஒருவரான முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்சவை வரவேற்க முக்கிய அமைச்சர்களும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, நளின் பெர்னாண்டோ, திலும் அமுனுகம உள்ளிட்டோரும் கட்டுநாயக்க விமான நிலையதிற்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே ஒழுக்கமற்ற இராணுவம் இலங்கை இராணுவமே – கஜேந்திரன்

உலகிலேயே ஒழுக்கமற்ற இராணுவமாக தாம் இலங்கை இராணுவத்தையே பார்ப்பதாகவும்.உலகில் எங்கும் எந்த இராணுவமும் உயிர்நீர்த்தவர்களின் உடலங்களை கிளறி எறியவில்லையெனவும்.ஆனால் இலங்கை இராணுவம் அதனை முன்னெடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்கும் பணிகள் தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மாவீரர் பணிக்குழுவினர், பொதுமக்களின் பங்களிப்புடன் சிரமதான அடிப்படையில் புனரமைக்கப்பட்டுவருகின்றன.

அம்பாறை மாவட்ட கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்து துப்புரவாக்கப்பட்டது.

இதன்போது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ.கஜேந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், தவிசாளர்கள் உள்ளிட்ட குழுவினர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். மாவீரர் பணிக்குழுவினரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போ திருக்கோவில் பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் குறித்த சிரமதான பணியை இடைநிறுத்துமாறு கோரினர். இந்த காணி சிரமதானம் காரணமாக ஏதாவது இனப் பிரச்சினை எழும் எனவும் அதனால் இப்பணியை நிறுத்துமாறும் பொலிஸார் கோரினர்.

எனினும் “இது எமது மண்ணுக்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூருகின்ற நிகழ்வு. இது எமது உரிமை. இதில் எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை” என்று மக்கள் பிரதிநிதிகள் கூறியதையடுத்து பொலிஸார் அங்கிருந்துசென்றர். அதனை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த  கஜேந்திரன்,”இந்த மாதம் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவுகூரும் புனிதமான மாதம்.2009ஆம் ஆண்டு வரையில் இந்த நினைவேந்தல்கள் பாரியளவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுவந்தது.

2009 மே 18இல் எமது உரிமைப்போராட்டம் இன அழிப்பின் ஊடாக முடிவுறுத்தப்பட்ட நிலையில் வடகிழக்கிலிருந்த அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலுமிருந்த வித்துடல்கள் இராணுவத்தினால் கிளறி எறியப்பட்டன.அதன் பின்னர் பல துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்,பல துயிலுமில்லங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கமுடியாத வகையில் இலங்கை அரசும் அதன் இராணுவமும் புலனாய்வுத்துறையினரும் நெருக்கடிகளை வழங்கிவருகின்றனர்.அதனையும் தாண்டி எமது புனிதர்களின் நினைவுகூருவதை எமது மக்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

27ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூரும் வகையில் துயிலும் இல்லங்கள் பல்வேறுதரப்பினராலும் தூய்மைப்படுத்தப்பட்டுவருகின்றது.21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையில் மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்படும்.

சகல தடைகளையும் தாண்டி நினைவேந்தல் உரிமையினை உறுதிப்படுத்துவதற்கு,தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காகவும் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும் உயிர்தியாகம் செய்துள்ளார்கள்.அந்த இலட்சியத்தினை நாங்கள் முன்கொண்டுசெல்வோம் என்பதை உறுதிகொள்ளும் நாளாக இந்த நாள் அமையவேண்டும்.

21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையில் மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்படும்போது அந்த வாரத்தினை முன்னிட்டு தமிழர் தாயகப்பகுதியில் வீதியோரங்களை தூய்மைப்படுத்தி புனிதர்களின் நினைவு தினத்தை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கவேண்டும்.

இன்று பல மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவம் குடிகொண்டுள்ளது.வடகிழக்கில் உள்ள பல மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளனர்.அந்த இடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேவேண்டும்.இது இராணுவ ஒழுக்கமற்ற நடவடிக்கையினையே காட்டுகின்றது.இறந்தவர்களின் உடலங்களை கிளறி எறிந்ததாக உலகில் எந்த இராணுவமும் செய்ததாக நாங்கள் அறியவில்லை.

பிரித்தானியா இந்த நாட்டினை 150வருடத்திற்கு மேல் அடிமைப்படுத்தி வைத்திருந்திருந்தாலும் கூட தோற்கடித்த எமது மன்னர்களின் சிலைகளைக்கூடி நிறுவிவைத்துள்ளார்கள்.யுத்த மரபுகளை மீறியே யுத்ததினை செய்தது.யுத்தம் முடிந்த பின்னர் கூட உயிரிழந்தவர்களை நினைவுகூரமுடியாத வகையிலான அநாகரிமான செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றனர்.

இன்றும் துயிலும் இல்லங்களுக்கு மேல் அவர்கள் இருப்பதன் மூலம் உலகிலேயே ஒழுக்கம் அற்ற,நெறிகெட்ட இராணுவம் என்பதை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்திவருகின்றனர்.இந்த நிலைமை மாறவேண்டும்.

சர்வதேச சமூகம் இவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற்றவேண்டும்.தமிழினம் இந்த தீவிலே வாழும் வரைக்கும் நினைவேந்தல்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும்.வெறுமனே விளக்கேற்றுவதும் மாலைபோடுவதும் கடமையல்ல.அவர்களின் இலட்சியத்தினை அடைவதற்கு ஒவ்வொருவரும் நேர்மையாக செயற்படவேண்டும்.

ஒருபுறம் அரசாங்கத்தின் தோளில் கைகளைப்போட்டுக்கொண்டு,அவர்கள் போடும் எலும்புத்துண்டுகளுக்காக தமிழ் தேசியத்தினை நாங்கள் விற்ககூடாது.நாங்கள் அனைவரும் அந்த இலட்சியத்தினை அடைவதற்காக ஒன்றுபட்டு செயலாற்றவேண்டும்.” என்றார்.

அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்கள் வேண்டும் – பேராயர்

தற்போது நடைமுறையில் உள்ள இந்த நாட்டின் சட்டங்கள், ஒரு தனிநபருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு முழு தேசத்தையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 12 வீடுகளை கையளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் உண்மையான ஜனநாயகத்தை அனுமதிக்கும் புதிய அரசியலமைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சுதந்திரம் அடைந்து கடந்த 74 ஆண்டுகாலமாக மக்களுக்கு பொய்களை சொல்லி அவர்களை ஏமாற்றி அவர்கள் விரும்பியதைச் சாதிப்பதற்காக அரசியல் தலைவர்கள் சட்டத்தைக் கையாண்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

விடுவிக்கப்பட்ட அரசியற் கைதிளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்தல் – நிலாந்தன்.

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்காவைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருபத்தி மூன்று ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்து மதகுருவான ரகுபதி சர்மா அண்மையில் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவரோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட அவருடைய மனைவி வசந்தி சுமார் 15 ஆண்டுகளின் பின் குற்றமற்றவர் என்று நீதிமன்றினால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்டார். ரகுபதி சர்மா இப்பொழுது இரத்மலானையில் உள்ள உள்ள இந்துமா மன்றத்துக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் தங்கியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட காலத்திலிருந்து அவர் விடுதலையாகும் வரையிலும் அதற்கு பின்னரும் இந்து மாமன்றம் அவருக்கு பல விதங்களிலும் உதவி வருகிறது.

கைது செய்யப்படுகையில் அந்த ஐயரும் அவருடைய மனைவியும் இளம் தம்பதிகளாக இருந்தார்கள். அப்போதிருந்த அரசியல் சூழலில் அவர்களோடு சேர்ந்து தங்களை அடையாளப்படுத்த உறவினர்களும் விரும்பவில்லை. விடுவிக்கப்பட்ட வசந்தி சர்மா தனது பிள்ளைகளோடு வெளிநாட்டில் வசித்துவருகிறார். இப்பொழுதும் தனித்து விடப்பட்டிருக்கும் ஐயரை இந்து மாமன்றம் பராமரிக்கின்றது.

அவரைப் போல பல அரசியல் கைதிகள் சிறையில் இருந்த காலத்தில் அவர்களுடைய குடும்பங்கள் தனித்து விடப்பட்டன. உறவினர்களின் மனநலம் பாதிக்கப்பட்டது. குடும்பத்துக்குள் அமைதி குலைந்தது. சில குடும்பங்கள் பிரிந்தன. சில உறவினர்கள் மருந்தில் தங்கியிருக்கும் அளவுக்கு அவர்களுடைய மனநலம் கெட்டது. விடுவிக்கப்பட்ட எல்லா அரசியல் கைதிகளுக்கும் பொருத்தமான உதவிகள் பொருத்தமான நேரத்தில் கிடைத்தன என்று கூற முடியாது. இதுவிடயத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பொருத்தமான கட்டமைப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

அண்மை ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் அதிக தொகை கைதிகளுக்கு (16) பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது கோட்டாபய ராஜபக்ஷதான் என்பது ஒரு சுவாரஸ்யமான முரண். மேலும் தம்மை கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கைதிகளை விடுவிப்பதில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிகா குமாரரரணதுங்கவும் கைதிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டார்கள்.

இப்பொழுது அரசியல் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். மொத்தம் 33 கைதிகள் இப்பொழுதும் சிறையில் உள்ளார்கள். அவர்களில் இருவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

அரசியல் கைதிகளுக்காக தொடக்கத்தில் இருந்தே போராடியது அருட்தந்தை சக்திவேல் தலைமையிலான அரசியல் கைதிகளுக்கான தேசிய அமைப்பாகும். அண்மை ஆண்டுகளாக மற்றொரு அமைப்பு “குரலற்றவர்களின் குரல்” என்ற பெயரில் இயங்கி வருகிறது. இது அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட கோமகனின் தலைமையில் இயங்குகின்றது. இந்த அமைப்பில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து செயல்படுகிறார்கள்.

இப்பொழுது அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் ஒரு காலச் சூழலில் விடுவிக்கப்பட்ட கைதிகளின் அடுத்தகட்ட வாழ்க்கையை பாதுகாப்பானதாகவும் நிம்மதியானதாகவும் அமைத்துக் கொள்ளத்தக்க உதவிகள் அவர்களுக்கு தேவை.தமிழ்ச் சமூகம் இதுதொடர்பில் சிந்திக்க வேண்டும். அதற்குப் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடயத்தில் “குரலற்றவர்களின் குரல்” அமைப்பானது அண்மை காலங்களில் துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது. கைதிகளை எதுவிதத்திலாவது விடுவிப்பதே இவ்வமைப்பின் குறிக்கோளாகும். விடுவிக்கப்பட்ட கைதிகளின் நலன்களைக் கவனிப்பதற்கு அந்த அமைப்பிடமும் போதிய வளங்கள் இல்லை.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவும் தனி நபர்களும் அவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு உதவி வருகிறார்கள். குறிப்பாக “தோழமைக் கரங்கள்” என்ற புலம் பெயர்ந்த தமிழர் அமைப்பு கைதிகளுக்கு உதவி வருகிறது. அண்மையில் லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் பொது மன்னிப்பின் மூலம் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் ஒவ்வொருவருக்கும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஊடாக 25 லட்சம் ரூபாய்கள் வழங்கியிருந்தார். விடுவிக்கப்பட்ட கைதிகள் அல்லது புனர்வாழ்வின்பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்களுக்கு இதுவரை உலக நிறுவனங்களால் வழங்கப்பட்டிருக்கக்கூடிய இழப்பீட்டுத் தொகை எல்லாவற்றிலும் இது மிகப் பெரியது.

இது ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணம். புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் இருக்கும் பெரு முதலாளிகளும் நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் தனி நபர்களும் இதுபோன்ற விடயங்களில் எவ்வாறு பொருத்தமான விதங்களில் உதவி செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு எதையாவது செய்ய வேண்டும் என்ற தவிப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தம்மிடம் உள்ள வளங்களை கொண்டு எப்படி ஒரு தேசத்தைக் கட்டி எழுப்பலாம் என்று சிந்திக்க வேண்டும்.

தேசத்தை கட்டி எழுப்புவது அல்லது தேச நிர்மாணம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களைப் பலப்படுத்தி நீடித்திருக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதுதான்.இந்த அடிப்படையில் பார்த்தால் அரசியல் கைதிகள்,நில ஆக்கிரமிப்பு,காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு நீதி,முன்னாள் இயக்கத்தவர்களுக்கு வாழ்வாதாரம் போன்ற எல்லாவற்றிற்கும் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

தாயகத்தில் தேவை உண்டு. புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் போதிய அளவு வளமும்,நிபுணத்துவ அறிவும்,உதவி செய்ய வேண்டும் என்ற தவிப்பும் உண்டு. இரண்டையும் இணைப்பது தேச நிர்மாணிகளின் வேலை.

தாயகத்தில் நடக்கும் அரசியல் செயற்பாடுகள் முதற்கொண்டு ஆன்மிகச் செயல்பாடுகள்வரை அனைத்திலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கை இருக்கிறது. இதற்கு ஆகப்பிந்திய சில உதாரணங்களை இங்கு காட்டலாம்.

யாழ்ப்பாணத்தில் விழிப்புலன் மற்றும் செவிப்புலனை இழந்தவர்களுக்கான ஒரு நிறுவனம் “கருவி” என்ற பெயரில் இயங்குகின்றது. யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தால் விரும்பி நுகரப்படும் “சைன்” என்று அழைக்கப்படுகின்ற திரவ சவர்க்காரத்தை அந்த நிறுவனமே தயாரிக்கின்றது.அந்த நிறுவனம் தனக்கென்று ஒரு கட்டடத்தை கட்டுவதற்கு நீர்வேலியில் ஒரு காணியை வாங்கியுள்ளது. அதற்குரிய நிதி உதவிகளை புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகளே பெருமளவிற்கு வழங்கின.

அவ்வாறுதான் யாழ்ப்பாணத்தில் இயங்கும் மாற்றம் அறக்கட்டளை நிதியத்துக்கும் உதவிகள் கிடைக்கின்றன. போதைப் பொருள் பாவனையால் நோயாளிகளாக மாறியவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் அந்நிலையம் கத்தோலிக்கத் திருச்சபையால் பராமரிக்கப்படுகிறது. அங்கே பொருத்தமான வளங்களோ ஆளனியோ கிடையாது. ஒரு மத குருவும் ஒரு துறைசார் உழவள ஆலோசகரும் அவர்களுக்கு சில உதவியாளர்களும் மட்டுமே உண்டு. அரசாங்கம் அந்த நிறுவனத்துக்கு மருதங்கேணியில் 10 ஏக்கர் நிலத்தை வழங்கியிருக்கிறது. அந்த நிலத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழ் தரப்பு உதவியிருக்கிறது.

இவ்வாறு தாயகத்தில் தேவையான கட்டுமானங்களை உருவாக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ்து தரப்பு உதவமுடியும். அதை ஒரு கொடையாக அல்ல. தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகச் செய்ய வேண்டும். முதலீடு செய்வது அல்லது முதலீட்டை தேச நிர்மானத்தின் ஒரு பகுதியாகச் செய்வது. எல்லாவற்றையும் கட்டமைப்புக்களுக்கூடாகச் சிந்திக்க வேண்டும்.அரூபமாகக் கற்பனை செய்து கோஷங்களோடு வாழ முடியாது. யதார்த்தமான கட்டமைப்புகளை உருவாக்கி அவற்றை பலப்படுத்தினால்தான் தூலமாக ஒரு தேசத்தை நிர்மாணிக்கலாம்.

எல்லா வெற்றி பெற்ற சமூகங்களிலும் பிரமிக்கத்தக்க நிறுவன உருவாக்கிகளைக் காணலாம்.லாப நோக்கமற்ற நிறுவன உருவாக்கிகளால் ஒரு சமூகத்தை அதன் அடுத்த கட்ட கூர்ப்புக்கு எடுத்துச் செல்ல முடியும். தமிழ்ச் சமூகத்திலும் ஒரு காலகட்டத்தில் அவ்வாறு நிறுவன உருவாக்கிகள் தோன்றினார்கள். இந்து மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் உருவாக்கிய நிறுவனங்களின் விளைவாகத்தான் நவீன தமிழ்ச் சமூகம் உருத்திரண்டது. எனவே ஆயுத மோதலுக்கு பின்னரான ஒரு காலகட்டத்தில் சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்கும் தேசத்தை கட்டி எழுப்புவதற்கும் எப்படிப்பட்ட நிறுவனங்கள் கட்டமைப்புகள் தேவை என்று கண்டு அவற்றை உருவாக்க வேண்டும்.

அரசியல் கைதிகளுக்கான கட்டமைப்பு முதற்கொண்டு போதைப்பொருள் நோயாளிகளை பராமரிப்பதற்கான புனர்வாழ்வு அமைப்புகள்,தனித்து விடப்பட்ட முதியோரைப் பராமரிப்பதற்கான கட்டமைப்புக்கள் என்று எல்லாவற்றுக்கும் துறைசார் அறிவும் நவீன வளங்களும் தேவைப்படுகின்றன. அவையெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தாராளமாக உண்டு.எனவே தேவையையும் வளங்களையும் இணைத்து தேசத்தைக் கட்டியெழுப்ப அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டும்.

– நிலாந்தன்

ஜனாதிபதி மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம்!

னாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்து ரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னார் நகருக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

அதன் பின்னர், நடுக்குடா கடற்றொழிலாளர் கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கடற்றொழிலாளர் சமூகத்தவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

நடுக்குடா கடற்றொழிலாளர் கிராம மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தப்பட்டதோடு , அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன் காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி ,வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் மீது பயங்கரவாதச் சட்டம் : மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

யங்கரவாத தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு உட்பட்டவையாக அமையவேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதிலிருந்து அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதுடன் போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் இலக்குவைக்கப்பட்டு வருகின்றார்கள். அதுமாத்திரமன்றி மாணவ செயற்பாட்டாளர்களை தடுத்துவைப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகிய இருவரும் 90 நாட்களுக்கும் அதிகமான காலம் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை தொடர்ந்து தடுத்துவைக்குமாறு கடந்த வியாழக்கிழமை (நவ 17) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவ்விரு மாணவர்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி நேற்று வெள்ளிக்கிழமை (நவ 18) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1979ஆம் ஆண்டு ஒரு தற்காலிக நடைமுறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டமானது அப்போதிருந்து நபர்களை நீண்டகாலம் தன்னிச்சையாக  தடுத்துவைப்பதற்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அச்சட்டத்தின் பிரயோகத்தினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தை  சேர்ந்தவர்களாகவோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பவர்களாகவோ இருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்தபோது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்த ரணில் விக்ரமசிங்க, இப்போது ஜனாதிபதி என்ற ரீதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாணவர்கள் இருவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைப்பதற்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தும் அதேவேளை, அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு உட்பட்டவையாக அமையவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு இனப் பிரச்சினையே முக்கிய காரணம்- ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

தெற்கு அரசியலின் பலப் பரீட்சைக்காக உள்ளூராட்சி சபை தேர்தல் கோரப்படுகிறது. அதனை விடுத்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடிப்படை புள்ளியான மாகாண சபை தேர்தலை முதலில் நடத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (நவ 19) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இனப் பிரச்சினை தீர்வு

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் சிறந்த சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டது என்பதை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டையும் பெற்றுக்கொள்ளக்கூடிய திறமை கொண்டவர் நீங்கள்.

அவ்வாறு செயல்பட்டால் அதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க முடியும். தமிழர்கள் சந்தர்ப்பத்துக்கேற்ப சிந்திப்பவர்கள் அல்ல. எப்போதும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிந்திப்பவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. தமிழர்கள் சமஷ்டி தொடர்பில் எண்ணத்தை வெளியிட முன்பே அது தொடர்பில் தெரிவித்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க. 13ஆவது அரசியல் திருத்தத்தை நாம் கோரவில்லை. எனினும், 13 ப்ளஸ் வழங்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி, சமூக பாதுகாப்பு, திறந்த பொருளாதார முறை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

சமூக பாதுகாப்பு என்பது என்ன?

இன்றும் கூட ஜனநாயகத்துக்கு எதிராக நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு என கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இப்போது 40 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்த பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் தேவைதானா என்பதை உங்கள் சமூக பாதுகாப்பு என்பதன் அடிப்படையில் நான் கேட்க விரும்புகின்றேன். தேசிய பிரச்சினை தீர்வுக்காக எந்த அரசாவது முயற்சிகளை மேற்கொண்டால், உடனடியாக அப்போதுள்ள எதிர்க்கட்சி அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பும். இதுதான் வரலாறு. அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பலரும் தெரிவித்து, ஒரே நேர்கோட்டில் உள்ளமை வரவேற்கத்தக்கது. இந்த சந்தர்ப்பம் சரியாக பயன்படுத்தப்பட்டால், எமது அடுத்த வரவு செலவுத் திட்டம் இந்த நாட்டுக்கான சுபிட்சம் மிகுந்த வரவு செலவுத் திட்டமாக அமையும்.

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இனப் பிரச்சினையே முக்கிய காரணம். ஆணிவேரை விடுத்து பக்கவேரில் செயல்பட முற்படாதீர்கள். எமது மக்கள் எத்தகைய தியாகங்களுக்கும் தயார். ஆனால், நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அனைவருக்கும் சமமாக பகிரப்பட வேண்டும். இன, மத, மொழி ரீதியாக அன்றி சமமான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இவை எப்போதோ நடந்திருந்தால் எமது நாடு உண்மையில் ஆசியாவின் ஆச்சரியமாக திகழ்ந்திருக்கும். உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தேர்தல்களில் வெற்றி பெறுவோமா – தோல்வியடைவோமா என்று சந்தேகம் கொள்பவர்களால் ஜனநாயகம் நசுக்கப்படக்கூடாது.

நாட்டில் கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை.அது விடயத்தில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்கான முதல் அடிப்படை புள்ளியாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை கணக்கில் எடுக்கப்படாமல், தற்போது மாகாண சபை தேர்தல் தொடர்ந்தும் ஒத்திப்போடப்பட்டு வருகின்றது.

எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்றுள்ளார்கள். உள்ளூராட்சி சபை தேர்தல் தெற்கில் நடத்தப்படும் பலப் பரீட்சையாகவே அமையும். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தலின் நிலையை கண்டுகொள்வதற்காகவே இப்போது உள்ளூராட்சி சபை தேர்தலை கோருகின்றனர். வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு நான்கு வருடமும், கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு ஐந்து வருடமும் கடந்துபோயுள்ளன. இந்நிலையில் மாகாண சபை தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும். தற்போதைய எமது ஜனாதிபதி ஒரு ஜனநாயக கனவானாக இருந்தால், அவர் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்பே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ரணில்

காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்க உள்ளதாகவும் இதன்மூலம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றதுடன், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

மாகாணத்தில் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக வடமாகாணத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

செட்டிகுளம் பிரதேசத்தின் காணிப்பிரச்சினை தொடர்பில் மத்தியஸ்தம் செய்து 03 மாதங்களுக்குள் தீர்வுகாணுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பில் நீதியமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாண மக்களின் வீட்டுப் பிரச்சினை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும், அதற்கு மேலும் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடளாவிய ரீதியில் தற்போது பல வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா குளம் மற்றும் திருக்குளம் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகள் குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், உரப்பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் விநியோக நடவடிக்கைகளை சீர்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வடமாகாணத்தில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் கடும் முயற்சி – பீரிஸ்

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை தற்போது அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தற்போதைய பிரதமர் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது அந்த பதவிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

சமஷ்டியை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைப்பதற்காக கூட்டமைப்பு மற்ற கட்சிகளை விவாதத்திற்கு அழைத்தமை வரவேற்கத்தக்கது- கஜேந்திரகுமார் –

சமஷ்டியை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்திற்கு அண்மையில் அழைத்தமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இலங்கை நிலைமை தொடர்பாக இந்திய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.

அப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் பின்வருமாறு:

நவம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் தமிழ்க் கட்சிகளை இந்த வாரம் கலந்துரையாடலுக்கு அழைத்தார். அத்தோடு 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள தீவு நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அவர்களின் (தமிழர்களின்) நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்தார். எனினும் இந்தக் கூட்டத்திற்கான திகதியை இன்னும் பெறாத நிலையில் தமிழ் அரசியல்வாதிகள், இந்த உத்தேச சந்திப்புத் தொடர்பில் மிகவும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இலங்கைத் தலைவர்கள் பலர் கடந்த காலங்களில் தீவின் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் அவை எவையும் நிறைவேற்றப்படாமல் தவறாமல் தோல்வியில் முடிந்தன.

மிக சமீபத்தில் 2015 மற்றும் 2019 க்கு இடையில் ஆட்சியில் இருந்த மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம், புதிய அரசமைப்பை உருவாக்க முயற்சித்தது. ஆனால், பணியை முடிக்கவில்லை. இது அவர்களின் அரசை ஆதரித்த தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்துஇ நமது 75 ஆவது சுதந்திர தினத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு முனைப்புடன் முயற்சிப்போம். நம் நாட்டின் விஷயங்களில் மற்றவர்கள் தலையிடத் தேவையில்லை. எங்களுடைய பிரச்சினைகளை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகப்பெரிய குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது அழைப்பை வரவேற்றதுடன்இ முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் பல தசாப்தங்களாக பல்வேறு சிங்களத் தலைவர்களுடன் அரசமைப்புத் தீர்வொன்றை மேற்கொள்ள முயற்சித்து வரும் நிலையில், ஜனாதிபதியின் உறுதிமொழி இம்முறை உண்மையானதாக இருக்கும் என நம்புகிறார் எனத் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி அரசமைப்பை இல்லாதொழிப்பதற்கு தென்னிலங்கைத் தலைமை தயாராக வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒரு கூட்டாட்சி அமைப்பில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடைவதற்கான நோக்கத்தை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்வதால் இந்த வாரம் கலந்துரையாடலுக்கு அவர்களை (ஏனைய கட்சிகளை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைத்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி தமிழ்க் கட்சிகளின் கூட்டம் நடைபெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீவிரத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பும் அதேவேளையில் நாங்கள் அதை (தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தை) நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.

நவம்பர் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேநீர் விருந்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மேற்படி சந்திப்பு (தமிழ்க் கட்சிகளுடனான) சந்திப்புக் குறித்துத் தாம் நேரில் கேட்டார் என சுமந்திரன் கூறினார்.

ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் வருவதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார். அவர் அறிவித்த இந்த வாரச் சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது வேண்டுமானால் இந்த வாரம் சந்திக்கலாம் என்றார். இது அவரது பதில்கள் எதையும் தீவிரமாக செய்ய தீவிரத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது என்றார் சுமந்திரன் எம்.பி.

அதிக அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வின் தேவை இலங்கையில் இந்திய ஈடுபாட்டின் மையமாகவும் உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான தமது கடப்பாடுகள் குறித்து இலங்கையினால் அளக்கப்படக் கூடிய முன்னேற்றம் இன்மை குறித்து கவலையுடன் இந்திய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகள் அதன் போதாமைகளை அடிக்கடி சுட்டிக்காட்டினாலும், இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கும் அதேவேளையில்இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தலைமை தாங்கும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஷ்டியை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்துக்கு அண்மையில் அழைத்தது வரவேற்கத்தக்கது என்றார்.

அவரது பார்வையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தைக் கூட்டினாலும், சமஷ்டி அரசமைப்பின் அடிப்படையில் விவாதத்தை நடத்துவதற்கு அவர் வெளிப்படையாக உறுதியளிக்காத வரையில், ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியுடனான உரையாடலை நினைவுகூர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனாதிபதி சமஷ்டியை நிராகரித்தார் என்றார். அப்படியானால், நாம் அவருடன் என்ன பேசப் போகிறோம்? அவர் தனது அரசு சட்டபூர்வமானது நிலையானது. மேலும் அவர் அனைத்து நடிகர்களுடனும் பேசுகிறார் என்பதை உலகுக்கு காட்ட விரும்புகிறார். நாங்கள் பேச்சு மேசையில் இருப்பது அவருக்குத் தேவை.

அவர் ஜனாதிபதி தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உறுதிமொழியில் நேர்மையாக இருந்தால் சமஷ்டி என்பது இந்தப் பேச்சுக்களுக்கு முன் நிபந்தனையாக இருக்க வேண்டும். சிங்கள மக்களிடம் பொய் சொல்லாமல் அவர் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றார்.

தமிழ்க் கட்சிகளுக்கு ஜனாதிபதியின் அழைப்புக் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மகிழ்ச்சியடையவில்லை என்றாலும் இந்த ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி இலங்கைக்கு ஆன்மாவைத் தேடுவதற்கான உண்மையான வாய்ப்பை வழங்கியுள்ளது என்கிறார்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர்களின் கவலைகளைத் தீர்க்கமாக நிவர்த்தி செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.

தெற்கு மக்கள் ஏமாற்றமடைந்தனர் என உணர்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் தங்கள் பெயரில் போர் புரிந்ததையும் அவர்களின் பெயரில் இனவாதக் கொள்கைகளை கடைப்பிடிப்பதையும் அவர்கள் காண்கிறார்கள். ஒரு நாடாக நாம் இப்போது ஒன்றாகச் செயற்பட முடிந்தால் நாம் நிச்சயமாக விடயங்களைச் சரிசெய்ய முடியும் என்று அவர் கூறினார்.