வரி செலுத்தாமல் ஆடம்பர வாழ்க்கை வாழும் பணக்கார வர்க்கம் – சம்பிக்க

மக்கள் மீதான வரியை அதிகரிக்காமல் நாட்டின் வருமானத்தை 50 வீதத்தால் உயர்த்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கம்புருபிட்டியவில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் நேற்று(17) கலந்துக் கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வரி செலுத்தாமல் ஆடம்பர வாழ்க்கை வாழும் பணக்கார வர்க்கம் இந்த நாட்டில் இருப்பதாகவும், அந்த வகுப்பினரின் வருமானத்தை கண்டுகொள்ள அரசு பயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

செல்வந்தர்களின் வருமானம் பதிவாகும் வகையில் ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டால், புதிய வரிகள் தேவைப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தும் சுமார் 2,500 பேர் வரை இந்த நாட்டில் இருப்பதாகவும்,

அதில் சிக்காதவர்களும் சுமார் 2,500 பேர் இருப்பதாகவும்,

அவர்களின் உண்மையான வருமானத்தை இன்னும் ஒரு மாதத்தில் தெரிவிக்கும் முறையை தயார் செய்ய முடியும் என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை அனைத்து மக்களிடமும் பெறுமதிசேர் வரியை மாத்திரம் 30,000 ரூபா அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும்,

மக்களின் வருமானம் குறைந்துள்ள நிலையில் இவ்வாறான வரியை செலுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிய மட்ட போட்டியில் யாழைச் சேர்ந்த இளைஞன் சாதனை

மலேசியாவில் இடம்பெற்றுவரும் ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் சாதனை படைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் கடந்த 10ம் திகதி மலேசியாவின் ஜோகூர் பாருவில் ஆரம்பமாகியது.

இந்நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞனான சற்குணராசா புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியில் கலந்துகொண்டு இலங்கைக்கு பெருமை சேர்த்த புசாந்தனுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த புசாந்தன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தம்மிக்க பெரேராவை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை

பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  தம்மிக்க பெரேராவை   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள்  வெளிவந்துள்ளன.

பசில் ராஜபக்ஷவுக்குப் பின்னர் தற்போது வெற்றிடமாகியுள்ள பதவிக்கு தம்மிக்க பெரேரா பொருத்தமானவர் எனவும்  அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அரசியலமைப்பின்படி, அதன் அனைத்து   நிர்வாக  உறுப்பினர்களும் புதிதாக நியமிக்கப்பட வேண்டியுள்ளனர். இந்நிலையிலேயே தம்மிக் பெரேராவை தேசிய  அமைப்பாளராக நியமிக்குமாறு இந்தக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, வெற்றிடமாகவுள்ள தேசிய அமைப்பாளர் பதவிக்கு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவே பொருளாதார நெருக்கடியின் போது முதலில் உதவிக்கரம் நீட்டியது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்தியா ஒரு பிராந்திய தலைவர்மாத்திரமில்லை அதன் அண்டைநாடுகளிற்கு மிக முக்கியமான உயிர் நாடி என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சமீபத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இது வெளிப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நிறுவனங்கள் உட்பட ஏனைய உலகம் என்ன செய்வது என விவாதிக்கொண்டிருந்தவேளை இந்தியாவே உண்மையில் இலங்கைக்கு உதவமுன்வந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இந்தியா சாதித்துள்ள விடயங்கள் எங்களிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன் மூலம் இயல்பானநன்மையை பெற்றவர்கள் யார் என்றால் எங்களை சுற்றியுள்ள நாடுகளே

உங்களிற்கு தெரியும் கடந்த சில வருடங்களாக – நாங்களே கொவிட்டினால் நெருக்கடிகளை எதிர்கொண்டோம் என்றால் எங்களின் அயல்நாடுகள் மிகச்சிறியவை,அவர்களிடம் எங்களை போல கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் இருக்கவில்லை.

நாங்கள் முன்வந்து உதவியிருக்காவிட்டால் கொரோனா தடுப்பூசிகளை பெறும் விடயத்தில் அவர்கள் கைவிடப்பட்டிருப்பார்கள் .

இலங்கை போன்றதொரு நாடு மிகமோசமான ஆழமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது,

உதவிசெய்யவேண்டிய உலகமும் உலக நாடுகளும் நிறுவனங்களும் என்ன செய்வது என்ற தங்களிற்குள் விவாதித்துக்கொண்டிருந்தவேளை இந்தியாவே உதவி வழங்கியது.

எங்களின் நீட்டப்பட்ட கரங்களே இலங்கையின் இருண்ட தருணத்தில் முக்கியமான அவசியமான உதவியை வழங்கியது. நாங்கள் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தினோம்.

எங்கள் அயல்நாடுகளிற்கு சென்றவர்கள் ஏனைய மாற்றங்களை கட்டமைப்புமாற்றங்களை அவதானித்திருப்பீர்கள் -இடம்பெறுகின்ற ஆழமான மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள்,

உங்களால் இலகுவாக பயணம் செய்ய முடியும்,புகையிரதபாதைகள் ஏறு;படுத்தப்பட்டுள்ளன, அதிகளவு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன -அவர்களும் எங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏனைய பிராந்தியம் முழுவதையும் உயர்த்திவிடும் வளர்ச்சிப்பாதையில் செலுத்துவதில் உதவுகின்றது.

நெருக்கடியான தருணங்களில் உங்களிற்குஇந்தியா உள்ளது என்பதை அயல்நாடுகளிற்கு நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் தடுப்பூசியாகட்டும் உணவாகட்டும் நிதி உதவியாகட்டும அத்தியாவசிய பொருட்கள் ஆகட்டும்.

இது அயல்நாடுகளிற்கு பெரும் செய்தியை சிறந்த செய்தியை சொல்கின்றது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்காத பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சகலரையும் இந்த வாரத்துக்குள் சிறையில் அடைக்க வேண்டும். என்னிடம் பெயர் பட்டியல் இருக்கிறது.

அவ்வாறு செய்யவில்லை என்றால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என பதில் பொலிஸ் அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சகலரையும் இந்த வாரத்துக்குள் சிறையில் அடைக்க வேண்டும். என்னிடம் பெயர் பட்டியல் இருக்கிறது.

அவ்வாறு செய்யவில்லை என்றால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதோடு நாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலை நாட்டிலிருந்து ஒழிக்க அவ்வாறு செய்ய முடியாது என்பதாலேயே அவ்வாறு செய்கிறோம். பாடசாலைகளுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்ய எவரும் செல்ல முடியாது.

பாடசாலை ஆரம்பித்ததன் பின்னர் நல்ல வழியில் அல்லது கெட்ட வழியில் அதனை தடுப்பதற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம புறங்களில் வெள்ளை நிற ஆடை அணிந்திருக்கும் பலரே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை கைது செய்ய முடியாது என பொலிஸார் கூறுகின்றனர்.

அவர்கள் சமூகத்தில் பெரிய பொறுப்புகளிலும், சமூக செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்தவொரு சாட்சிகளும் இல்லை என கூறுகின்றனர்.

பொலிஸாருக்கு முடியவில்லை எனில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கூறுங்கள். அது முடியாமல் போனால் என்னுடைய வட்ஸ்அப் இலக்கத்துக்கு முறையிடுங்கள். நாம் நடவடிக்கை எடுப்போம். எதிர்காலத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சுமார் 1091 பேருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம் என்றார்.

தென்னிந்தியாவில் ஈழத்துச் சிறுமி சாதனை

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் “சரிகமபா” சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் ஈழத்து சிறுமி உதயசீலன் கில்மிசா வெற்றிப்பெற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியானது நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து கில்மிசா மற்றும் கண்டி, புஸ்ஸல்லாவை நயப்பனவிலிருந்து அசானி ஆகிய இருவரும் இந்நிகழ்சசியில் கலந்து கொண்டிருந்த நிலையில் இறுதிச்சுற்றுக்கு கில்மிசா தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரமாண்டமான இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட இளம் பாடகர்கள் ஆறுப்பேரில் வெற்றிப் பெற்ற கில்மிஷாவிற்கு இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாய் காசோலை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் வந்து வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

கில்மிசா யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு தரம் 8ம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றார். தன்னுடைய மூன்று வயதில் இருந்த பாட ஆரம்பித்த இவர் ஆரம்பத்தில் கோயில்களில் பஜனைப் பாடல்களை மாத்திரமே பாடி வந்துள்ளார். பின்னர் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் மூலம் தான் பாடகியாகியுள்ளார்.

இவர் சாரங்கா இசைக்குழு என்ற குழுவுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளில் படி இருக்கின்றார்.

இது தவிர இந்தியப் பாடகர்களான ரமணியம்மா, அஜய் கிருஷ்ணா, வர்ஷா ஆகியோருடனும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் பாடி இருக்கின்றார். அத்தோடு பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் நடந்த இசைக்கச்சேரிக்கு சரிகமப குழு வந்திருந்தார்கள். அவர்கள் தான் கில்மிசாவின் குரலைக் கேட்டு சரிகமப நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பினை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். கில்மிசாவுக்கு வைத்தியராக வேண்டும் என்பது தான் கனவு. அவர் பாடகியாகவும் இருந்து கொண்டு வைத்தியராகவும் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இவருக்கு நடனம் நடிப்பு எல்லாக் கலையும் தெரியுமாம். கலையுலகில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இவருடைய குடும்பமும் இவருக்கு முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கென்சர்வேட்டிவ் ஆட்சி அமைந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் நடவடிக்கை

கனடாவில் கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம், என கட்சியின் தலைவர் பியர் பொலியர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் கனடாவில் கென்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

1980களில் கனடாவிற்கு பெருமளவு புலம்பெயர்ந்த தமிழர்களை முதலில் வரவேற்றவர் கென்சவேர்ட்டிவ் கட்சியின் அப்போதைய பிரதமர் பிரையன் முல்ரோனி.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முதலில் சர்வதேச தடைகளை விதித்தது கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளாமல் வெளியேறி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அவமானப்படுத்தியது பிரதமர் ஹார்ப்பர் அரசாங்கமே.

இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசாங்க உறுப்பினர்களிற்கு எதிராக மக்னிட்ஸ்கி தடைகளை விதிப்பதே தற்பொது என திட்டம்,இதன் மூலம் சர்வதேச தடைகள் ஊடாக அவர்களது தனிப்பட்ட நிதிகளை முடக்கலாம்.

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம்,இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களை இனப்படுகொலைக்காக இனம்கண்டு சட்டநடவடிக்கைகளிற்கு உட்படுத்தலாம்.

தமிழர்களிற்கு எதிராக தொடரும் இனப்படுகொலை நடவடிக்கைகளிற்காக இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து கண்டிப்போம் தனிமைப்படுத்துவோம்.

எங்கள் மீது கல் வீசும் அனைவரையும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் – பசிலின் எச்சரிக்கை!

கற்களை எறிபவர்கள் அனைவரும் கவனிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நீங்கள் எப்படி வந்தாலும் , அதற்கு நாங்களும் தயார். வீதியில் ஓடும் நாயின் மீது கல் அடித்தால், அது குரைத்துக் கொண்டு வேகமாக ஓடிவிடும். ஆனால், சிங்கத்தை கல்லால் அடித்தால், சிங்கம் திரும்பி, யார் கல்லை அடித்தது என்று பார்க்கும். நாம் அப்படித்தான். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட. ”

“எங்களை வந்து கல்லால் அடிக்காதீர்கள். நாங்களும் பார்த்துக்கொள்கிறோம். ”

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த மாநாட்டுக்கு பாரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொது மாநாட்டில் அவ்வாறான உத்வேகம் இல்லாத காரணத்தினால் சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு மிகவும் பிரயத்தனப்பட்டு குழுவினர் அழைத்து வரப்பட்டதாகத் தோன்றியது.

மேலும், இந்த மாநாட்டில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, மீள உருவாக்கப்படும் பொதுஜன பெரமுன அரசாங்கம் இப்படி ஒரு தொய்வாக இருக்காது, துடிப்பான அரசாங்கமாக இருக்கும் என்றார்.

ஒவ்வோரு கிராமம் , நகரம் என எங்கு சென்று மேலே பார்த்தாலும், கீழே பார்த்தாலும், பூமிக்கு அடியில் பார்த்தாலும், மஹிந்த ராஜபக்ஷ செய்ததைத்தான் பார்ப்பார்கள் என்றும், வேறு யாருக்கும் உரிமை வழங்க வேண்டாம் என்றும் பசில் ராஜபக்ச கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச ஒழுக்கமான கட்சியை கட்டியெழுப்பியதுடன், கட்சி உறுப்பினர்களை முடிந்தவரை ஒழுக்கமாக நடந்து கொள்ளுமாறு கூறிய பசில், இதனை கோழைத்தனமாக கருத வேண்டாம் எனவும் ஏனைய கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கொழும்புக்கு வந்த கிராம மக்கள் குழுக்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்ப பாதுகாப்பு தரப்பினருடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிராமத்திற்குச் சென்ற தேசிய அமைப்பாளர் மஞ்சள் கோடு வழியாக தவிர , வேறு இடங்களால் வீதியைக் கூட கடக்க வேண்டாம் என்று கூறியதுடன், சமூக ஊடகங்கள் மொட்டு கட்சியினர் தவறு செய்யும்வரை காத்திருக்கின்றன என்றார் அவர்.

முல்லைத்தீவில் கனமழையால் 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் கதவுகளிலிருந்து நீர் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது.

எனவே தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட மிக பெரிய அழிவுகளை எதிர்நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் சற்று முன்னர் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுவதால் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு வான் கதவுகள் வழியே பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று காலை 9 மணி வரையான தகவல் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்த குளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 261 குடும்பங்களை சேர்ந்த 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 127 குடும்பங்களை சேர்ந்த 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 44 குடும்பங்களை சேர்ந்த 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான், மல்லாவி, யோகபுரம் கிழக்கு, புகழேந்தி நகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 86 குடும்பங்களை சேர்ந்த 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு மற்றும் தேவிபுரம் கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 177 குடும்பங்களை சேர்ந்த 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேரும், புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும், பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 55 பேருமாக 28 குடும்பங்களை சேர்ந்த 93 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்து விடைபெற்றார் கோபால் பாக்லே

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று வெள்ளிக்கிழமையுடன் அப்பதவியிலிருந்து விடைபெற்றிருப்பதுடன், அடுத்ததாக அவர் அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோபால் பாக்லே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராகக் கடந்த 2020 ஆம் ஆண்டு மேமாதம் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், அவரது காலப்பகுதியில் இலங்கை – இந்திய இருதரப்பு உறவில் பல்வேறு ‘மைல்கல்’ அடைவுகள் எட்டப்பட்டன.

குறிப்பாக கடந்த ஆண்டு இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் அவரது பதவிக்காலத்தில் இடம்பெற்ற இருதரப்பு உறவு சார்ந்த மிகமுக்கிய நகர்வாகும். அதேபோன்று திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடு, கடந்த ஆண்டு ஜனவரியில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சி என்பனவும் குறிப்பிட்டுக்கூறத்தக்க அடைவுகளாகும். அத்தோடு கோபால் பாக்லேவின் பதவிக்காலத்தில் கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்றிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கு உதவும் வகையில் சுமார் 25 டொன்களுக்கு மேற்பட்ட மருந்துப்பொருட்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் – 19 தடுப்பூசி, அன்டிஜன் பரிசோனை உபகரணங்கள், திரவ ஒட்சிசன் என்பன இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

மேலும் கோபால் பாக்லே உயர்ஸ்தானிகராகப் பதவிவகித்த காலகட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைப் பதிவுசெய்தன. புதுப்பிக்கத்த சக்திவலு உற்பத்தியில் ஒத்துழைப்பு, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை, வர்த்தக ரீதியான கொடுப்பனவுகளுக்கு இந்திய ரூபாவைப் பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதுமாத்திரமன்றி இலங்கையின் மிகமுக்கிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா எழுச்சியடைந்தது. இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் அடையாள செயற்திட்டம் போன்ற அபிவிருத்தித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இருநாடுகளுக்கும் இடையில் பல தலைமுறைகளாக நிலவிவந்த பௌத்தமதம் சார்ந்த தொடர்புகள் 15 மில்லியன் டொலர் நிதியுதவி, இலங்கையிலிருந்து குஷிநகருக்கு சர்வதேச விமானசேவை ஆரம்பிக்கப்பட்டமை, அதனூடாக சுமார் 100 பௌத்த பிக்குகள் குஷிநகருக்கு அழைத்துவரப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மீளப்புதுப்பிக்கப்பட்டன. அதுமாத்திரமன்றி சென்னை – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான கப்பல் சேவை போன்ற மாறுபட்ட நடவடிக்கைகள் மூலம் இருநாட்டுத் தொடர்புகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான அடுத்த இந்திய உயர்ஸ்தானிகராக சந்தோஷ் ஜா பொறுப்பேற்றுக்கொள்ளவிருக்கிறார். அவர் தற்போது பெல்ஜியம், லக்ஸம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத்தூதுவராகப் பதவிவகித்துவருகின்றார். சுமார் 30 வருடங்களுக்கும் மேலான இராஜதந்திர உறவுகள்சார் அனுபவத்தைக் கொண்டிருக்கும் அவர், பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.