திருகோணமலை மாணவர் படுகொலை – நீதி நிலைநாட்டப்படாமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை விசனம்

திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதுகுறித்து உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது.

செவ்வாய்கிழமையுடன் (2) ‘திருகோணமலை 5 மாணவர் படுகொலை’ இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலை நகரில் 5 தமிழ் மாணவர்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அதுகுறித்து உண்மை, நீதி நிலைநாட்டப்படுவதையும், இழப்பீடு வழங்கப்படுவதையும் உறுதிசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி முக்கிய ஆதாரங்கள் இருந்தபோதிலும், அது மூடிமறைக்கப்பட்டிருப்பதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

வருமான வரி பதிவு செய்யாதோரிடம் தண்டப்பணம் அறவிடுவது சட்டவிரோதம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

18 வயசுக்கு மேற்பட்ட வற் வரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தமது பெயர்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் தண்ட பணம் அறவிடப்படும் என்பது சட்டவிரோதம்.

ஏனெனில் இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்தைப் பெறுபவர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களாக கருத முடியாது.

வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் வரி செலுத்த முடியாது அவர்களின் வருமானம் அதிகரிக்கும் போது வரி செலுத்த முடியும் பதிவு செய்யவில்லை என தண்டம் அறவிட முடியாது.

அது மட்டுமல்லாது 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்யா விட்டால் 50ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்படும் என அறிவித்த அரசாங்கம் இவ்வளவு காலமும் வரி வருமானம் செலுத்தாதவர்களுக்கு என்ன தண்டம் என அறிவிக்கவில்லை.

ஆகவே இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்குவது நல்ல விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் என கூறுவது சட்ட விரோதம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிர்வாக கட்டமைப்பு விஸ்தரிப்பு

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிர்வாக கட்டமைப்பை மாவட்ட ரீதியாக விஸ்தரிக்கும் முதற்கட்ட செயற்பாடாக ஜந்து கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளர்கள் தெரிவு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது நேற்றைய தினம் (02) யாழ்,இணுவிலில் நடைபெற்றது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் (D.T.N.A) அங்கம் வகிக்கும் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் கட்சித் தலைவர்கள், கூட்டணியின் இணைத் தலைவர்களாகவும், கட்சிக்கு ஓர் செயலாளரும், பேச்சாளரும், பொருளாளரும்,தேசிய அமைப்பாளரும், துணைத் தேசிய அமைப்பாளரும் நியமிக்கப்பட்டு பதினைந்து பேர்கள் கொண்ட கட்சிக்கான உயர் பீடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை விஸ்தரிக்கும் பொருட்டே இந் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின், இணைத் தலைவர்களின் ஒருவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் ஆர்.ராகவன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளர் கு.சுரேந்திரன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொருளாளர் துளசி ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

அந்த வகையில் சி.சிவகுமார்,கே.என். கமலாகரன் (குகன்), பா.கஜதீபன், என்.விந்தன் கனகரட்ணம்,சபா குகதாஸ், தி.நிரோஷ், சு.நிஷாந்தன், ரா.இரட்ணலிங்கம், இ.பகீதரன், செ.மயூரன், கி.மரியறோசறி, கி.கணைச்செல்வன்,ஆ.சுரேஷ்குமார், ஜெ.ஜனார்த்தனன்,த.கோகுலன் போன்றோர் ஐந்து கட்சி சார்ந்த மாவட்ட இணைப்பாளர்களாகவும் குறித்த இணைப்பாளர்களுக்கு தலைமை தாங்கும் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான என்.விந்தன் கனகரட்ணம் நியமிக்கப்பட்டார்.

மேலும் கூட்டத்தில் தீர்மானங்களாக, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை மாவட்ட ரீதியில், அரசியல்,பொருளாதார,நிர்வாக ரீதியாக கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

கட்சியின் வேலை திட்டங்கள்

,அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட நிகழ்வுகளை, இணைந்து முனனெடுப்பதென்றும், குறிப்பாக சிங்களக் குடியேற்றம், பௌத்த மயமாக்கல், ஆக்கிரமிப்பு போன்றவற்றிற்கு எதிராக இணைந்து போராடுவது என்றும், மாவட்டத்திற்கு ஓர் அரசியல் பணிமனை திறக்கப்பட வேண்டும்.

நலிவுற்ற மக்களுக்கு உதவி திட்டங்களை முன்னெடுப்பது என்றும், கல்வி, கலாசார கட்டமைப்புகளை ஊக்குவிப்பதற்கு உழைப்பதென்றும்,மாவட்டத்தில் தொகுதி கிளை,கிராம மட்டத்திலான கட்சியின் கிளைகளை கட்டமைப்பது என்றும்,மகளிர் அணியை உருவாக்குவதென்றும் முதல் கட்டமாக இணைப்பாளர்களால் தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் வேலை திட்டங்கள் தொடர்பான ஊடகத் தொடர்புகளையும் சமூக வலைத்தளங்களின் கட்டமைப்புகளையும் இயக்குபவராக, இணைப்பாளரும் சட்ட பீட மாணவருமான ஜெ.ஜனார்த்தனன் மேற்கொள்வார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கட்சிகளின் இணைப்பாளர்கள் அனைவரும் கட்சியின் செயலாளர், கட்சியின் தேசிய அமைப்பாளர்,கட்சியின் துணை தேசிய அமைப்பாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து கட்சியின் நிர்வாக, அரசியல்,பொருளாதார மற்றும் கல்வி கலாசார புனரமைப்பு உதவி திட்ட,செயற்றிட்டங்களை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

‘ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவார்’

“ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதாக யார் தெரிவித்தாலும், தற்போதுள்ள செயற்பாடடு அரசியலில் அதற்கு

தகுதியானவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இல்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும். அதற்காக அந்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது” என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“நாடு வங்குரோத்து அடைந்தபோது நாட்டை பொறுப்பெற்க யாரும் முன்வரவில்லை. பல்வேறு காரணங்களை தெரிவித்துக்கொண்டு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் இருந்து நலுவிச்சென்றவர்கள் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாக தெரிவித்து வருகின்றனர்.

“ஆனால் நாடு வங்குராேத்து அடைந்தபோது, தனி நபராக இருந்துகொண்டு அந்த பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.

“அதேபோன்று நாட்டை கட்டியெழுப்ப சில கஷ்டமான தீர்மானங்களை தைரியமாக முன்னெடுத்தார். அதன் காரணமாகவே நாட்டை வங்குராேத்து நிலைமையில் இருந்து மீட்டு, மக்கள் ஓரளவேனும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியுமாகி இருக்கிறது.

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் அவருக்கும் இருக்கும் நீண்டகால தொடர்புகள் காரணமாகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமாகி இருக்கிறது.

“இவ்வாறான நிலையி்ல் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தற்போதுள்ள அரசியல்வாதிகளில் ரணில் விக்ரமசிங்கவை தவிர தகுதியான வேறு யார் இருக்கிறார் என கேட்கிறோம்.

“அத்துடன் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்கினால் அவருக்கு அனைத்து மக்களும் ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை பெற்றால், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க முடியும் என அந்த கட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

“என்றாலும் இதற்கு முன்னர் பொது வேட்பாளராக பலர் களமிறங்கி இருக்கின்றனர். அப்போது நாங்கள் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கிறோம்.

“அதேபோன்று அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவது நிச்சயமாகும். அது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் அவர்களின் இணக்கப்பாட்டை எமக்கு பெற்றுக்கொள்ள முயும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது” என்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, “நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்” என்றார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப்போவதாக தெரிவிப்பவர்களால் நாட்டில் என்ன செய்ய முடியும் என கேட்கிறோம். அத்துடன் யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்ஷ் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகொள்ளவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

“அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக தற்போது பலரும் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு தெரிவிப்பவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்ன செய்ய முடியும்?. இவர்களின் ஏமாற்று பேச்சுக்களுக்கு மக்கள் மீண்டும் ஏமாந்துவிடக்கூடாது.

“அதேநேரம் போராட்ட காலத்தில் மொட்டு கட்சி மக்களுக்கு அடிபணிந்து செயற்பட்டபோதும் சர்வதேசத்தின் கோரிக்கைக்கைக்கு அடிபணியாமல் எடுத்த தீர்மானத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.

Posted in Uncategorized

அநுரகுமாரவின் போர்ப் பிரகடனம்

நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள், இலங்கை அரசியல் அரங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு உக்கிரமான போரை உருவாக்கும் என

அநுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், தற்போது உருவாகியுள்ள அரசியல் முகாம்களும், அரசியல் பிளவுகளும் சாதாரணமானவை அல்ல. இம்முறை அரசியல் போரில் மக்கள் விடுதலை முன்னணி தோல்வியுற்றால், அது நாட்டையும் மக்களையும் மேலும் துயரத்திற்கு இட்டுச் செல்லும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் வெற்றி நாட்டை புதிய அபிலாஷைகளுடன் ஒரு பாதையில் வழிநடத்தும் என்றும் அவர் கூறினார்.

நீண்டகாலமாக அரசாங்கங்கள் கடைப்பிடித்து வரும் தோல்வியடைந்த பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக புதிய பொருளாதாரப் பயணத்தை உருவாக்கும் சித்தாந்தத்தை மக்கள் விடுதலை முன்னணி விவாதிக்கும் அதேவேளை, அரச சொத்துக்களை விற்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

சமூகக் குற்றங்களை எதிர்த்துப் போராடவும், ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை மாற்றவும், அதன் மூலம் நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கவும் திட்டங்களை வகுப்பது குறித்தும்மக்கள் விடுதலை முன்னணிஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

திருமலை 61 எண்ணெய்த் தாங்கிகளை அபிவிருத்திசெய்ய அனுமதி

திருகோணமலை சீனன்குடா துறைமுகத்தின் மேற்புற தாங்கி திடலானது 99 தாங்கிகளைக் கொண்டமைந்துள்ளதுடன், 2022.01.03ஆம் திகதி

இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு, அவற்றில் 61 தாங்கிகளை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் கம்பனிக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 61 எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியவளக் கற்கை உள்ளிட்ட அடிப்படை படிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சாத்தியவளக் கற்கை மூலம் இக்கருத்திட்டம் 16 ஆண்டுகளில் 07 கட்டங்களாக அபிவிருத்தி செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது கட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாகப் பயனுறு வாய்ந்த 09 தாங்கிகளை மறுசீரமைப்புச் செய்வதற்கும், கிட்டத்தட்ட 1.75 கிலோமீற்றர் தூர வீதியைப் புனரமைப்பதற்கும், ஏற்புடைய ஏனைய வசதிகளை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிர்மாணித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் (BOT) எனும் வணிக மாதிரியைப் பின்பற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலாவது கட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கு உத்தேச அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக, குறித்த பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Posted in Uncategorized

தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள், CTC மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக விசாரணை நடத்த பிரதமர் ட்ரூடோ கடிதம்

கனடாவில் CTCயின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்கள் கனேடிய பிரதமரிடம் வலியுறுத்துகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,507 நாளாகும். வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம் தொடர்கிறது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது குழந்தைகளை இழந்த பெண்களின் குழுவான காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளின் தாய்மார்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரித்ததற்கும், பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அவர் வழங்கிய ஆதரவிற்கும் நன்றி தெரிவித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

எவ்வாறாயினும், கனடாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதியாகக் கூறிக்கொள்ளும் கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) மற்றும் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை போர்க் குற்றவாளியுடன் அதன் தொடர்பு குறித்தும் அவர்கள் தீவிர கவலைகளை எழுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தின்படி, ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை போர் குற்றவாளியுடன் CTC ஒரு சந்திப்பை நடத்தியது.

இது கனடாவின் வெளியுறவுக் கொள்கையை மீறுவதாகவும் ஒரு போர்க் குற்றவாளியின் அங்கீகாரமாகவும் பார்க்கப்படலாம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
CTCஎன்பது தமிழ் அமைப்பு அல்ல, பணம் மற்றும் புகழால் இயக்கப்படும் சிங்கள அமைப்பு என்றும், அது தமிழர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் பிற நாடுகளை தவறாக வழிநடத்துகிறது என்றும் அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளோம்.

இலங்கை போர்க்குற்றவாளி இலங்கை கருவூலத்தில் இருந்து திருடப்பட்ட நிதியை ரொறன்ரோவில் திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிகங்களை நிறுவ பயன்படுத்துவதாகவும், சில CTC உறுப்பினர்கள் இந்த மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கடிதம் மேலும் கூறுகிறது. டொராண்டோவில் உள்ள அய்யப்பன் கோயிலுக்கும் CTC உறுப்பினர்கள் மூலம் போர்க்குற்றவாளிகளின் முதலீடுகளுக்கும் தொடர்பு இருப்பதையும் அந்தக் கடிதம் வெளிப்படுத்துகிறது. இந்த பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தவும், கனடாவில் பணமோசடி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவும், கனடாவின் வருவாய் தினைக்களத்தை அந்த கடிதத்தில் வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் உள்ள அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) உறுப்பினர் ஒருவர் கனடாவிற்கு விஜயம் செய்த போது CTC மற்றும் அதன் ஆதரவாளர்கள் 1,000,000 டொலர் பணம் செலுத்தியதாகவும் கடிதம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த எம்.பி இந்தப் பணத்தை இலங்கையில் விமர்சிப்பவர்களை,சக கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களுக்கு லஞ்சம் கொடுத்து வாயடைக்கப் பயன்படுத்துவதாகவும், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமற்ற தலைவராகச் செயற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குற்றம் சுமத்துகிறோம்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள், CTC மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்குமாறும் பிரதமர் ட்ரூடோவைக் கேட்டுக்கொள்கிறார்கள். மேலும், தமிழர் நலனுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவர் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்

நன்றி செயலாளர்
கோ.ராஜ்குமார்
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்.

Posted in Uncategorized

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் – அண்ணாமலை

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய அரசை வலியுறுத்திருக்கிறார்.

இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையில் குடியேறி இரு நூற்றாண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் புதுதில்லியில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இதற்குரிய பிரத்யேக அஞ்சல் தலையை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே. பி. நட்டா வெளியிட, இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜகவின் சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். மேலும் இந்நிகழ்விற்கு பார்வையாளராகவும், சிறப்பு அதிதிகளாகவும் இலங்கையிலிருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் புது தில்லிக்கு வருகை தந்திருந்தனர்.‌

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது,

”இலங்கையிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகத்திற்கு வருகை தந்த ஐந்து முதல் ஆறு லட்சம் வரையிலான தமிழர்களுக்கு முறையான தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட நிறைய வாக்குறுதிகள் தரப்பட்டன. அவை உடனடியாகவும், சிறப்பாகவும் நிறைவேற்றப்பட வேண்டும்.

வெவ்வேறு காலகட்டங்களில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இந்திய வம்சாவளி தமிழர்கள் பலர் இந்தியாவிற்கு வருகை தந்தனர். அவர்களில் பலரும் இங்கு குடியுரிமை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் சட்டவிரோதமாகவும் இங்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் பலர் இங்கு குழந்தை பெற்றிருக்கிறார்கள். வேறு சிலருக்கோ. இலங்கையிலும் அவர்கள் மீது வழக்குகள் இல்லை. இங்கும் அவர்கள் மீது வழக்குகள் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமல் இருக்கிறது. ஆகையால் அப்படிப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக முகாம்களில் பிறந்தவர்களுக்கும், தீவிர குற்ற பின்னணி இல்லாதவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். இதற்கு விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

உதயமானது ரணிலுக்கு ஆதரவான புதிய கூட்டணி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, அரசியல் கலவரங்களின் பின்னர் அரசாங்கத்திலிருந்து விலகிய தரப்பினர் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை ஆரம்பித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவில் முக்கிய உறுப்பினர்களாகக் காணப்பட்ட நிமல் லன்சா மற்றும் அனுர பிரியதர்ஷன யாபா உள்ளிட்டோர் தலைமையில் இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய கூட்டணியின் ஸ்தாபகரான கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயவர்தன ஆகியோர் தலைமையில் நேற்று இக்கூட்டணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராஜகிரிய, லேக் ட்ரைவ் வீதியில் அமைந்துள்ள புதிய அரசியல் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதோடு, முற்பகல் சுப நேரத்தில் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய தேர்தல் பிரசார நடவடிக்கைளை இப்புதிய அரசியல் கூட்டணி நேற்றிலிருந்தே ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வில் புதிய அரசியல் கூட்டணியின் செயல்பாட்டு தலைவர் அநுர பிரியதர்ஷன யாபா உள்ளிட்ட ஆதரவு வழங்கும் அனைத்து தரப்புகளும் பங்கேற்றிருந்தன. இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லன்சா இக்கூட்டணியில் 71 பாராளுமன்ற உறுப்பினர் இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு இக்கூட்டணி பொதுஜன பெரமுனவுடன் இணையாது என்றும் குறிப்பிட்டார்.

சீரற்ற காலநிலை : மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மாவட்டத்தில் தாழ் நிலப்பகுதிகள் மழை வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு 56 குடும்பங்கள் இடைத்தாங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் வெளியிட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதனால் மாவட்டத்திலுள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரானுக்கும் புலிபாஞ்சகல் பகுதியின் வீதியின் மேலாக வெள்ள நீர்பாய்ந்து செல்கின்றது.

இதனால் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு வரையிலான பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும் இதனால் படகு சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்,

இதேநேரம் ஆற்று வெள்ளம் காரணமாக செங்கலடி பிரதேச செயலக்பிரிவிலுள்ள ஈரலக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி வரையான பிரதேசங்களுக்கான போக்குவரத்து பாதிப்பட்டுள்ளதால் இரு படகுசேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாகரை பிரதேச செயலப் பிரிவில் கல்லரிப்பு பிரதேசத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள பொது கட்டித்தில் 17 குடும்பங்களும் கதிரவெளி ஜூனியர் பாடசாலையில் 30 குடும்பங்களும் கல்லரிப்பு முன்பள்ளியில் 9 குடும்பங்கள் உட்பட 56 குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized