நிதி தேவையில்லை; நீதியே தேவை – காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கடும் கண்டனம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(14) மாலை நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தாம் தொடர்ச்சியாக போராடி வருவதாகவும் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை எனவும் சர்வதேச விசாரணை ஒன்றே தேவை எனவும் கூறியே தாங்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பாதீட்டிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட விடயத்துக்கு கண்டணம் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம்.இருப்பினும் எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஓ எம் பியின் செயற்ப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தாங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்த போதும் தங்களுடைய எதிர்ப்பை மீறியும் அதற்காக பாரிய நிதிகளை ஒதுக்கி வீணாக செலவழித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் தற்போது சர்வதேச நீதியை கோரி போராடுகின்ற எங்களுடைய போராட்டத்தை சர்வதேச சமூகம் உற்று நோக்கியுள்ள வேளையிலே எங்களுடைய போராட்டத்தை சிதைப்பதற்காக அதற்கு இழப்பீட்டை வழங்குவதாக கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கப்பட்டதற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்ததோடு.

இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கலின் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற விடயத்தை ஒத்துக் கொண்டமை நல்ல விடயம் எனவும் எமக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நீதியே தேவை எனவும் நிதி தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பத்தினரே பொறுப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோரே பொறுப்பேற்க வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவித்தது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்தபோதே உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பான மனு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதிகள்

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி இடைக்காலத் தடை விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல, கருணாரத்ன, நீதிபதி தம்மிக கணேபொல ஆகியோர் இன்று (14) விலகியுள்ளனர்

இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமது கட்சிக்காரர் ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்ததன் காரணமாகவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காக நீதிபதி தம்மிக கணேபொல இந்த வழக்கில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்காததால், உரிய பீடத்தை நியமிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஜனாதிபதிக்கு உரிய மனுவை அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மனு விசாரணை வேறு நீதிபதிகள் குழாமிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

பிரித்தானிய புதிய வெளிவிவகார அமைச்சராக டேவிட் கமரூன்

பிரித்தானியாவின் புதிய வௌிவிவகார செயலாளராக பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமிக்கப்பட்டுள்ளார். 2016வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்த டேவிட் கமரூன் புதிய பதவியை ஏற்பதற்காக அவருக்கு பிரபுக்கள் சபையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

டேவிட் கமரூனின் அரசியல் மீள்வருகையை அவரது அமைச்சரவையில் உள் விவகார செயலாளராக இருந்தவரும், பின்னர் பிரித்தானிய பிரதமரானவருமான தெரேசா மே வரவேற்றுள்ளார்.

அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மனை பதவியிலிருந்து நீக்கி ஜேம்ஸ் கிலெவெர்லியை அந்த பகுதிக்கு நியமித்துள்ளார்.
இதனையடுத்து முழு அளவிலான அமைச்சரவை மாற்றமொன்றை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மேற்கொள்வாரென பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர்

சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை (18) சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு சீயோன் ஆலய விஜயத்தின் போது கடும் மன உளைச்சலுக்குள்ளானதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றபோது தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

விஜயம் குறித்து அமெரிக்கத் தூதுவர் தனது X தளத்தில் குறிப்பிடுகயைில்,

நான் சீயோன் தேவாலயத்திற்குச் சென்று, 2019 இல் இடம்பெற்ற அந்த பயங்கரமான நாளின் தாக்கம் குறித்து போதகர் ரோஷன் மகேசனுடன் கலந்துரையாடியதில் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டது. இங்கு கொல்லப்பட்ட 25 க்கும் மேற்பட்ட குழந்தைகளால் சமூகம் மேம்படுவதற்கான ஒரு குணப்படுத்தும் ஆதரவைப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த பங்கு குறித்து பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.

சமூகங்களுக்கிடையில் இனவாத பதற்றங்களை தணிப்பதில் அவர்கள் பகிர்ந்துகொண்ட விடயங்கள் இலங்கையின் வெற்றி மற்றும் பன்முகத்தன்மைக்கு முக்கிய சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நிறுவப்பட்டுள்ள யேசு சபையைச் சேர்ந்தவரும் இலங்கை “கூடைப்பந்தாட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவருமான அமெரிக்காவில் பிறந்த யூஜின் ஜோன் ஹெபர்ட்டின் சிலையை அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் பார்வையிட்டுள்ளார்.

கடந்த 1948 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லூசியானாவிலிருந்து இலங்கை வந்த யேசு பையைச் சேர்ந்த யூஜின் ஜோன் ஹெபர்ட், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியை தேசிய சாம்பியன்ஷிப்களுக்கு வழிநடத்தினார். அப்போதும் அருட்தந்தை யூஜின் ஜோன் ஹெபர்ட், கூடைப்பந்து விளையாட்டை சமூகங்களை இணைக்கவும் புரிந்துணர்வை வளர்க்கவும் ஒரு இராஜதந்திர கருவியாகப் பயன்படுத்தினார் என்று அமெரிக்கத் தூதுவர் ஜுலிசங் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவின் 75 வருட கூட்டாண்மை இலங்கையர்களுக்கு எவ்வாறான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதை ஆராய்வதற்காக அமெரிக்கதூதுவர் ஜுலிசங் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் அதில் இருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்வதற்கும், முன்னேறுவதற்கும், ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கும் காணப்படும் வாய்ப்புகளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ள இலங்கையர்களிடம் இருந்து இனங்கண்டு பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் ஒன்று சேரந்து ஈடுபட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடு

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் காணப்படுகிறது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை.

இருக்கும் பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் புதிதாக நான்கு பல்கலைக்கழகங்களை அமைப்பதாக குறிப்பிடுவது நகைப்புக்குரியது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட சமர்ப்பின் போது இந்த கருத்தையே குறிப்பிட்டார். ஆனால் எந்த தவறும் திருத்திக் கொள்ளப்படவில்லை.

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. வரி அதிகரிப்பு,தேசிய வளங்களை விற்றல் என்பதை அரச கொள்கையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

வரையறையற்ற கடன்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் கடன்படு எல்லையை 3400 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளார். ஆகவே இந்த வரவு செலவுத் திட்டம் நடைமுறைக்கு ஒருபோதும் சாத்தியமடையாது.

நாட்டில் 17 அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை.

மாறாக புதிதாக 4 பல்கலைக்கழகங்களையும்,தனியார் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.இது நகைப்புக்குரியது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி தனது முன்மொழிவுகள் ஊடாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.

தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் – ஹர்ஷ டி சில்வா

2024 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுப்படுத்தவில்லை. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.

2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாக வெளிப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். அரச துறையை காட்டிலும் பல இலட்சம் பேர் தனியார் துறையில் சேவையாற்றுகிறார்கள். தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.இதனை பிரதான குறைப்பாடாக கருத வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தவில்லை.மறுபுறம் சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகைக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச வருமானத்துக்கும் அரச செலவினத்துக்கும் இடையில் காணப்படும் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யும் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவோம் என்றார்.

ஆட்சியாளர்களுக்கு சொர்க்கத்தையும் மக்களுக்கு நரகத்தையும் காட்டும் வரவு செலவுத் திட்டம் – சஜித்

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஆட்சியாளர்களுக்கு சொர்க்கமும் மக்களுக்கு நரகமும்  காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளர்.

வரவு – செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்தார், மேலும் பிரார்த்தனை செய்ய வேண்டியவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று புத்த பகவான் கூட போதித்தார், ஆனால் தற்போதைய ஜனாதிபதி பிரார்த்தனை செய்யவில்லை.

இது நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், வரவு செலவுத் திட்டத்தில் நரகம் பற்றி பேசினாலும், ஆட்சியாளர்கள்  சொர்க்க லோகத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.

2022 வரவு  -செலவுத் திட்ட பிரேரணையில் எத்தனை விடயங்களை நிறைவேற்ற முடிந்தது என்பது குறித்தும் தெரிவித்த அவர்,  வரவு – செலவு திட்ட பிரேரணையில் அதிகளவான  விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாகவும் கூறினார்.

மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இன்று  (13) ஆம் திகதி திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த மாதம் 22 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று  தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும்  இன்று நீதிமன்றில் ஆஜராகினர். மகாவலி அதிகார சபை சார்பாக  அரச சட்டத்தரணி டில்கானி டி சில்வா ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் அதிகாரம் பெற்ற அதிகாரிகளினால் வழங்கப்பட்ட  எந்த  ஆவணமும்  அத்துமீறி குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களினால் நீதிமன்றுக்கு  சமர்ப்பிக்கப்படாததால் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய குறித்த 13 பேரையும் வெளியேற்றுமாறு நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரி அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் 60வது நாளாகவும் இன்றும் போராட்டம் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.