இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு கடிதம்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திடவும் இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்திட வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும்.

இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசும், தி.மு.கவும் உறுதியாக உள்ளது.

இலங்கையில் உள்ள தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் இலங்கையின் சமமான குடிமக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியம்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்ட இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கடற்படையால் இந்திய கடற்றொழிலாளர்களை தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் எடுத்துச் சென்று, சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழில் படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரணில் ராஜபக்சவிடம் தமிழ் மக்கள் அரசியல் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம் – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அரசியல் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது என்று தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இந்திய விஜயத்துக்கு முன்னர் தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினர்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்,

“தான் ரணில் ராஜபக்ச அல்ல ரணில் விக்கிரமசிங்கதான் என்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஜனாதிபதி கூறியது நகைப்புக்குரியது. தற்போது ரணில் – ராஜபக்ச அரசுதான் ஆட்சியில் உள்ளது. ராஜபக்சக்கள் பட்டாளத்தின் ஆசியில்தான் ஜனாதிபதி கதிரையில் ரணில் இருக்கின்றார். எனவே, ராஜபக்சக்களின் குணாதிசயங்கள் ரணிலிடம் உண்டு. அவரிடம் தமிழ் மக்கள் – அவர்களின் பிரதிநிதிகள் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.” – என்றார்

சமாதானத்தை ஏற்படுத்தவே குருந்தூரில் சைவ வழிபாடுகளை நிறுத்தியதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவிப்பு

சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேதான் குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி சைவத் தமிழ் மக்களின் வழிபாடுகள் தடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிசார் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் விளக்கத்தினைப் பெறுவதற்காக குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் 08ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ச்சென்ற சைவத் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக கடந்த 13.07.2023அன்று, முல்லைத்தீவு பொலிசாரால் குருந்தூர்மலை தொடர்பான வழக்கு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டு, மறுநாளான 14.07.2023 குருந்தூர்மலையில் இடம்பெற இருக்கின்ற சைவத் தமிழ் மக்களின் பொங்கல் வழிபாடுகளைத் தடுக்குமாறு நீதிமன்றினைக் கோரியிருந்தனர்.

இருப்பினும் பொலிசாரின் இக் கோரிக்கையினை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந் நிலையில் கடந்த 14.07.2023ஆம் திகதிகுருந்தூர்மலையில், சைவத் தமிழ் மக்களின் பொங்கல் வழிபாடுகள், பொலிசாராலும் அங்கு குழுமியிருந்த பௌத்த தேரர்களாலும், பெரும்பான்மையின மக்களாலும் தடுக்கப்பட்டது.

இவ்வாறு சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 14.07.2023அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான இரத்தினம் ஜெகதீசன், அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரால் முறைப்பாடுசெய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 17.07.2023 அன்று சைவவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே AR673/18 என்ற குருந்தூர்மலை வழக்கு நகர்த்தல் பத்திரம் நீதிமன்றிலே விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்து.

குறித்த வழக்கிலே ஆலய அடியவர்கள் சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான இரத்தினம் ஜெகதீசன், அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் மன்றில் தோன்றியிருந்தனர்.

அந்தவகையில் சைவத் தமிழ் மக்களின் பொங்கல் வழிபாடுகள் தடைசெய்யப்பட்டமை தொடர்பிலான புகைப்படங்கள், மனித உரிமை ஆணைக்குழு மற்று, பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்து, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய அடியவர்கள் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணிகள் மன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந் நிலையில் இது தொடர்பில் விளங்கமளிப்பதற்காக நீதிமன்றிலே தோன்றியிருந்த பொலிசார், தாம் சமாதானப் படுத்தும் நோக்கிலேதான் தாம் பொங்கல் வழிபாட்டினைத் தடுத்ததாக கூறியிருந்தார்கள்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மேலதிக தகவல்களைத் தொல்லியல் திணைக்களத் திடமிருந்தும்பெறவேண்டியதொரு தேவையிருப்பதால், குறித்த நாளில் குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்லியல் திணைக்களத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தொல்லியல் திணைக்களத்தின் அறிக்கைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் பாதம் 08ஆம் திகதிக்கு குறித்த வழக்குத் தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் பிடியில் சிக்கியுள்ள வட கடலை மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்

வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

2016ம் ஆண்டு இரு நாட்டு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அமுல்ப்படுத்த வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ள நிலையி்ல் மீனவர் பிரச்சினை தொடர்பிலும் இழவை மடிப் படகுகள் தொடர்பிலும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவுடன் பேசவேண்டுமென சில கட்சிசார் அமைப்புக்கள் கூறி வருகின்றன.

தொப்புள் கொடி உறவுகளுக்கிடையிலான பிர்சினையை அரசியலாக்கி கட்சிசார் அமைப்புக்கள் வெளியிடும் கருத்துக்களை மீனவர்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ளவியலாது.

இன்றைய ஜனாதிபதி முன்னர் பிரதமராக இருந்த 2016 ம் ஆண்டு 5 ம் திகதி வெளிவிவகார அரச மட்டத்தி்ல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

இதுவரை அந்த அறிக்கையை ஜனாதிபதியோ உரிய அமைச்சரோ நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதேபோல் தான் தற்போதும் இந்தியாவிற்கு சென்று அறிக்கையொன்று எட்டப்பட்டு நடைமுறைப்படுத்தாத நிலையே ஏற்படவுள்ளது.

ஏற்கனவே டில்லியி்ல் உருவாக்கப்பட்ட உடன்படிக்கை நடைமுறைப்படுத்தினாலே போதுமானது. குறித்த அறிக்கையானது இந்தியாவின் இணையத்தளத்திலும் உள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம் 28 ம் திகதி 7 சமாசங்களும் 18 சங்கங்களும் கலந்துரையாடி இவ் அறிக்கையை அமுல்ப்படுத்துமாறு ஜனாதிபதி்க்கு கடிதம் அனுப்பினோம்.

குறித்த அறிக்கையில் 6 மாதங்களுக்கொரு தடவை மீனவ அமைப்புக்கள் , கடலோர காவற்துறை மற்றும் இரு நாட்டு அரசாங்கங்களும் கலந்துரையாட வேண்டும் என நல்ல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரமும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடற்தொழிலாளர் பிரச்சினைக்கு ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டுமனக் கூறப்பட்டது.

இந்திய மத்திய அமைச்சர் முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் பலாலி விமான நிலையமூடாக வந்திறங்கி யாழ்.கலாசார நிலையத்தை சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர்.

அதன்போது இந்திய மீனவர்களை இடியுங்கள், பிடியுங்கள் என கூறி மயிலிட்டி துறைமுகத்தில் கடற்தொழில் சமாசங்களுக்கு இந்தியாப் படகுகள் வழங்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சருடனும் மாநிலத் தலைவருடன் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் பேச அழைத்திருக்கவில்லை.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை இன்றைய சூழலில் அரசியல் கட்சி சார்ந்தவர்களின் பிரச்சினையாகவே மாற்றப்படுகின்றது.

தற்போதும் கடலட்டைப் பண்ணைகள் பினாமிகளின் பெயரிலே உள்ள நிலையில் அரியாலையிலுள்ள கம்பனி சீனா முதலீடாகவிருப்பினும் தற்பொழுது பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்தீவில் உள்ள காவற் கொட்டகைகளில் சீனா நாட்டவர்கள் தங்கியிருந்ததை உறுதிப்படுத்தி யாழ்ப்பாணத்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் ஆங்கிலப் பத்திரிகைளிலும் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

எமது கடலில் நாம் சுதந்திரமாகத் தொழில் மேற்கொள்ள வேண்டும். எனவே வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை 2016 ம் ஆண்டு உடன்படிக்கை மாற்றப்படின் வடக்கு கடலை சீனாவிற்கு ஒப்படைக்கும் சூழ்ச்சியாக அமையும்.

இப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தான் 2017 ம் ஆண்டு 11 ம் ஆல்க கடற்தொழில் உள்ளூர் இழுவைமடிச் சட்டமும் 2018 ம் ஆண்டு வெளிநாட்டு மீனவர் ஒழுங்குபடுத்தல் சட்டமும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை வட மாகாண கூட்டுறவு ஆணையாளர் சங்கங்கள் சமாசங்களி்ன் பதவி.நியமனங்களுக்காக கட்சியின் ஆதரவாளர்களே நியமி்க்ப்படுகின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடு கூட்டுறவையும், வடக்கு கடலையும் அழிப்பதற்கு துணைபோவதாக அமைகின்றது. ஜனநாயக முறையில் கூட்டுறவு முறைகள் இடம்பெற இடமளிக்காவிட்டால் பதவிகளை வழங்கிவிட்டு சுதந்திரமாகச் சம்பளத்தைப் பெறலாம்.

இதைவிட அரசு காணியை அளவிடுகிறது என போராடுவோர் கடல் பிரதேசங்களை சட்டவிரோதமாக கடலட்டை பண்ணைகளுக்கு வழங்குவதையும் அவதானிக்க வேண்டும்.

இது தொடர்பில் சட்டம் தெரிந்த சட்ட.வல்லுனர்கள் முன்வந்து வழக்குத் தொடுக்க வேண்டும். நிலம் மட்டுமல்ல கடலும் எமது உரிமை.

மீனவர் பிரச்சினை அனைத்து மீனவர் அமைப்புக்களுடனும் இணைந்து கலந்துரையாடி தீர்வுகளை எட்ட வேண்டுமே தவிர கட்சி சார்ந்தோரை முன்னிறுத்தி டில்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை மீனவர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கான குரலாக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே வடக்கு மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவுக்கு இந்திய பிரதமர் மோடி,

அழுத்தங்களை வழங்குவதோடு சீனாவின் பிடியில் சிக்கியுள்ள வடக்கு கடலை மீட்பதற்கான அழுத்தங்களை இந்திய பிரதமர் மோடியை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜனாதிபதி ரணில் பேச்சு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு 2 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று மாலை வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளிதரன் வரவேற்றுள்ளார்.

இதன்பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் வரவேற்று கலந்துரையாடலில்  ஈடுபட்டார்.

உலகின் முதலாவது கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்

உலகின் முதலாவது கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது

செவ்வாய்கிழமை பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும் வகையில் பொண்டி நகரசபையினால் Parc de la mare à la veuve எனும் பூங்காவில் கறுப்பு யூலை நினைவாக மரம் நாட்டப்பட்டு கறுப்பு யூலை நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

 

மாலை 6.30 மணிக்கு நகரசபை முதல்வர்கள் மற்றும் உதவி நகரசபை முதல்வர்கள் நகரசபை உறுப்பினர்கள்அனைவரும் இணைந்து மரத்தினை நாட்டினார்கள். மரம் நாட்டியதைத் தொடர்ந்து பொண்டி நகரசபை முதல்வரால் கறுப்பு யூலை 40வது ஆண்டு நினைவுக்கல் நினைவுக்கல்திரைநீக்கம்செய்யப்பட்டது

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிப்பு

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றையதினம் குறித்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

குறித்த வரிச்சலுகை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மதுரை – யாழ்ப்பாணம் இடையே விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்

மதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த உதவுமாறு இந்திய பிரதமரிடம் கோரிக்கை

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இந்தியாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில கட்சிகளும் சிவில் அமைப்புகளும் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடிதம் எழுதி உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன.

35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் தனித்துவம் கொண்ட தேசிய இனமாக தமது தேசத்தில் சுயநிர்ணய உரிமையோடு வாழ்வதற்கான போராட்டத்தினை சர்வதேசமும் வியக்கும் அளவில் முன்னெடுக்கப்பட்டது.

ஒற்றை ஆட்சியின் கீழ் சுதந்திரமாக வாழ முடியாது. எமக்கான சுயாட்சி இருக்க வேண்டும் எனும் திடமான அரசியல் சிந்தனையோடு கட்டமைக்கப்பட்ட வடிவிலே போரியல் ஒழுக்கத்துடன் விடுதலை செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் யுத்த குற்றங்களுக்கு எதிராகவும், உறவுகள் காணாமலாக்கப்பட்டமை, காணிகள் அபகரிக்கப்பட்டமை, அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் இருக்கின்றமை என்பவற்றிற்கு நியாயமான நீதியினை பெற்றுத் தருமாறு வடக்கு கிழக்கு மக்கள் இன்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு தமிழக முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம்

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதமொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை சந்திக்க உள்ள நிலையில் குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்

அத்துடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழ தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசாங்கமும், திமுகவும் உறுதியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான தீர்வை எட்டுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்