முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சற்குணதேவியின் வீட்டினை சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அவர் கைது செய்யப்பட்ட காரணத்தை தெரிவிக்காமல் வாகனத்தில் ஏற்றிச் சென்ற பொலிஸார் அவரை தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று தெரிவித்திருந்தார்.

இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் என கூறி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஓ.எம்.பி அலுவலகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் தெரிவிப்பு

ஓ.எம்.பி அலுவலகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதேவேளை தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் பொறிமுறை எமக்கு நம்பிக்கையில்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இன்றைய தினம் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வருகை தந்த 4 அதிகாரிகளை சந்திப்பதற்காக வந்திருந்தோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கவிதா ரதீஸ்வரனும், யாழ்மாவட்டத்தினை சேர்ந்த ஸ்ரீ நிலோயினியும் இந்த சந்திப்பில் என்னுடன் கலந்து கொண்டனர்.

நான்கு அதிகாரிகளில் ஒருவர் கொழும்பு தலைமையகத்தில் இருந்தும் ஏனைய மூவரும் அமெரிக்க ராஜாங்க அமைச்சில் இருந்து வந்தும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைக்கு பொறுப்பானவர்கள். அதில் மனித உரிமை, மத சுதந்திரம் மற்றும் நீதி பொறிமுறைகளை என வேறு வேறு துறைகளிற்கு பொறுப்பானவர்கள்.

அந்த வகையில், எமது துயரங்களை மனம் விட்டு அவர்களிடம் தெரிவித்தும் நாம் எதிர்பார்க்கும் தீர்வுகளை பொறுமையாகவும், விளக்கமாகவும் கூறியிருந்தோம்.

அத்துடன் ஓ.எம்.பி அலுவலகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் அத்துடன் தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் பொறிமுறை குறித்தும் அதிருப்தியை வெளியிட்டோம்.

அவர்கள் நாம் கூறியவற்றை பொறுமையாக கேட்டனர். நம்பிக்கை தரும் விதமாக நாம் உரையாடியதன் காரணமாக எமது பேச்சுவார்த்தையை 1 மணித்தியாலங்களில் முடித்து கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

சீனாவில் இருந்து மீளவும் நேரடி விமான சேவைகள் – ஹரின் பெர்னாண்டோ

சீன சுற்றுலா குழுமத்தின் தலைவர் சென் யிம், சீன தேசிய சுற்றுலா பயணிகளை சிறிலங்காவிற்கு அழைத்து வர தேவையான உதவிகளை வழங்குதல் தொடர்பில் உறுதியளித்துள்ளதாக சுற்றுலா மற்றும் காணி விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சீனக் குடியரசில் சுற்றுலா சேவைகளை வழங்கும் பிரதான அமைப்பான சீன சுற்றுலா குழுமத்தின் தலைவர் சென் யிம் உள்ளிட்ட குழுவினர் சிறிலங்காவிற்கு வருகை தந்த போது சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு முன்பு இருந்ததைப் போலவே சீனாவிலிருந்து நேரடி விமான சேவைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்ததாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சீனாவில் இதுவரை விமான சேவைகளை ஆரம்பிக்காத விமான நிறுவனங்களை அழைக்க முன்மொழிவொன்றை முன்வைத்திருந்ததாக ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைவாக, சீன சுற்றுலா குழுமத்தின் தலைவர் சென் யிம், பிரதான குழுவின் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுநர் – இந்திய துணைத்தூதுவர் இடையே சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய துணைத் தூதரகம் டுவிடடர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்திய அபிவிருத்தித் திட்டங்களின் நிலை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் வடமாகாண ஆளுநருக்கு இந்திய துணைத் தூதர் இந்திய நூல்கள் சிலவற்றையும் அன்பளிப்பு செய்தார்.

மன்னார் ரெலோ தலைமையகத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினை வேந்தல் இன்று திங்கட்கிழமை(5) மதியம் மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன் போது தியாகி பொன் சிவகுமாரனின் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்த்,கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

தியாகி பொன் சிவகுமாரனின் 49 வது நினைவேந்தல் ரெலோ யாழ் மாவட்ட செயலகத்தில் அனுட்டிப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் 49 வது நினைவேந்தல் 05/06/2023 மாலை 4 மணிக்கு ரெலோ யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் தியாகராசா நிரோஷ் தலைமையில் பொதுச் சுடரினை ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து அக வணக்கம் இடம்பெற்றது பின்னர் ஏனைய உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செய்தனர் தியாகி சிவகுமாரனின் நினைவு தொடர்பாக சபா குகதாஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் மாணவர் சக்தியின் எழுச்சி அளப்பரியது – பொன் சிவகுமாரன் நினைவேந்தலில் நிரோஷ்

தமிழ்த் தேசியத்தின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடிய முதல் வித்து பொன் சிவகுமாரன். மாணவர் எழுச்சியாக உருப்பெற்ற பொன் சிவகுமாரனின் பயணம் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய போராட்டப்பாதையில் அத்திபாரமாக அமைகின்றது. இவ்வாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

உரும்பிராயில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் முன்னர் இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட நிலையில் மீள பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள பொன் சிவகுமாரனின் அஞ்சலி செலுத்திய பின் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிவகுமாரன் அவர்களது தியாகம் எமது விடுதலைப்போராட்டப் பாதையில் முக்கியமானது. தமிழ் மாணவர்களுக்கு அரசினால் இழைக்கப்பட்ட தரப்படுத்தல் அநீதி மற்றும் ஏயை ஒடுக்குமுறைகள் மற்றும் தேசத்துரோகங்களுக்கு எதிராக மாணவர் சக்தியாக துணிந்து போராடியவர்.

பொன் சிவகுமாரனின் தியாகம் என்பது தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுதியுடனான போராட்டமாகும். அவருக்கான அஞ்சலி என்பது உறுதியான தமிழ்த் தேசிய பயணப்பாதையுடனேயே அமைய வேண்டும். சிவகுமாரனின் விடுதலைப் பயணத்தில் அவர் காட்டிக்கொடுப்புக்களுக்கும் தேசத்துரோகங்களுக்கும் எதிராகப் போராடியுள்ளார். மேலும் காலத்திற்குக் காலம் தமிழ் மாணவர்களின் எழுச்சி என்பது எமது போராட்டத்தில் திடகாத்திரமான பங்களிப்பினை நல்கியுள்ளது.

சிவகுமாரன் அவர்கள் என்ன என்ன இலட்சியத்தினை கொண்டு தன் இன்னுயிரை ஆகுதியாக்கினாரோ அவரது இலட்சியத்திற்காகவும் அபிலாசைகளுக்காகவும் நாம் திடமாகப் பயணிக்கவேண்டியவர்களாகவுள்ளோம். எம் போன்றோருக்கு அவரது தியாகமும் இலட்சியமும் எப்போதும் சுவடாக அமைகின்றது.

தடைகள் இருந்த சமயத்திலும் பல்வேறு இடர்பாடுகளைத் தாண்டியும் நாம் இங்கே அஞ்சலி செலுத்தி வந்துள்ளோம். அண்ணன் சிவகுமாரன் அவர்களுடைய சிலைகள் கூட பல்வேறு தடவைகள் உடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட உடைக்கப்பட்ட 1975 ஆம் ஆண்டு முத்துக்குமாரசுவாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்ட சிலை மண்ணுக்குள் புதையுண்டு காணப்பட்ட நிலையில் அதனை நான் தவிசாளராக பெறுப்பேற்ற உடன் மீள குறித்த வளாகத்திற்குள் பிரதிஸ்டை செய்திருந்தேன்.

அவ்வாறு பிரதிஸ்டை செய்யப்பட்ட இடத்திலேயே தற்போது அஞ்சலி செய்துள்ளேன். வரலாற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சி மிலேச்சத்தனமானது- செல்வம் எம் பி காட்டம்

கஜேந்திரகுமார் எம்.பி மீதான புலனாய்வாளர்களின் தாக்குதல் முயற்சி தமிழ் மக்களுக்கு விடப்படும் அடுத்தகட்ட அச்சுறுத்தல் என்பதோடு மிலேச்சத்தனமானதுமாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வாளர்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொள்ள முனைந்தமைக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறைகேள் செயற்பாடுகளையும் அரசியல் செயற்பாடுகளையும் முன்னேடுக்கும் போது புலனாய்வாளர்களின் இடையூறுகள்  தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் இவற்றை பொருட்படுத்தாது  பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்பாடுகளை முன்னேடுத்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் காவலர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடும் வகையிலான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் புலனாய்வாளர்களை வைத்து செயற்படுத்த முனைவதானது தமிழ் மக்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை புடம்போட்டுக் காட்டுகின்றது.

இந்நிலையில் கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சிக்கு தகுந்த விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறாத வகையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுவிழக்கச்செய்யவேண்டாம் – CPA வலியுறுத்தல்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் இடம்பெற்ற நடாஷா எதிரிசூரியவின் கைது தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் சீர்குலைக்கவேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் அண்மைக்காலங்களில் இடம்பெறும் கைதுகள் மற்றும் அதன்விளைவாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அண்மையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் நகைச்சுவைப்பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். மத ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான புதியதொரு உத்தியே இதுவாகும்.

அண்மையகாலங்களில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் இந்தக் கைது மாத்திரம் இடம்பெறவில்லை என்பதையும் மத மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாகக்கூறி மேலும் பலர் கைதுசெய்யப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

அதுமாத்திரமன்றி நடாஷா எதிரிசூரியவின் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கான இடைவெளி சுருக்கமடைந்திருப்பதையும் அதன்மீதான மிகமோசமான தாக்கங்களையும் வெளிப்படுத்துகின்றது.

மேலும் மத ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் இலக்காகக்கொண்டு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்யும் வகையில் அத்தகைய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையின் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் மத ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன், அவர்கள் அரச கட்டமைப்புக்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் மூலம் இலங்கையின் சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுவிழக்கச்செய்யவேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பாராளுமன்றில் எவருக்கும் 50% வாக்குப்பலம் இல்லை – ஜனாதிபதி

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும், எவருக்கும் 50 வீத வாக்குப்பலம் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனவே, தேர்தலுக்காக அன்றி பொருளாதார  நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நுவரெலியாவில் நேற்று (02) நடைபெற்ற 2023 / 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோருக்கு தேர்தல் மற்றும் அரசியல் நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன, தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.