ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் முழுமையாக ரத்துச் செய்யப்படும் – ஹர்ஷ டி சில்வா

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு 98 சதவீதமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எமது ஆட்சியில் இந்த சட்டமூலம் முழுமையாக இரத்து செய்யப்படும். ஜனநாயகம் பாராளுமன்றத்துக்குள் உள்ளதா,வெளியில் உள்ளதா என்பது தெளிவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும், 225 உறுப்பினர்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்கிறோம். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான அமைப்புகள் பல யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் அவற்றை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 98 சதவீதமானோர் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆகவே ஜனநாயகம் பாராளுமன்றத்தில் உள்ளதா? அல்லது வெளியில் உள்ளதா என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த சட்டமூலம் கண்காணிப்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.ஆகவே எமது அரசாங்கத்தில் இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு,அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டமியற்றப்படும்.

இந்த சட்டமூலத்தில் சமூக வலைத்தளங்கள் குற்றவாளியாக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் குற்றவாளியாக பார்க்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை பேஸ்புக், மெட்டா, கூகுள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்த சட்டமூலத்தினால் கிராமிய மற்றும் நகர வணிக பொருளாதாரம் பாதிக்கப்படும். அத்துடன் அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற இலக்கு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

ஜனநாயகத்தை அச்சுறுத்தாதே, நிகழ் நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு, ஊடகங்களை சமூக ஊடகங்களை நசுக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு போன்ற பல கோரிக்கைகள் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பேராயர் மனுத் தாக்கல்

“அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி” உயர் நீதிமன்றில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் ”உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில், நியாயமான காரணமின்றி எந்தவொரு நபரையும் கைது செய்து தடுத்து வைப்பதற்கு இராணுவம், காவல்துறை மற்றும் கடலோர காவல்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை குறித்த சட்டமூலத்துக்கு எதிராக இதுவரையில் உயர்நீதிமன்றில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஷாம் காரியப்பர் உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபர் வரி இலக்கமாகப் பயன்படுத்த நடவடிக்கை

”தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இலகுவாக ரின் இலக்கம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” இந்த நடைமுறை மூலம் தெளிவான தரவு அமைப்பொன்றை உருவாக்க முடியும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் தகவல் அமைப்பைப் பயன்படுத்தி இந்த செயல்முறை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இணையவழிப் பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு சபையில் இன்று உரையாற்றியிருந்தனர்.

இணைய பாதுகாப்புச் சட்டமூலம் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பெரும் சர்ச்சைகளுக்கு இது முகம் கொடுத்திருந்தது.

ஊடக நிறுவனங்கள் மட்டுமன்றி, சிவில் சமூக அமைப்புக்கள், சர்வதேச அமைப்புக்கள், புத்திஜீவிகள் என பலரும் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இந்த சட்டமூலமானது பல்வேறு திருத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதையடுத்து, நேற்றும் இன்றும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் இடம்பெற்றது.

இன்று சபையின் இரண்டாம் வாசிப்பின் மீதான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெற்ற நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் ஆளும் தரப்பினர் சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தரலங்கா சபாவ, ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிராக வாக்களித்தன.

அந்தவகையில், குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 46 மேலதிக வாக்குகளால் இது நிறைவேற்றப்பட்டது.

ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது – சஜித் பிரேமதாச

யுத்த வெற்றியை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டுவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹொரவ்பதானையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யுத்த வெற்றியை காரணம் காட்டியே சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டு நாட்டை அழித்தனர். ஆனால் இன்று பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் ஒழுந்து கொண்டு ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அனுபவித்து வருருகின்றனர். மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்ததோடு அதிக விலைக்கு நனோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்தனர்.

எனவே இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி, திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு நாம் கொண்டு வருவோம். தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களை மீட்டு, அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பொது மக்கள் யுகத்தை உருவாக்கத் தயாராக இருக்கின்றோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொலிசார் சீருடை இல்லாது சிவில் சமூகத்துடன் தொடர்பாடக்கூடாது! மனோ எம்.பி. அறிவுறுத்தல்

வெள்ளவத்தை பொலிஸ் வலயத்தின் பசல்ஸ் ஒழுங்கை பகுதியில், இரகசிய சுற்றுவளைப்பு தேவைக்காக சீருடை அணியாமல் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அப்பகுதியில் வீதியில் சாதாரண கடமையில் ஈடுபட்டிருந்த மகேஷ்வர குருக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை, பொலிசார் தமது செய்கை தொடர்பில், வண.குருக்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டதுடன் சுமூக முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தையில் இந்து குருக்கள் – பொலிசார் மத்தியில் ஏற்பட்ட பிணக்கு தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

வாகன போக்குவரத்து தொடர்பில் ஏற்பட்ட சிறு பிணக்கை இனவாத சொற்பிரயோகம், வாக்குவாதம், உடல்ரீதியான பலவந்தம் வரை பொலிசார் கொண்டு சென்றுள்ளனர்.

குருக்களின் புதல்வர் பலவந்தமாக சீருடை அணியாத பிரிவினரால் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இரு தரப்பும் சமாதான உடன்பாட்டுக்கு வந்து பிரச்சினை, திங்கட்கிழமை (22) மாலையே முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மத குருமார்களுக்கு உரிய பெருந்தன்மையுடன் பொலிசாரை தான் மன்னித்து விட்டதாக, குருக்கள் என்னிடம் தெரிவித்தார்.

குருக்கள் அவ்விதம், கூறி இருந்தாலும், வெள்ளவத்தை பொலிஸ் நிலைய மட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படியும், இனி பொலிஸ் சீருடை இல்லாமல் பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத்துடன் தொடர்பாடலில் ஈடுபடக்கூடாது எனவும், வெள்ளவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி சுபாஷ் காந்தவெலவிடம் நான் கண்டிப்பாக கூறியுள்ளேன்.

அதன்படி தனது நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக பொறுப்பதிகாரி காந்தவெல எனக்கு உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்தார்.

அரசாங்கம் அதன் சொந்த தலைவர்களாலேயே சிதைக்கப்பட்டுள்ளது – எஸ்.பி. திஸ்ஸநாயக்க

69 இலட்சம் மக்களின் ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் ஏறிய அரசாங்கம் அதன் சொந்த தலைவர்களாலேயே சிதைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெரும்பான்மையான ஆணையை வழங்கிய நிலையில் உருவாக்கப்பட்ட அரசாங்கம் எங்கள் சொந்த தலைவர்களால் சிதைக்கப்பட்டதில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இருந்தாலும், ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை எவராலும் மாற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் நான்கு வருடங்களின் பின்னர் அதிபர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை 69 இலட்சம் மக்களின் ஆணையை பெற்று ஆட்சிபீடமேறிய கோட்டாபய ராஜபக்சவின் சீர்கெட்ட நிர்வாக திறன் காரணமாக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து பாரிய போராட்டத்தை நடத்திய நிலையில் அவர் ஆட்சிபீடத்தை துறக்கவேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது

இந்திய உயர்ஸ்தானிகர்- மைத்திரி கொழும்பில் சந்திப்பு

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்றையதினம்(23) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இச் சந்திப்பானது, முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், புதிய உயர்ஸ்தானிகருக்கு மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இலங்கை இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் இந்தியாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கைக்கு தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் யுக்திய நடவடிக்கையை நிறுத்த முடியாது – பதில் பொலிஸ் மா அதிபர்

யுக்திய விசேட நடவடிக்கையை ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் இந்த நடவடிக்கையானது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாதாளம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை.

அவர்களின் நடவடிக்கைகளை ஒழிப்பதே எங்களின் ஒரே இலக்கு, எவருடனும் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் குற்றச் செயல்களால் ஆதாயம் அடைபவர்களாவர். போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் 65% க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதன் மூலம் போதைப்பொருள் இருப்புக்கள் கணிசமான அளவில் குறைந்துள்ளன.

மேலும் நாட்டின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முழுமையாக அகற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.