இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன – கனடிய பிரதமர்

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

இதன் காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தைப்பொங்கல் நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே அவர் இந்த கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில் தமது தந்தையாரின் தலைமையிலான லிபரல் கட்சி 1800 இலங்கை தமிழர்களை கனடாவில் குடியேற்றியது.

இந்த தொகை கடந்த பல தசாப்தங்களில் அதிகரித்து இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடாக கனடா பார்க்கப்படுகிறது.

அத்துடன் கனடாவின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு வியக்கத்தக்கது.

இதன் காரணமாகவே 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தை தமிழர் வரலாற்று மாதமாக கனேடிய அரசாங்கம் பிரகடனம் செய்தது.

இந்நிலையில் இலங்கை தமிழர்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கனடா தொடர்ந்தும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஏனைய அமைப்புக்களுடன் செயற்பட்டு வருகிறது.

அத்துடன் வேறு எந்த நாடும் நடைமுறைப்படுத்தாத வகையில் இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.

ஜனாதிபதி 17 மாதங்களில் 18 வெளிநாட்டு பயணங்கள் – சஜித் குற்றச்சாட்டு

நாட்டில் நிலவும் நெருக்கடி இயற்கையாக உருவானதொன்றல்ல. திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட நெருக்கடி என்றும், இது பொருளாதார பயங்கரவாதம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த பொருளாதார பயங்கரவாதிகள், தங்கள் குண்டர் கும்பல்களுடன் கைகோர்த்து, நாட்டை வங்குரோத்தாக்கி விட்டு உலகம் சுற்றி வருகின்றனர். மக்கள் படும் துன்பங்களை உணர்வாறின்றி செயற்படும் ஆட்சிப் போக்குக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மக்களை பலிகடாக்கி மக்கள் படும் துன்பங்களையும், வலிகளையும் கருத்தில் கொள்ளாமல், மக்கள் படும் இன்னல்களை எண்ணாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருகிறார். நாட்டின் ஜனாதிபதியாக 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை போதாமையினால் மேலும் 200 மில்லியன் ஒதுக்கிக் கொண்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாரம்மல நகரில் நேற்று(21) இடம்பெற்ற ஜன பௌர நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை சிங்கப்பூர் ஆக மாற்றுவேன் என்றும் தொங்கு பாலத்தால் சென்று நாட்டை கட்டியெழுப்புவேன் என ஜனாதிபதி அவர்கள் கூறினாலும், வரிசையில் நின்று இறந்தவர்கள், தரக்குறைவான மருத்துவத்தால் உயிர் இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம் நாட்டின் வங்குரோத்து நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் நீதி நிலைநாட்டப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் முட்டாள்தனமான கொள்கைகளால் நாட்டை அழித்து வருகிறது. நட்பு வட்டார முதலாளித்துவத்தை பின்பற்றும் இந்த அரசாங்கம் மக்கள் சக்தியினால் விரட்டியடிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார, தேர்தல்கள் நடக்கவிருக்கும் இந்த காலப்பிரிவில், எதிர்க்கட்சியின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமாகும்.

யுத்தமொன்று இல்லாத தேர்தல் காலத்திலயே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம்,பயங்கரவாதி யார் என்பது குறித்தான வரைவிலக்கணம் எதுவும் இந்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்படவில்லை.

எந்த ஒரு நபரையும் கைது செய்யலாம்.அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கும், இந்நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவுமே தேர்தலை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் இதை மேற்கொள்கின்றனர்.

இதனாலையே இந்நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க இச்சட்ட மூலத்திற்கு எதிராக மனுவை தாக்கல் செய்துள்ளோம்.

ஜனநாயகத்தையும், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் அடக்குமுறைக்குட்படுத்தவே தேர்தல் வருடமொன்றில் இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தையும், இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தையும் அரசாங்கம் கொண்டு வருகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக முன்னெடுப்பு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது.

விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான அதிதிகள் அயோத்திக்கு வருகை தந்திருந்ததுடன், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தி ராமனை தரிசிக்க வந்திருந்தனர்.

முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவெகவுடா, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர், டி.ஆர்.டி.ஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளால் குறித்த கவனயீர்ப்பு மற்றும் அடையாள உண்ணாவிரத போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது.

பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுதந்திரமான வெளிப்படுத்துவதற்கும் ஒன்றுசேருவதற்குமான உரிமையினை உறுதிசெய், அரசே இலங்கை அரசியல் யாப்பிலுள்ள மனித உரிமையை மீறி செயற்படாதே, மக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அரசுடைய கடமையாகும், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு உட்பட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதன்போது, கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டு அவை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

மின்சாரசபை ஊழியர்களின் இராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் உத்தரவு

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் 5000 பேர் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எவ்வித தயக்கமும் இன்றி இராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எந்த ஒரு ஊழியரின் ராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்கும்படி இலங்கை மின்சாரசபை நிர்வாகத்துக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளை இராஜினாமா செய்பவர்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து பாக்கிகளையும் வசூலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் சீர்திருத்தங்கள் தொடர்பான பணிகளை துரிதப்படுத்துமாறு மின்சாரசபை நிர்வாகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்தங்களில் செலவு குறைப்பு வழிமுறைகள், உற்பத்தித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மின் திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டண தளத்தை விரிவுபடுத்துதல் என்பன உள்ளடங்குகின்றன.

இந்த வருடம் ஜனவரி மாதம் இடம்பெற்ற அடையாள வேலைநிறுத்தத்தின் போது இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவித்த பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 5000 மின்சாரசபை ஊழியர்கள் ஒரே நேரத்தில் இராஜினாமா செய்யத் தயாராகி வருகின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில் அமைச்சரால் இந்த புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்களை அடக்குவதற்கு அமைச்சின் முயற்சிக்கு எதிராக மின்சாரசபை தொழிற்சங்கக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கு அழுத்தமளியுங்கள் : புதிய இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது பிரதமர் மோடி மூடிய அறைக்குள் வலியுறுத்தினார். அவ்வாறு வலியுறுத்த மட்டுமே இந்தியாவால் முடியும்” என இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இன்று தெரிவித்தார்

தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பிரதி நிதிகளுக்கும் இந்திய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இன்று மாலை சுமாா் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்த இந்தச் சந்திப்பு நீடித்தது.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும், அதிகாரம் பகிரப்பட்டு மாகாண சபைகளுக்கான தேர்தலால் நடத்தப்பட வேண்டும், தேர்தல் நடத்தப்பட விட்டால் திரும்பத் திரும்ப நாம் உங்களிடம் இப்படி முறையிட்டுக் கொண்டிருப்பதை விட வேறு வழி இல்லை என தமிழ் தரப்பினா் இந்திய தூதுவரிடம் தெரிவித்தனர்

முல்லைத்தீவில் மகாவலி திட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் நிலத்தில் 600 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது, திருஆகாணமலையில் மிக சிறிய திட்டத்தை முன்னெடுப்பதற்காக கூறி இந்தியாவை தவிர்த்து பல நாடுகளை உள்ளீா்க்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது, மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தலை விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தமிழ் தரப்புகள் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டின.

அபிவிருத்தி திட்டங்களுடன் அரசியல் தீர்வுக்கான முயற்சியும் இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்த இந்திய துாதுவா், இந்தியாவிலிருந்து கடல் அடி மார்க்கத்தில் மின்சாரம் கொண்டு வருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு இணைப்பு, தேர்தல், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரங்களில் இந்தியா என்னும் அதிக வகைபாகத்தை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் கட்சிகளின் உறுப்பினர் வலியுறுத்தினாா்கள்.

இதற்கு பதிலளித்த இந்திய தூதர், இந்தியாவும் சர்வதேசமும் இலங்கையிடம் இவற்றை சொல்லத்தான் முடியும். இந்தியா தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது பிரதமர் மோடி இந்த விடயங்களை வலியுறுத்தினார். பின்னர் பகிரங்கமாகவும் சொன்னார் இந்தியா தொடர்ந்து அதனை வலியுறுத்ததும் என்றும் இந்தியத் துாதுவா் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் மீண்டும் இணைக்க வேண்டும் – சபா.குகதாஸ் கோரிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளரும், வட மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், மேற்படி அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

கடந்த உள்ளூராட்சி வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியது.

ஆனால் கட்சியின் அன்றைய முடிவை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி இனத்தின் ஒற்றுமையைக் கருதி பொதுச் சின்னத்தில் கூட்டமைப்பாக கடந்த காலத்தில் சில கசப்பான சம்பவங்களால் வெளியேறிய அனைவனையும் ஒன்றினைத்து ஒரு குடையின் கீழ் பயனிக்க தீர்க்க முடிவை கட்சியில் ஏகமனதாக முடிவெடுக்;க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தலைவர் தெரிவுக்கு முன்பாக மக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் முக்கியமானவை. அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் இணைந்து பொதுச் சின்னத்தில் இனத்தின் ஒற்றுமையையும் அரசியல் விடுதலையையும் வென்றெடுப்போம் எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடற்கரையில் இந்தியப் பிரதமர் மோடி மலர் தூவி வழிபாடு

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி சென்றடைந்த பிரதமர் மோடி அங்குள்ள அரிச்சல்முனை கடற்கரையில் மலர்களை தூவி வழிபாடு செய்தார். பின்னர் கோதரண்டராமர் கோயிலில் சிறப்புப் பூஜைகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 11 நாள்கள் விரதம் இருந்து வருகிறார். மேலும், பல்வேறு ஆன்மிக தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக பிரதமர் நேற்று முன்தினம் மாலை பெங்களூரில் இருந்து சென்னை வந்தார். பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

பயணத்தின் இரண்டாம் நாளில் சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் சென்ற அவர், அங்கு ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நேற்று ராமேஸ்வரம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்குள்ள கடற்கரையில் மலர்கள், துளசி இலைகளை தூவி வழிபாடு செய்தார். பின்னர் அங்கு நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்த அவர், அங்குள்ள புனித ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அரிச்சல்முனை கடற்கரையில் இருந்துதான் இலங்கைக்கு ராமர் பாலம் கட்டப்பட்டதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. நாளை அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி அரிச்சல்முனை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமரின் இராமேஸ்வர வருகையை முன்னிட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இராமேஸ்வர வருகையையொட்டி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 40 மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையே விடுவிக்க முயற்சிக்கப்படுகின்றது.

இம் மாதம் 26, 29, 30ஆம் திகதிகள் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் வழக்குகளை நடத்தி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றும் நாளையும் நீதிமன்றங்கள் விடுமுறை தினம் என்பதால் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றப் பதிவாளர்கள் மூலம் இந்த விடயத்தை நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

வழக்குக் கோவைகள் மற்றும் இதர பணிகளுக்கான நீதிமன்றின் ஏனைய பணியாளர்கள் உட்பட அனைவரையும் அழைப்பதில் தடை ஏற்பட்டால் இந்திய மீனவர்களின் விடுவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமையே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.