சீனாவின் பிடியில் சிக்கியுள்ள வட கடலை மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்

வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

2016ம் ஆண்டு இரு நாட்டு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அமுல்ப்படுத்த வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ள நிலையி்ல் மீனவர் பிரச்சினை தொடர்பிலும் இழவை மடிப் படகுகள் தொடர்பிலும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவுடன் பேசவேண்டுமென சில கட்சிசார் அமைப்புக்கள் கூறி வருகின்றன.

தொப்புள் கொடி உறவுகளுக்கிடையிலான பிர்சினையை அரசியலாக்கி கட்சிசார் அமைப்புக்கள் வெளியிடும் கருத்துக்களை மீனவர்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ளவியலாது.

இன்றைய ஜனாதிபதி முன்னர் பிரதமராக இருந்த 2016 ம் ஆண்டு 5 ம் திகதி வெளிவிவகார அரச மட்டத்தி்ல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

இதுவரை அந்த அறிக்கையை ஜனாதிபதியோ உரிய அமைச்சரோ நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதேபோல் தான் தற்போதும் இந்தியாவிற்கு சென்று அறிக்கையொன்று எட்டப்பட்டு நடைமுறைப்படுத்தாத நிலையே ஏற்படவுள்ளது.

ஏற்கனவே டில்லியி்ல் உருவாக்கப்பட்ட உடன்படிக்கை நடைமுறைப்படுத்தினாலே போதுமானது. குறித்த அறிக்கையானது இந்தியாவின் இணையத்தளத்திலும் உள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம் 28 ம் திகதி 7 சமாசங்களும் 18 சங்கங்களும் கலந்துரையாடி இவ் அறிக்கையை அமுல்ப்படுத்துமாறு ஜனாதிபதி்க்கு கடிதம் அனுப்பினோம்.

குறித்த அறிக்கையில் 6 மாதங்களுக்கொரு தடவை மீனவ அமைப்புக்கள் , கடலோர காவற்துறை மற்றும் இரு நாட்டு அரசாங்கங்களும் கலந்துரையாட வேண்டும் என நல்ல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரமும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடற்தொழிலாளர் பிரச்சினைக்கு ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டுமனக் கூறப்பட்டது.

இந்திய மத்திய அமைச்சர் முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் பலாலி விமான நிலையமூடாக வந்திறங்கி யாழ்.கலாசார நிலையத்தை சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர்.

அதன்போது இந்திய மீனவர்களை இடியுங்கள், பிடியுங்கள் என கூறி மயிலிட்டி துறைமுகத்தில் கடற்தொழில் சமாசங்களுக்கு இந்தியாப் படகுகள் வழங்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சருடனும் மாநிலத் தலைவருடன் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் பேச அழைத்திருக்கவில்லை.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை இன்றைய சூழலில் அரசியல் கட்சி சார்ந்தவர்களின் பிரச்சினையாகவே மாற்றப்படுகின்றது.

தற்போதும் கடலட்டைப் பண்ணைகள் பினாமிகளின் பெயரிலே உள்ள நிலையில் அரியாலையிலுள்ள கம்பனி சீனா முதலீடாகவிருப்பினும் தற்பொழுது பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்தீவில் உள்ள காவற் கொட்டகைகளில் சீனா நாட்டவர்கள் தங்கியிருந்ததை உறுதிப்படுத்தி யாழ்ப்பாணத்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் ஆங்கிலப் பத்திரிகைளிலும் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

எமது கடலில் நாம் சுதந்திரமாகத் தொழில் மேற்கொள்ள வேண்டும். எனவே வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை 2016 ம் ஆண்டு உடன்படிக்கை மாற்றப்படின் வடக்கு கடலை சீனாவிற்கு ஒப்படைக்கும் சூழ்ச்சியாக அமையும்.

இப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தான் 2017 ம் ஆண்டு 11 ம் ஆல்க கடற்தொழில் உள்ளூர் இழுவைமடிச் சட்டமும் 2018 ம் ஆண்டு வெளிநாட்டு மீனவர் ஒழுங்குபடுத்தல் சட்டமும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை வட மாகாண கூட்டுறவு ஆணையாளர் சங்கங்கள் சமாசங்களி்ன் பதவி.நியமனங்களுக்காக கட்சியின் ஆதரவாளர்களே நியமி்க்ப்படுகின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடு கூட்டுறவையும், வடக்கு கடலையும் அழிப்பதற்கு துணைபோவதாக அமைகின்றது. ஜனநாயக முறையில் கூட்டுறவு முறைகள் இடம்பெற இடமளிக்காவிட்டால் பதவிகளை வழங்கிவிட்டு சுதந்திரமாகச் சம்பளத்தைப் பெறலாம்.

இதைவிட அரசு காணியை அளவிடுகிறது என போராடுவோர் கடல் பிரதேசங்களை சட்டவிரோதமாக கடலட்டை பண்ணைகளுக்கு வழங்குவதையும் அவதானிக்க வேண்டும்.

இது தொடர்பில் சட்டம் தெரிந்த சட்ட.வல்லுனர்கள் முன்வந்து வழக்குத் தொடுக்க வேண்டும். நிலம் மட்டுமல்ல கடலும் எமது உரிமை.

மீனவர் பிரச்சினை அனைத்து மீனவர் அமைப்புக்களுடனும் இணைந்து கலந்துரையாடி தீர்வுகளை எட்ட வேண்டுமே தவிர கட்சி சார்ந்தோரை முன்னிறுத்தி டில்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை மீனவர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கான குரலாக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே வடக்கு மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவுக்கு இந்திய பிரதமர் மோடி,

அழுத்தங்களை வழங்குவதோடு சீனாவின் பிடியில் சிக்கியுள்ள வடக்கு கடலை மீட்பதற்கான அழுத்தங்களை இந்திய பிரதமர் மோடியை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜனாதிபதி ரணில் பேச்சு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு 2 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று மாலை வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளிதரன் வரவேற்றுள்ளார்.

இதன்பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் வரவேற்று கலந்துரையாடலில்  ஈடுபட்டார்.

உலகின் முதலாவது கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்

உலகின் முதலாவது கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது

செவ்வாய்கிழமை பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும் வகையில் பொண்டி நகரசபையினால் Parc de la mare à la veuve எனும் பூங்காவில் கறுப்பு யூலை நினைவாக மரம் நாட்டப்பட்டு கறுப்பு யூலை நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

 

மாலை 6.30 மணிக்கு நகரசபை முதல்வர்கள் மற்றும் உதவி நகரசபை முதல்வர்கள் நகரசபை உறுப்பினர்கள்அனைவரும் இணைந்து மரத்தினை நாட்டினார்கள். மரம் நாட்டியதைத் தொடர்ந்து பொண்டி நகரசபை முதல்வரால் கறுப்பு யூலை 40வது ஆண்டு நினைவுக்கல் நினைவுக்கல்திரைநீக்கம்செய்யப்பட்டது

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிப்பு

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றையதினம் குறித்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

குறித்த வரிச்சலுகை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மதுரை – யாழ்ப்பாணம் இடையே விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்

மதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த உதவுமாறு இந்திய பிரதமரிடம் கோரிக்கை

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இந்தியாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில கட்சிகளும் சிவில் அமைப்புகளும் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடிதம் எழுதி உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன.

35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் தனித்துவம் கொண்ட தேசிய இனமாக தமது தேசத்தில் சுயநிர்ணய உரிமையோடு வாழ்வதற்கான போராட்டத்தினை சர்வதேசமும் வியக்கும் அளவில் முன்னெடுக்கப்பட்டது.

ஒற்றை ஆட்சியின் கீழ் சுதந்திரமாக வாழ முடியாது. எமக்கான சுயாட்சி இருக்க வேண்டும் எனும் திடமான அரசியல் சிந்தனையோடு கட்டமைக்கப்பட்ட வடிவிலே போரியல் ஒழுக்கத்துடன் விடுதலை செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் யுத்த குற்றங்களுக்கு எதிராகவும், உறவுகள் காணாமலாக்கப்பட்டமை, காணிகள் அபகரிக்கப்பட்டமை, அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் இருக்கின்றமை என்பவற்றிற்கு நியாயமான நீதியினை பெற்றுத் தருமாறு வடக்கு கிழக்கு மக்கள் இன்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு தமிழக முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம்

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதமொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை சந்திக்க உள்ள நிலையில் குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்

அத்துடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழ தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசாங்கமும், திமுகவும் உறுதியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான தீர்வை எட்டுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன் நிறைவேறியது.

அதற்கமைய ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாங்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

பொது மன்னிப்பில் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்டனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது. சண்முகரட்ணம் சண்முகராஜன், செல்லையா நவரட்ணம் ஆகியோரே நேற்று மாலை சிறைகளிலிருந்து இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டில் செல்லையா நவரட்ணத்துக்கு 200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று வெடிப்பொருள்களுடன் கைதான சண்முகரட்ணம் சண்முகராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

13 ஐ முழுமையாகத் தர முடியாது; தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

13ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தின் அனுமதியின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது. அத்துடன், சில விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கட்சிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு நாளை வியாழக்கிழமை உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தப் பயணத்துக்கு முன்னதாக தமிழ்த் தேசிய கட்சிகளை பேச்சுக்கு அழைத்தார். நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டட வளாகத்தில் இந்தப் பேச்சு நடந்தது. பேச்சின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் கொண்டு வந்த சில தயார்படுத்தல்களான மனித உரிமைகள் விவகாரம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான விடயங்களை விவரித்தார்.

சம்பந்தனின் எதிர்ப்பை தொடர்ந்து அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயத் துக்கு கலந்துரையாடல் மாறியது. இந்தப் பேச்சின்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்துக் கட்சிகளின் தலை வர்களின் ஆதரவும் தேவை என்று ஜனா திபதி கூறினார். அத்துடன், பொலிஸ் அதிகாரம் இல்லாத 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடி யும். அத்துடன், சில விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள் ளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும் – இந்த விடயங்கள் தொடர்பில் சட்டரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தரப்பு தெரிவித்தது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்னைகளை தீர்க்கவே நான் விரும்புகிறேன். அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது எனது நோக்கமல்ல. வடக்கு, கிழக்கு மக்களுக்கு நான் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை. அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும்- என்றும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதனிடையே, 13ஆம் திருத்தம் குறித்த ஜனாதிபதியின் இந்த முடிவை தாம் ஏற்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பில் இரா. சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன், சி. வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சி. சிறீதரன், த. சித்தார்த்தன், சாணக்கியன் இராச மாணிக்கம், தவராசா கலையரசன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோருடன் சிறீ லங்கா சுதந்திர கட்சியின் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி தரப்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, விஜயதாஸ ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், ச. வியாழேந்திரன், சி. சந்திரகாந்தன் மற்றும் கே. திலீபன் எம். பி. ஆகியோர் பங்கேற்றனர்.