விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதிக்குமாறு கோரி தாயார் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் பணிமனை ஊடாக ஜனாதிபதிக்கான கடிதத்தையும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஊடாக வெளிவிவகார அமைச்சருக்கான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உள்ளிட்டவர்களை அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் விடுதலை செய்தது.

இதில், இலங்கையர்களான சாந்தன், முருகன், றொபேர்ட்ஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த சாந்தன்,  தன்னை இலங்கைக்குள் வர அனுமதிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளது.

மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக டெய்லிமோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

எனக்கு மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது எந்த தரப்பும் அது குறித்து எந்ததகவலையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனித புதைகுழி தொடர்பில்  கருத்துக்களை பெறுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நீதியமைச்சர் ஆகியோரை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என மோர்னிங் தெரிவித்துள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மனித புதைகுழியை மீண்டும் அகழ்வது குறித்து  ஆராய்வதற்கு தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றம் அழைத்துள்ளது.

இந்த கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளை அகழும் பணிகள் நீதவானின் உத்தரவின் பேரில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் அவைமீண்டும் ஆரம்பமாகும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை; பாரிய மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சமீபத்தில் இடம்பெற்றிருந்தவேளை அது சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தாh.

இது குறித்து மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர்  இதுமுன்கூட்டியே அவசரப்பட்டு வெளியிடப்பட்ட கருத்து புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச தராதரங்கள் மற்றும் உரிய தரப்பினரின் பங்களிப்புடன் ஆரம்பமாகவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் – சட்டத்தரணிகளுக்கான சர்வதேச அமைப்பு ஐ.நாவில் சுட்டிக்காட்டு

இலங்கையில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியிருக்கும் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்கள், சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும், அவர்களது தொழில்சார் நடவடிக்கைகளில் ஏற்படுத்தப்படும் இடையூறுகளை முடிவுக்குக்கொண்டுவருமாறும் வலியுறுத்தியுள்ளன.

ஜெனீவாவில் கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில், இலங்கை தொடர்பில் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்களான சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிலையம் என்பன இணைந்து வாய்மொழிமூல அறிக்கையொன்றை வெளியிட்டன. இவ்வமைப்புக்களின் சார்பில் பேரவையில் உரையாற்றிய ஜுலியா ஸ்மக்மென் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு:

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கு ஏதுவான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துவதன் அவசியம் என்பவற்றுடன் தொடர்புபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருப்பதனை நாம் வரவேற்கின்றோம்.

அதேபோன்று, சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அதேவேளை, சுயாதீனமான சட்டத்தொழில்வாண்மையாளர் ஊடாக சட்டரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான இயலுமை என்பது சட்டத்தின் ஆட்சி மற்றும் செயற்திறனாக இயங்கும் நீதிப்பொறிமுறை ஆகியவற்றின் அடிப்படைக்கூறுகளாகும்.

அதன்படி, எவ்வித இடையூறுகளோ, அத்துமீறல்களோ, அடக்குமுறைகளோ அல்லது முறையற்ற தலையீடுகளோ இன்றி தமது தொழில்சார் கடமைகளை முன்னெடுப்பதற்கான இடைவெளி சட்டத்தரணிகளுக்கு இருக்கவேண்டும்.

இருப்பினும், இலங்கையைப் பொறுத்தமட்டில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக போராட்டக்காரர்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மையின உரிமைகள் போன்ற அரசியல் ரீதியில் உணர்திறன்வாய்ந்த வழக்குகளில் இயங்கும் சட்டத்தரணிகள் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர்.

அதேபோன்று, சட்டத்தரணி என்ற ரீதியில் தமது பணியை மேற்கொண்ட சட்டத்தரணிகள் அதனுடன் தொடர்புபட்ட வகையில் கைதுகளுக்கும் குற்றவியல் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வலுகட்டாயமாகக் கைதுசெய்யப்பட்டமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவரது வழக்கு விசாரணைகளின் சுயாதீனத்தன்மை குறித்து நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், தொடர் தாமதமின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று, சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களது தொழில்சார் நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராக உரிய பாதுகாப்பை வழங்குமாறும் கோருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

காலாந்தர மீளாய்வுக்குழுவின்115 பரிந்துரைகளை இலங்கை ஏற்கவில்லை : மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை விசனம்

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மரண தண்டனையை ஒழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட 115 பரிந்துரைகளை இலங்கை ஏற்காமை குறித்துக் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை, இம்மீளாய்வுக்குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழுவானது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த 4 ஆவது மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தது.

இம்மீளாய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களையும், மனித உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய 294 பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 24 பக்க அறிக்கை கடந்த மாத நடுப்பகுதியில் வெளியாகியிருந்தது.

அதன்படி கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரின் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில், இலங்கை தொடர்பான உலகளாவிய காலாந்தர மீளாய்வு அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

இதன்போது பேரவையில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, உலகளாவிய காலாந்தர மீளாய்வு அறிக்கையில் மொத்தமாக உள்ளடக்கப்பட்டுள்ள 294 பரிந்துரைகளில் 173 பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாகவும், 115 பரிந்துரைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் (ஏற்றுக்கொள்ளவில்லை), 6 பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும் அறிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவையும், இலங்கையிலுள்ள அதன் பங்காளி அமைப்பான மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய காலாந்தர மதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை வெளிக்காட்டியுள்ள துலங்கல் அதிருப்தியளிக்கின்றது.

குறிப்பாக இலங்கை ‘அவதானம் செலுத்துவதாகக்’ கூறியுள்ள அனைத்துப் பரிந்துரைகளும் பெரும்பாலும் மரண தண்டனையை முற்றாக இல்லாதொழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டவையாக உள்ளன.

அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1, 46ஃ1 மற்றும் 51ஃ1 ஆகிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை இலங்கை நிராகரித்திருப்பது தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால் அண்மையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திலும் கரிசனைக்குரிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் அவை சர்வதேச சட்டங்களின் பிரகாரம் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவில்லை.

அதுமாத்திரமன்றி பெரும்பாலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருமாறும், நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுவதற்கான உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துமாறும் இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் உலகளாவிய காலாந்தர மீளாய்வைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் அதேவேளை, சர்வதேச சட்டத்துக்கு அமைவாக இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முக்கிய சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்களுக்கும் அந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரத்திற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எப் மற்றும் ஜனநாயக போராளிகள் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்கள் பிரித்தானியாவின் ஹரோ பிரதேசத்தில் ஒன்று கூடியிருந்தனர்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் (ஜனா) பங்கேற்றிருந்தார்.

இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து இலங்கை தமிழரசு கட்சி வெளியேறிய பின் மீண்டும், புதிதாகவும் இணைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டணியின் கள நிலவரங்கள்,யாப்பு, நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால வேலைத் திட்டங்கள், புலம்பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்க போகும் தேர்தல்கள், தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் எனவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும் உள் வாங்கி நிர்வாக கட்டமைப்பை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை

வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

அலுவலகம் திறக்கப்பட்ட போது, அன்டன் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், அரசியல்துறைத் தலைவர் சிவகுமார், ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

டெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக மார்க்-ஆண்ட்ரே

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சேவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், நியமித்துள்ளார்.

24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றியுள்ள மார்க்-ஆண்ட்ரே கடந்த 8 ஆம் திகதி அமுலாகும் வகையில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், லிபியாவில் ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியிருந்தார்.

2016 மற்றும் 2021 க்கு இடையில், அரசியல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களத்தில் சமாதானத்தை கட்டியெழுப்பும் ஆதரவு அலுவலகத்திலும் அவர் பணியாற்றி இருந்தார்.

15 மில்லியன் ரூபா இழப்பீடாக செலுத்திய மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை 10 தவணைகளில் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 28 ஆம் திகதி 15 மில்லியனை இழப்பீடாக செலுத்திய அவர், மீதமுள்ள தொகையை 2024 ஜூன் 30 முதல் 2033 ஜூன் 20 வரை கட்டம்கட்டமாக 8.5 மில்லியனை செலுத்துவதாக கூறியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் தங்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அவர்கள் செயல்படத் தவறியதால் உயிரிழந்தவர்களுக்கு மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 97,500/- ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285/ ரூபா பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் – ஜஸ்மின் சூக்கா

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகயிருக்கவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேசதிட்டம் என்ற அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

உண்மை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகயிருக்கவேண்டும்.

குற்றவியல் வழக்குகளை தவிர்த்தல் சர்வதேச நியமங்கள் மற்றும் தராதரங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

ஆவணங்களை அழிப்பதை தவிர்த்தல் தொடர்பில் பாதுகாப்பு படையினர் உரிய அமைப்புகள் திணைக்களங்களுக்கு உத்தரவொன்றை பிறப்பிக்கவேண்டும் – ஆவணங்களை அழிப்பதை குற்றமாக அறிவிக்கவேண்டும்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் முன்வைக்கப்படும் ஆதாரங்களை எதிர்கால வழக்குகளை நோக்கமாக கொண்டு பிந்தைய கட்டத்தில் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தித் துறையில் இந்தியாவுடன் ஒப்பந்தம்

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் பால் உற்பத்திகளின் தரப்பண்பை அதிகரித்தல், பால் உற்பத்தியில் தன்னிறைவடைதல் மற்றும் சிறியளவிலான பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரித்தல் போன்ற இலக்குகளை அடைவதற்கு இணைந்து செயலாற்றுவதற்காக இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்காக வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய, குறித்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.