சீனா இலங்கையை கடன்பொறிக்குள் தள்ளவில்லை – அலி சப்ரி

அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் சீனா அதிகளவான முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், பரஸ்பர நன்மை பயக்கும் பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் இடமபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், சீனாவுடனான நாட்டின் உறவு மற்றும் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு அது எவ்வாறு உதவியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளியுள்ளது என்ற மேற்கத்திய ஊடக அறிக்கைகாலை முற்றாக நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் சீன முதலீடு மிகவும் முக்கியமானது எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் சீனாவின் முதலீடு மிகவும் முக்கியமானது என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னேற்றத்தில் சீனா நம்பகமான நண்பராகவும், பங்காளியாகவும் இருந்து வருகிறது என்றும், தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணஆளுநர் செந்தில்தொண்டமான் – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

கிழக்கு மாகாணஆளுநர் செந்தில்தொண்டமான் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தமை சிறப்பான விடயம் எங்களின் அபிவிருத்தி கூட்டாண்மை குறித்து ஆராய்ந்தோம்,எதிர்கால ஒத்துழைப்பிற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்தோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை எங்கள் அயல்நாடுகளிற்கு முதலிடம் என்ற கொள்கையில் முக்கியமான இடத்தில் உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பத்து வருடங்களில் யாழ். குடா கடல் சேற்றுக் கடலாக மாறும் – சமூக செயற்பாட்டாளர் எஸ். செல்வின்

யாழ். குடா கடல் பாரம்பரிய கடற்தொழிலில் இருந்து விலகி அட்டை பண்ணை தொழில் விஸ்தரிக்கப்படுவதால் இன்னும் பத்து வருடங்களில் குடாக் கடல் சேற்றுக் கடலாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என சமூக செயற்பாட்டாளர் எஸ். செல்வின் தெரிவித்தார்.

உலக வாங்கியால் வெளியிடப்பட்ட கடல் அட்ட பண்ணை தொடர்பில் கடத்தொழில் சங்கங்களுக்கு விழிப்புணர் கூட்டம் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள ஆழம் குறைந்த கடற்கரைகளில் எவ்வித பரந்துபட்ட  ஆய்வுகளும் திட்ட மிடல்களும் இன்றி கடல் அட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கடலட்டை பண்ணைகளால் கடல்வாழ் உணவுச் சங்கிலியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில்

இது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிர்ப் பல்வகைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

வடக்கு மக்கள் மட்டுமின்றி இலங்கையில் வாழும் மக்கள் கடல் அட்டையை உணவு தேவைக்காக பயன்படுத்தாத நிலையில் டொலரைப் பெறப் போகிறோம் எனக்கூறி வெளிநாடுகளுக்கு எமது  பாரம்பரிய கடல் வளத்தை விற்க முடியாது.

அதுமட்டுமல்லாது கடல் மேலாண்மைக்காக கட்டமைக்கப்பட்ட கடற்கரையோர மீனவ மக்களின் வாழ்க்கை முறையை அட்டைப் பண்ணை என்ற பெயரில் பல் தேசியக் கம்பெனிகளை வளர்ப்பதற்காக எமது மக்களையோ கடல் வளத்தையோ அழிக்க முடியாது.

எமக்கு பொருத்தமற்ற கடல் அட்டப் பண்ணைக்கான அட்டைக் குஞ்சுகளை யாரோ ஒரு வெளிநாடு சக்தியின் வழங்கிவரும் நிலையில் அறுவடை செய்யும் போது விலையையும் அவர்களை நிர்ணயம் செய்கிறார்கள்.

சில வேளை குஞ்சுகளை வழங்கியவர்கள் அறுவடை காலத்தில் அதனை ஏற்றுமதி செய்யாவிட்டால் பாதிக்கப்படுவது எமது மீனவர்கள்.

40 நாள் கோழி குஞ்சை வளர்த்து முட்டை பெறமுடியாத எமது அரசாங்கம் சீனாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் நிலையில் பிளாஸ்டிக் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக பேசப்பட்டமை   யாவரும் அறிந்ததே.

ஆகவே எமது மக்கள் மரபுகளுக்கு உட்பட்டு அறங்களின்பால் மேற்கொள்ளும் கடற்தொழிலினை வெளிநாட்டு சக்திகளுக்கும் பினாமி நிறுவனங்களின் தேவைக்காக மாற்றம் முயற்சியை கைவிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தியில் மற்றுமொரு மனித புதைகுழி?

இலங்கையில் 20 புதைகுழிகளை இனங்கண்டு 5 அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டு சில நாட்களின் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் பிரதான வீதியில் பாடசாலைக்கு அருகாமையில் நீர் வழங்கல் அதிகாரசபையில் நீர் வழங்கல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது மனித எச்சங்கள், ஆடைகள் மீட்பு.

கொக்குளாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு நாளை நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வங்கிகளில் வைப்பு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையின் வங்கி அமைப்பின் மீது மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வங்கிகளில் வைப்பு செய்த 57 மில்லியன் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் ஏற்கனவே 50 வீதத்திற்கும் அதிகமான வரிகள் மூலம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்துள்ளதால் அவற்றின் மீது மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்

ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர்சேமலாப நிதி மீது அரசாங்கம் கைவக்காது என உறுதியளித்துள்ள மத்திய வங்கி ஆளுநர்ஊழியர்சேமலாப நிதியத்திற்கு 9 வீத வட்டிக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பிற்கான நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறும்வரை ஊகங்களை தவிர்ப்பதற்காகவே அரசாங்கம் வெள்ளிக்கிழமையை வங்கி விடுமுறையாக அறிவித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலத்திட்டம் வினைத்திறனுடன் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த ஜனாதிபதி உத்தரவு

அஸ்வெசும நலத்திட்டத்தை வினைத்திறனுடன் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கு முன் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எழுத்து மூலமாக மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை சமர்பிக்க அனுமதிக்கப்படும்.

அஸ்வெசும நலத்திட்ட பட்டியலில் பெயர்கள் இடம்பெறாதவர்கள் www.wbb.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று அங்கு குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கலாம்.

மேல்முறையீட்டு காலம் முடிவடைந்த பிறகு, பயனாளிகளின் இறுதிப் பட்டியலை அரசாங்கம் தயாரிக்கும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்ட பெயர்களின் பட்டியல் இறுதிஉணவை அல்ல.

தமிழ் மொழியில் மேல்முறையீடு செய்ய https://wbb.gov.lk/web/download/tamil/form ஐ பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்கள் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1924 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கடனை இரத்து செய்யாமல் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியாது – ஹர்ஷ

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த மறுசீரமைப்புச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்படி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கியின் ஆளுநர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தெளிவுப்படுத்தல் ஒன்றை வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.

அரசாங்கமும், உள்நாட்டுக் கடனை இரத்து செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

இதனால், வங்கிக் கட்டமைப்பிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அல்லது சேமித்த பணத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் சமூகத்தில் நிலவி வருகிறது.

அத்தோடு, ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால், மத்திய வங்கியின் ஆளுநரோ இவை எதற்கும் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இதுதொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – சஜித்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும்.

கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதா? அப்படி செய்வதால் நாட்டுக்கு என்ன நடக்கும்?பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் இரத்து செய்யப்படுமா? வட்டி வீதம் இரத்து செய்யப்படுமா?

இதனால், நாட்டின் தேசிய வருமானத்திற்கு ஏற்படும் தாக்கம் என்ன? என்பதை ஜனாதிபதி தெளிவுப்படுத்த வேண்டும்.

உண்மையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன? இதன்ஊடாக வங்கிக் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுகிறது.

ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட பொது நிதிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும்.
இவை தொடர்பாக நாட்டு மக்களுக்கு யாரும் தெரியப்படுத்தாத காரணத்தினால், சிலர் தவறான கருத்துக்களையும் அவர்களிடத்தில் கூறிவருகிறார்கள்.

எனவே, ஜனாதிபதி இதுதொடர்பான உண்மை நிலைமையை மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கூரையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோபா குழுவின் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கூட்டத்தின் போது, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எனவே, சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணரும் பணியை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமனம்

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கை விமானப்படையின் தற்போதைய பதவி நிலைப் பிரதானியான எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்சவுக்கு நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் எயார் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச இந்நாட்டின் 19 ஆவது விமானப்படை தளபதியாகவுள்ள நிலையில், அவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர் என்ற வகையில் ஆனந்த கல்லூரியில் உருவான முதலாவது விமானப் படைத் தளபதியாகவும் கருதப்படுவார்.

1988 ஆம் ஆண்டில் பயிலுநராக கொத்தலால பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்துக்கொண்டதோடு, அநுராதபுரம் முகாமில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் முதலாம் இலக்க 33 ஆவது விமானப்படை பயிற்சி பாடநெறியில் பங்குபற்றி பாடநெறியின் மிகச்சிறந்த பயிலுநராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளில் விமானப்படை அதிகாரியாக பங்கேற்ற அவர் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தியுள்ளார்.

விமானப்படை தளபதியாக நியமனம் பெறுவதற்கு முன்பாக அவர் விமானப்படையின் இரண்டாம் நிலை அதிகாரியாக நியமனம் வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.