எனக்கு நேர்ந்ததே கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நேர்ந்துள்ளது என்கிறார் மைத்திரி

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு 2019ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

ஆனால் இறுதியில் எனக்கு நேர்ந்ததே கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நேர்ந்தது. பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது பயனற்றது, பாதுகாப்புத்துறை முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 410 பில்லியன் ரூபாவில் 100 பில்லியன் ரூபாவை கல்வி அமைச்சுக்கு மேலதிகமாக வழங்க ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் என சபையில் ஜனாதிபதிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.24) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு  மற்றும் தொழில்நுட்ப அமைச்சு  ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை 2009 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வேகமாக அபிவிருத்தி அடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இதற்கு உப்பு, காரமாக என்னால் கருத்து குறிப்பிட முடியும், ஆனால் நேரம் இல்லாத காரணத்தினால்   இன்றைய  நாளுக்கான விடயம் தொடர்பில் கருத்துரைக்கிறேன்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக நான் பதவி வகிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு 280 பில்லியன் அல்லது 285 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால் தற்போது 410 பில்லியன் குறிப்பாக இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை, பொலிஸார் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். அத்துடன் பொருளாதார பாதிப்பையும் பொலிஸார் எதிர்க்கொண்டுள்ளார்கள்.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கியுள்ள 410 பில்லியன் நிதியில் இருந்து 100 பில்லியன் ரூபாவை குறைத்து அதனை கல்வி அமைச்சுக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகிறேன். இலவச கல்வியை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், கல்வியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் 160 ரூபா உணவு கொடுப்பனவு தற்போதைய நிலைக்கு போதுமானதல்ல எற்றார்.

தமிழ்தரப்பிடம் மாவீரர்பெற்றோர்களை பாதுகாக்கக்கூடிய எந்தவிதமான திட்டமும் இல்லை- ரெலோ க.விஜிந்தன்

முள்ளியவளை பிரதேசத்துக்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில், மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு ஏற்பாட்டு குழுவினால் நேற்று (23) சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக முள்ளியவளை முதன்மை வீதியில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக இருந்து மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் பொதுச்சுடரினை முன்னாள் போராளி அச்சுதன் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவீரர் நினைவுரையினை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளருமான க.விஜிந்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், பிரதேச சபைஉறுப்பினர்களான க.தவராசா, கெங்காதரம், மற்றும் முன்னாள் போராளிகளான மாதவமேஜர்,அச்சுதன், சமூகசெயற்பாட்டாளர்களான சிவமணிஅம்மா,சைகிலா,சகுந்தலா ஆகியோர் நிகழ்தியுள்ளார்கள்.

இதன் போது உரையாற்றிய ரெலோ மத்திய குழு உறுப்பினரும், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளருமான க.விஜிந்தன் புலம் பெயர்ந்து இருப்பவர்கள் உள்நாட்டில் இருப்பவர்களுடன் இணைந்து மாவீரர்களின் பெற்றோருக்கு உதவக்கூடிய ஒரு சிறந்த கட்டமைப்பினை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுக்கு ஒரு இன விடுதலை வேண்டும். எங்களுக்கு உரிமை வேண்டும் நாங்கள் இலங்கையில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களைப் போல் கெளரவமாக வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு வடிவங்களில் போராடி வந்தோம். எங்களுடைய போராட்டம் இன்னமும் தோற்றுப் போகவில்லை. நாங்கள் விடுதலையை நோக்கியே மென்மேலும் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

இங்கே இருக்கின்ற பெற்றோர்களுக்கு தான் வலியும் வேதனையும் தெரியும். ஒரு தேச விடுதலைக்காக போராடிய போராளியின் வலி இன்னொரு போராளிக்கு தான் தெரியும். பல்வேறுபட்ட அடக்குமுறைகளைப் எம் மீது பிரயோகித்து எதுமற்ற நிலையில் ஏதிலிகளாக எம்மை நாட்டை விட்டு விரட்டினார்கள் எங்களுடைய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தொடர்ச்சியாக தடை விதித்தார்கள். பல மாவீரர்களின் பெற்றோர் தாங்கள் மாவீரர் குடும்பம் என சொல்ல பயப்படுகின்றார்கள். நீங்கள் அதனை துணிந்து சொல்வதில் பெருமை கொள்ள வேண்டும். இன்று தமிழினத்துக்கு ஒரு முகவரி கிடைத்திருக்கின்றது என்றால் அது உங்களின் உறவுகளினாலே கிடைத்தது. நீங்கள் இந்த மண்ணிலே போற்றப்பட வேண்டியவர்கள். பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். எத்தனையோ பெற்றோர்கள் இன்று மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எம்முடைய சமுகத்திலே இப் பெற்றோர்களைப் பாதுகாக்கக் கூடிய இவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கக் கூடிய எவ்வித திட்டமும் இல்லை என்பது வெட்கக் கேடானாது. புலம் பெயர்ந்து இருப்பவர்கள் உள்நாட்டில் இருப்பவர்களுடன் இணைந்து மாவீரர்களின் பெற்றோருக்கு உதவக்கூடிய ஒரு சிறந்த கட்டமைப்பினை உருவாக்க வேண்டும். நாங்கள் இப் பெற்றோர்களை சிறந்த முறையில் கவனித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதே அவர்களை பெருமைப்படுத்தும். எதிர்வரும் 27 ஆம் திகதி எந்த விதமான தடைகள் வரினும் முள்ளியவளை துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை சிறப்பாக நடாத்துவோம் என குறிப்பிட்டு அழைப்பு விடுத்தார்.

இதன்போது 150 வரையான மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பதற்காக, அழைத்து வரப்பட்ட போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள படைமுகாமில் இருந்து படையினர் காணொளி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

IMF – இலங்கை உடன்படிக்கை : மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை பிற்போடப்படும் என சில தரப்பினர் முன்வைக்கும் கூற்று அடிப்படையற்றது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு உரிய முன்மொழிவை சமர்ப்பிப்பதே மத்திய வங்கியின் இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அந்த இலக்கை இழந்தால், 2023 ஜனவரியில் அதை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – சரத் வீரசேகர

நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் வரலாற்றில் இருந்து செய்த உயிர் தியாகத்தை ஒவ்வொரு இனத்தின் தேவைக்காகவும், ஒருசிலரின் தேவைக்காகவும் விட்டுக் கொடுத்து நாட்டை பிளவுப்படுத்த முடியாது என நாடளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொட்பில் பாராளுமன்றத்தில் நேற்று அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அமுல்படுத்தியது. இலங்கையர்கள் அதனை கோரவில்லை.

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தான் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி, அதிகாரத்தை பிரயோகித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்,ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கும்,நாட்டு மக்களுக்கும் இடையில் தொடர்பில்லை.

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை,அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம். ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை. சமஷ்டியாட்சி நாடுகளில் மாத்திரம் தான் அதிகார பகிர்வு சாத்தியமாகும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் உயிர் தியாகம் செய்துள்ளது. சோழர், பாண்டியன் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் போராடினார்கள், தியாகம் செய்தார்கள். ஆகவே அதிகார பகிர்வு என்ற சொற்பதம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் இந்த நோக்கத்துடன் செயற்பட்டார்.

ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள்.

பாதுகாக்கப்பட்ட ஒருமைப்பாட்டை ஒவ்வொருவரின் தேவைக்காக மலினப்படுத்த முடியாது. மாகாண சபைக்கு முழுமையாக எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்.

மாகாண சபை என்பது வெள்ளை யானை. ஒவ்வொரு இனத்தவரின் தேவைக்காக நாட்டை பிளவுப்படுத்த முடியாது, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும்” என்றார்.

இலங்கைக்கான சீனத் தூதுவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹோங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்துள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, பிரேமநாத் சி.தொலவத்த உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான கடன் பிரச்சினை, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், நேரடி முதலீடு, வரலாற்று உறவு, புதிய ஆற்றல், சுற்றுலாத் துறை மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

வியட்நாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை!

கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கடந்த 8ஆம் திகதி பிலிப்பைன்ஸ்க்கும் வியட்நாமிற்கும் இடையே உள்ள கடலில் கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது யப்பான் மற்றும் சிங்கப்பூர் கடற்படையினர் காப்பாற்றி வியட்நாம் கொண்டவரப்பட்டு அவர்கள் அங்கு தற்காலிக அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்த நிலையில் அவர்களை காப்பாற்றி அந்த நாட்டிலுள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையளிக்ப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சடலம் தொடர்ந்தும் அந்த நாட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை மீள வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் பாரிய தொகையொன்றை கோரி வருவதாகவும் வியட்நாமிலுள்ள இலங்கை அகதியொருவர் தெரிவித்தார்.

குருந்தூரில் சட்டவிரோத பெளத்த கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் பணிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று இன்று (24) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (24) முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு இலக்கம் AR / 673 வழக்கின் மீதான கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு தொடக்கம் முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில் தொல்லியல் ஆய்விக்கு எனும் பெயரில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடம் அழிக்கப்பட்டு பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதிவாதிகளாலும் வழக்கு தொடுனர்களாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளை நடைபெற்று வந்துள்ளது.

இதன் தொடர்சியாக இந்த வழக்கில் பல்வேறு கட்டளைகளை நீதிமன்றம் வழங்கி வந்த நிலையில் அந்த கட்டளைகளையும் மீறி பௌத்த கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்திருந்தன.

இதன்படி கடந்த 19.07.2022 அன்று மன்று கட்டளை ஒன்று வழங்கி இருந்தது. அதாவது 12.06.2022 அன்று எந்த நிலையில் குருந்தூர் மலை பிரதேசம் இருந்ததோ அங்கு இடம்பெற்றுவந்த கட்டுமானங்கள் இருந்ததோ அந்த நிலையினை தொடர்ந்தும் பேண வேண்டும் என்றும் புதிதாக மேற்கொண்டு கட்டுமானங்களை செய்யமுடியாது என்றும் கட்டளை வழங்கி இருந்தது.

அத்தோடு கட்டுமானப்பணிகள் இடம்பெருவரும் குருந்தூர்மலைக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி . சரவணராஜா மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தனர்.

இருந்த போதிலும் அந்த கட்டளையினையும் மீறி அங்கு கட்டுமானப்பணிகள் தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது தொடர்பில் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும் குருந்தூர்மலை பகுதியில் போராட்டம் செய்திருந்தனர்.

அதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வேறு சில B அறிக்கைகளும் தாக்கல் செய்யப்ட்டிருந்ததோடு ஆதி அய்யனார் ஆலயம் சார்பில் சட்டதரணிகளால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது .

இந்த கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான கட்டளைகாக இன்று தவணையிடப்பட்டிருந்த நிலையில் 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையினை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்களை அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது.

ஆனால் ஜூலை மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு மாறாக குருந்தூர்மலை பகுதியில் பௌத்த கட்டுமான பணிகள் பௌத்த பிக்கு மற்றும் இராணுவத்தினரின் அனுசரணையோடு தொல்லியல் திணைக்களத்தால் தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாவை பதவியில் அமர்த்தவே ஈஸ்டர் தாக்குதல்- சந்திரிகா குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே, 2019 இல் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.

குற்றச்சாட்டுகளை நம்புவதாக கூறிய சந்திரிகா, இந்த விடயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்துவிட்டு, அரசியல் ஆதாயத்திற்காக சுதந்திரக் கட்சியை பயன்படுத்த ராஜபக்ஷர்கள் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

ஆபத்தான நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் வாழ்வு – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் கடன் வழங்குநர்கள் விரைவில் பதிலொன்றை வழங்காவிட்டால், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அபாயத்தை எதிர்நோக்கலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு கடன்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் இணங்குவது அவசியம் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதனூடாக சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பிரதான கடன் வழங்குநர்களான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விரைவில் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடியினால் ஏற்படும் மனித உரிமை மீறல்களை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச நாணய நிதியம் தனது நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியரின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய முன்னாள் அமைச்சர்

கொழும்பு 7 இல் உள்ள வீடொன்றின் மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபையை சேர்ந்த ஊழியரின் கழுத்தை பிடித்து முன்னாள் அமைச்சர் ஒருவர் வெளியே தள்ளிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டில் பாரிய தொகை மின்கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருப்பது தொடர்பில் பல தடவை தெரியப்படுத்திய நிலையில், கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மின்சாரத்தை துண்டிக்க சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவ்விடத்தில் நின்ற முன்னாள் அமைச்சர் மின்சார சபை ஊழியர் ஒருவரின்  கழுத்தைப் பிடித்து, அவரை வெளியில் தள்ளியதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.