தமிழர்கள் கேட்கும் சமஷ்டி ஒருபோதும் சாத்தியமாகாது – ஆளும் தரப்பு பிரதம கொறடா பிரசன்ன

தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு ஒரு போதும் சாத்தியமாகாது. அரசாங்கம் அதனை அனுமதிக்காது. கூட்டாட்சி என்ற சமஷ்டி எனப்படுவது நாட்டை துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்திய பயணம், இந்திய பிர தமருக்கு தமிழ் கட்சிகள் கடிதம் அனுப்புவது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது, அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம் திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் நிகழும். இலங்கை தொடர்பாக இந்திய தரப்புக்கு பல விடயங்கள் தெரிவிக்கப்படும். குறிப்பாக இந்தியா தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துகிறது.

இதனால், தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களுக்கு ஜனாதிபதி அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை இந்திய தரப்புக்கு தெளிவுபடுத்துவார். தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு முட்டிமோதிக் கொண்டு கடிதம் அனுப்புவது பயனற்றது. அரசியல் இலாபம் கருதியே தமிழ்க் கட்சிகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன. 13ஆவது திருத்தச் சட்ட நடைமுறை உடனடி சாத்தியமற்றது. பாராளுமன்றத்தின் மூலமே இது அனுமதிக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் சமஷ்டி தீர்வை கோருகின்றன. இது ஒருபோதும் சாத்தியமற்றது. அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்காது. கூட்டாட்சி எனப்படும் சமஷ்டி என்பது நாட்டை துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது. இருக்கின்ற அரசமைப்பை மறுசீரமைத்து அல்லது புதிய அரசமைப்பு நாட்டு மக்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்துக்குள் வழங்குவார் என்றார்.

இந்தியப் பிரதமருக்கான கடிதம் நாளை இந்திய தூதரிடம் கையளிப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளைய தினம் இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நான்கு கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இன்றையதினம்(12) குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டனர்.

குறித்த கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனும் புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஐனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும் கையொப்பமிட்டனர்.

மேலும் ரெலோவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடமும் தமிழ் தேசிய கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீகாந்தாவும் கையொப்பமிட்ட பின்னர் குறித்த கடிதம் நாளைய தினம் வியாழக்கிழமை(13) இலங்கைக்கான இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த கடிதத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் பிரகாரம் கொண்டு வரப்பட்ட 13ம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியாக இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே கடிதத்தை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஐ நடைமுறைப்படுத்த இந்தியா துணைநிற்கும் – பிரிட்டன் தமிழர் மத்தியில் அண்ணாமலை

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழர்களுக்கு இந்தியா துணைபுரியும் என்று இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லண்டன் – பர்மிங்ஹாமில் “தமிழராய் இணைவோம் – என் மண் – என் மக்கள்” என்ற இலங்கை – இந்திய புலம் பெயர் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், “2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பெரும் போரை நடத்தியபோது, அதனைத் தடுக்க அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி, தி. மு. க. கூட்டணிகள் தவறிவிட்டன.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்தப் போரை எதிர்த்தது”, என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், மற்றும் பா. ஜ. க. அரசாங்கத்தின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்தும் அவர் இதன்போது விளக்கமளித்தார்.

ஜனாதிபதி சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என தமிழ்த் தலைவர்கள் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை எனவும், அவர் சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் அரசியல் கைதிகள் விடயத்தில் மாத்திரம் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும் காணி விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களம் ஊடாகப் புதிதாக பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

முன்னைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தால் முடிவுகள் எடுக்கப்படவில்லை என தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கைகளில் இருப்பதாலேயே மக்கள் அதனை நிராகரித்துள்ளனர் என்றும் காணி விடுவிப்பில் எதுவும் முழுமையாக நடைபெறாத நிலையில் லண்டனில் ரணில் விக்ரமசிங்க பொய்யுரைத்துள்ளார் என செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் காலக்கெடுக்களை கூறி தீர்வு வரும் என ஏமாற்றும் ஜனாதிபதியின் உத்திகளை கண்டு ஏமாறாமல், சர்வதேச சமூகம் உண்மைய நேரில் வந்து அறிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பேச்சுவாரத்தைக்குச் சென்ற சம்பந்தன், அவர் ஏமாற்றியதாக தெரிவித்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க அதை எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றார் என்பது லண்டன் பேச்சில் தெரிவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள் மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன – ரணில்

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள்   மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன அவற்றை நான் தமிழ் அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளேன் என ஜனாபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

நான் பிரதமராக பதவிவகித்தவேளை நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை நான் ஆரம்பித்தேன் அன்று முடித்த இடத்திலிருந்து நான் தற்போது தொடர்கின்றேன்.

தமிழர் பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன் பலவிடயங்கள் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளோம்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்,இந்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்திற்கும்  எதிர்கட்சிகளிற்கும் இடையி;ல் மூன்று விடயங்கள்தொடர்பில் கருத்துவேறுபாடுகள் காணப்பட்டன இவற்றில் இரண்டிற்கு தீர்வை கண்டுள்ளோம்.

வடக்குகிழக்கில் காணப்படும் காணி தொடர்பான விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் பல நடவடிக்கைகைள எடுத்துள்ளது.

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள்   மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன அவற்றை நான் தமிழ் அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளேன்

ஜூலை மாதத்திற்குள் முழுமையான செயல்முறையை சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இல்லாமல் இலங்கைத் தமிழரின்  பிரச்சனையைத் தீர்க்க முடியாது – சிவசக்தி ஆனந்தன்

இந்தியா இல்லாமல் இலங்கைத் தமிழரின்  பிரச்சனையைத் தீர்க்க முடியாது” என வன்னியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்மநாபாவின் 33 ஆவது நினைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யுத்தம் முடிவடைந்து  14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதும் ,  போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கமுடியாத நிலையிலேயே  உள்ளன.

இதன்காரணமாக  ஒரு சில கட்சிகளைத் தவிர ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும் இந்தியாவை நாடி இருக்கும் நிலையே  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 21 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள நிலையில் அவரது சந்திப்புக்கு  முன்னரே ”இலங்கை ஜனாதிபதி தமிழர் பிரச்சனையைத்  தீர்க்க அழுத்தம் கொடுக்கவேண்டும்” எனக் கோரி   தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியப் பிரதமரும்  இச்சந்திப்பின் போது  ” மாகாணசபைக்குள்ள முழுமையான அதிகாரங்கள் வழங்குதல் , போரினால்  ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளான நில ஆக்கிரமிப்பு, பெளத்த மயமாக்கல் போன்ற பல பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தத்தை பிரயோகித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திடீர் ஜனாதிபதி ரணிலால் பேச்சு எனும் போலி வேசத்திற்குள் புதிய நாடகம் அரங்கேற்றம்

திடீரென வந்த ஜனாதிபதி ரணில் இப்பொழுது எங்களை அழைத்து பேச்சு என்று ஒரு போலி வேசத்திற்குள் புதிய நாடகம் அரங்கேறிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரம் படுகொலை நிகழ்வு (10.06.2023) நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில்,

இவ்வாறான நினைவு நாட்களை அடுத்த சந்ததி மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஆண்டு தோறும் நினைவேந்தல் செய்யப்படுகின்றது. மாறிமாறி வந்த கடந்தகால அரசுகள் ஆரம்ப காலங்களில் யே.ஆர்.ஜெயவர்த்தான முதற்கொண்டு இறுதியாக ரணில் விக்கிரமசிங்க வரைக்கும் ஆட்சிசெய்தவர்கள் கடந்த ஆட்சிகாலங்களில் திட்டமிட்டு இனப்படுகொலையினை அரங்கேற்றி இருந்ததை நாங்கள் மறந்துவிடவில்லை.

இந்த இனப்படுகொலைகள் எல்லாம் எங்களின் தமிழ்தேசியத்தினை சிதைவடையசெய்து உணர்வுகளை அடக்கி உரிமைபோராட்டத்திற்கு எங்கள் தாயார் படுத்தல்களை அடியோடு கிள்ளிவிடுவதற்காக காலத்திற்கு காலம் திட்டமிட்ட இனப்படுகொலைகள் அரங்கேறி வந்துள்ளன.

அரசியல் ரீதியாக எங்கள் உரிமை போராட்டத்தினை அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட போது மூத்த தமிழ்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிடப்பட்டு சிங்கள பேரினவாத வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட வரலாற்றினை நாங்கள் கண்டுள்ளோம் அது இன்றுவரை தொடர்கின்றது.

அண்மையில் கடைசியாக சிங்கள பேரினவாதத்தின் கைக்கூலிகளால் படுகொலை முயற்சி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன் இதுபோன்றுதான் தமிழ்மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை உரிமை போராட்டத்தில் பங்கெடுப்பவர்களை இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்காது அரசின் ஏவல்படைகள் ஊடக அச்சுறுத்தும் செயற்பாடு இன்றுவரை தொடர்கின்ற நிலையாகத்தான் இருக்கின்றது.

எங்கள் போராட்டத்தினை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காகவும் எங்கள் உரிமை போராட்டத்தினை நாங்கள் மீண்டும் ஒருதடவை சிந்திக்ககூடாது என்பதற்காகவே மாறி மாறி வரும் அரசு செயற்படுகின்றது.

தமிழ்மக்களை ஏமாற்றுவதற்கு ஜனாதிபதி முனைகின்றார். அவரால் கடந்த காலங்களில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கா தன்னை தயார்படுத்துவதற்காக ஒருபோலி நாடகம் இந்த பேச்சுவார்த்தை என்று சொல்லிக்கொண்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆரம்ப பேச்சு வர்த்தை தமிழ்தேசிய கட்சிகள் என்று அழைக்கப்பட்ட நிலையில் கடைசியாக நடந்த பேச்சுவார்தை தமிழரசு கட்சி என்று ஒரு குறுகிய எல்லைக்குள் கொண்டுவரப்பட்டு பேச்சு நடைபெற்றுள்ளது.

கடந்தகலங்களில் விடுதலை போராட்ட போரளிகளை பிரித்ததைபோல் இப்போது தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை பிரித்தாளுகின்ற தந்திரத்தினை மீண்டும் ஆயுதமாக காணக்கூடியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து எச்சரிக்கைகளை விடுத்து பேச்சுக்களை குழப்பாதீர்கள் – மகிந்த ராஜபக்‌ஷ

ஜனாதிபதியுடனான பேச்சுகளில் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து எச்சரிக்கைகளை விடுத்து குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ எம். பி. கூறியுள்ளார்.

அத்துடன், சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்பட்டால் எல்லாம் குழப்பமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வை காணும் செயல்பாட்டில் இறங்கியுள்ளார்.

இதற்கு அரசின் பிரதான பங்காளிக் கட்சியான பெரமுன முழு ஆதரவை வழங்குகின்றது. ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்கும் நிலையில் உள்ளன.

இந்த நல்லதொரு சந்தர்ப்பத்தை குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்பட்டால் இங்கு எல்லாம் குழப்பத்தில்தான் முடியும்.” என்றார்.

இந்தியாவின் அழுத்தத்தால் விரைவில் மாகாண சபைத் தேர்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை கண்டு மனதை தளரவிடாமல் தேர்தலுக்கு தயாராகுமாறு பொதுஜன பெரமுனவின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருப்பது ஜனநாயத்திற்கு விரோதமானது என்றும் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே பொருளாதாரத்திற்கு பாதிப்பு என குறிப்பிட்டுக்கொண்டு தேர்தலை தாமதப்படுத்தும் நடவடிக்கைக்கு அவர்கள் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது

தமிழ் மக்களின் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்காமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை காண முனைந்தால் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழர்களின் தீர்வுக்கான கலந்துரையாடலை முன்னெடுத்தால் அந்தக் கலந்துரையாடல் தோல்வியிலேயே நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

தீர்வு என்ற பெயரில் தமிழ்க் கட்சிகளை இனிமேல் ஏமாற்ற முடியாது என்றும் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக உள்ளார்கள் என்றும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.