இந்த வார இறுதியில் நாடு திரும்பவுள்ள கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் கடந்த  ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி  சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர்  நாடு திரும்பினார்.

பின்னர் அவர் சமீபத்தில் டுபாய் நாட்டுக்குச்  சென்றுள்ள  நிலையில், குடியுரிமை தொடர்பான அவரது கோரிக்கையை அமெரிக்கா  இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவிக்கையில்,

‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான எந்தக்   கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்க்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் டுபாய் சென்றுள்ளார். இந்நிலையில்    இம்மாதம் 6 அல்லது 7 ஆம் திகதி அவர்  நாடு திரும்புவார்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கை தொழில் முயற்சியாளார்களுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு

“சமீபத்திய உலகளாவிய விநியோகச் சங்கிலி தடங்கல்கள், அதிகரித்த எரிசக்திச் செலவுகள், நிலையற்ற பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவற்றின் காரணமாக இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. அவற்றுள் சில அழுத்தங்களை இந்த விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதி தணிப்பதுடன் MSMEs தமது செயற்பாட்டு மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவுகிறது.” என USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் Gabriel Grau தெரிவித்தார்.

உணவுத் துறையில் உள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு (MSMEs) மூலதனத்திற்கான அணுகலை வழங்குவதற்கு உதவிசெய்யும் ஒரு புத்தாக்க விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதியினை உருவாக்குவதற்காக Keells Supermarkets மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) ஆகியவற்றுடன் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பானது (USAID) ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது.

இந்த வசதியானது மூலதனத்திற்கான அணுகலை அதிகரிப்பதன் ஊடாக கொவிட்-19 பெருந்தொற்றின்போது உருவாகி நாட்டின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியால் மேலும் மோசமடைந்த விநியோகச் சங்கிலித் தடங்கல்களை குறைக்கிறது.

“விநியோகச் சங்கிலிகளுக்கான நிதியளிப்பு முயற்சியில் USAID மற்றும் HNB ஆகியவற்றுடன் ஒன்றிணைவதானது, தற்போதைய நெருக்கடியின் போது MSMEs மூலதனத்தை அணுகுவதற்கான வாய்ப்பினைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

எமது பங்குதாரர்களுக்கு ஒரு பொதுவான மதிப்பீட்டினை உருவாக்குதல், உள்நாட்டு பொருளாதாரத்திற்கு உதவி செய்தல், மற்றும் உற்பத்திப் பொருட்கள் எமது வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய எங்களது இலக்குகளுக்கு இந்த வசதி உதவியாய் அமைகிறது.” என Keells Supermarkets இனது தாய் நிறுவனமான John Keells Holdings இனது தலைவர் சரித்த சுபசிங்க தெரிவித்தார்.

இந்த வசதியானது போட்டித்தன்மைவாய்ந்த நிலையான வட்டி விகிதத்தைக் கொண்ட நிதியுதவியை MSME களுக்கு வழங்குகிறது.

இந்த வசதியானது அது செயற்பட்ட முதல் வாரங்களில் எட்டு விநியோகஸ்தர்களுக்கு மொத்தம் 430,000 அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கியது.

ஆறு மாதங்களில் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனைப் பெற்றுக் கொள்வதற்கு கிட்டத்தட்ட 100 MSMEகளுக்கு உதவிசெய்வதற்கு பங்காண்மை திட்டமிட்டுள்ளது.

“உணவுத் துறையில் MSME களுக்கு இது போன்ற ஒரு புத்தாக்க நிதியியல் தீர்வை வழங்குவதற்காக Keells உடன் ஒன்றிணைவதானது HNBஇற்குக் கிடைத்த ஒரு பாக்கியமாகும்.

வியாபாரங்கள் தொடர்ந்து சீராக இயங்குவதற்காக MSMEs மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்தல், சம்பளங்களை வழங்குதல் மற்றும் ஏனைய குறுகிய கால செலவுகளை மேற்கொள்தல் போன்ற அவர்களின் செயற்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இது உதவி செய்யும். MSMEகள் தமது வணிக நோக்கங்களை அடைவதற்கு இது மேலும் வலுவூட்டும் என நாம் நம்புகிறோம். இந்த முயற்சியில் HNB உடன் ஒன்றிணைந்ததற்காக USAID மற்றும் Keells ஆகிய இரண்டிற்கும் நாம் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என SME மற்றும் சில்லறை வங்கியியல் பிரிவிற்கான HNB இன் பிரதிப் பொது முகாமையாளர் சஞ்சய் விஜேமான்ன தெரிவித்தார்.

“சமீபத்திய உலகளாவிய விநியோகச் சங்கிலி தடங்கல்கள், அதிகரித்த எரிசக்திச் செலவுகள், நிலையற்ற பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவற்றின் காரணமாக இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.

அவற்றுள் சில அழுத்தங்களை இந்த விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதி தணிப்பதுடன் MSMEs தமது செயற்பாட்டு மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவுகிறது.” என USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் Gabriel Grau கூறினார்.

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் திணைக்களங்களை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிட கோரிக்கை

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் திணைக்களங்களை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிடுமாறு பைடனுக்கான தமிழர்கள் எனும் அமெரிக்காவினை சேர்ந்த தமிழ் அமைப்பினால் அமெரிக்கச் செயலர் பிளிகனுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் துறைகளை பயங்கரவாத அமைப்புகளாகவும், அவற்றின் தலைவர்களை பயங்கரவாதிகளாகவும் வகைப்படுத்த வேண்டும் என்று கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க மற்றும் வனத்துறையின் தலைவரும் பாதுகாப்பு அதிகாரியுமான கலாநிதி கே.எம்.ஏ.பண்டார ஆகியோரை பயங்கரவாதிகளாக அறிவிக்குமாறு அமெரிக்கத் தமிழர்கள் அவசரமாக இராஜாங்கத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டு அமைச்சரவை அதிகாரிகளும் தமிழர்களின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டதுடன் இலங்கை அரசின் நில அபகரிப்புக் கொள்கையையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இவையும் மற்றைய இலங்கை அரசாங்கத் திணைக்களங்களும் 100% சிங்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டிருக்கின்றன, தொல்பொருள் அபிவிருத்தி மற்றும் வனப் பாதுகாப்பு என்ற பொய்யான போலிப் பாவனையின் கீழ் தமிழர் நிலத்தை அபகரிக்கும் கூட்டு இலக்குடன். தமிழர்களிடமிருந்தும் தமிழ் விவசாயிகளிடமிருந்தும் காணிகள் பறிக்கப்பட்டவுடன், சிங்களக் குடியேற்றங்கள் அவர்களின் இடத்தில் வைக்கப்பட்டு, பல நூற்றாண்டுகள் பழமையான, புனிதமான இந்துக் கோயில்கள் பௌத்தர்களால் மாற்றப்படுகின்றன.

சட்டவிரோதமான நில அபகரிப்பு என்பதுடன், இது இனச் சுத்திகரிப்புக்கான தொடர்ச்சியான முயற்சி மற்றும் சர்வதேச மனித உரிமைகளை தெளிவாக மீறுவதாகும்.

இந்நடவடிக்கையானது அப்பகுதியின் தமிழர் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் அழித்து தமிழர் தாயகத்தின் ‘சிங்கள பௌத்தத்தை’ மேலும் முன்னெடுப்பதற்கான முயற்சியாகும்.

பயன்படுத்தப்படும் முறை மீண்டும் மீண்டும் வருகிறது: ஆராய்ச்சி என்ற பெயரில், தொல்லியல் துறை சில தோண்டுகிறது, குறிப்பாக இந்து கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சுற்றி. பழங்கால தொல்பொருட்கள் வசதியாகக் காணப்படுகின்றன, அவை தெற்கிலிருந்து கொண்டு வரப்பட்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் நடப்பட்டிருக்கலாம், மேலும் அவை முக்கியமான பௌத்தப் பொருள்களாகக் கூறப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இந்து கோவில்களை இடித்து, அவற்றின் எச்சங்களில் புத்த கோவில்களை எழுப்புகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழர்களின் விளைநிலங்கள் தென்பகுதியில் இருந்து புதிதாக வந்துள்ள சிங்களக் கிராம மக்களிடம் கையளிக்கப்படுகிறது.

வனத் துறைக்கும் இதே மாதிரிதான்: தமிழ் விவசாயிகள் தங்கள் பூர்வீக நிலங்களில் விவசாயம் செய்வதைத் தடுக்கும் உத்தரவுகளுடன், தவறான பாதுகாப்புக் கோரிக்கைகளின் கீழ், துறைக்கு நிலம் ஒதுக்கப்படும். சில மாதங்களுக்குப் பிறகு, சிங்களக் குடியேற்றங்கள், பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் கொண்டு வரப்படுகின்றனர், அதே நேரத்தில் தமிழர்கள் அவர்களது வீடுகளிலிருந்தும் வாழ்வாதாரங்களிலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்.

ஒரு முழு மக்களையும் அழிக்க இலங்கை அரசு திட்டமிட்டு முயற்சிப்பதால், நாளுக்கு நாள் தமிழர்கள் தங்கள் சொத்துக்களையும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேலும் மேலும் இழக்கின்றனர்.

1980 களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கு நில அபகரிப்பு ஒரு முக்கிய காரணம்.

இது மீண்டும் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால்
இந்த குண்டர், குற்றச் செயல்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் எங்கள் உதவிக்கு வராத வரையில் இதில் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது.

தொல்பொருள் மற்றும் வனத் துறைகளை அங்கீகரிப்பது முதல் படி: பயங்கரவாதத் தலைவர்களால் ஆளப்படும் பயங்கரவாத அமைப்புகள். முகமூடி கிழிக்கப்படும் போது, ​​அவர்கள் ஒரு மிருகத்தனமான, இனப்படுகொலை ஆட்சியின் முன்கூட்டியே காவலர்களே தவிர வேறில்லை என்பது தெளிவாகிறது.

நாம் வாழ்வதற்கும், அமைதியைக் காப்பதற்கும், தமிழர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட இறையாண்மையுள்ள நாடு தேவை.

வாக்கெடுப்பு மூலம் இதை நிறைவேற்ற முடியும். 1999 இல் கிழக்கு திமோரில் செய்தது போல், வாக்கெடுப்பை ஒழுங்கமைக்கவும் மேற்பார்வை செய்யவும் அமெரிக்கா உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உங்கள் தலையீடு இந்த பயங்கரமான துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இக்கட்டான நேரத்தில் எங்களின் அவலநிலையை கருத்தில் கொண்டதற்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது

அமெரிக்க தூதுவர் – எதிர்க்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் வியாழக்கிழமை (டிச. 15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் , எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்,
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கை தனது சவால்களை எதிர்கொள்ளும் வகையில் செயற்படுவதற்கு, அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும் என்பதோடு , சீர்திருத்த செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கும் நல்லாட்சியை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கும் நிபுணத்துவத்தை வழங்குவது அவசியமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்தார் அலி சப்ரி

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

வோசிங்டனில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கடன்மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பிற்கு முன்னர் கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அமெரிக்காவிற்கு இலங்கையுடன் உள்ள நீண்;ட உறவை நினைவுகூர்ந்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையின் 75வருடத்தினை அடுத்த வருடம் கொண்டாடுகின்றோம் காலநிலை நெருக்கடி உட்பட சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றோம் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் காலநிலை மாற்றம் குறித்தவிடயத்திற்கு தீர்வை காண்பதற்கு இலங்கை சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது எனவும் பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அமெரிக்கா 240 மில்லியன் டொலர் உதவிகளையும் கடன்களையும் வழங்கியுள்ளது,பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு மாத்திரமில்லாமல் அரசியல் ஸ்திரதன்மை முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இருநாடுகளும் இணைந்து செயற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலி சப்றி அமெரிக்கா பயணம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு செவ்வாய்கிழமை (நவ. 29) அமெரிக்கா செல்லவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் விடுத்த அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி இன்று முதல் டிசம்பர் 4 வரை அமெரிக்காவிற்கான இவ்விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் அலி சப்ரி தனது விஜயத்தின் போது இராஜாங்க செயலாளர் பிளிங்கன், காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய ஆராய்ச்சிக்கு அமெரிக்காவிடம் உதவி கோரும் ஜனாதிபதி

இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற, அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் (Fulbright) ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உணவைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளம் இல்லாத தீவு நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்குத் தேவையான காணிகளை அடையாளங்கண்டு விவசாயத்தை நவீனமயப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நவீன விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் (TRI) இணைப்பதன் மூலம் இலங்கையின் விவசாய ஆராய்ச்சித் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிய பல அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதில் பேராசிரியர் பிரதீபா பண்டாரநாயக்க போன்ற ஃபுல்பிரைட் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பத்து வருடங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாபெரும் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும், ஃபுல்பிரைட் புலமைப்பரிசில்கள் மற்றும் உதவிகள் மூலம் இலங்கைக்கு வளவாளர்களை அழைத்துவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

அமெரிக்க உயரதிகாரி இலங்கை விஜயம் : சிவில் சமூகத்தினர், அதிகாரிகளுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் பிரதி உதவிச்செயலர் அஃப்ரீன் அக்தர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

 

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ள அஃப்ரீன் அக்தர், இங்கு அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தெற்காசிய அரசுகளுக்கான அமெரிக்க நிதியத்தின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

இதன்போது குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்குவது பற்றிக் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத் கடந்த வார இறுதியில் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதியின் விஜயம் இதுவாகும்.

அமெரிக்க செனட் சபை குழு வடக்குக்கு விஜயம்

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனை நேற்றைய தினம் (07) திங்கட்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து ஒரு மணிநேரம் வரை தவிசாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் சோ.சுகிர்தன், படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகள், பல ஆண்டுகளாகியும் மக்கள் மீள்குடியேற்றப்படாமை, படையினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

1614 ஏக்கர் காணியை சுவீகரிப்பது தொடர்பாக கடந்த மாதம் சுற்றுலா மற்றும் காணி அமைச்சால் பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் தொடர்புடைய ஆவணங்களும் அமெரிக்க செனட் சபையின் குழுவினருக்கு கையளிக்கப்பட்டது.

இதன்போது, பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இதனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வோமெனவும் அமெரிக்க செனட் சபையின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.