இன்று காசாப் போரை நிறுத்துமாறு கோருவோர் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி

இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு கோரும் முஸ்லிம் தலைமைகள் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் இன்று கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம். ஏனெனில் அப்பாவிப் பொதுமக்கள் அழிக்கப்படுகின்றனர். இதனை உலகின் பல தரப்பட்ட பிரிவினரும் அமைப்புக்களும் கண்டித்துள்ளனர்.

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைப் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர். அதனை நாமும் வரவேற்கின்றோம். ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு முன் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த இதே முஸ்லிம் தலைவர்கள் வடக்கில் வன்னி மாவட்டத்தில் கொத்துக் கொத்தாக அப்பாவி சகோதர ஒரே மொழி பேசும் தமிழர்கள் கொல்லப்படும் போது கண்டும் காணாதவர்கள் போல இருந்தமை மாத்திரமல்ல, போரை நடாத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியமையை நினைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மனவேதனை அடைந்தனர்.

இன்று இஸ்ரேல் காசாவில் குண்டு போட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அப்பாவி மக்களை அழிப்பது போன்று தான் அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்வரை இஸ்ரேல் விமானங்களும் விமானிகளும் ராஐபக்ஷாக்களின் ஏவலில் செஞ்சோலை மாணவிகள் வைத்தியசாலைகள், தற்காலிக மக்களின் முகாம்கள், சிறுவர் இல்லங்கள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போன்றோரை அழிக்கும் போது, அன்று இதே நாடாளுமன்றத்துக்குள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைச்சரவையில் ஆதரவு வழங்கியமையைப் பாதிக்கப்பட்ட சகோதர தமிழ் மக்கள் இலகுவில் மறக்கமுடியாது மனம் குமுறுகின்றனர்.

இன்று தொலைவில் உள்ள நாடுகளிடம் பலஸ்தீன் மக்களை காப்பாற்றுமாறு நீங்கள் கோருவதை எவ்வளவு தூரம் செவி சாய்ப்பார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், அன்று உங்கள் ஆதரவுடன் இருந்த ராஐபக்ஷ அரசாங்கத்தின் கபினட் அமைச்சர்களாக இருந்த உங்களால் மிக இலகுவாக கொல்லப்பட்ட அனைவரையும் காப்பாற்ற முடியா விட்டாலும், இன்று காசா மீது காட்டும் மனிதாபிமானத்தை அன்று ஈழத் தமிழர்களுக்கும் காட்டினீர்கள் என்று வரலாறு பதிவு செய்திருக்கும்.

இவ்வாறான பாரபட்சமான நிலைப்பாட்டை வரலாறு இலகுவில் மன்னிப்பதில்லை. – எனவும் தெரிவித்துள்ளார்.

கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு வீதியின் மையப்புள்ளி வரை மனித புதைகுழி விஸ்தரிக்கப்பட்டுள்ளது – சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.

ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.

இன்று செவ்வாய்க்கிழமை (28) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் முதல் மாவீரர் சங்கருக்கு அஞ்சலி

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதுவரை 35 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

பாரிய புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 17 முழுமையான மனித உடல்கள் தொடர்பான எலும்புகள் மீட்கப்பட்டன. மூன்றாம் கட்டத்தின் ஆறாவது நாளில் மேலும் 4 மனித உடல்கள் தொடர்பான எலும்புக் கூண்டுகள் மீட்கப்பட்டன.

மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் இதுவரை 18 மனித உடல்களின் எலும்புக்கூடுகளை கண்டெடுக்க முடிந்தது.

இதுவரை 35 முழு மனித உடல்களின் எலும்புக் கூடுகள் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

வெடிமருந்துகள் போன்ற 8 பாகங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் 6 இலக்கத் தகடுகள், நீர் சுத்திகரிப்பு சாதனம், சயனைட் குப்பி, பெண்களின் மேல் உள்ளாடைகளும் கண்டெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொக்குத்தொடுவாய் குழுவின் சடலம் தொடர்பில் நேற்று முன்தினம் (24) ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நிலத்தடி உலோகங்கள், எலும்புகள் மற்றும் ஆயுதங்களை கண்டறிவதற்காக விசாரணைகளை முன்னெடுத்த விசேட குழுவினர் புதைகுழியை சூழவுள்ள பகுதியில் ஸ்கேன் மேற்கொண்டனர். 3 டி பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமைக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான வீதிக்கு கீழும் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது. பரிசோதனை முடிவில் அது உறுதியானால், பிரதான வீதியும் தோண்டப்படும். எவ்வாறாயினும் வரும் வியாழக்கிழமைக்குள் புதைகுழி தோண்டும் பணிகள் முழுமையாக முடிவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை காலமும் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் முல்லைத்தீவு நீதவான் உத்தரவின் பேரில் விசாரணைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள விசேட அறையில் வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் தற்போதைய நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையின் கீழ், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரிகள், தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் இந்தப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in Uncategorized

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வீதியின் ஊடாகச் செல்லும் சாத்தியக்கூறுகள் – சட்ட வைத்திய அதிகாரி

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாவது நாளாக இன்றையதினம் (24.11.2023) இடம்பெற்று இன்றையஅகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐந்தாவது நாளாக தொடரும் கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பேனா மாக்கர் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் ஸ்கானர் மூலம் இந்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என பரிசோதனை செய்யப்பட்டது இதன் முடிவுகள் நாளையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும்.

இவ் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் மற்றைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனினும் நாளைய பரிசோதனையின் பின்னரே இறுதி முடிவுகள் என்னால் உறுதியாக கூறமுடியும் என மேலும் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுபணிகள் திட்டமிட்டபடி நாளை இடம்பெறும்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

அகழ்வுப்பணி தொடர்பாக இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அகழ்வு பணி நாளை 20 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும், இம்முறை அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும். இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான தடைகளால் அவமானமாக உள்ளது – சரத் வீரசேகர

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னாள் ஜனாதிபதிகள் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அவமானகரமான நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என   சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவர்கள் எவருக்கும் எதிராக உள்நாட்டு, வெளிநாட்டு நீதிமன்றங்களில் யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கான அரசியல் இராணுவ தலைமைத்துவத்தை வழங்கியவர்களை அவமானப்படுத்துவதற்காக மேற்குலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரேரணைகைளை பயன்படுத்துகின்றது.

இலங்கையில்  தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஜெனீவா சாசனம் மற்றும் யுத்தம் குறித்து மனித உரிமை பேரவை தெளிவுபடுத்த தவறிவிட்டனர்.

சில அதிகாரிகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை, ஆதாரமற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களின் நியமனங்கள் தாமதிக்கப்பட்டன அல்லது நிராகரிக்கப்பட்டன எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் நவம்பர் 20 மீள ஆரம்பம்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

மனித புதைகுழி தொடர்பான வழக்கு 30 ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

திங்கட்கிழமை (30) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ சமுகமளிக்க முடியாததனால் கொக்குதொடுவாய் அகழ்வு பணியானது மீளவும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுத்தொகை பணம் எவ்வளவு என்பது தொடர்பாக கதைக்கப்பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ அவர்களினால் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த பிற பொருட்கள் பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவை என்ற அடிப்படையில் முழுவதும் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

காணாமல் போனவர்கள் சார்பில் நாங்கள் தோன்றி அதன் கட்டுகாவல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.

ராஜ்சோமதேவ அவர்களினால் குறித்த மனித புதைகுழி பகுதியில் 50 மீற்றருக்குள் வேறு மனித எச்சங்கள் இருப்பது சம்மந்தமாக கண்டுபிடிக்க கூடிய ராடர் கருவி ஒன்றினை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பான முழுமையான விபரங்களை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி நீதிமன்றத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அதற்கான ஒன்றுகூடல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுபணி இடம்பெறவுள்ளது.

30 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் அவர்களும் பிரசன்னமாகி இருந்ததாக மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சரணடைந்தவர்களின் பெயர்ப் பட்டியலை ஒப்படைக்க கட்டளையிட வேண்டும்

2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிட வேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

இராணுவத்தின் 58, 59 ஆம் மற்றும் 53 ஆம் படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதிகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தாம் சிரத்தையுடன் செயற்படுவதை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.

யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் இது குறித்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கமானது சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை உரியவாறு கையாள்வதாகப் பாசாங்கு காட்டுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கென அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியையோ அல்லது ஆறுதலையோ பெற்றுத்தரவில்லை என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிள்ளையானுக்கு வெள்ளை ஆடை அணிவித்தது இராணுவ புலனாய்வுப் பிரிவின் ‘திரிபோலி’ குழுவே

விடுதலைப் புலிகள் தொடர்பில் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனே எமக்கு தகவல்களை வழங்குவார் எனவும் அதற்காகவே நாம் அவரைப் பயன்படுத்தியதாக இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்தார்

அதேவேளை இராணுவப் புலனாய்வுப்  பிரிவில் உள்ள குழுதான், கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது எனவும் சுட்டிக்காட்டினார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இராணுவப் புலனாய்வு பிரிவில் ஒரு சிறிய தனிக்குழுவொன்று உள்ளது. அந்தக் குழுதான் ‘திரிப்போலி’ என்ற கொலைக் கும்பல். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டது. அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அந்தக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவே பிள்ளையானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது எனவும் தெரிவித்தார்.