இன்று காசாப் போரை நிறுத்துமாறு கோருவோர் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி

இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு கோரும் முஸ்லிம் தலைமைகள் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் இன்று கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம். ஏனெனில் அப்பாவிப் பொதுமக்கள் அழிக்கப்படுகின்றனர். இதனை உலகின் பல தரப்பட்ட பிரிவினரும் அமைப்புக்களும் கண்டித்துள்ளனர்.

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைப் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர். அதனை நாமும் வரவேற்கின்றோம். ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு முன் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த இதே முஸ்லிம் தலைவர்கள் வடக்கில் வன்னி மாவட்டத்தில் கொத்துக் கொத்தாக அப்பாவி சகோதர ஒரே மொழி பேசும் தமிழர்கள் கொல்லப்படும் போது கண்டும் காணாதவர்கள் போல இருந்தமை மாத்திரமல்ல, போரை நடாத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியமையை நினைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மனவேதனை அடைந்தனர்.

இன்று இஸ்ரேல் காசாவில் குண்டு போட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அப்பாவி மக்களை அழிப்பது போன்று தான் அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்வரை இஸ்ரேல் விமானங்களும் விமானிகளும் ராஐபக்ஷாக்களின் ஏவலில் செஞ்சோலை மாணவிகள் வைத்தியசாலைகள், தற்காலிக மக்களின் முகாம்கள், சிறுவர் இல்லங்கள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போன்றோரை அழிக்கும் போது, அன்று இதே நாடாளுமன்றத்துக்குள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைச்சரவையில் ஆதரவு வழங்கியமையைப் பாதிக்கப்பட்ட சகோதர தமிழ் மக்கள் இலகுவில் மறக்கமுடியாது மனம் குமுறுகின்றனர்.

இன்று தொலைவில் உள்ள நாடுகளிடம் பலஸ்தீன் மக்களை காப்பாற்றுமாறு நீங்கள் கோருவதை எவ்வளவு தூரம் செவி சாய்ப்பார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், அன்று உங்கள் ஆதரவுடன் இருந்த ராஐபக்ஷ அரசாங்கத்தின் கபினட் அமைச்சர்களாக இருந்த உங்களால் மிக இலகுவாக கொல்லப்பட்ட அனைவரையும் காப்பாற்ற முடியா விட்டாலும், இன்று காசா மீது காட்டும் மனிதாபிமானத்தை அன்று ஈழத் தமிழர்களுக்கும் காட்டினீர்கள் என்று வரலாறு பதிவு செய்திருக்கும்.

இவ்வாறான பாரபட்சமான நிலைப்பாட்டை வரலாறு இலகுவில் மன்னிப்பதில்லை. – எனவும் தெரிவித்துள்ளார்.